Published:Updated:

'பெண்கள் இப்படியெல்லாம் நடந்துக்கிட்டா பிரச்னை வராது!' - என்ன சொல்கிறார் நடிகை மும்தாஜ்?

'பெண்கள் இப்படியெல்லாம் நடந்துக்கிட்டா பிரச்னை வராது!' - என்ன சொல்கிறார் நடிகை மும்தாஜ்?
'பெண்கள் இப்படியெல்லாம் நடந்துக்கிட்டா பிரச்னை வராது!' - என்ன சொல்கிறார் நடிகை மும்தாஜ்?

மும்தாஜ் என்றாலே நினைவுக்கு வருவது 'மலமலமல மல மல' பாட்டுத்தான். 2001-ல் எப்போது டி.வி-யைப் போட்டாலும் வந்து விழுந்த சூப்பர் ஹிட் பாடல் அது. பல வருடங்கள் `லைம்லைட்'டில் இருந்தவர், கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்தார். `என்ன செய்துகொண்டிருக்கிறார்?' என்கிற ஆவல் மேலிட, அவரை சென்னை, அண்ணா நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் ஒரு மதிய வேளையில் சந்தித்தேன். வரவேற்பறையில் மும்தாஜ் வீடுதான் என்பதற்கு எந்தவிதமான தடயமும் இல்லாமல் இருந்தது. அவர் முகம் பதித்த படங்களை சுவரில் எங்குமே பார்க்க முடியவில்லை. டம்ளரில் இருந்து தண்ணீர்  ஒரு துளி சிதறியிருந்தது. பதறிப்போய் டிஷ்யூ பேப்பரால் துடைக்கிறார். வீட்டை அவ்வளவு தூய்மையாக வைத்திருக்கிறார். மேஜை மேல் வைத்திருந்த எல்லாம் சரியாக இருக்கிறதா என்பது முதற்கொண்டு வரவேற்பு அறையின் நீட்னெஸ்ஸை உறுதிசெய்த பிறகே பேச ஆரம்பிக்கிறார்... பேச்சில் எளிமையோ எளிமை!

''உங்களுக்கு வீட்டு மேல நிறைய அக்கறை இருக்கு போல..?''

''ஆமாம். எனக்கு மனிதர்கள் மட்டுமல்லாமல், வீட்ல இருக்கிற ஒவ்வொரு பொருள் மேலயும்  எப்பவும் அக்கறை இருக்கும். வீட்டை சுத்தமா வெச்சிருக்கணும்னு உறுதியா இருப்பேன். இது எல்லாமே என் அம்மாகிட்ட இருந்து வந்தது. சின்ன வயசுல இருந்தே `நம்ம தேவைகளுக்காக அடுத்தவங்களை எதிர்பார்த்து இருக்கக் கூடாது'னு சொல்லிட்டே இருப்பாங்க. இதுல ஒரு பியூட்டி என்னன்னா, என் அம்மா பெரிய பணக்கார குடும்பத்தில் வளர்ந்தவங்க. அவங்க சின்ன வயசா இருந்தப்போ கிட்டத்தட்ட பதினைந்து வேலையாட்கள் வீட்ல இருப்பாங்களாம். அம்மா குளிச்சு முடிச்சுட்டு வந்தாங்கனா அவங்க அன்றைக்கு உடுத்திக்கொள்ள வேண்டிய டிரெஸ்ஸை தயாரா கையில ஏந்திக்கிட்டு ஒரு பணிப்பெண் நின்னுட்டு இருப்பாங்களாம். அப்படி எல்லாம் வீட்டுக்கு செல்லமாக இருந்தவர் ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தில் திருமணமாகிச் சென்றார். அத்தனை பேருக்கு ஒரே ஆளாக காலை, மதியம், மாலை என தொடர்ந்து சப்பாத்திக்கு மாவு பிசைந்துட்டே இருப்பார். வாக்கப்பட்டு வந்த இடமும் பெரிய இடம்தான். இருந்தாலும், தன் குடும்பத்துக்காக எல்லாத்தையும் பாத்துப் பாத்து செய்வாங்க. என்னோட ரூமை நான் கிளீனா வெச்சுக்கணும். அப்படி  இல்லைன்னா அன்னிக்கு நைட்டு ஹால்ல இருக்கிற சோபாவுலதான் படுத்து தூங்கணும். எத்தனை நாள் ஆனாலும் நான்தான் என் ரூம், டிரெஸ் எல்லாத்தையும் கிளீன் பண்ணணும். இப்படி ஒரு கண்டிஷன் இருந்ததால வேற வழியில்லாம என் ரூமை கிளீன் பண்ணுவேன். அதே மாதிரி காலையில சரியான நேரத்துக்கு எந்திரிக்கணும்; சரியான நேரத்துக்கு ஸ்கூலுக்குப் போகணும். இப்படி எல்லாத்திலும் சுத்தம் மற்றும் நேரத்தைக் கடைப்பிடிக்கிறதுனு சின்ன வயசுல இருந்தே கத்துக்கொடுத்துட்டாங்க. அது இப்போ வரைக்கும் தொடருது.'' 

''இப்போ இருக்கிற பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு என்ன சொல்லிக்கொடுப்பதாக நினைக்கிறீங்க?''

''குழந்தைக்கு சொல்லிக் கொடுக்கிறதுனு இல்லைங்க. அவங்களை பாத்துக்கிறதே இல்லைனுதான் சொல்லுவேன். கணவன், மனைவி இரண்டு பேருமே வேலைக்குப் போற வீட்ல குழந்தையைப் பாத்துக்கிறது குழந்தைப் பாதுகாப்பாளராகத்தான் (மெய்டாகத்தான்) இருக்கும். அவங்களைப் பொறுத்தவரைக்கும் சரியான நேரத்துக்கு குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிவிடணும்; ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கணும்... அவ்வளவுதான். இப்படி இருக்கும்போது குழந்தைக்குத் தேவையான அன்பு, அறிவுரை எல்லாம் எங்கிருந்து வரும்னு நினைக்கிறீங்க. மகனுக்கோ, மகளுக்கோ என்ன பிரச்னை இருக்கு; அவங்க சரியா படிக்கிறாங்களா இல்லையா.. இப்படி எதையும் கண்டுக்காம, நைட்டு வரைக்கும் வேலை பார்த்துட்டு குழந்தை தூங்கினதுக்குப் பிறகு வரக்கூடிய பெற்றோரைத்தான் இப்ப நிறைய பார்க்க முடியுது. குழந்தை வளர்ப்பில் முக்கியப் பங்கு பெண்களுக்கு இருக்கு. அதை அவங்க சரியா நிறைவேற்றணும்.'' 

''பெண்கள் வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்றீங்களா?''

''நான் அந்த அர்த்தத்துல சொல்லல. குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாத, கண்காணிக்க முடியாத ஒருத்தரால எப்படி ஒரு ஆபீஸ்ல சரியா நடந்துக்க முடியும். நம்ம சம்பாதிப்பது, கஷ்டப்படுறது, கடன் வாங்குறது எல்லாமே நம்ம குழந்தைகளோட எதிர்காலத்துக்காகத்தானே. இப்படி அவங்களுக்காக சேர்க்கிற சொத்து மேலதான் உங்களுக்கு அதிகமான அக்கறை இருக்கே  தவிர, அந்த குழந்தை மேல அக்கறை காட்டுறதுக்கு நேரம் ஒதுக்காம ஓடிட்டு இருக்கீங்கனு சொல்ல வர்றேன். உங்க குடும்பத்து கஷ்டத்தை சமாளிக்க முடியலயா... தாராளமா வீட்ல இருந்து வேலை பார்க்கிற ஆஃப்ஷனைத் தேர்ந்தெடுங்கனுதான் சொல்றேன்''. 

''இவ்வளவுதூரம் குடும்ப நலன் பற்றி யோசிக்க வேண்டிய காரணம்?

''இதை எல்லாம் நான் புதுசா யோசிக்கல. ஒவ்வொரு இடத்திலயும் இருக்கிற பெத்தவங்களைப் பார்த்தப் பிறகுதான் சொல்றேன். பாம்பே ட்ராஃபிக்ல நிறைய குழந்தைகள் பிச்சை எடுத்துட்டு இருப்பாங்க. பெரும்பாலான குழந்தைகள் சோர்ந்து போய் எப்பவும் கிறக்கத்துல இருக்கிற மாதிரியே திரிவாங்க. அதுக்கு காரணம், அவங்களுக்கு குடிப்பழக்கத்தை கத்துக்கொடுத்து பிச்சை எடுக்க வைக்கிறதுதான். எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்துல இருந்து விலகியதே இல்லை. பாம்பேல கணவன், மனைவி இரண்டு பேருமே பெரிய கம்பெனியில வேலை பார்க்கிறாங்க. அதனால காலையில அவசர அவசரமா எழுந்துப் போக வேண்டியிருக்கும். இதுக்காக குழந்தையை கவனிச்சுக்க ஒரு ஆள் போட்டாங்க. இவங்க வேலைக்குக் கிளம்பியதும், வேலை ஆள் குழந்தைக்கு பிச்சை எடுக்கிற டிரெஸ்ஸைப் போட்டுவிட்டு, பிச்சை எடுக்க அனுப்பி வெச்சாங்க. சாயந்திரம் குளிக்க வெச்சு குழந்தையை ஃப்ரெஷ்ஷா தயார்படுத்தி வெச்சுடுவாங்க. இப்படியே போயிட்டு இருந்தது. ஒரு நாள் திடீர்னு அந்தக் குழந்தை காணாமப் போயிடுச்சு. அதற்குப்பிறகுதான் பெற்றோர்கள் பதறிப்போய் குழந்தையைக் காணோம்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயின்ட் பண்றாங்க. கிட்டத்தட்ட இரண்டு மாசம் கழிச்சு அந்தக் குழந்தையை கண்டுபிடிச்சிருக்காங்க. நல்லவேளை, குழந்தைக்கு எந்தப் பிரச்னையும் இல்ல. அதுக்கப்புறம் வேலையை விட்டுட்டு வீட்லயே இருந்து தன்னோட குழந்தையைப் பார்த்துக்கிட்டாங்க. இப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடந்துதான் தன்னோட குழந்தையை பத்திரமா பாத்துக்கணும்ங்கிறது இல்ல. இப்படி பல விஷயங்களை என்னோட லைஃப்ல பார்த்திருக்கேன். நிறைய பேருக்கு அட்வைஸும் கொடுத்திருக்கேன்.''

''அப்போ நீங்களும் சமூக சேவை செய்துட்டு இருக்கீங்க..?''

''சமூக சேவை என்பதையும் தாண்டி சக மனிதர்களை மதிக்க தெரிஞ்சிருக்கணும்னு நினைக்கிறேன். அன்றாடம் பார்க்கிற நிறைய விஷயங்கள் மனதை காயப்படுத்திடுது. காரில் பயணம் செய்யும் போதுக்கூட ஹாரன் அடிப்பதோடு நிறுத்திக்காம ஆபாச வார்த்தைகளால திட்டுறதை நிறைய  இடங்களில் பார்க்க முடியுது. இப்படி நிறைய விஷயங்களை சகித்துக்கொள்ளப் பழகிட்டோம். இதெல்லாம் மாறணும்.'' 

''வேலை செய்யும் இடத்தில் பெண்கள் எப்படி நடந்துக்கணும்?''

''பொதுவாகவே நம்ம இடம் கொடுக்காம யாருமே நம்மை நெருங்க முடியாது. தேவையில்லாத நட்புகளையும் வளர்த்துக்கக் கூடாது. அதே போல மத்தவங்க கண்களில் தவறான தோற்றத்தை தரக்கூடிய வகையிலான ஆடைகளையும் பெண்கள் தவிர்ப்பது நல்லது. சரியான ஆடையை அணியும்போதும் நம்மை தவறாகப் பார்க்கிறார்கள் என்றால், அவங்க பார்வையிலதான் குறைபாடு இருக்கிறதா நினைக்கிறேன்.'' 

''சினிமாவில் நடிகைகள் அணியும் உடைகளைப் பார்த்துதானே நிறைய பேர் ஆசைப்பட்டு வாங்கி உடுத்துறாங்க?''

''சினிமா வேறு... வாழ்க்கை வேறு. இரண்டையும் எப்போதுமே குழப்பிக்கொள்ளக்கூடாது. சினிமாவில் கதை அம்சத்துக்கு ஏற்றவாறுதான் உடைகளைத் தேர்ந்தெடுத்து அணியச் சொல்கிறார்கள். அதையே ஒரு குடும்பத்துக்குள் கொண்டு வரும்போது தேவையில்லாத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.'' 

''நடிகை என்பதையும் தாண்டி நீங்கள் என்னவாக வேண்டும் என நினைத்தீர்கள்?''

''எனக்கு டாக்டர் ஆகணும் என்பதுதான் ஆசை. ஆனால், காலம் என்னை சினிமாத்துறையில் ஈடுபட வைத்துவிட்டது. என்னதான் சினிமா, நடிப்பு என்று என்னுடைய உழைப்பைக் கொட்டினாலும், ஒரு போதும் என்னுடைய லிமிட்டை எந்த இடத்திலும் தாண்டி சென்றதில்லை. இதுவரையில் என்னை எந்த பார்ட்டியிலும் யாரும் பார்த்திருக்க முடியாது. பார்ட்டிக்குப் போவது பொதுவாக எனக்குப் பிடிக்காத விஷயமாக நினைக்கிறேன். அதேபோல, எனக்குத் தெரிந்தவர்களோ, தெரியாதவர்களோ... உதவி என்று வந்தால் எந்த நேரம் என பார்க்காமல் ஓடிப்போய் உதவி பண்ணுவேன். அதுதான் என்னுடைய குணம்''. 

''இன்றைய இளைஞர்களுக்கு நீங்க ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?''

''ஏற்கெனவே உறவுகளைப் பிரிந்து நியூக்ளியர் ஃபேமிலியாக வாழ்ந்து வருகிறோம். இப்போது அதுவும் சுருங்கி பெற்றவர்களை விட்டுவிட்டு கணவன், மனைவி மட்டுமே சேர்ந்து வாழ்வதுதான் குடும்பம் என்கிற நிலை உருவாகிவருகிறது. அதனாலதான் பல முதியோர் இல்லங்களைப் பார்க்க முடிகிறது. இன்றைக்கு நீங்க  உங்க பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்தால் கண்டிப்பாக உங்கள் பிள்ளைகளும் நாளை உங்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பார்கள் என்பதை புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டும்'' 

''மறுபடியும் சினிமாவில் உங்களை எப்போது எதிர்பாக்கலாம்?''

''தமிழ் தவிர்த்து பிற மொழிகளில் நடிச்சுட்டுத்தான் இருக்கேன். தமிழில் மட்டும் இன்னும் நல்ல கதை அமையவில்லை. எனக்குப் பிடித்ததுபோல நல்ல கதை வரும்போது கண்டிப்பாக நடிப்பேன். அதற்கான நேரம் அமையும்போது என்னை தமிழ் சினிமாவில் பார்க்கலாம்.'' என்கிறார் நடிகை மும்தாஜ், புன்னகைத்தபடியே!