Published:Updated:

‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் கதை உண்மை சம்பவமா... கற்பனையா? என்ன சொல்கிறார் இயக்குநர்?

முத்து பகவத்
‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் கதை உண்மை சம்பவமா... கற்பனையா? என்ன சொல்கிறார் இயக்குநர்?
‘சுவாதி கொலை வழக்கு’ படத்தின் கதை உண்மை சம்பவமா... கற்பனையா? என்ன சொல்கிறார் இயக்குநர்?

இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பு மட்டுமே வந்தது. ஆனால் படத்தின் டைட்டில் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை. டைட்டிலை படவிழாவின்போது சொல்கிறோம் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார்கள். விஷால் சிறப்பு விருந்தினர் என்பது மட்டுமே ஆறுதல். நம்பிக்கையுடன் சென்றால், படத்தின் டைட்டில் இப்படியாக இருந்தது ‘சுவாதி கொலை வழக்கு’.

‘உளவுத்துறை’, ‘வஜ்ரம்’ படங்களை இயக்கிய ரமேஷ் செல்வனின் அடுத்த படம் இது. 

“டெல்லி மாதிரியான பெரிய மாநகரம் அது. காட்டிலிருந்து புலி ஒன்று, ஊருக்குள் வந்து அனைவரையும் அடிச்சு காட்டுக்குள்ள கொண்டு போய்டுது. தினமும் இதேதான் நடந்துட்டு இருந்துருக்கு. டெல்லி போலீஸ், மிலிட்டரின்னு யாராலும் அந்தப் புலியைப் பிடிக்க  முடியலை. இறுதியா தமிழ்நாடு போலீஸ்தான் பெஸ்ட்னு அவங்களைக் கூப்பிடுறாங்க. தமிழ்நாடு போலீஸ் புலியைப் பிடிக்க காட்டுக்குள்ள போன அடுத்த நிமிடமே புலியைப் பிடிச்சாச்சுன்னு சொல்றாங்க. காட்டுல இருந்து வெளியே வந்த போலீஸ், புலிக்குப் பதில் கரடியைக் கொண்டு வாராங்க. இதுதான் புலின்னு எல்லோரிடமும் போலீஸ் சொல்றாங்க. கரடி கூட, ‘ஆமா நான் தான் புலி’னு சொல்லுது. இதுல ஸ்பெஷல் என்னென்னா, கரடியைப் பிடிச்சு அடிச்சு ‘நான்தான் புலி’னு ஒத்துக்க வச்சிட்டாங்க நம்ம தமிழ்நாடு போலீஸ். இந்த விஷயத்தைத்தான் ‘சுவாதி கொலை வழக்கு’ படத்தில் சொல்லியிருக்கோம்” - ஆவேசத்துடன் பேசத்தொடங்குகிறார் படத்தின் கதையாசிரியர் ரவி.  

“இந்தப் படத்தை ரியலா பண்றதா, இல்லை கற்பனையுடன் வேறு கதையா பண்றதானுதான் முதல்ல யோசிச்சோம். சென்ற வருடம் ஜூன் 24-ம் தேதி சுவாதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ரயில்வே போலீஸா அல்லது தமிழக போலீஸா யார் வழக்கு விசாரிக்கணும்னு தொடங்கி பல சர்ச்சைகள். ராம்குமார் மின் ஒயர் கடித்து இறந்து போனதாக இறுதித்தகவல் வெளியானது. போலீஸால் சிறைத்துறைக்குள் போகவே முடியாது. இது குறித்து சிறைத்துறைக் காவலரிடம் கேட்டால், 98% வாய்ப்பே இல்லைன்னு சொல்லுறாங்க. போலீஸ் மாதிரியே நாங்க விசாரணை  நடத்தினோம். ஜாதி, மதம்னு இரண்டு பெரிய சக்தி தலையிட்டிருக்கு. ஒரு மாத தேடலுக்குப் பிறகு சுவாதி கொலை வழக்கில் நமக்கு ஏற்பட்டிருக்கும் பல கேள்விகளுக்கு விடையா இந்தப் படத்தைச் சொல்லியிருக்கோம்”. என்கிறார் ரவி. 

“எந்த ஒரு சர்ச்சையையும் உருவாக்கணும்னு இந்தப் படத்தை எடுக்கவில்லை. எந்த ஒரு தனிமனிதனையோ, குடும்பத்தையோ மனதையோ துன்பப்படுத்தணுங்கிறதும் எங்க நோக்கம் இல்லை. இந்த சமூகத்துக்கு இந்தப் படம் மூலமா ஒரு விடை கொடுக்கணும் அவ்வளவுதான். சுவாதி கொலை வழக்கை படமாக்க எண்ணியதற்குக் காரணம் என்னவென்றால், இன்னொரு சுவாதியும், இன்னொரு ராம்குமாரும் இறந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான்”. என்றார் இயக்குநர் ரமேஷ் செல்வன். 

விஷால் பேசும்போது,“  கமர்ஷியல் படங்கள் எடுத்தால்தான் லாபம் சம்பாதிக்க முடியும் என்பதையெல்லாம் தாண்டி மக்களுக்கு எதாவது சொல்லணும், அவங்களை சிந்திக்க வைக்கிற மாதிரியான படங்கள் எடுக்கிறதுக்கு நிச்சயம் பெரிய தைரியம் வேண்டும். சுவாதி கொலை வழக்குப் பற்றிப் பேசக்கூட யாரும் முன்வரமாட்டோம். உண்மைகள் தெரிஞ்சாகூட வெளியே சொல்ல மாட்டோம். ஃபிலிம் மேக்கரா அவர் இந்தப்படத்தில் சொல்லப்போகிற விஷயத்தைப் பார்க்க நானும் ஆவலா இருக்கேன். பட ரிலீஸூக்கு 1 மாதம் முன்னாடியே சொல்லிடுங்க. நானே கூட இருந்து உங்களுக்கு வியாபாரம் செய்து கொடுக்குறேன். விநியோகஸ்தரிடம் கமிஷனுக்குக் கொடுத்து ஏமாற வேண்டாம். திரையரங்கத்தில் திரையிடுவது மட்டுமே வருமானம் கிடையாது. இன்னும் பல வழிகளில் சம்பாதிக்கலாம். நாங்க எப்போதுமே  உங்க கூட இருப்போம்.” என்று முடித்தார் விஷால். 

சுவாதி கொலை வழக்கு டிரெய்லருக்கு: