Published:Updated:

'என்னாச்சி' முதல் 'என்னம்மா இப்படி...' வரை..! - சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் சினிமா

'என்னாச்சி' முதல் 'என்னம்மா இப்படி...' வரை..! - சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் சினிமா
'என்னாச்சி' முதல் 'என்னம்மா இப்படி...' வரை..! - சங்கம் வைத்துத் தமிழ் வளர்க்கும் சினிமா

இன்றைய சினிமா உலகத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை எளிதாகப் பயன்படுத்தத் தயங்கிக்கொண்டிருந்த இளைய தலைமுறையினர் தற்போது அவற்றின் பயன்பாட்டை தினசரி வாழ்விற்குக் கொண்டு வந்திருப்பதின் காரணம் திரையில் உச்ச நட்சத்திரங்கள் அவற்றை உச்சரிப்பதுதான். 

ஒன்னுமே புரியலைல. எல்லோருக்கும் புரியற மாதிரி ஹிட்டான ஒரு வார்த்தை சொல்றேன்.  'மகிழ்ச்சி'. இந்த வார்த்தையை 2016-க்கு முன்புவரை நம்மில் எத்தனைபேர் பயன்படுத்தி இருப்போம். சூப்பர்ஸ்டார் உச்சரித்த அந்தச் சொல் பல நாள்கள் ட்விட்டரில்  டாப் ட்ரெண்டிங்கில் இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படி இன்னும் பல தமிழ் வார்த்தைகளும் பல நட்சத்திரங்களால் பயன்படுத்தப்பட்டு இன்று மீம் கிரியேட்டர்ஸ் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றுள்ளன.

 சமீப காலத்தில் இந்த ஒற்றை வார்த்தை ட்ரெண்ட் செட்டிங்கிற்குக் காரணமாக இருந்தது விஜய் சேதுபதி. ஒன்றிரண்டு வார்த்தைகளை வைத்தே படம் முழுவதும் ஓட்டி இருப்பார். அதில் 'ப்ப்ப்ப்பா', 'என்னாச்சி?!' எனும் வசனங்கள் அதிகமாக அந்த நாள்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள். 

 ஏற்கெனவே தெரிந்த வார்த்தைகளாக இருந்தாலும் சில ட்ரெண்டானது தமிழ் சினிமாவால்தான். 'பங்காளி' எனும் வார்த்தை பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருப்பதுதான். ஆனால்,  'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் வந்ததுபோல சூரி, சிவகார்த்திகேயன்  காம்பினேஷன் பிடித்துப்போன பலரும் தன் சக நண்பர்களை 'பங்கு' என்று அழைப்பது இன்று வழக்கமாகிவிட்டது. இதே போன்று அஜித் பயன்படுத்திய 'தெறிக்க விடலாமா', 'மாரி' படத்தில் தனுஷ் பயன்படுத்திய 'செஞ்சுருவேன்' போன்ற வார்த்தைகள் இளைஞர்கள் முதல் சிறியவர் வரை அனைவர் மனதிலும், உதடுகளிலும் ஒலித்துக்கொண்டே இருந்தன.

 சில வார்த்தைகள் திரைப்படத்தில் பிரபலமானதைக் காட்டிலும் மிமிக்ரி ஆர்டிஸ்ட், மீம் கிரியேட்டர்ஸ் ஆகியோர் பயன்படுத்தியே அதிகமாக லைக் வாங்குச்சு. உதாரணமாக, சூர்யா வாய்ஸ் பேசுற யாரும் இந்த டயலாக் பேசாம இருக்கிறதே இல்ல. 'பாக்கறியா...'ன்னு 'சிங்கம்' படத்தில் சொன்ன வசனம் சின்ன பசங்கலேர்ந்து பெரியவங்க வரைக்கும் பேசுனாங்க. பாக்கறியா பாக்கறியா பார்றா...'
   
சினிமாவில் ஹீரோக்கள் பயன்படுத்தின டயலாக்குகள் தாண்டி ஒரு காமெடியன் டயலாக் எப்பவுமே ட்ரெண்ட் ஆகும். சொல்லப்போனா மீம் உலக ராஜா வடிவேலுதான். அவர் சொன்ன 'ஆஹான்' டயலாக் ஃபேஸ்புக் கமென்ட்ல, வாட்ஸ்-அப் சாட்லனு பயன்படுத்தாத ஆளே இல்லை. படம் ரிலீஸ்  ஆகி ரொம்ப நாளானாலும் இப்போ அந்த டயலாக் ட்ரெண்ட் ஆனதுக்கான முழுப்பெருமையும் ஃபேஸ்புக் பேஜ் அட்மின்களுக்குத் தான் போய்ச்சேரும்.

கேப்டன், படத்துல பேசுன டயலாக்ஸ் எல்லோரும் பேசுனாங்களா என்னவோ தெரியலை... ஆனா அவர் மீட்டிங்ல பேசும்போது யூஸ் பண்ணின 'மக்கழே' வார்த்தையைப் பயன்படுத்தாத தமிழர்களே இல்லை எனலாம். பல வசனங்கள் சினிமா பிரபலங்கள் பேசி மக்கள் அதிகமாகப் பயன்படுத்தினது போல, தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசி அதை சினிமாகாரங்க நிறைய காமெடிகளில் பயன்படுத்தி, அதை வெச்சு ஒரு பாட்டே எழுதிட்டாங்கன்னா பாருங்களேன்... 'என்னம்மா இப்டி பண்றீங்களேமா...'

தமிழ் வார்த்தைகள் நிறைய ட்ரெண்ட் ஆக ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, 'Cool', 'I'm back', 'I'm waiting' போன்ற ஆங்கில மாஸ் டயலாக்ஸ் அதிகப்படியா ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக இப்போது, மறந்துபோன தமிழ் வார்த்தைகளும் நட்சத்திரங்களின் வாயிலாகப் புது அடையாளம் பெறுகின்றன. வரும் காலத்தில் இன்னும் பல நல்ல தமிழ் வார்த்தைகளைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தால், நடிகர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சினிமா என நாளைய வரலாறு பேசும்.

இப்படியாகப் பல தமிழ் வார்த்தைகளை மீண்டும் புழக்கத்தில் விட, தெரிந்தே செய்தார்களோ அல்லது தெரியாமல் செய்தார்களோ தெரியவில்லை, என்றாலும் அது நல்ல விஷயமெனில் ஏற்றுக்கொள்ள தடை என்ன. இதற்கான கிரெடிட்ஸ் அந்த கதாப்பாத்திரம் ஏற்ற நடிகர்களைத் தாண்டி   படத்தின் இயக்குநர் மற்றும் வசனகர்த்தாவையும் சென்று சேர வேண்டும். 

- கெளதம் ஆறுமுகம்