Published:Updated:

இயக்கம்... நடிப்பு... அரசியல் - திறமைப் புதையல் ‘தசாவதானி’ தாசரி நாராயணராவ்!

இயக்கம்... நடிப்பு... அரசியல் - திறமைப் புதையல் ‘தசாவதானி’ தாசரி நாராயணராவ்!
இயக்கம்... நடிப்பு... அரசியல் - திறமைப் புதையல் ‘தசாவதானி’ தாசரி நாராயணராவ்!

இயக்கம்... நடிப்பு... அரசியல் - திறமைப் புதையல் ‘தசாவதானி’ தாசரி நாராயணராவ்!

`இந்திய சினிமா உலகின் தசாவதானி' என்கிற அடைமொழி, தாசரி நாராயணராவுக்குப் பொருந்தும். தெலுங்கில் மிகப் பிரபலமான இயக்குநர், திரைக்கதையாசிரியர், நடிகர், பாடலாசிரியர் எனப் பன்முகங்களைக்கொண்டவர். கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாசரி நாராயணராவுக்கு, சுவாசப் பிரச்னை மற்றும் சிறுநீரகப் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார் தாசரி. அவரது உடல்நிலை நேற்று மாலை மோசமான நிலைக்குச் சென்றதால், சிகிச்சை பலனளிக்காமல் தாசரி நாராயணராவ் உயிரிழந்தார். இந்தச் செய்தியால் ஒட்டுமொத்த திரை உலகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

தாசரி நாராயணராவுக்கு வயது 75. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியின் `பாலகொல்லு' என்ற ஊரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர்.  தாசரி என்பது அவருடைய குடும்பப் பெயர். சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்துடன் சிறிது காலம் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள். சென்னை வானொலி நிலையத்துக்காக தெலுங்கு நாடகங்களை எழுதினார். பிறகு, ஏ.பீம்சிங்கிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

மறைந்த பி.ஆர்.பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸில் நிர்வாகியாக பணியாற்றிய ராகவலு, தாசரி நாராயணராவின் கதை, வசனம், இயக்கத்தில் `தாத்தா மனவாடு' என்ற தெலுங்குப் படத்தைத் தயாரித்தார். அதில் எஸ்.வி.ரங்காராவ், அஞ்சலிதேவி நடித்திருப்பார்கள். படம் நல்ல வசூலைப் பெற்றது. அதன் பிறகு தாசரி காட்டில் அடைமழைதான். உழைப்பு, உரிய வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்தது. 

151 படங்களை இயக்கி சாதனை புரிந்ததால், வேர்ல்டு ரெக்கார்ட் புக்கிலும் இடம்பிடித்தவர் தாசரி நாராயணராவ். 53 படங்களைத் தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை-வசனம் எழுதியுள்ளார். சமூகத்தில் நிலவும் சாதி, மத வேறுபாடுகள், பாலினப் பாகுபாடுகள், லஞ்சம், ஊழல் போன்றவற்றுக்கு இவரது வசனங்கள் சாட்டையடி கொடுத்தன. தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் படங்களை உருவாக்கிய வித்தகர்.

1984-ம் ஆண்டு, தாசரிக்கு சினிமா உலகில் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த ஒரு வருடத்தில் மட்டும் இவரின் சார்பில் 10 படங்கள் வெளிவந்தன. அதில் ஐந்து, இந்தி மொழிப் படங்கள். அத்தனையும் சூப்பர் ஹிட்.  45 வருட சினிமா பாரம்பர்யத்துக்குச் சொந்தக்காரர் அவர். அதுதான் அவருக்கு எண்ணற்ற விருதுகளையும் பெற்றுக்கொடுத்தது.

தேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள், ஒன்பது நந்தி விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது என தாசரியின் விருதுப் பட்டியல் அவரது படங்களின் எண்ணிக்கையைப்போன்றே நீளமானது. இயக்கம், தயாரிப்பு மட்டுமல்லாமல், பல படங்களில் நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார். 1995-ம் ஆண்டில் வெளிவந்த `மாயாபஜார்', 2014-ம் ஆண்டில் வெளியான `பாண்டவலு பாண்டவலு தும்மெடா' போன்றவை அவரது நடிப்புக்கு உதாரணங்கள்.

இத்தனை திறமைகளையும் தாண்டி, அரசியலையும் ஒரு கை பார்த்தார் தாசரி.  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிலக்கரித் துறை இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர், காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளியாகவும் திகழ்ந்தார்.  2011-ம் ஆண்டில் இவரது மனைவி தாசரி பத்மா இறந்த பிறகு, சிறிது காலம் மனமுடைந்திருந்தவர், மீண்டும் பணிகளில் ஆழ்ந்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பிய தாசரி, அதற்காக ‘அம்மா’ என்ற தலைப்பையும் முறைப்படி பதிவுசெய்து வைத்திருந்தார். அதுகுறித்து, ‘நடிகை, அரசியல்வாதி என இரு வகைகளிலும் ஜெயலலிதா எனக்கு நெருங்கிய நண்பர். அவரது சாதனைகளைப் பட்டியலிடும் வகையிலேயே இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறேன். 2018-ம் ஆண்டு இறுதியில் இந்தப் படம் திரைக்கு வரலாம்’ எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தாசரி நாராயணராவின் எதிர்பாராத மரணம் திரையுலகுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ரஜினி, கமல், அல்லு அர்ஜூன், நாகார்ஜூனா என முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் அவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்துவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு