Published:Updated:

உப்புமா கம்பெனியும் 250 ரூபாயும்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 1

உப்புமா கம்பெனியும் 250 ரூபாயும்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 1
உப்புமா கம்பெனியும் 250 ரூபாயும்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 1

உப்புமா கம்பெனியும் 250 ரூபாயும்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 1

மிழ் சினிமாவின் ஒவ்வொரு வெற்றிப்படத்திற்குப் பின்னேயும் கோடம்பாக்கக் கனவுகளோடு சென்னைக்கு வண்டி ஏறுபவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இயக்குநர் ஆகவேண்டும், நடிகர் ஆகவேண்டும் எனப் பெரிய லட்சியங்களின் முதல் அடியாகக் கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைப்பவர்களும், சினிமாவின் ஒரு மூலையிலாவது தனது பங்கிருக்க வேண்டும் எனும் தாகத்தோடு லைட்மேன், அஸிஸ்டென்ட் ஆக  விரும்புகிறவர்களும் இந்தப் பெரும் பட்டியலில் இருக்கிறார்கள். காலத்தின் வேகத்தில் கேமரா ட்ராலியின் பின்னே ஓடமுடியாதவர்கள் மூச்சு வாங்கிப் பாதியிலேயே நின்று விடுகிறார்கள். முயன்று முன் செல்பவர்கள் டைட்டில் கார்டுகளில் மின்னுகிறார்கள்.

அப்போதைய ரீல் பெட்டி காலத்தில் மட்டுமல்ல... பாகவதர் காலம் முதல், பாலசந்தர், பா.ரஞ்சித் காலம்வரை இதுதான் நிலைமை. அப்படி, சினிமாவின் 70 எம்.எம் கனவுகளோடு சென்னைக்குப் பயணப்படுகிற ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கதையைத்தான் நாம் பார்க்கப் போகிறோம். இன்னும் ஓர் ஓரத்தில் கூட இடம் கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கிற மற்றும் சினிமாவில் சின்ன அறிமுகம் கிடைத்துப் பெரிய மாரத்தானில் ஓடிக்கொண்டிருக்கிறவர்களின் சென்னைக்கு வண்டி ஏறிய அனுபவங்களைப் பற்றிப் பேசலாம். அந்த அனுபவங்களின் சுவாரஸ்யங்களையும், அவர்கள் சந்தித்த மனிதர்களையும் பற்றிப் பேசலாம். சினிமா உலகில் பல்லாயிரக்கணக்கான கோடி வணிகம் நடைபெறுவதைப் போலவே, சினிமா வாய்ப்புத் தேடி வருபவர்களைச் சுற்றியும் பெரும் வணிகம் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. எல்லாவற்றைப் பற்றியும் பேச எல்லோருக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. பேசிப் பெறுவோம்...

அவர் தற்போது ஊடகத் துறையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் நண்பர். பள்ளிக்கூடம் படிக்கிற காலம் முதலே சினிமாவின் மீது தீவிரமான ஈர்ப்பு உடையவர். சினிமாக் கனவுகளுக்கும், குடும்பத்தின் சூழல்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு உழன்றிருக்கிறார். 'சினிமா'வைப் பற்றிய தவறான பிம்பங்ளால் குடும்பத்தினர் அனுமதிக்க மறுக்க, ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே பால்டாயிலில் சீயக்காயைக் கரைத்துக் குடித்திருக்கிறார். அவர் சீரியஸாகச் சொல்லிக்கொண்டிருக்கும்போது 'அது ஏங்க சீயக்காயைக் கரைச்சுக் குடிச்சீங்க..?' என்றெல்லாம் கேட்டால் கும்பிபாகம் நிச்சயம் என்பதால் விட்டுவிட்டேன். பாவம் அவருக்கென்ன கஷ்டமோ... படிக்கும் நீங்களும் அப்படியே விட்டுவிடுங்களேன்.

டூரிங் டாக்கீஸ் படங்கள் பார்த்து ஃபிலிம் ரோலின் மீது பெருத்த மையல் கொண்டவருக்கு, செய்தித்தாள்களில் வரும் 'சினிமா வாய்ப்பு' விளம்பரங்களைக் கத்தரித்துச் சேகரிக்கும் அளவிற்கு வெறி ஊறிப்போனது. பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே ஒரு நாள், நைட் ஸ்டடி இருப்பதாக முதல் நாளே வீட்டில் சொல்லிவிட்டு அவரும் அவரது நண்பரும் சென்னைப் பட்டினத்துக்கு ரயில் ஏறியிருக்கிறார்கள். எழும்பூர் வந்திறங்கி அந்தச் செய்தித்தாள் விளம்பரத்தில் இருந்த முகவரிக்குச் சென்று உதவி இயக்குநராகும் ஆசையைச் சொல்லியிருக்கிறார்கள். இரண்டு பீஸுகள் சிக்கிக்கொண்டதை அடுத்து, தலைக்கு 250 ரூபாயை முன்பணமாகக் கட்டச் சொல்லிப் பின்னர் போனில் அழைப்பதாகக் கூறியிருக்கிறார்கள். வந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் மாலையில் ரயிலேறினால் விடியும்போது அவர்கள் ஊருக்குப் போய்விடலாம்.

'நீங்கள் சினிமாவில் சாதிக்க... எங்கள் கதவு திறந்தே இருக்கிறது' என விளம்பரம் கொடுத்திருந்தவர்களை ஒருமுறை பார்க்கப் போனால் அந்த ஆபிஸில் கதவே இல்லையாம். 'என்னடா இது சினிமாவுக்கு வந்த சோதனை' எனப் புலம்பியபடியே திரும்பியிருக்கிறார்கள். ஆனாலும், இந்த சினிமா வாய்ப்புத் தரும் (?) நிறுவனங்கள் சங்கம் வைத்து இந்த வேலையைச் செய்து வருவார்கள்போல. எல்லா உப்புமா கம்பெனிக்காரர்களும் சொல்லிவைத்தாற்போல 250 ரூபாயைத்தான் வசூலித்து வந்திருக்கிறார்கள். இந்தத் தொகை அந்தத்தக் காலகட்டத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். இந்த வேலையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திக்கொண்டிருப்பவர்களும் எப்போதோ இதே முறைப்படி பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக்கூடும் எனப் பட்சி சொல்கிறது.

இப்படியே, நான்கைந்து முறைகள் நைட் ஸ்டடி போவதாகச் சொல்லிச் சென்னைக்கு வருவதும், சேர்த்து வைத்த பணத்தைத் தலைக்கு 250 ரூபாய் அழுவதுமாகக் கடந்திருக்கிறது காலம். அந்தத் தயாரிப்புக் கம்பெனிக்காரர்கள் திரும்ப அழைக்கவுமில்லை. எடுக்கப்போவதாகச் சொன்ன படங்களை எடுக்கவுமில்லை. ஆபிஸ் இருக்கும் அறையை மட்டும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வாஸ்துப்படி இடமாற்றம் செய்து விடுவார்கள் போல... முன்பு ஆஞ்சனேயர் பெயரில் இருந்த புரொடக்‌ஷன் கம்பெனி அடுத்தமுறை அதே இடத்தில் 'குமரன் புரொடக்‌ஷன்ஸ்' ஆகியிருக்குமாம்.

இத்தனைக்குப் பின்பும் இன்னொருமுறை ஒரு எக்மோர் உப்புமா புரொடக்‌ஷன் கம்பெனிக்குப் போயிருக்கிறார்கள். அதே 250 ரூபாயைக் கொடுத்துவிட்டு 'உனக்கு எரநூத்தி அம்பது, எனக்கு எரநூத்தி அம்பது ஆகமொத்தம் ஐநூறு. சியர்ஸ்' எனப் புலம்பியபடி திரும்பும்போதுதான் இது வேலைக்கு ஆகாது என மெடூலா ஆப்லங்கட்டாவில் மெள்ள உரைத்துக் கொஞ்சமாகச் சுதாரித்திருக்கிறார்கள். சரி, கடைசியாகக் கொடுத்த பணத்தை மட்டும் வாங்கிக்கொண்டு ஊருக்குப் போய்விடலாம் என அந்த மொபைல் நம்பருக்குத் திரும்பவும் அழைக்க, அதற்குள் அந்த நம்பர் சுவிட்ச் ஆப் ஆகியிருக்கிறது. நேரில் போய்ப் பார்த்தால், சந்தடிசாக்கில் கடையையே காலி செய்திருக்கிறார்கள். இந்த அட்டெம்ட்டும் ஃபெயிலியர் ஆன சோகத்தோடு நண்பரும், அவரது நண்பரும் 'இதுதான் கடைசி...' என ஊர் திரும்பி இருக்கிறார்கள். இதைப்போன்ற சம்பவம் சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்த பலருக்கும் நேர்ந்திருக்கும்.

ஒரே ஒரு காமெடியின் மூலம் உலக லெவல் ஃபேமஸ் ஆன நடிகர் அவர். சென்னைக்கு வந்த கதையைச் சொல்லும்போதே கண்கலங்கும் அந்த நடிகர் யார் தெரியுமா..? அடுத்த பதிவில்...

- இன்னும் ஓடலாம்...

அடுத்த கட்டுரைக்கு