Published:Updated:

``உங்களுக்கு டைம் இல்லைன்னு பிரேக்-அப் பண்ணிட்டான்” - ‘பூவே பூச்சுடவா’ ஷாமிலி கலகல!

``உங்களுக்கு டைம் இல்லைன்னு பிரேக்-அப் பண்ணிட்டான்” - ‘பூவே பூச்சுடவா’ ஷாமிலி கலகல!
``உங்களுக்கு டைம் இல்லைன்னு பிரேக்-அப் பண்ணிட்டான்” - ‘பூவே பூச்சுடவா’ ஷாமிலி கலகல!

``ஷூட்டிங்காக பொள்ளாச்சி வரை போயிட்டிருக்கேன். கார்லயே பேசிடலாமா?” - தெற்றுப்பல் தெரிய சிரிக்கும் ஷாமிலிக்கு, கண்கள் அவ்வளவு அழகு. ஒரு பக்கம் சன் டிவி, இன்னொரு பக்கம் விஜய் டிவி, ஜீ தமிழ் என ஆல்ரவுண்டர் அம்மணியாக சீரியல்களில் கலக்கிக்கொண்டிருக்கிறார் ஷாமிலி. பிஸியாகப் பறந்துகொண்டிருந்தவரை, மழை நின்ற ஒரு மாலை வேளையில் பேட்டிக்காகப் பிடித்தோம்.

“அழகா தமிழ் பேசுறீங்களே... பூர்வீகம் சென்னையா?”

“கரெக்டா சொல்லிட்டீங்க. படிச்சது, வளர்ந்தது எல்லாமே சென்னைதான். அப்பா எக்ஸ்போர்ட் பிசினஸ் பண்றார். அம்மா ஹவுஸ் வொய்ஃப். அக்கா ஐ.டி நிறுவனத்துல டீம் லீடர். நான் முதலில் பி.எஸ்ஸி., ஐ.எஸ்.எம் (Information System and Management) படிச்சேன். அதுக்குப் பிறகு, எம்.பி.ஏ., ஐ.பி.எம் (International Business Management)-ம் முடிச்சேன். பெரிய படிப்பெல்லாம் படிச்சிருக்கேன்னு நினைச்சுக்காதீங்க. வித்தியாசமா படிக்க ஆசைப்பட்டு படிச்சேன் அவ்வளவுதான்.”

``படிப்பு டு நடிப்பு எப்போ நடந்தது?”

“என் வீட்டில் யாருமே மீடியாவுல இல்லை. எட்டாவது படிக்கிறப்போவே நான் ஒரு லோக்கல் சேனலில் காம்பியரிங் செய்திருக்கேன். அதுதான் என் முதல் அனுபவம். அதுக்கு அப்புறம் காலேஜ் படிச்சுட்டிருந்தப்போ அக்கா ஒருநாள், ‘நீ ஏன் மாடலிங் பண்ணக் கூடாது?’னு கேட்டு என்னை உற்சாகப்படுத்தினா. அப்போ ஒரு வாய்ப்பும் வந்தது. ஜவுளிக்கடைக்கான விளம்பரம் அது. அந்த விளம்பரத்தைப் பார்த்துட்டுதான் ‘தென்றல்’ சீரியலில் கூப்பிட்டாங்க. அதுதான் எனக்கு முதல் சீரியல். படிச்சிருந்தாலும் இந்த ஃபீல்டு பிடிச்சுப்போனதால இதையே கன்டினியூ பண்ண ஆரம்பிச்சுட்டேன்.”

``ஹீரோயின் - வில்லி, இது ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?”

“ஹீரோயினைவிட வில்லிக்குதான் நடிக்க நிறைய பொறுமை தேவை. நல்ல ரீச்சும் இருக்கும். நான் நடிச்ச முக்கால்வாசி சீரியல்களில் ஹீரோயினைவிட வில்லிக்குதான் டயலாக் ஜாஸ்தி.”

“நடிப்பில் முதல் நாள் அனுபவம் எப்படியிருந்தது?”

“நடிப்புல முழுமையா இறங்கிறதுக்கு முன்னாடி, குட்டிக்குட்டியா நிறைய ஷார்ட் ஃபிலிம்ஸில் நடிச்சிருக்கேன். அப்போ கிடைச்ச அனுபவங்கள்தான், ‘இந்தப் பொண்ணு நல்லா நடிக்கிறாங்களே’னு சீரியல் முதல் நாளே இயக்குநர்கிட்ட நல்ல பேரும் வாங்க உதவியா இருந்துச்சு.”

“ஷூட்டிங் இல்லாதபோது ஷாமிலியின் பொழுதுபோக்கு?”

“உங்களுக்கு மட்டும் ஒரு சீக்ரெட் சொல்றேன். நான் மேக்ஸிமம் சென்னையில் இருக்கவே மாட்டேன். கொஞ்சம் லீவ் கிடைச்சாலும்  டிரக்கிங், டிராவல்னு ஓடிடுவேன். சில்லுனு, மரம் சூழ இருக்கிற இடங்கள் ரொம்பப் பிடிக்கும்.”

``வெளியே போகும்போது ரசிகர்களின் அன்புத்தொல்லையை உங்க நண்பர்கள் எப்படி எடுத்துக்கிறாங்க?”

``எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் ரொம்பக் குறைவு. கூட்டத்தை அதிகமா சேர்த்துக்க மாட்டேன். அந்த ரெண்டு மூணு நண்பர்களோடு வெளியே போறப்ப முகத்தை மறைச்சுக்கிட்டோ, கூட்டம் அதிகம் இல்லாத இடத்துக்கோதான் போவேன். அப்படியும் என்னைக் கண்டுபிடிச்சுட்டாங்கனா, அவங்ககூட சேர்ந்து என் ஃப்ரெண்ட்ஸும் என்னை ஓட்டுவாங்க.”

“இதுவரைக்கும் எத்தனை லவ் லெட்டர்ஸ் வந்திருக்கு?”

“ஸ்கூல் படிக்கிறப்போ நிறைய வந்திருக்கு. காலேஜ் படிக்கிறப்போவே மீடியாவுக்கு வந்துட்டதால, புரப்போசல்ஸ் வந்தது. கூடவே எக்கசக்கமா கிப்ட்ஸும். நடுவுல நானும் ஒரு பையன் மேல ஃபீல் ஆகி லவ் பண்ணினேன். அந்தப் பையன் `என்கூட பேச உங்களுக்கு டைமே இல்லையே’னு பிரேக்-அப் பண்ணிட்டான். கையில் இப்போ வரிசையா சீரியல்ஸ் இருக்கிறதால், இப்போதைக்கு நோ காதல்... நோ கல்யாணம்.”

``ஷூட்டிங்கில் மறக்கவே முடியாத சம்பவம் ஏதாவது இருக்கா?”

“`பாசமலர்' சீரியல் நடிக்கிறப்போ, அதில் நெகட்டிவ் கேரக்டர் இறந்து, அதோட ஆவி எனக்குள்ள வந்துடும். அந்த வில்லி கேரக்டரில் ஒருநாள் நெருப்பு எரியுற காஸ் ஸ்டவ் பார்த்து `இந்தப் பாயசம்தான் உங்க எல்லாருக்கும் விஷம்’னு டயலாக் பேசணும். அன்னிக்கு நான் கண்ணில் லென்ஸ் வேற போட்டிருந்தேன். டயலாக் பேசிட்டு இருக்கும்போதே கண்ணில் திடீர்னு நெருப்பு பிடிச்சுடுச்சு. டக்குனு லென்ஸ் வெளியே எடுத்துட்டேன். கொஞ்சம் விட்டிருந்தா கண்ணே போயிருக்கும். அந்தச் சம்பவம் மறக்கவே முடியாது” பயம்  விலகாமலே பேசி முடித்தார் ஷாமிலி.