Published:Updated:

2017 கேன்ஸ் விழாவில் கவனம் ஈர்த்த விருதுகள்!

உலக சினிமாக்களில் கலை சார்ந்து மதிப்பிடும் முக்கியத் திருவிழாவான 'கேன்ஸ் திரைப்பட விழா' முடிவடைந்துள்ளது. இந்த விழாவில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டாலும், பத்து பிரிவுகளில் வழங்கப்படும் விருதுகளே முக்கியத்துவம் பெறும். இந்த ஆண்டு, `கேன்ஸின் 70-ம் ஆண்டு' என்பது கூடுதல் சிறப்பு. இந்தியாவிலிருந்து ஒரே ஒரு குறும்படம் மட்டுமே திரையிடப்பட்டது.  

இனி விருதுகளின் பட்டியல்... 

தங்க கேமரா 

வேறு எங்குமே திரையிடப்படாத, 60 நிமிடத்துக்கும் அதிகமாக ஓடும் படத்துக்கு இந்த விருது அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன் எங்கும் திரையிடப்பட்டிருக்கக் கூடாது என்ற விதி இருப்பதால், பெரும்பாலும் புதுமுக இயக்குநர்களே இந்த விருதுகளை வாங்குவர். இந்த ஆண்டு பிரான்ஸைச் சேர்ந்த லியோனார் செராலி என்கிற பெண் இயக்குநர்தான் 'இளம் பெண்' என்ற படத்துக்காக இந்த விருதைப் பெற்றுள்ளார். பாரீஸில் தனித்து வாழத் தொடங்கும் இளம் பெண் ஒருவர் சந்திக்கும் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டது இந்தப் படம். 

சிறந்த குறும்படம் 

கடந்த 2015-ம் ஆண்டில் சினிமா பள்ளிகளுக்கான குறும்பட பிரிவில் முதல் பரிசை வென்ற சீன இயக்குநர் க்யூ யாங்கின் அடுத்த படைப்பு 'ஓர் கனிவான இரவு'. ஒரு சீன நகரத்தில் இரவில் மகளைத்தேடி அலையும் தாய் ஒருவரை பற்றிய கதை. நேர்த்தியான படமாக்கலில் முதல் பரிசை வென்றுள்ளார் க்யூ யாங். 

சிறந்த திரைக்கதை

இந்த விருது இரண்டு படங்களுக்கு இணைத்து வழங்கப்பட்டுள்ளது.  கிரேக்க இயக்குநர் யார்கோஸ் லாந்திமோஸ் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த பெண் இயக்குநர் லின் ராம்சே ஆகியோர் இந்த விருதைப்பெறுகின்றனர். யார்கோஸ் இயக்கியுள்ள 'கில்லிங் ஸ்கார்ட் டீர்' என்கிற படத்தில் பிரபல நடிகர்களான காலின் பெர்ரல், நிக்கோல் கிட்மன் ஆகியோர் நடித்துள்ளனர். இளம் வயது மனநிலை குறைப்பாடுள்ள நோயாளிக்கும் மருத்துவருக்குமான உறவு குறித்த கதையைக் கொண்டது இந்தப்படம். லி ராம்சேயின் 'யூ நெவர் பீன் ஹியர்'' என்கிற படம் பாலியல் தொழிலுக்கு கடத்தப்பட்ட பெண்ணை மீட்கும் முன்னாள் ராணுவ வீரன் பற்றியது. 

ஜூரி விருது 

விருதுகளை தேர்வு செய்யும் ஜூரிக்களால் வழங்கப்படும் விருது இது. ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரே ஸவாக்னிஸ்தவ் இயக்கிய 'அன்பற்ற' என்கிற படம் இந்த விருதினை பெற்றுள்ளது. விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள கணவன் மனைவி. கணவனுக்கு கிடைத்துள்ள இளமையான காதலி, மனைவிக்கு கிடைத்துள்ள புகழும், பணமும் நிறைந்த புதிய காதலன். விவாகரத்து கிடைத்த உடனே புதிய திருமணம் செய்துகொள்ள காத்திருக்கின்றனர் இருவரும். இந்நிலையில் இந்த ஜோடியின் ஒரே வாரிசான மகன் காணாமல் போய்விடுகிறான். அதன் பின் என்ன ஆனது என்று சொல்கிறது கதை.  ஏற்கனவே ஒரு முறை கேன்ஸில் நேரடியாக திரையிட்டு 'எலேனா' என்கிற படத்திற்காக  விருது பெற்றவர் இயக்குநர் ஆந்த்ரே ஸ்வாக்னிஸ்தவ். 

சிறந்த நடிகை 

கேன்ஸின் சிறந்த விருதான தங்கப்பனை விருதுக்காக தேர்வான படங்களில்  'இன் தி ஃபேட்' என்கிற படமும் இடம்பெற்றது.  பிரபல ஜெர்மனிய இயக்குநர் பாடிக் அகின் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். ஒரு குண்டு வெடிப்பில் தன் மகனையும் ,கணவனையும் பறிகொடுக்கும் பெண்ணின் பழிவாங்கல்தான் கதை. தன் சிறந்த நடிப்பால் டியானே ருஜெர் இந்த விருதை வென்றுள்ளார்

சிறந்த நடிகர் 

ஜாக்யூவேன் பினிக்ஸ் சிறந்த நடிகருக்கான விருதை 'யூ நெவர் பீன் ஹியர்' படத்துக்காக பெற்றுள்ளார். இதுவரை பினிக்ஸ் நடித்துள்ள ஏழு படங்கள் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளன. ஆனால் இதுதான் அவர் வாங்கும் முதல் விருது. இதே படம் சிறந்த திரைக்கதைக்கான் விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற ராணுவ வீரராக நடித்துள்ள பினிக்ஸ்தான் புகழ்பெற்ற க்ளாடியேட்டர் திரைப்பட வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த இயக்குநர்

2013ல் இயக்குநர் சோபியா கப்போலா இயக்கத்தில் வெளியான 'தி ப்ளிங் ரிங்' திரைப்படம் பரபரப்பாக பேசப்பட்டது. இது அமெரிக்காவில் செலிப்ரட்டி வீடுகளில் மட்டுமே கொள்ளையடித்த இளம் நண்பர்கள் பற்றிய உண்மைக்கதை. அதன் பின் சோபியா இயக்கியுள்ள படமான 'தி பிகில்ட்' படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது பெற்றுள்ளார். அமெரிக்க உள்நாட்டு போரின் போது நடக்கும் கதை. போரில் காயமடைந்த வீரன் ஒருவன் பெண்கள் விடுதிக்குள் தஞ்சமடைகிறான். எதிரி நாட்டு வீரனை ஒளித்து வைத்து சிகிச்சையளிக்கின்றனர் பெண்கள். அதன்பின் நடக்கும் திடீர் திருப்பங்களே கதை. இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுகளிலும் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக இருக்கும் என பேச்சு கிளம்பியுள்ளது. 

கிராண்ட் ப்ரிக்ஸ் 

'தங்கப்பனை' விருதுதான் கேன்ஸ் திரைவிழாவில் உயரிய அந்தஸ்து பெற்றது. அதற்கு அடுத்த இடத்தில் மதிக்கப்படும் விருது கிராண்ட்ப்ரிக்ஸ். இந்த ஆண்டு 'நொடிக்கு 120 துடிப்புகள்'  என்கிற பிரெஞ்ச் படம் வென்றுள்ளது. சாதாரண மனிதர்களுடன் பொருந்திப்போக விரும்பும் எய்ட்ஸ் நோயாளி ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றமே கதை. சிறந்த எடிட்டர் என பெயர் பெற்ற ராபின் காம்பிலோவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் இது. 

ஆண்டு விருது

ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருதும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆண்டு ஆங்கில நடிகை நிக்கோல் கிட்மேனுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 49 வயதாகும் கிட்மேன் தனது 16 வயதிலிருந்து நடித்துக்கொண்டுள்ளார். இந்த ஆண்டு கேன்ஸில் சிறந்த திரைக்கதைகான விருது பெற்றுள்ள 'கில்லிங் ஸ்கேர்ட் டீர்' படத்திலும் நடித்துள்ளார். 

தங்கப்பனை - 'தி ஸ்கொயர்' 

தோல்வியில் முடிந்த திருமணம், பிரிந்து போன பிள்ளைகள் என்று இருக்கும் நாயகன். சுற்றுலாத்தளமாகிவிட்ட கோட்டை ஒன்றில் வேலை செய்கிறான். அங்கு நடக்கும் நிகழ்வுகளும் அதைத்தொடர்ந்து வரும் பிரச்சினைகளுமே கதை. இந்தப்படத்தின் இயக்குநர் ரூபன் ஒஸ்ட்லாண்ட் இயக்கிய இரண்டு படங்கள் ஏற்கனவே முந்தைய ஆண்டுகளில் கேன்ஸின் விருதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.