Published:Updated:

ஸ்ருதி ஏன் விலகினார்..? விளைவுகள் என்ன? 'சங்கமித்ரா' பட தயாரிப்பாளர்!

நா.சிபிச்சக்கரவர்த்தி
ஸ்ருதி ஏன் விலகினார்..? விளைவுகள் என்ன? 'சங்கமித்ரா' பட தயாரிப்பாளர்!
ஸ்ருதி ஏன் விலகினார்..? விளைவுகள் என்ன? 'சங்கமித்ரா' பட தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாபெரும் பொருள்செலவில் வரலாற்றுப் படங்களை எடுக்கும் முயற்சி தொடங்கும். ஆனால், சில காரணங்களால், சில பிரச்சினைகளால் படம் தொடங்கியதுமே முடிவுக்கு வந்துவிடும். ஸ்ருதி விலகியதால் 'சங்கமித்ரா' படத்துக்கும் இந்த நிலை ஏற்படுமா? 

இதற்கு முன், எம்.ஜி.ஆர் உச்ச நட்சத்திரமாகத் தமிழகத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தபோது 'பொன்னியின் செல்வன்' நாவலைப் பிரமாண்ட திரைப்படமாக எடுக்க நினைத்தார். முடியவில்லை. அதன்பின் இயக்குநர் மணிரத்னமும் இதனைக் கையில் எடுத்தார். 'மிகவும் சிரமம்' எனக் கைவிட்டார். இந்நிலையில்தான் இயக்குநர் ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' படம் இரண்டு பாகங்களாக வெளியாகி இந்தியா மட்டும் இல்லாமல், உலகம் முழுக்கவும் சக்கைப்போடு போட்டு வருகிறது. 1500 கோடிக்கும் மேல் தாண்டி இன்னமும் வசூல் வேட்டையைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறது பாகுபலி. இந்த நம்பிக்கையில்தான் தமிழிலும் ஒரு வரலாற்றுப் படத்தை சர்வதேசத் தரத்தில் எடுக்க அஸ்திவாரம் போட்டு இருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. 

இந்தப் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சுமார் ஒரு ஆண்டுகாலமாகவே இதற்கான வேலைகளும் தொடர்ந்து நடந்து வந்தன. நடிகர் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் முக்கிய வேடங்களில் நடிப்பதாகவும் முடிவானது. இந்த கேரக்டர்களுக்கான பயிற்சிகள்கூட சமீபகாலமாக இந்த நடிகர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. ஸ்ருதிக்கு வாள் வீசிச் சண்டை போடுவதுபோல  பல சீன்கள் இருப்பதால், இதற்கான வாள் பயிற்சியை லண்டனில் எடுத்து வந்தார். படத்தின் ஒரு போஸ்டர்கூட ஸ்ருதியை மையமாக வைத்தே வெளியிடப்பட்டது.

அண்மையில் நடந்த பிரான்ஸ் 'கேன்ஸ் திரைப்பட விழா'வில் இப்படத்தின் தொடக்க விழாவும் நடைபெற்றது. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதியுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் கலந்துகொண்டார். 300 கோடி ரூபாய் செலவில் படம் உருவாகிறது என அறிவித்திருந்தார்கள்.

இந்தத் திரைப்பட விழாவில் படத்தைப் பற்றிய அறிமுகமும் கொடுக்கப்பட்டது. இந்தப் படம் கற்பனைக் கதையே. இந்திய வரலாற்றில் அறியப்படாத சில அத்தியாயங்கள் சங்கமித்ராவின் மூலம் திரையில் அழகாக விரியும் என்றவர்கள். இது 8-ம் நூற்றாண்டில் நடப்பதுபோல காட்சிப்படுத்த இருக்கிறார்கள். 

சங்கமித்ரா என்ற பேரழகி அவளது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற அவள் கடந்து வரும் பாதைகளும், சோதனைகளும், துயரங்களுமே இந்தப் படத்தின் ஒன் லைன். மனித உறவுகளைப் பற்றியும் இந்தக் கதையில் பிரம்மாண்டமாகச் சொல்லப்பட இருக்கிறார்கள். இந்த முக்கிய கேரக்டரில் இருந்துதான் தற்போது ஸ்ருதிஹாசன் விலகி இருக்கிறார். 

தவிர்க்கமுடியாத காரணங்களால் இப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகுவதாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

உடனே, ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து அவரது மக்கள் தொடர்பாளர் மூலம், ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்தப் படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள், படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்புத் தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்குத் தெரியும். 

படப்பிடிப்புக்குத் தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனால், 'சங்கமித்ரா' படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றைத் தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்குத் தரப்படவில்லை. படப்பிடிப்புத் தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம். 

ஸ்ருதி, தற்போது, நடித்துள்ள ’பெஹன் ஹோகி தேரி’ பாலிவுட் படத்தின் விளம்பர வேலைகளில் இருக்கிறார். தொடர்ந்து ’சபாஷ் நாயுடு’ படத்துக்காகத் தயாராகிவருகிறார்.' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ருதியின் அறிக்கையை வைத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளியிடம் இதுகுறித்துக் கேட்டோம், “ஆமாம். ஸ்ருதிஹாசன் படத்தில் இருந்து விலகிவிட்டது உண்மைதான். பெரிய பட்ஜெட் படங்களில் இந்த மாதிரி நடக்கும் நிகழ்வுகள் சாதாரணமானவைதான். இதனால், படத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டு வருகின்றன. மேலும் இது தொடர்பாக கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை!” என்றார் கூலாக.