Published:Updated:

'பிரேமம்' கற்றுக் கொடுத்த அந்த 4 விஷயங்கள்! #2YearsOfPremam

தார்மிக் லீ
'பிரேமம்' கற்றுக் கொடுத்த அந்த 4 விஷயங்கள்! #2YearsOfPremam
'பிரேமம்' கற்றுக் கொடுத்த அந்த 4 விஷயங்கள்! #2YearsOfPremam

ஒருவருடைய வாழ்க்கையில் பள்ளிக் காலம், கல்லூரிக் காலம், திருமணம், நட்பு ஆகிய நான்கும்தான் முக்கியமான அங்கம். அதை இதுவரை இல்லாத அளவுக்கு அழகாகக் காட்டியதுதான் இந்தப் படத்தின் சிறப்பம்சமே. 'பிரேமம்' திரைப்படம் நமக்குக் கற்றுக் கொடுத்த நான்கு பாடங்கள் இவைதான்!

பள்ளிக் காலம் :

பள்ளிக் காலம் என்பது எல்லோர் வாழ்விலும் நிகழும் அழகான ஒரு விஷயம். ஒவ்வொருவருக்கும் அந்த நாட்களை இப்போது நினைத்துப் பார்த்தால் கூட உதட்டோரத்தில் சிரிப்பு வரும். மெச்சூரிட்டி இல்லாமல் செய்யும் கிறுக்குத் தனங்கள் எல்லாமே இடம்பெற்றிருப்பது பள்ளிக் காலத்தில்தான். எல்லாருடைய ஏரியாவிலும் கண்டிப்பாக ஒரு குட் லுக்கிங் பொண்ணு இருப்பாள். அந்தப் பெண்ணைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். அந்தக் கூட்டத்தில் நம்ம ஹீரோ ஜார்ஜ் டேவிட்டும் ஒரு ஆள். அவளுக்குத் தெரியாமல் பின்னாடியே சென்று சைட் அடிப்பது, விஷயம் தெரிந்து அடிக்க வரும் அந்தப் பெண்ணின் அப்பாவுக்கு பயந்து தலை தெறிக்க ஓடுவது, வீட்டில் ஆள் இல்லாமல் இருக்கும்போது நண்பர்களுடன் சேர்ந்து இல்லாத சேட்டைகளை எல்லாம் செய்வது, நம்முடைய இளமைக் காலத்தில் கிடைக்கும் சில நொறுக்குத் தீனிகளை அழகான ஃப்ரேமில் காட்டுவது என இந்தப் பாகத்தில் எல்லாமே அவுட் ஆஃப் தி பாக்ஸ். இப்படி ஒவ்வொரு இடத்திலும் நம் பள்ளிக் காலத்தை நினைவூட்டும் காட்சிகளை அள்ளித்தந்திருப்பார் அல்போன்ஸ் புத்திரன்.

கல்லூரிக் காலம் :

இது இரண்டாவது முக்கியமான காலகட்டம். பள்ளிக் காலம் எப்படி ஒரு மனிதனுக்கு முக்கியமோ, அதே போல் கல்லூரிக் காலமும் முக்கியமே. இந்தப் பாகத்தைச் சுருக்கமாகச் சொன்னால், இது ஒரு கடைசி பென்ச் மாணவனின் கதை. அனேகமாக கல்லூரிக் காலத்தில் அல்போன்ஸும் கடைசி பென்ச் மாணவனாக இருந்திருப்பார். ஏனென்றால், நாடி, நரம்பு, சதை என எல்லாத்துலேயும் கடைசி பென்ச் ஸ்டூடன்ட் வெறி ஏறிப்போன ஒரு ஆளால் மட்டுமே இப்படிப் படம் எடுக்க முடியும். ஒவ்வொரு காட்சியும் வேற லெவலில் இருக்கும். இந்த போர்ஷன் ஆரம்பிக்கும் முதல் காட்சியே சண்டையில்தான் தொடங்கும். கல்லூரியில் கேங் வார் கண்டிப்பாக எல்லோரின் வாழ்விலும் நடந்திருக்கும். அதுவும் லாஸ்ட் பென்ச் மாணவர்களுக்கு சொல்லவே தேவையில்லை. அது மட்டுமல்லாமல், காலேஜுக்கு லேட்டாக வந்தால் வெளியே நிற்க வைப்பது, க்ளாஸ் வாத்தியாரை கலாய்ப்பது, இது எல்லாத்துக்கும் மேலாக மலர் டீச்சர். என்ன பாஸ் உங்க காலேஜ் மலர் டீச்சர் ஞாபகம் வர்றாங்களா? இந்தக் கல்லூரி ஜார்ஜ்தான் பலருக்கும் ஃபேவரைட்டான ஒரு கேரக்டர். கல்லூரிக் காலத்தின் அழகைக் கொஞ்சம் கூட குறைக்காமல் கொடுத்திருப்பார் அல்போன்ஸ். 

திருமணம் :

என்னதான் பள்ளிக் காலம், கல்லூரிக் காலம் என இரண்டுமே சோகத்தில் முடிந்திருந்தாலும், தன்னுடைய திருமண வாழ்க்கையை சந்தோஷமான முறையில் அமைத்துக் கொள்வதில்தான் ஒரு மனிதனுடைய மிகப்பெரிய வெற்றியே அடங்கியிருக்கிறது. அதுவும் தன்னுடைய பள்ளிக் காலத்தில் காதலிக்கும் பெண்ணின் தங்கையையே காதலித்துத் கல்யாணம் செய்துகொள்ளும் அந்த வெற்றிச் சரித்திரத்தை வரலாற்றின் பக்கங்களில் பொன் எழுத்துகளால் பொறிக்கலாம். அப்படி ஓர் காவியக் காதல்தான் இந்தப் பாகத்தில் இடம்பெற்றிருக்கும். பள்ளிக் காதல் இடம்பெறும் காதல் காட்சிகளில் ஒரு ஓரமான ஃப்ரேமில் வரும் செலினைதான் கடைசியில் காதலித்து திருமணம் செய்துகொள்வார் நம்ம ஹீரோ ஜார்ஜ் டேவிட். இது ஜார்ஜிடமிருந்து எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு அட்வைஸ். தான் காதலிக்கும் பெண் கிடைக்கவில்லையென்று  தாடி வளர்க்கும் தேவதாஸ்களுக்கு இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

நட்பு :

மேலே குறிப்பிட்ட அனைத்து விஷயங்களையும் அழகாய் மாற்றும் ஓர் முக்கியமான அங்கமே இந்த போர்ஷன்தான். அதுவும் ஒரு மனிதனுக்கு நல்ல நட்பு வட்டம் அமைந்தால் வாழ்வின் மிகப் பெரிய வெற்றியே அதுவாகத்தான் இருக்க முடியும். பள்ளிக் காலத்தில் ஜார்ஜின் காதலுக்கு உதவி செய்யும் அதே இரண்டு நண்பர்கள்தான் செலினைக் காதலித்துக் கல்யாணம் செய்யவும் உதவியாக இருப்பார்கள். காதலைவிட கூடப் பழகும் நட்பை மெயின்டெயின் பண்ணுவதுதான் கஷ்டமான காரியம். இந்தப் படத்தில் அவ்விரு நண்பர்களும் எல்லா தருணங்களிலும் கூடவே பயனித்து வருவார்கள். படத்தின் வாயிலாக பல வெளிப்படையான மெசேஜ்களை சொல்லியிருந்தாலும், சைலன்டாக இடம்பெற்ற இந்த மெசேஜ்தான் எல்லார் வாழ்விலும் முக்கியமான ஒன்று. 

இந்த நான்கும் ஒருவனுடைய வாழ்கையில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு 'பிரேமம்' படம்தான் சிறந்த எடுத்துக்காட்டு. இதை அழகாய்க் காட்டிய ஒட்டுமொத்த டீமுக்கும் ஒரு பெரிய சல்யூட். இனி அல்போன்ஸ் புத்திரனே நினைத்தாலும் இதைப் போன்ற ஓர் அழகிய படைப்பைத் தருவது கஷ்டம்தான்.