Published:Updated:

‘இந்தப் படத்துல நடிக்காதே..!' - மணிரத்னம் பேச்சை மீறிய மாதவன் #HBDMaddy

‘இந்தப் படத்துல நடிக்காதே..!' - மணிரத்னம் பேச்சை மீறிய மாதவன் #HBDMaddy
‘இந்தப் படத்துல நடிக்காதே..!' - மணிரத்னம் பேச்சை மீறிய மாதவன் #HBDMaddy

‘இந்தப் படத்துல நடிக்காதே..!' - மணிரத்னம் பேச்சை மீறிய மாதவன் #HBDMaddy

மாதவன் என்றதும் புன்னகை பரவிய ஒரு முகம்தான் நமக்கு நினைவுவரும். 2000... இளைஞர்கள் வாக்மேனும் கையுமாக அலைந்த காலம். பைக்கில் `என்றென்றும் புன்னகை...' என்று கால் பதித்த இவருக்கு, என்றுமே புன்னகைதான். தமிழ் சினிமாவில் எக்கச்சக்க கார்த்திக்குகள் இருந்தாலும், `அலைபாயுதே' கார்த்திக் என்றுமே ஸ்பெஷல்தான். அந்த சாக்லேட் பாய்க்கு இன்று பிறந்த நாள்.

பீகார் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிறந்த மாதவன், விஷுவல் மீடியா மீது தனி கவனம் செலுத்திவந்தார். இவரின் தந்தை ரங்கநாதன், டாடா நிறுவனத்தில் பணிபுரிந்தார். தாயார் சரோஜா வங்கியில் பணியாற்றினார். தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக்கொண்ட மாதவன், கோலாபூர் ராஜாராம் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் படித்தார். அப்போது, ராணுவத்தில் சேரவேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு இருந்தது. காரணம், கல்லூரியின் என்.சி.சி பிரிவில் இவரும் இருந்தார். முகாம்களில் அளிக்கப்பட்ட பயிற்சிகளை முறையாகக் கற்றார். இருப்பினும், வயது தவறியதால் ராணுவத்தில் சேர முடியாமல்போனது.

ஒருபக்கம் இவர் தன் மேற்படிப்பை மும்பையில் படித்துவந்தாலும், மறுபக்கம் தன் புரொஃபைலை மாடலிங் ஏஜென்சிக்கு அனுப்பிவைத்தார் மேடி. தான் நடித்த விளம்பரப் பட இயக்குநரின் உதவியால் மணிரத்னத்துக்கு அறிமுகமானார். அவரின் 'இருவர்' படத்துக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இவருக்கு, கண்கள் மிகவும் இளமையாக இருந்ததால் அந்த வாய்ப்பு கை நழுவிப்போனது. அதன் பிறகு, இந்தி நாடகங்களில் நடித்தும், சில நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியும் வந்தார். `இஸ் ராத் கி சுபா நாகின்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அதில் சொல்லிக்கொள்ளும் அளவுக்குப் பெரிய ரோல் இல்லை.

1997-ம் ஆண்டில் வெளியான 'இன்ஃபெர்னோ' எனும் ஆங்கிலப் படத்தில் ஸ்ட்ரிக்ட்டான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துக் கலக்கினார். பிறகு கன்னடத்திலும் களமிறங்கிய இவர், 'சாந்தி சாந்தி சாந்தி' எனும் படத்தில் துணை நடிகராக நடித்து அங்கேயும் கால் பதித்தார். பிறகு, ரொமான்டிக் ஜானர்களில் டாப் இடத்தில் இருக்கும் 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் கால் பதித்தார். தமிழ் சினிமாவில் எத்தனை லவ் ப்ரபோஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும், இந்தப் படத்தில் இடம்பெற்ற லவ் ப்ரபோஸ் காட்சியை எவராலும் மறக்க முடியாது.

2001... அந்தப் படத்துக்குப் பிறகு மாதவனுக்கு ரசிகைகள் மட்டுமல்லாது, பட வாய்ப்புகளும் குவிந்தன. `அலைபாயுதே' ஏ சென்டர் ரீச் கொடுக்க, பி, சி மக்களையும் சென்றடைவோம் என்ற நோக்கத்தில் நடித்ததுதான் 'என்னவளே'. அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

அறிமுக இயக்குநர் ஒருவரின் கதையைக் கேட்ட மேடிக்கு, அது பிடித்திருந்தது. ஆனால், அது சரியாக இருக்குமா என மாதவனுக்குச் சந்தேகம். அந்த இயக்குநரை, மணிரத்னத்திடம் கதை சொல்ல அழைத்துச் செல்கிறார். 'அலைபாயுதே' படத்துக்கு முன்னரே 'மின்னலே' படத்துக்கான பேச்சு போய்க்கொண்டுதான் இருந்தது. 'அலைபாயுதே' எனும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததால், மாதவனிடம் 'இனி நீ படங்கள் எல்லாம் பார்த்து தேர்வு செய்' என்று அட்வைஸ் செய்திருக்கிறார் மணிரத்னம். இப்படிச் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு, `மின்னலே' பட சம்பந்தமாக கௌதம் மேனனை அழைத்துக்கொண்டு அட்வைஸ் கேட்டார் மாதவன். அதற்கு, மணிரத்னம் 'இந்தப் படத்தை நீ பண்ணாதே' என்று கூறியுள்ளார். 'என்னுடைய இன்ஸ்பிரேஷனான மணிரத்னம் சாரின் முன்னாடியே இப்படி ஒரு தருணத்தில் உட்காரவைத்ததால், மேடியை நான் என்றும் மன்னிக்கவே மாட்டேன்' என்று ஒரு பேட்டியில் ஜாலியாகக் கூறியிருந்தார் கெளதம் மேனன். ஆனால், அதற்குப் பிறகு பல குழப்பங்களைத் தாண்டி நடித்த அந்த 'மின்னலே'தான் மேடி வாழ்க்கையில் மற்றொரு திருப்புமுனைப் படமாக அமைந்தது.

2003... `அலைபாயுதே' பலருக்கும் ஃபேவரைட் படமாக இருந்தாலும், மேடிக்கு அவர் நடித்ததிலேயே பிடித்தது 'மின்னலே', 'அன்பே சிவம்' மற்றும் 'இறுதிச்சுற்று' படங்கள்தான். மேடி, தன் பெர்சனல் வாழ்க்கையில் பயங்கர கோவக்காரர். இவரின் நிஜ வாழ்க்கையோடு சம்பந்தப்படும் சில சம்பவங்கள் `இறுதிச்சுற்று' படத்தில் இடம்பெற்றிருந்ததால், அந்தப் படம்தான் இவரது ஆல் டைம் ஃபேவரைட்.

'அன்பே சிவம்' படத்தின் ஷூட்டிங் டைமில் கமல் மேக்கப் போட்டுக்கொள்ளும் நேரத்தில் அவரையே பார்த்துக்கொண்டிருப்பாராம் மேடி. முதல் காட்சியின் ஷூட்டிங் முடிந்த பிறகு கமல், மேடியிடம் சென்று `நாட் பேட் மேடி' என்று அவர் பாராட்டியதை எப்போதும் மறக்க முடியாததாகவும், ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்றதுபோல் சந்தோஷமாக இருந்ததாகவும் கூறுவார். படத்தில் இவரின் நேர்த்தியான நடிப்புக்காக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். அதற்குப் பிறகு `நளதமயந்தி', `லேசா லேசா', 'பிரியமானதோழி'. 'ஜே ஜே' என வெரைட்டியான படங்களில் நடித்தார்.

2004... தொடர்ந்து கமர்ஷியல் படங்களில் ஹீரோவாக நடித்துவந்த மாதவன், ஒரு மாற்றத்துக்காக `ஆய்தஎழுத்து' படத்தின் மூலம் வில்லனாக களமிறங்கி, ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இதுவரை பார்க்காத மாதவனாக படத்தில் நடித்து, அதற்காக ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றார். 2005-ம் ஆண்டு முழுவதும் இந்தியில் பிஸியான மாதவன், தமிழ் சினிமா பக்கம் வரவில்லை. மெடிக்கல் லீவில் சென்ற மாதவன், 2006-ம் ஆண்டில் 'தம்பி', 'ரெண்டு' ஆகிய இரு படங்களில் நடித்தார். பிறகு, தமிழிலும், இந்தியிலும் மாறி மாறி நடித்த மாதவனுக்கு, வெளிவந்த படங்கள் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. அதற்குப் பிறகு இந்தியில் நடித்த `3 இடியட்ஸ்' படம், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 2012-ம் ஆண்டில் வெளியான 'வேட்டை' படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் லாங் லீவ் எடுத்த மேடி, கொஞ்சம் நாள்கள் இந்திப் படங்களில் கவனம் செலுத்தினார்.

2016... தமிழ் சினிமாவுக்குள் வேற லெவலில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதுவரை வெவ்வேறு விதங்களில் படம் கொடுத்த மேடி, 'இறுதிச்சுற்று' படத்தில் பாக்ஸராக அவதாரம் எடுத்தார். லாங் ஹேர், ஷேவ் செய்யாத தாடி, இந்தப் படத்துக்காக ஒரு வருடமாகத் தயார்செய்த உடல்... என ஆளே வேறு மாதிரி இருந்தார். பாக்ஸராகக் களமிறங்கிய இந்தத் திரைப்படம், பாக்ஸ் ஆபீஸையும் நிரப்பியது.

தற்போது தமிழிலும் இந்தியிலும் பல படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. என்னதான் இவர் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தாலும், ரசிகர்கள் மத்தியில் `சாக்லேட் பாய்'யாகத்தான் பதிந்துள்ளார். `இறுதிச்சுற்றை'த் தொடர்ந்து இவரது படங்களுக்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. மாதவன், நல்ல நடிகர் மட்டும் அல்ல; தன்னம்பிக்கைப் பேச்சாளரும்கூட. பல கல்லூரிகளுக்குச் சென்று நிறைய விஷயங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். திறந்த மனசு, தமிழ் சினிமாவின் மீது தீராக்காதல், கடின உழைப்பு ஆகிய அனைத்தும் உங்களை வெற்றியின் உச்சத்துக்கு அழைத்துச் செல்ல வாழ்த்துகள்.

ஹேப்பி பர்த்டே மேடி!

அடுத்த கட்டுரைக்கு