Published:Updated:

“நான் நடிக்க வந்தது என் அப்பாவுக்கு பிடிக்கலை!” - விஜய் யேசுதாஸ் வருத்தம்

ம.கா.செந்தில்குமார்
“நான் நடிக்க வந்தது என் அப்பாவுக்கு பிடிக்கலை!” - விஜய் யேசுதாஸ் வருத்தம்
“நான் நடிக்க வந்தது என் அப்பாவுக்கு பிடிக்கலை!” - விஜய் யேசுதாஸ் வருத்தம்

‘‘நான் நடிக்க வந்ததை, என் ஃபேமிலியிலேயே இதுவரை யாரும் ஏத்துக்கலை. ஆனா, நமக்கு ஒரு அழைப்பு வருது. அதை ஏத்துக்கலாமா... வேணாமாங்கிறதை நாமதானே முடிவுபண்ணணும். அப்படித்தான் நான் ‘மாரி’ பட வாய்ப்பைப் பார்த்தேன், நடிச்சேன். அந்தப் படத்தை அப்பா இன்னும் பார்க்கலை. பரவாயில்லை. இந்தப் ‘படைவீரனை' அப்பா நிச்சயமா பார்க்க வருவார்’’ - நம்பிக்கையாகப் பேசுகிறார் விஜய் யேசுதாஸ். அப்பா யேசுதாஸைப் போலவே தெய்வீகக் குரலில் பாடிவந்தவர், இன்று நடிகர். ‘மாரி’ படத்தைத் தொடர்ந்து மணிரத்னத்தின் உதவி இயக்குநர் தனா இயக்கும் ‘படைவீரன்’ படத்தின் ஹீரோ. 

“ `படைவீரன்’ படம் பற்றிச் சொல்லுங்க?”
‘‘தனா, மணிரத்னம் சாரின் அசிஸ்டென்ட். ‘கடல்’, ‘ஓகே கண்மணி’ படங்களின் பாடல் ரிக்கார்டிங்கில் எனக்கு அறிமுகமானார். நான் ‘மாரி’க்குப் பிறகு நிறைய கதைகள் கேட்டேன். அந்தச் சமயத்தில்தான் தனா இந்தக் கதையைச் சொன்னார். `இந்த வேகமான வாழ்க்கையில் இளமையில் கொஞ்சம் சந்தோஷமா இருக்க முடியுமா’னு நினைக்கிற கிராமத்து இளைஞன் முனிஸ்வரன். கொஞ்சம் ஜாலியா இருந்துட்டு, பிறகு வேலைக்குப் போகலாம்னு நினைக்கக்கூடியவன். ‘இப்படியே இருக்கோமே ஏதாவது பண்ணுவோம்’னு ஒரு விஷயம் பண்றான். அதுல இருந்து அவன் வாழ்க்கை மாற ஆரம்பிக்கும். ஒரு திருவிழாவில் ஆரம்பித்து, அடுத்த வருஷத் திருவிழாவில் முடியும் கதை.

படத்தில் பாரதிராஜா சாருக்கு என் மாமா கேரக்டர். அவரோட பெர்ஃபாமன்ஸ் ஹைலைட்டா இருக்கும். அவரை ரொம்ப வருஷங்களாவே தெரியும்னாலும், இவ்வளவு பக்கத்துல நெருங்கிப்பழகும் வாய்ப்பு முதல்முறையா அமைஞ்சது பெரிய விஷயம். அவர் பேசுற விஷயங்களைக் கேட்க அவ்வளவு இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும். ‘இந்தப் பையன் நம்ம ஊர்க்காரன் மாதிரியே பண்ணியிருக்கான்’னு அவர் என்னைப் பாராட்டினது என் பாக்யம். என் அப்பாவா டைரக்டர் மனோஜ்குமார் சார் நடிச்சிருக்கார். இயக்குநர் கவிதா பாரதி சார் உள்பட அந்த மண்ணைச் சேர்ந்த பலரும் இந்தப் படத்தில் இருக்காங்க.’’

‘‘நீங்க நகரத்தில் வளர்ந்த பையன். இது கிராமத்துக் கதை. எப்படித் தயாரானீங்க?’’
‘‘பல மொழிப் படங்களைப் பார்க்கும்போது அதோட கதை நல்லா இருக்கானுதான் முதல்ல பார்ப்போம். ‘நல்ல கதை’னு ஃபீலிங் வந்திடுச்சுன்னா, அந்தப் படம் நிச்சயம் நமக்குப் பிடிச்சிடும். இந்தக் கதையைக் கேட்டதும் அப்படி ஒரு ஃபீலிங் வந்துச்சு. ஏன்னா, இந்தக் கதையில் குறிப்பா என் கேரக்டரில் அப்படி ஒரு டிவிஸ்ட் அண்ட் டர்ன்.

அதேபோல பாரதிராஜா சாருக்கு என் கேரக்டரைவிட அதிக முக்கியத்துவம் உள்ள கேரக்டர். அதுவும் எனக்குப் பிடிச்சிருந்துச்சு. கதை கேட்ட பிறகு இடையில் இருந்த இரண்டு மூன்று மாதங்கள்ல அந்த கேரக்டருக்காகத் தயாரானேன். முத்துக்குமார்னு நல்ல திறமையான நடிப்புப் பயிற்சியாளரை, தனா ஏற்பாடு பண்ணினார். கிராமப் பழக்கவழக்கம், உடல்மொழி பழக அவர் உதவியா இருந்தார். தவிர, இது டைரக்டர் தனாவின் சொந்த ஊர்க் கதை. அவர் ஒவ்வொரு ஷாட்டையும் நடிச்சுக்காட்டுவார். அதை உள்வாங்கினாலே 50 சதவிகித வேலை முடிஞ்சிடும். அதை ஸ்கெலிட்டனா வெச்சு நடிச்சாலே போதும். எனக்கு டப்பிங் பேச நிறைய பேரின் வாய்ஸ் டெஸ்ட் பண்ணினாங்க. ஆனா, எதுவும் செட் ஆகலை. அப்புறம் நானே பேசிட்டேன்.’’

“எப்படி இருந்தது தேனி ஷூட்டிங் அனுபவம்?”
“வில்லேஜ் பின்னணி எனக்குப் புதுசு. நான் நிகழ்ச்சி பண்ண பல கிராமங்களுக்குப் போயிருக்கேன். ஆனா, ஒரு மாசம் அங்கேயே சுற்றி வந்தது புது அனுபவம். லொகேஷன்ல ஒவ்வொரு நாளும் இருக்கும்போது கேரவன் இருந்தாலும் அங்கே வீடுகளுக்கு முன்னாடி இருக்கும் பெஞ்சுல உட்கார்ந்து அந்த மக்களோடு பேசுறது, கிணத்துக்குள்ள உட்கார்ந்து சாப்பிடுறது, தண்ணிக்குள்ள குதிக்கிறதுனு செமயா இருந்துச்சு.”

‘‘ஆஃப் ஸ்க்ரீன்ல பாடிட்டிருந்த நீங்க, இப்ப ஆன் ஸ்க்ரீன்ல லிப் சிங்க் பண்ணணும். ஈஸியா இருந்துச்சா?”
“அப்பாவின் அப்பா அதாவது என் தாத்தா, மேடை நாடகக் கலைஞர் மற்றும் பாடகர். அந்த ரத்தம் என்கிட்ட எங்கேயோ இருந்திருக்குனு நினைக்கிறேன். அப்பாவும் சில படங்கள்ல பாடகரா நடிக்கும்போது இயல்பா பண்ணியிருப்பார். அப்படி எனக்கு லிப் சிங்க் இயற்கையாத்தான் இருந்தது. லைவா பாடுற மாதிரி பாடிடுவேன். ‘நான் பாடணும்னு தேவை இருந்தா மட்டும் பாடுறேன்’னுதான் சொல்லியிருந்தேன். ஒரு பாட்டு செட் ஆச்சு. அதை மட்டும் பாடியிருக்கேன். மற்றப் பாடல்களை வெவ்வேறு சிங்கர்கள் பாடியிருக்காங்க.
‘தேனியில் நடக்கிற கதைன்னா, அந்த மாவட்ட ஸ்லாங் இருக்கணுமே’னு எல்லாரும் பயமுறுத்தினாங்க. உடனே டைரக்டர் தனா, ‘நான் தேனிதான். எங்க ஊர்ல எல்லாம் பெரிய ஸ்லாங் வித்தியாசம் இல்லை. சில படங்கள்ல காட்டுற அளவுக்கெல்லம் இப்ப யாரும் நீட்டி முழுக்கிப் பேசுறதில்லை. பாலா சார் படங்கள்ல எல்லாம் இப்ப யார் ஸ்லாங் பேசுறா? நீங்களே டப்பிங் பேசிடுங்க’னு தைரியம் கொடுத்தார்.’’

‘‘பாடகர்கள், தங்களோட அடுத்தகட்ட வளர்ச்சியா மியூசிக், டைரக்‌ஷன் பக்கம் போவாங்க. உங்களுக்கு அந்த ஐடியா இருக்கா?’’
‘‘மலையாளத்துல அப்படி ஒரு ஆஃபர் வந்திருக்கு. இந்தியிலயும் தமிழ்லயும் ஆல்பங்கள் பண்ணலாம்னு திட்டம் இருக்கு. இந்த ஏழெட்டு வருஷங்கள்ல நான் நிறைய பாடல்களை ரெடி பண்ணி வெச்சிருக்கேன். அதில் என் மனதுக்குப் பிடித்த பாடல்கள் நிறைய இருக்கு. அதுல இருந்து இப்ப பண்ணப்போற மலையாளப் படத்துக்கு சில பாடல்களைப் பயன்படுத்தலாம்னு யோசிக்கிறேன். பார்ப்போம்.’’

“துல்கர், ஃபஹத், நிவின்பாலினு மலையாள நடிகர்கள் நிறைய  பேர் தமிழுக்கு வர்றாங்க. அவங்களோடு பழக்கம் உண்டா?”
“துல்கரைச் சின்ன வயசுல இருந்தே தெரியும். ஃபஹத்துடனும் நல்ல ரிலேஷன்ஷிப். அவர், எனக்கு அஞ்சாரு வருஷம் இளையவர். அமெரிக்காவில் நான் படிச்ச யூனிவர்சிட்டியில்தான் எனக்குப் பிறகு அவரும் படிச்சார். இங்கே விக்ரம்பிரபு நல்ல பழக்கம். அதேபோல ராஜா சார் குடும்பத்தில் வெங்கட் பிரபு, பிரேம்ஜியுடன் நல்ல நட்பு இருக்கு.”

‘‘முன்பெல்லாம், ‘இது இவங்க பாடின பாட்டு’னு எளிதா அடையாளம் கண்டுபிடிக்க முடியும். ஆனால், இப்போது இளம் பாடகர்கள் யார் பாடினாலும் ஒரே டோன்ல இருக்கிற மாதிரி ஓர் உணர்வு. அந்தத் தனித்துவம் இல்லாமல்போனது ஏன்?”
‘‘ ‘இந்த வாய்ஸ் பயன்படுத்தினா போதும்’னு சில இசையமைப்பாளர்களுக்குத் தெரியும். தவிர, இப்ப உள்ள ரசிகர்களும் அவ்வளவு ஆர்வத்தோடு இல்லைனு நினைக்கிறேன். பரபரப்பான வாழ்க்கைமுறை, டெக்னாலஜியின் வளர்ச்சியில் மியூசிக் லவ்வர்கள் தவிர்த்து, மற்றவங்களுக்கு பாடல்கள் கேட்க நேரம் இல்லை. இப்ப எத்தனை பேர் சிடி வாங்கி போட்டு பாட்டு கேட்குறாங்க? ஃப்ரீயா கிடைச்சாக்கூட கேட்கிறதில்லை. நாம ஒரு படம் பார்க்கிறோம். அந்தப் படத்துல வரும் பாடல்களை என்ஜாய் பண்றோம். நல்ல படம்னா அந்தப் பாட்டு லிஃப்ட் ஆகும். ஆனா, சிடியை எடுத்து யார் யார் பாடியிருக்காங்க’னு இப்ப பெருசா யாரும் பார்க்கிறதில்லை. நிறைய சேனல்கள்ல பாடகர்கள் பெயர் சொல்றதே இல்லை. இதில் மாற்றம் இல்லைங்கிறப்ப குரல்கள்ல மட்டும் எப்படி மாற்றம் வரும்?” (சிரிக்கிறார்)

‘‘குக்கிராமங்களில்கூட அப்பாவின் போட்டோவை வைத்திருக்கும் அளவுக்கு, தமிழகத்தில் யேசுதாஸுக்கு நிறைய ரசிகர்கள் இருந்த காலம் உண்டு. அப்பா எப்படி இருக்கார்?’’
‘‘எனக்கு அப்பா என்பதால், அவரின் பாப்புலாரிட்டியை ஆரம்பத்தில் நான் உணரலை. ஆனா, இண்டஸ்ட்ரிக்குள்ளே வந்த பிறகுதான் அவருக்கான மரியாதை புரிஞ்சுது. நாங்க பிரதர்ஸ் மூணு பேர் படிக்கிறதுக்காக, 1993-ல் அமெரிக்காவுக்கு ஷிப்ட் ஆனோம். அம்மா மட்டும் எங்ககூட அமெரிக்கா வந்தாங்க. அப்பா அங்கேயும் இங்கேயுமா போயி வந்துட்டு இருந்தார். இங்கே இளவரசன் மாதிரி இருந்த நான், அங்கே என் வேலையை நானே பார்த்துக்கணும்கிற கட்டாயம். அந்த அமெரிக்கச் சூழல்தான் என் லைஃபையே மாத்துச்சு. இப்ப என் ரெண்டு பிரதர்ஸும் அமெரிக்காவுலேயே பேங்கிங்ல இருக்காங்க. இப்ப நான், அப்பா, அம்மா மட்டும் இங்கே இருக்கோம். ‘எவ்வளவு உயரம் போனாலும் எளிமையா இரு. அதுதான் அழகு’னு அப்பா சொல்வார். அவர் அளவுக்கு நான் உயரம் தொடலை. ஆனாலும் அவரை மாதிரி இருக்க முயல்கிறேன்.”

`‘நீங்க நடிச்ச ‘மாரி’ படத்தை அப்பா இன்னும் பார்க்காததுக்கு என்ன காரணம்?”
“ ‘நீ முதல்ல பாட்டுல கவனம் செலுத்து. நடிக்கிறதைப் பற்றி பிறகு பார்க்கலாம்’னு அப்பா சொன்னாங்க. நானும் தமிழ்ல 300, மலையாளத்துல 500னு 800 பாடல்களுக்குமேல் பாடியிருக்கேன். இன்னும் பாடிட்டிருக்கேன். ஆனா, ‘நடிப்பையும் ட்ரை பண்ணி பார்ப்போமே’னு மலையாளத்துல ‘அவன்’னு ஒரு படத்துல கெஸ்ட் ரோல் பண்ணினேன். பிறகு, தமிழ்ல ‘மாரி’யில் வில்லனா அறிமுகமானேன். இப்ப ‘படைவீரன்’ல ஹீரோ. ‘நம்ம சொன்னதை கேட்கலையே’ங்கிற வருத்தத்தினால்கூட என் படத்தை அவங்க பார்க்கமா இருக்கலாம். ஆனா, ‘படைவீரன்’ படத்தை நிச்சயம் பார்ப்பார்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.”