Published:Updated:

'அன்னிக்கு என்னைப் பார்த்துச் சிரிச்சவங்க இப்ப என் காமெடிக்குச் சிரிக்கிறாங்க...' - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 2

விக்னேஷ் செ
'அன்னிக்கு என்னைப் பார்த்துச் சிரிச்சவங்க இப்ப என் காமெடிக்குச் சிரிக்கிறாங்க...' - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 2
'அன்னிக்கு என்னைப் பார்த்துச் சிரிச்சவங்க இப்ப என் காமெடிக்குச் சிரிக்கிறாங்க...' - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 2


மில்லினியம் ஆண்டின் தொடக்கத்தில் மதுரைப் பக்கம் உசிலம்பட்டியிலிருந்து, கனவுக்கோட்டை கட்டிக் கையோடு கொண்டுவந்தவர் அவர். அவர் சென்னைக்கு வண்டியேறியது சினிமாவில் ஏதோ ஒரு இடத்தை எப்படியாவது பற்றிப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காக... வெள்ளித்திரையில் முகம் காட்டி, பிறகு நாயகனாகச் சிலபல படங்கள், அப்படியே அரசியலுக்கு வந்து முதல்வர் ஆகிவிடவேண்டும் என்கிற தீராத அவாவெல்லாம் அவரிடம் இல்லை. நல்ல படங்களை இயக்க வேண்டும், தான் வசனம் எழுதும் படங்கள் சிறந்தவையாக அமையவேண்டும் என்பதுதான் அப்போதும் இப்போதும் அவரது கனவாக இருக்கிறது.

சென்னைக்கு வந்தது முதலே சினிமாவில் பணியாற்ற வாய்ப்புத் தேடினார்... தேடினார்... தேடிக்கொண்டே இருந்தார்... முதலில் நாள்கணக்கில் ஆரம்பித்திருந்த இந்த வாய்ப்புத் தேடும் படலம், பின்பு வாரக்கணக்காகி, மாதக்கணக்காகி, வருடக்கணக்காகிவிட்டது. ஒருகட்டத்தில் சினிமாவுக்கான எல்லாக் கதவுகளும் எட்டுத் திசைகளிலும் அடைக்கப்பட்டதைப் போலான ஒரு சூழலை உணர்ந்தார். இவையெல்லாம் சிலபல வருடங்களுக்கு முன்பு... இப்போது அவருக்குத் திருமணமாகியிருக்கிறது. இவற்றிற்கிடையே கிரீம்ஸ் சாலையில் நிகழ்ந்த ஒரு விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு, இன்றும் அவரால் ஊன்றுகோல் துணையின்றி நடப்பது சிரமம்.  

இவர் வசனம் எழுதிய சில படங்கள் வேறு யாரோ பெயரோடு வெளிவந்திருக்கின்றன. இவர் வேலை பார்த்த திரைப்படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அத்தனையையும் விட, இவரை இப்போது எல்லோருக்கும் தெரிவது ஒரு காமெடி நடிகராகத்தான். இவர் உதவி இயக்குநராகப் பணியாற்றிய 'ரஜினிமுருகன்' படத்தின் ஷூட்டிங்கின்போது ஒரு துணை நடிகர் குறிப்பிட்ட காட்சியில் ஆறேழு டேக் வாங்கிச் சொதப்ப, இவர் சொல்லிக் கொடுக்கிறார். அப்போதும் சரியாக வரவில்லை. இயக்குநர் பொன்ராம், 'பேசாம நீயே நடிச்சிறேன்யா...' எனச் சொல்ல கேமராவுக்குப் பின்னே நின்றவர் அப்போது ஃப்ரேமுக்குள் வருகிறார். அந்த ஆண்டு முழுவதும் வெவ்வெறு மாடுலேஷனில் அதிகமாக உச்சரிக்கப்பட்ட வசனமாக ட்ரெண்டாகிறது அவர் பேசிய அந்த வசனம். 'என்னடா இது மதுரைக்காரனுக்கு வந்த சோதனை..!' பவுன்ராஜ் எழுதிப் பேசிய இந்த வசனம் இவர் சென்னைக்கு வந்த நாள் முதலே நித்தமும் உணர்கிற வலிமிகுந்த வாக்கியம். ஆனால், ஊரே சிரித்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்திருந்தாலும், மதுரைக்கார பவுன்ராஜுக்கு சோதனைகளை கொஞ்சமேனும் தகர்த்தது ரஜினிமுருகன் தான்

" என் வாழ்வில் எனக்கு மிக அதிகமான துன்பங்களிருக்கின்றன
   ஆனால், அது என் உதடுகளுக்குத் தெரியாது.
   அது எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும்..! "
                                                                                                
                                                                                                                   - சார்லி சாப்ளின்

'இந்த சினிமா உலகம் நம்மை எங்கோ கொண்டுபோயிடும்னு பூரணமாக நம்பியிருந்தேன். திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது, திரைப் பாடல்கள் எழுதுவது என எதையாவது பண்ணிப் பெரிய ஆளாகிடலாம்னு நினைச்சு வந்தேன். நான் நினைச்ச மாதிரியே எல்லாம் நடந்திருந்தா 'பாகுபலி' விஜயேந்திர பிரசாத் மாதிரி இந்நேரம் வளர்ந்திருக்கலாம். ஆனால், என் சென்னை வாழ்க்கை நான் நினைச்ச மாதிரியா ஆரம்பிச்சுச்சு..?

உசிலம்பட்டியிலிருந்து கோயம்பேடு போற லாரியில் இங்கே வந்தேன். வந்துட்டு, எங்க போறதுனு தெரியாம ஒரு மாசம் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்லயே படுத்துக் கிடந்தேன். அப்புறம், போலீஸ்காரங்க வந்து இங்கலாம் படுக்கக் கூடாதுனு விரட்ட ஆரம்பிச்சாங்க. ஊருக்குப் போறதுக்குச் சீக்கிரம் பஸ் வரணும்னு வேண்டிக்கிட்டு இருந்தவங்களுக்கு மத்தியில போலீஸ்காரங்க வந்துடக்கூடாதுனு வேண்டிக்கிட்டவன் நான் ஒருத்தனாதான் இருப்பேன்.' எனச்  சொல்லும்போதே தழுதழுத்தார் பவுன்ராஜ்.

'போலீஸ்காரங்க தொந்தரவு தாங்க முடியாம அப்புறம் வடபழனி பஸ் ஸ்டாண்டுக்குப் போய்க் கொஞ்சநாள் படுத்திருந்தேன். கழுதை கெட்டா குட்டிச் சுவருங்கிற மாதிரி சினிமா வாய்ப்புத் தேடி வர்றவங்களுக்கு வடபழனி. அங்கே, ஒரு பெயின்ட்டர் என்னைப் பார்த்து விசாரிச்சார். 'என்னடா நோஞ்சான் மாதிரி இருந்துக்கிட்டு எப்படிடா சினிமாவுல போய்க் கதை வசனம் எழுதுவ...'னு கேட்டு எனக்குத் தங்குறதுக்கு இடம் கொடுத்தார். அவர் கூடமாடச் சேர்ந்து பெயின்ட்டர் வேலை பார்த்தேன். அந்த வேலையைப் பத்தி ஒண்ணும் தெரியாமலேயே அவங்க சொல்ற இடத்தில் பெயின்ட்டைப் பூசிக்கிட்டு இருப்பேன். என்னோட ஆர்வம் எல்லாம் சினிமாவைத் தவிர வேற எந்தப்பக்கமும் திரும்பலை. ஒரு வாரம் பூராம் வேலை பார்த்துச் சம்பளத்தை வாங்கிக்கிட்டு, அடுத்த வாரம் சினிமா வாய்ப்புத் தேடுவேன். அப்புறம் வேற வேலை பார்ப்பதும், சம்பளம் வாங்கி சினிமா வாய்ப்புத் தேடுறதும்னு காலம் போய்க்கிட்டு இருந்துச்சு. ஹோட்டல்ல சர்வல் வேலை பார்க்குறதுல, ஆரம்பிச்சு ஜல்லிக்கல் கொட்டுற லோடுமேன் வேலை வரைக்கும் அந்த நாலு வருசத்துல நான் பார்க்காத வேலையே இல்லை.' 

" எதை இழந்தீர்கள் என்பதல்ல...
   இப்போது என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்..! "

                                                                                        - ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் 

'இப்படிப் போய்க்கிட்டு இருந்த வாழ்க்கையில் 'மலையன்', 'வேல்முருகன் போர்வெல்ஸ்' படங்களின் இயக்குநர் கோபியின் அறிமுகம் கிடைச்சது. கேமராமேன் ப்ரியனைப் பார்த்தேன். சினிமாவில் சாதிக்கத் துடிக்கிற சக நண்பர்களின் பழக்கம் மீண்டும் சினிமாவை நோக்கி உந்தித்தள்ள ஆரம்பிச்சிடுச்சு. சென்னைக்கு வந்த நாலு வருசத்துல தூரமாகிக்கிட்டே போன சினிமா இப்பதான் கொஞ்சம் கிட்ட வர ஆரம்பிச்சிச்சு. 'மலையன்' படம் எடுக்கும்போது நானும் சேர்ந்து வேலை பார்த்தேன். ஆனால், அந்தப் படம் நல்லா போகலை. அப்புறம் பொன்ராம் சார் கூடச் சேர்ந்ததுதான் எனக்குப் பெரிய திருப்புமுனை. அவரோட படங்களில் கதை, வசனத்தில் உதவி பண்ணினேன். 'ரஜினிமுருகன்' படத்தில் எதிர்பாராவிதமா நடிச்சது இப்போ என்னை எல்லோருக்கும் தெரியவும் வெச்சிடுச்சு. 

என் கடந்தகாலக் கவலையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சு, இனி என் ஆசைகள் நிறைவேறும் காலம் வரும். வாழ்க்கை முழுக்கக் கஷ்டங்களை மட்டுமே பார்த்துக்கிட்டு இருந்த நான் இப்போதான் வெற்றிங்கிற வெளிச்சத்தைப் பார்க்க ஆரம்பிச்சுருக்கேன். நான் சினிமாவில் பெரிய ஆளாகுறதுக்காக மெட்ராஸுக்குப் போறேனு சொல்லும்போது சிரிச்ச என் சித்தப்பா இப்போ டி.வி.யில் என் காமெடியைப் பார்த்துச் சிரிக்கிறாரு. வாழ்க்கை எம்புட்டு வினோதமானது பாருங்க..!' என்கிறார் மெலிதாகச் சிரித்தபடி.

இப்படித்தான் சினிமாக் கனவுகளோடு வருபவர்கள் எல்லோரையும் வெச்சு செஞ்சு வேடிக்கை பார்த்துவிட்டுப் பின்புதான் அவர்களைச் செதுக்கவே தொடங்குகிறது இந்தக் கோடம்பாக்கச் சமூகம். ஓவர் நைட்டில் ஒபாமா ஆவதெல்லாம் ஒபாமாவுக்கும் கூடச் சாத்தியமில்லையே..! 

இன்றைய சென்னையின் இத்தனை அடர்த்திக்கும் சினிமாதான் காரணம் எனச் சொன்னால் நம்புவீர்களா..? எப்படி..? அடுத்த பதிவில் பார்க்கலாம். 

- இன்னும் ஓடலாம்...