Published:Updated:

ஜி.எஸ்.டி. வந்தால் டிக்கெட் விலை எவ்வளவு உயரும்?

ஜி.எஸ்.டி. வந்தால் டிக்கெட் விலை எவ்வளவு உயரும்?
ஜி.எஸ்.டி. வந்தால் டிக்கெட் விலை எவ்வளவு உயரும்?

மத்திய அரசு நிர்ணயித்துள்ள ஜி.எஸ்.டி வரி, ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரவிருக்கிறது. பொழுதுபோக்குத் துறையான சினிமாவுக்கு 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் விலை உயரும். இந்த உயர்வு சினிமா துறைக்கும் ரசிகர்களுக்கும் சாதகமா... பாதகமா? 

ஜி.எஸ்.டி என்றால்..? 

நமது நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை விற்பனை செய்யவும், வாங்கவும் பல்வேறுவிதமான வரிகளை மத்திய-மாநில அரசுகளுக்குச் செலுத்தியாக வேண்டும். விற்பனை வரி, சேவை வரி, நுழைவு வரி, உற்பத்தி வரி, கலால் வரி எனப் பல வரிகள் அடக்கம். இவை ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடும். மேற்குறிப்பிட்ட அத்தனை வரிகளையும் தவிர்த்துவிட்டு, மொத்தமாக ஒரே வரி என்பதுதான் இந்தச் சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஜி.எஸ்.டி. (Goods and service Tax ). இதில் சினிமாவுக்கு 28 சதவிகிதம் வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டிக்கெட் விலை அதிகமாக வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சினிமா விமர்சகர், தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் பேசியபோது, “மல்டி திரையரங்குகளில் டிக்கெட் விலை 120 ரூபாய். இதுவே ஜி.எஸ்.டி வந்தால் 153 ரூபாய் வந்துவிடும். இந்த விலையை ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதுதான் உண்மை. `பாகுபலி' மாதிரியான பெரிய படங்களுக்கு மட்டுமே தியேட்டருக்கு வருவார்களே தவிர, மற்ற படங்களுக்கு தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறையும். இதுவே ஊர் பக்கம் டிக்கெட்டுக்கு எனச் சரியான விலை நிர்ணயம் கிடையாது. நூறு ரூபாயில் தொடங்கி பத்து ரூபாய் வரை டிக்கெட் விற்கப்படுகிறது. ஆனால், பெரிய படங்களுக்கு ஐம்பது ரூபாய் டிக்கெட்டை நூறு ரூபாய்க்கு விற்பனை செய்வாங்க. இந்தப் பிரச்னையெல்லாம் ஜி.எஸ்.டி வந்தால் மாறிடும்.

ஏனென்றால்... டிக்கெட் தொகையைக் கம்ப்யூட்டரில் ஒழுங்குபடுத்தவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால ஊர்பக்கம் திரையரங்கம் நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம். நகரங்களில் ரசிகர்கள், தியேட்டருக்கு வர யோசிப்பார்கள். மாறாக ஊர் பக்கம் திரையரங்கம் இழுத்து மூடக்கூட சூழல் ஏற்படலாம். இந்த இரண்டு சவால்களையும் எதிர்கொள்ளவேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம். இதுவே, எல்லா இடங்களிலும் டிக்கெட் விலையை 80 ரூபாய் குறைச்சுட்டு, ஜி.எஸ்.டி சேர்த்து 100 ரூபாய்க்கு விற்பனைசெய்தால், ஆடியன்ஸுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. டிக்கெட் நிர்ணயத்தில் தொடங்கி  நிச்சயம் பல குழப்பங்களை எதிர்காலத்தில் சந்திக்கவேண்டியிருக்கு. அதற்கான முடிவு என்னங்கிறது பற்றித்தான் யோசிச்சிட்டிருக்கோம்.’’ என்றார்.  

தயாரிப்பாளர், எஸ்.ஆர்.பிரபுவிடம் கேட்டபோது, “தயாரிப்பாளருக்கான வரிச்சலுகை கிடைப்பதும், எல்லோருக்குமான பொதுவான வரி வருவதும் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், சம்பளம் கொடுக்கும்போதும், வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்தும்போதும் சில குழப்பங்கள் வரலாம். ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வரும்போதுதான் அதற்கான சிக்கல் என்னவென்று தெரியவரும். அப்போதான் அதைச் சரிசெய்யவும் முடியும். இதில் தமிழ்ப் படங்களுக்கும் ஹாலிவுட் படங்களுக்கும் ஒரே வரி என்பது தமிழ் சினிமாத் துறையைப் பாதிக்கும். முதலமைச்சரைச் சந்திச்சு கடிதம் கொடுத்திருக்கோம். எந்த வரி வந்தாலும் வெளிப்படைத்தன்மை இருக்கணும். கிராமத்தில் இருக்கும் திரையரங்கம் வரையிலும் எத்தனை பேர் படம் பார்க்கிறாங்கங்கிற எண்ணிக்கை தயாரிப்பாளருக்கும் தெரியவரும், அரசுக்கும் தெரியவரும். நல்ல ரோடும், தண்ணீரும் வேண்டும்னு நாம எதிர்பார்க்கிறோம். அதற்காகத்தானே அரசு வரியை நிர்ணயிக்கிறாங்க. இங்கே வருமானத்தை மீறிய வரின்னா மட்டும்தான் எதிர்ப்போமே தவிர, மற்றபடி அரசின் திட்டங்களை வரவேற்போம். விரைவிலேயே தயாரிப்பாளர்கள் கூட்டம் நடத்தி, அதன் பிறகு அரசிடம் பேசலாம்னு இருக்கிறோம்’’ என்றார்.

திருவள்ளூர் - காஞ்சிபுரம் திரையரங்க உரிமையாளர் சங்கப் பொதுச்செயலாளர் கண்ணப்பனிடம் கேட்டபோது, “டிக்கெட் விலையுடன் 28 சதவிகிதம் கூடுதலாக வரியை ஜி.எஸ்.டி விதிச்சிருக்கு. இதனால் டிக்கெட் தொகை கூடும் என்பது உண்மைதான். இதனால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதுதான் உண்மை. 2006-ம் ஆண்டிலிருந்து டிக்கெட் விலையை அரசு உயர்த்தவே இல்லை. ஆனால், விலைவாசி மட்டும் எகிறிக்கிடக்கு. படம் பார்க்க வர்றவங்களுக்கு அடிப்படை வசதி செய்துகொடுக்கணுங்கிறதுக்காகத்தானே விலை ஏற்றம் வேண்டும்னு சொல்றோம். அதனால் விலை உயர்வு அவசியம்தான். இனி, பான்கார்டுபோலவே ஜி.எஸ்.டி-க்கு எனத் தனி எண் வந்துவிடும். அதை வைத்து மட்டும்தான் இனி வியாராபம் செய்வோம். அதனால் வெளிப்படைத்தன்மையுடன் வியாபாரம் செய்ய நாங்க ரெடி’’ என்றார்.

ஆடிட்டர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, “மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி வரவேற்கத்தக்கதுதான். இந்த ஜி.எஸ்.டி-யை நான்கு வரிகளாகப் பிரிச்சிருக்காங்க. சாமானியனின் அடிப்படை செலவுக்கான பொருள்கள் 5 சதவிகிதம், ஆடம்பரமானவற்றுக்கு 12 - 18 சதவிகிதம் செலவு சூப்பர் ஆடம்பரத்துக்கு 28 சதவிகிதம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பொழுதுபோக்கு சூப்பர் ஆடம்பரத்துக்குள் வருது. இந்த நான்கு பிரிவுகளில் வரியைப் பிரிச்சுருக்கிறது இந்தியா மாதிரியான நாட்டுக்கு சரியான ஒன்று.

ஏன்னா சாமானியனையும், அம்பானியையும் ஒரே வரி கட்டச் சொல்ல முடியாது. பொருளாதாரத்துக்கு ஏற்ற மாதிரியான வரியை இனி கட்ட முடியும். ஆனா, சினிமாவுக்கு ஜி.எஸ்.டி வரி கொஞ்சம் அதிகம்தான். இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமான உச்சகட்டப் பொழுதுபோக்கு சினிமாதான். கூலித் தொழிலாளியில் தொடங்கி வசதி படைத்தவர்கள் வரைக்கும் சினிமாவை விரும்புவார்கள். அதனால கொஞ்சம் கம்மிபண்ணியிருக்கலாம். கார் ஆடம்பரம். அதனாலான வரியை உயர்த்துவதில் தவறில்லை. ஆனால், சினிமாவிற்கு வரி உயர்வு சாமானியனையும் பாதிக்கும். அதனால சினிமாவுக்காக மக்களின் செலவு குறையும் அவ்வளவுதான். சினிமாவில் ஜி.எஸ்.டி மக்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதுதான் உண்மை’’ என்றார்.