Published:Updated:

“தனுஷ் தங்கச்சி நான்!" - ‘ராஜா ராணி’ ஸ்ரீதேவி

“தனுஷ் தங்கச்சி நான்!" - ‘ராஜா ராணி’ ஸ்ரீதேவி
“தனுஷ் தங்கச்சி நான்!" - ‘ராஜா ராணி’ ஸ்ரீதேவி

“தனுஷ் தங்கச்சி நான்!" - ‘ராஜா ராணி’ ஸ்ரீதேவி

சின்னத்திரையில் கண்களை உருட்டி, மிரட்டிக் கோப முகம் காட்டும் ஸ்ரீதேவியின் சமூக வலைதளப் பக்கங்கள் முழுவதும் நாய்க்குட்டிகளின் புகைப்படங்களால் நிறைந்திருக்கின்றன. அந்த அளவுக்கு பப்பி லவ்வராம் இந்த அழகுப்பொண்ணு. சின்னத்திரையின் தற்போதைய ‘ஸ்ரீதேவி’ இவர்தான். விஜய் டிவி-யின் புதிய சீரியலான ‘ராஜா ராணி’ தொடரில் வில்லியாக வேடம் கட்டியிருக்கும் ஸ்ரீதேவி, நிஜத்தில் அப்படியே எதிர்மாறாக இருக்கிறார். அவ்வளவு ஜோவியல், ஜாலி டைப். செம ஃப்ரெண்ட்லியாகப் பேசியவரிடம் கேள்விகளை அடுக்கினோம். 

“சின்ன வயசுலேயே மீடியாவில் நீண்ட பயணம் உங்களோடது. மீடியாவுக்கு முன்னாடி..?”

“தாய்மொழி தெலுங்கா இருந்தாலும் டிபிக்கல் சென்னை வளர்ப்பு நான். படிப்புதான் கொஞ்சம் பெரிய்யய... லிஸ்ட். பி.எஸ்ஸி., நியூட்ரீஷியன் அண்ட் டயட்டிக்ஸ், எம்.பி.ஏ ஹெ.ஆர் மேனேஜ்மென்ட், எம்.எஸ்ஸி சைக்காலஜி, எம்.ஏ லிங்குஸ்டிக்ஸ். இப்போ எம்.எஸ்ஸி க்ரிமினாலஜி அப்ளை பண்ணியிருக்கேன். நடுவில் இரண்டு தடவை சிவில் சர்வீஸஸ்கூட எழுதியிருக்கேன். ஆனா கிடைக்கலை. படிக்கிறதுக்கு எனக்கு அவ்வளவு இஷ்டம்.”

“சின்னத்திரையில் பிஸியா இருந்தாலும் உங்க ஃபர்ஸ்ட் என்ட்ரி சினிமாவாமே?”

“அதே... அதே. நான் மீடியாவுக்கு வந்ததே ஆக்சிடென்டலான விஷயம்தான். `புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படம் ஷூட் போயிட்டிருந்தப்போ நான் ப்ளஸ் டூ படிச்சுட்டிருந்தேன். அந்தப் படத்தோட மேனேஜர் எங்க வீட்டு மாடியில்தான் குடியிருந்தார். அவர்கிட்ட படம் பற்றி ஒருநாள் கேட்டப்போ, ‘படமெல்லாம் முடிஞ்சுடுச்சு. ஃபேமிலி போர்ஷன் மிச்சமிருக்கு. தனுஷுக்குத் தங்கச்சி கேரக்டருக்குத்தான் ஆள் தேடிட்டிருக்கோம்’னு சொன்னார். அப்போ நானும் விளையாட்டா ‘நான் வேணா நடிக்கவா?’னு கேட்டேன். அவர் டக்குனு ஓகே சொல்லிட்டார். அப்புறம்  ஒரு தெலுங்கு சீரியல்ல நடிச்சேன். ‘செல்லமடி நீ எனக்கு’ சீரியல்தான் எனக்கு தமிழில் முதல் சீரியல். இப்போ நடிப்புதான் என் உலகம்.”

“சீரியலில் கலெக்டரா நடித்தபோது எப்படி ஃபீல் பண்ணீங்க?”

“சீரியலில் கலெக்டரா நடிச்ச பிறகுதான் உண்மையில் அந்த ஆசையே வந்தது. `தங்கம்’ சீரியலில் கலெக்டரா நடிக்கிறப்போ, செட்ல எல்லாரும் ‘கலெக்டர் ஆகுறதெல்லாம் ரொம்ப கஷ்டம்’னு சொல்வாங்க. எப்பவுமே எனக்கு `முடியாது'னு சொல்லிட்டாங்கனா `அதை செஞ்சு காட்டணும்'னு தோணும். அதுக்காகவே படிச்சேன். ஜெயிக்கலைன்னாலும் ட்ரை பண்ணியிருக்கேன்கிறதே ரொம்பத் திருப்தியா இருக்கு.”

“விஜயகுமார், ரம்யாகிருஷ்ணன், சீமா-னு ஒரு பெரிய  பெரிய ஸ்டார்ஸ்கூட நடிச்சிருக்கீங்க. அவங்களோடு நடித்த அனுபவம்?”

``அதெல்லாம் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத மொமன்ட். ரம்யா மேம், விஜயகுமார் சார், சீமா மேம், அனுராதா மேம், மஞ்சு மேம்னு எல்லாரும் கிட்டத்தட்ட குடும்பம் மாதிரிதான் பழகினாங்க. நான் அவங்களை நிஜத்திலும் அம்மா, அப்பா, அக்கானுதான் கூப்பிடுவேன். அந்த அளவுக்கு கொஞ்சம்கூட பந்தா இல்லாத அன்பான ஸ்டார்ஸ்.”

“உங்க ஃபேஸ்புக் பேஜ் முழுக்க நாய்க்குட்டிகளா இருக்கே. பப்பீஸ்னா அவ்ளோ பிடிக்குமா?”

“எஸ்... எனக்கு நாய்க்குட்டினா அவ்வளவு இஷ்டம். விலங்குகள் நலப் பாதுகாப்பு அமைப்பில் ஆக்டிவிஸ்ட்டா இருக்கேன். ரோட்டோரத்தில் அடிபட்டுக் கிடக்கிற விலங்குகளை ரெஸ்க்யூ பண்றது, தத்துகொடுக்கிறது, பராமரிக்கிறதுனு என்னால முடிஞ்சதைச் செய்துட்டிருக்கேன்.”

``அதென்ன மிரப்பகாய்?”

“ `மிரப்பகாய்'னா தமிழில் `மிளகாய்'னு அர்த்தம். அம்மாவுக்காக நான் ஆரம்பிச்சிருக்கிற ஸ்டார்ட் அப். ஊறுகாய், பொடி வகைகள் எல்லாம் இப்போதைக்கு சேல் பண்ணிட்டிருக்கோம். சீக்கிரமே அதைப் பெரிய லெவலுக்கு எடுத்துட்டுப் போகணும்.”

“உங்க ஃபேஷன் சென்ஸ் ரொம்ப சூப்பர்ப். ஷாப்பிங் டிப்ஸ் ப்ளீஸ்...”

“சீரியலைப் பொறுத்தவரை அவங்க சொல்ற கேரக்டருக்கு ஏற்ற மாதிரி உடைகள், நகைகள் நானே டிசைன் பண்ணிப்பேன். ஆனா, அதைத் தேர்ந்தெடுத்து வாங்குறதெல்லாம் அம்மாவோட வேலை. ஷாப்பிங் பைத்தியம் அவங்க. “வா, சும்மா கடைக்குப் போயிட்டு வரலாம்’னு கூப்பிடுவாங்க. நான் பெரும்பாலும் டிரைவிங் வேலை பார்க்கிறதோடு சரி. கலர் காம்பினேஷனிலிருந்து, புடவையா, சுடிதாரா வரைக்கும் அம்மாவோட செலெக்‌ஷன்தான். என்னோட ஃபேஷன் சீக்ரெட் அம்மாதான்.” 

“அம்மாவும் சினிமா இண்டஸ்ட்ரியில் இருந்தவங்கனு கேள்விபட்டோமே?”

``உண்மைதான். அம்மா ரூபா, தெலுங்கு சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா இருந்தாங்க. இப்போ பிரேக் எடுத்துக்கிட்டு வீட்டில் இருக்காங்க. வீட்டுப் பக்கம் நிறைய மீடியா பிரபலங்கள் இருக்காங்க. அப்பா, தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். கூடவே இன்னும் மூணு பேர் இருக்காங்க. அவங்க பேர் டஃபி, டாம், டோரா. அவங்களைப் பற்றியும் மறக்காமச் சொல்லிடுங்க. இல்லைன்னா கோவிச்சுப்பாங்க'' - பளிச்சென சிரிக்கிறார் ஸ்ரீதேவி.

அடுத்த கட்டுரைக்கு