Published:Updated:

சூர்யா - சுப்புலட்சுமி காதல் தெரியும்... சூர்யா - பத்மா கதை தெரியுமா? #HBDManiratnam

சூர்யா - சுப்புலட்சுமி காதல் தெரியும்... சூர்யா - பத்மா கதை தெரியுமா? #HBDManiratnam
சூர்யா - சுப்புலட்சுமி காதல் தெரியும்... சூர்யா - பத்மா கதை தெரியுமா? #HBDManiratnam

சூர்யா - சுப்புலட்சுமி காதல் தெரியும்... சூர்யா - பத்மா கதை தெரியுமா? #HBDManiratnam

தன் படத்தைப்போலவே பாடல்களையும் நேர்த்தியாகக் அமைத்துக்கொள்வதில் மணிரத்னம் கில்லாடி. `இதற்கு மான்டேஜ் போதும். இதற்குத் தனியாக ஷூட் செய்ய வேண்டும்' என ஒரு பாடலை சுவாரஸ்யமாகப் படத்தில் காட்ட  அவ்வளவு மெனக்கெடுவார். அதற்கு, இதோ சில உதாரணங்கள்...

சூர்யாவின் காவல்:

`தளபதி' படத்தின் மொத்தக் கதைக்களமும் ரஜினி - மம்மூட்டியின் நட்பு, ரஜினி - ஸ்ரீவித்யா இடையேயான பாசப்பிணைப்பு போன்றவற்றைச் சுற்றியே புனையப்பட்டிருக்கும். `சூர்யா - சுப்புலட்சுமி' கதையைப்போல படத்தில் சொல்லப்படாத இன்னொரு கதை `சூர்யா - பத்மா' கதை. ரஜினியும் பானுப்ரியாவும் தோன்றும் காட்சிகள் மூன்றுக்குமேல் இருக்காது. இருவரும் பரஸ்பரம் பேசிக்கொள்வது போன்ற காட்சிகள் இல்லை. குற்றவுணர்ச்சியின் வடிகால், பாவத்துக்கான பரிகாரம், பாதுகாப்பு போன்ற உணர்வுகளால் இருவரது உறவும் இழைக்கப்பட்டிருந்தாலும், அதில் அன்பும் ஈடுபாடும் மென்மையாகப் பதிக்கப்பட்டிருக்கும்.

ஒரு காட்சியில், "இந்த ஊர்ல நிறைய ஆம்பளைங்க இருக்காங்க" என்று ஆண்களால் தனக்குப் பாதுகாப்பில்லை என்பதைச் சொல்லி ஊரைவிட்டுச் செல்ல எத்தனிக்கும் பானுப்ரியாவைத் தடுத்து நிறுத்துவார் மம்மூட்டி. தமிழழகியிடம் கொடுத்த அறிமுகத்தின் நீட்சியாக `சூர்யா, நான் என்ன சொன்னாலும் செய்வான்' என்று நட்பின் உரிமையில் பானுப்ரியாவை ரஜினிக்குத் திருமணம் செய்துவைக்க மம்மூட்டி முடிவெடுப்பார். அவரின் சொல்லுக்காகவும் பானுப்ரியாவின், தமிழழகி ஆகியோரின் பாதுகாப்புக்காகவும் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்து, குங்குமத்தை எடுத்து பானுப்ரியாவின் நெற்றியில் வைப்பார் ரஜினி. இந்தக் காட்சியில் இளையராஜா பின்னிருந்து இசையால் அலங்காரம் செய்வார்.

"உனக்கு என்னைப் பிடிக்கலை. எனக்குத் தெரியும். இந்தக் குழந்தைக்கு ஒரு அப்பா இருந்திருக்கணும். இப்போ இல்லை. நான்தான் அவனைக் கொன்னேன். என் கையால அடிச்சுக் கொன்னேன் எனக்குத் தெரியலை. அவனுக்கு ஒரு குடும்பம் இருக்கும். இப்படி தேவதை மாதிரி ஒரு குழந்தை பிறக்கும்னு எனக்குத் தெரியலை" என்று தனது பாவம் தோய்ந்த நியாயத்தைச் சொல்லி, 

"நான் பாவிமா. பாவி. பாவம் பண்ணிட்டேன். மன்னிப்பு தேடிட்ருக்கேன். நீ கவலைப்படாத நான் இந்த வீட்டுக்குக் காவல். வெறும் காவல். உனக்குக் காவல். உன் குழந்தைக்குக் காவல்" என்று ரஜினி தனது நிலைப்பாட்டைச் சொல்லி முடிக்கும்போது அதுவரை நடந்துகொண்டிருந்த பானுப்ரியா, சற்று நின்று ரஜினியின் முகத்தைப் பார்ப்பார். அந்தப் பார்வையில் கேள்விகளைவிட பதில்கள் அதிகம் இருக்கும். ஆனால், அந்தப் பதில்கள் வெறும் கண்ணீரால் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும். 

இந்தக் காட்சிகளினூடே மணிரத்னத்தை ஓரங்கட்டி இளையராஜாவும் வாலியும் தங்கள் பாணியில் கதையைத் தொடங்குவார்கள். `புத்தம் புது பூ பூத்ததோ...' என்ற பாடல் தொடங்கும் தருணம் அது. காட்சியமைப்பில் படத்தில் இடம்பெறாத பாடல். இருந்தாலும் இந்தப் பாடல்தான் சூர்யா-பத்மா கதாபாத்திரங்களின்  முழுமை.`புத்தம் புது பூ பூத்ததோ...' என்று அந்த உறவின் தொடக்கத்தை பூவினும் மெலிதாய் எழுதி, `மொட்டவிழ நாள் ஆனதோ...' என்று அத்தனை ஆண்டுகள் அவள் பட்ட வலிகளை விசாரிப்பாகக் கேட்கிறான் சூர்யா. விசாரிப்பின் படிமத்தில் கேட்கப்பட்ட முதல் மன்னிப்பு அது. இந்தப் பாடலோடு இருவரும் மனதளவில் இணைகிறார்கள். அங்கிருந்து மணிரத்னம் கதையைத் தொடர்கிறார்.

தமிழழகியிடம் அம்மா தன்னைத் தூக்கி எறிந்ததையும், தான் வளர்ந்த கதையையும் சொல்லும் ரஜினியை, பானுப்ரியா கவனிப்பதுபோல காட்சி அமைக்கப்பட்டிருக்கும். "வேறொரு மகராசி எடுத்து வளத்தா. இப்ப இந்த மகராசிக்கிட்ட பேசிட்டிருக்கேன்" என்று ரஜினி சொல்லும் மகராசி பானுப்ரியாவாகக்கூட இருக்கலாம். இது தெரிந்த பிறகுதான் குழந்தையை மருத்துவ முகாமுக்குத் தூக்கிச் செல்லும்போது ரஜினியின் அம்மா சேலையைப் போத்தித் தூக்கிச் செல்வார் பானுப்ரியா. அதைப் பார்த்த பிறகுதான் ஸ்ரீவித்யாவுக்கு ரஜினியைப் பற்றித் தெரியவரும். படம் முதன்மைக் கதையின் பாதையில் தொடர்ந்து முடிவுக்கு வரும்.

இதுதான் இந்த சூர்யா-பத்மா கதை.

சட்டென நனையும் நெஞ்சம்:
"எனக்கு என்னமோ அந்தப் பொண்ணு உன்னை லவ் பண்றாளோன்னு தோணுது. நீயும் அவளை லவ் பண்றியாடா? ஏதாச்சும் பண்ணவேண்டியதுதானே!"

"என்ன செய்ய சொல்ற?"

"தூக்கிட்டு ஓடிப்போ."

"அந்தப் பொண்ணு மனசுல தைரியம் இருந்தா, விருப்பம் இருந்தா, மனசுல பலம் இருந்தா, அவ அந்த கிரானைட் ஆள வேணாம்னு சொல்லிடுவா."

"நீ அவளைத் தடுப்பன்னு நினைச்சிருப்பாளோ என்னவோ."

திருமண ஏற்பாட்டில் பெண் பார்க்கும் படலம் வரை வந்த இந்திரா, திருச்செல்வனிடம் வந்து கடலில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மறைக்கப்பட்ட காதலோடு சொல்லிச் சென்ற பிறகு திருச்செல்வனும் அவன் அக்காவும் பேசிக்கொள்ளும் காட்சி இது. இப்படித்தான் சொல்லப்படாத விருப்பங்கள் எதிர்முனையின் விருப்பத்தை எதிர்பார்த்திருக்கின்றன.

காதல் சொல்லப்பட வார்த்தைகளில் இத்தனை கவனம் காக்கும் திருச்செல்வன், இந்திராவை வேறொருவர் பெண் பார்க்க வந்த நிகழ்வில்கூட ஒருவித ஏமாற்றம் கலந்த உடல்மொழியோடுதான் பார்த்திருப்பான். இருவரின் விருப்பங்களும் மேகத்தினுள் உள்ள நிலவைப்போல மறைந்திருக்கிறது. இந்திராவும் வெளிக்காட்டாமல் திருச்செல்வனும் பிடிகொடுக்காமல் இருப்பதால், அரங்கேறாமல் இருக்கின்றன இருவருக்குமான விருப்பப் பரிமாற்றங்கள். விருப்பங்கள் என்பது, மறைத்துவைக்கும் காற்றைப்போன்றது. அவை `காரணம்' எனும் சிறுவெளிக்காக மட்டுமே காத்திருக்கிறது. காதலுக்கான காரணங்களை காதல்மொழியில் சொல்வதைப்போல் ஒரு திருமணத்துக்கான காரணத்தைப் பழமொழிகளில் காட்டியவர் மணிரத்னம்.

அகதி முகாமில் வளரும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்பது, திருச்செல்வன் என்கிற முற்போக்கு எழுத்தாளனின் விருப்பம். அதற்கான சட்ட விதிமுறைகளுக்காக ஒரு திருமணம் தேவைப்படுகிறது. தன்னை விரும்பும் பெண்ணென்று தெரிந்தும் இணைவதற்கான காரணங்களுக்காகக் காத்திருந்ததுபோல காரணத்தை விருப்பத்தின் குறியீடாக இந்திராவிடம் வெளிப்படுத்துகிறான். அந்தக் குறியீட்டை மணிரத்னம் சொல்லும் காட்சி இது.

"என்ன கொண்டு வந்திருக்கீங்க, கல்லா... கயிறா? நான் தற்கொலை செஞ்சுக்க."

"உனக்கு என்ன வயாசுகுது?"

"பார்த்தா எப்படித் தெரியுதாம்?"

"பதினெட்டைத் தாண்டிடுச்சுல்ல."

"தாண்டிடுச்சுன்னா?"

"என்னைக் கல்யாணம் கட்டிப்பியா? அமுதாவுக்கு அம்மாவா இருப்பியா. யோசிச்சு சொல்லு."

இவ்வளவுதான் விருப்பதின் வெளிப்பாடு. மறைத்திருந்த காதலை `யோசிச்சு சொல்லு' என்று ஒரு விண்ணப்பமாக வெளிப்படுத்திவிட்டுச் செல்கிறான். என்னதான் இப்படியொரு பொதிந்த காரணத்தைத் திருமணத்தின் முதலீடாகக் கேட்கும் ஆணிடம் எந்தப் பெண்ணும் எளிதில் இசைந்துவிடுவதில்லை.

"ஒரு வருஷமா உங்களுக்காகக் காத்திட்டிருக்கேன். அந்தச் சின்னப்பொண்ணு வந்த அப்புறம்தான் நான் உங்க கண்ல பட்டேனா? நான் என்ன இலவச இணைப்பா?" என்று பெண்ணுக்கே உரிய உரிமையில் "பிடிச்சிருக்கு" என்பதை கண்ணீரால் வெளிப்படுத்துகிறாள் இந்திரா. அழுகையின் பேசுபொருளாகக் கண்ணீரைக்கொண்டிருக்கும் வாழ்வியலில், மகிழ்ச்சிக்கான இந்தக் கண்ணீர் இனிப்பான ஒன்று. 

என்னதான் திருச்செல்வன் திருமண விருப்பத்தை வெளிப்படுத்தினாலும், அமுதாவைத் தத்தெடுப்பதுதானே அதன் மூலகாரணம் என்று மனதில் நினைக்கத்தோன்றுவது இயல்புதான். அந்த எண்ணத்தைத் துன்பமென்று அவள் நினைத்திருந்தாலும் அந்தத் துன்பம்தான் பேரின்பம் என எழுதுகிறார் கவிஞர் வைரமுத்து.

"சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்"
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்"

சுஜாதா வார்த்தைகளாகவும், வைரமுத்து கவிதையாகவும், ரஹ்மான் இசையாகவும் சொல்வதை மணிரத்னம் ஒரு சிறுகதையாகக் காட்சியில் ஏற்றியிருப்பார்.

நான் வருவேன்: 

சமீபத்தில் வெளியான 'காற்று வெளியிடை' படத்தின் `வான்' பாடல், ‛ராவணன்' படத்தில் வரும் `நான் வருவேன்' வரிகளைச் சற்று ஞாபகப்படுத்துவதுபோல அமைந்திருந்தது. இந்த இரண்டு பாடல்களுமே மொழியின் ஒலியளவு ஒன்றோடொன்று இசைந்திருந்தது. இரண்டுக்குமான ஓசை ஒரே சீரான அளவீட்டில் இருப்பதுகூட காரணமாக இருக்கலாம். `வான் வருவான்' எதிர்பார்ப்பின் எழுச்சியென்றால், `நான் வருவேன்' நம்பிக்கையின் வெளிப்பாடு.

``நான் வருவேன்

மீண்டும் வருவேன்

உன்னை நான் தொடர்வேன்

உயிரால் தொடுவேன்"

`ராவணன்' படத்தின் அநேக விமர்சனங்கள் ராமாயணத்தின் கண்ணோட்டத்திலேயே அலசப்பட்டன. கதாபாத்திரங்களும் அப்படியே பொருத்திப் பார்க்கப்பட்டன. அந்த இதிசாகப் பார்வையைவிடுத்து சாதாரண பார்வையில் அணுகினால், இதன் அழகியல் வேறாக இருக்கிறது. வீரா என்கிற ஓர் ஆண், ராகினி என்கிற ஒரு பெண்ணை 14 நாள்கள் கடத்திவைத்திருக்கிறான். அவன் அந்தப் பெண்ணின் மீதான ஓர் ஈர்ப்பில் அதன் நோக்கம் காமம் இல்லையென்ற ஒரு பார்வையில் அவளுடன் பயணிக்கிறான். அதைத்தான் வைரமுத்து முதல் சந்திப்பில் `உசுரே போகுதே உசுரே போகுதே' எனத் தொடங்கியிருப்பார்.

பாடலின் மொத்தமும் ஒரு confessional approach ரீதியிலேயே பயணித்திருக்கும். வரிகளும் விளக்கங்களும் அதற்கான நிலைப்பாடுகளும் என அந்த உறவுக்கான மொத்த முகத்தையும் வரி வரியாக எழுதியிருப்பார் வைரமுத்து.

காதலும் அது சம்பந்தப்பட்ட உணர்வுகளும் மட்டுமே மேலோங்கியிருக்கும். `அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி', `என் மயக்கத்த தீத்துவெச்சு மன்னிச்சிருமா', `ஒடம்பும் மனசும் தூரம் தூரம், ஒட்ட நினைக்கேன் ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல' என அனைத்து வரிகளுமே ஆழ்மன பிதற்றல்களே தவிர, ஓர் ஆணின் அத்துமீறலாக அமையவில்லை.

`இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல

ஒண்ணு ரெண்டு தப்பிப்போகும் ஒழுக்கத்தில

விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள

விதிவிலக்கில்லாத விதியுமில்ல'

என்ற வரிகளில் விதியைப் பற்றியும் விதிவிலக்கைப் பற்றியும் எழுதி ஓர் ஆணின் மனப்பிறழ்வுகளுக்கு நியாயம் செய்திருப்பார். 14-வது நாளில் கணவனைக் காப்பாற்ற ராகினியின் போராட்டத்தின்போது துப்பாக்கியுடன் அவளிடம் வீரா சொல்லும் தன்னிலை விளக்கம்.

“சுடுங்க. இங்கன (நெஞ்சில் துப்பாக்கி வைத்து) சுட்டா பத்தே நிமிஷம்தான். மனசுல இருக்க கண்றாவி, சஞ்சலம், வேதனை, கூடவே உசுரும் போயிரும். ஆனா இங்கன (தலையில் துப்பாக்கி வைத்து) சுட்டா, ஒரே நொடி. நினைப்பு, ப்ரியம், ஆசை, மூச்சு எல்லாம் ஒண்ணாபோயிரும். வலிக்காது. உங்களை இப்படியே சந்தோஷமா பார்த்துக்கிட்டே சிரிச்சுக்கிட்டே சரிஞ்சிருவேன்.”

இதிலுள்ள புரிதலை சற்று பார்த்தால், அவனுக்கு அவள் மீதான அன்பும் காதலும் புத்திக்கு எட்டிய ஒன்று என்பதை அவனே ஒப்புக்கொண்டிருப்பான்.

"கூடவே இருந்தா என் புருஷனை விட்ருவியா?" என்று ராகினி கேட்டதும், புத்தி மனம் இரண்டும் யோசிக்க, அவளது கண்களைக் கட்டி கணவனிடமே அனுப்பிவிடுவான் வீரா. ஆனால், கணவனது சூழ்ச்சித் திட்டம் தெரியாமல் கணவனின் சந்தேகத்துக்கு விடை தேட மீண்டும் வீராவிடம் வருகிறாள் ராகினி. ரஹ்மானின் உதவியோடு தொடங்கும் காட்சி அது.

"கண்ணக்கட்டி போங்கன்னு அனுப்பிவெச்சப்பகூட வருத்தபடலேயே, திரும்பி வந்தோன மட்டும் ஏன் இம்புட்டு சந்தோஷமா இருக்கு?" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி "அழாதியே, முழுங்குங்க, முழுங்குங்க" என்று தேற்றுவான். ஒரு சிறு கீறலில் சிணுங்கும் குழந்தையின் பேரிரைச்சல் அணைவதுபோல வீராவின் மேனரிசத்தில் `பக்... பக்... பக்...' எனச் சிரித்துக்கொண்டே அவளுக்கான உணர்வுகளை கண்ணீரோடு காட்டுவாள் ராகினி. கண்ணீரில் தெரியும் மகிழ்ச்சி, புனிதமானது.

உதட்டையும் கண்களையும் நேர்க்கோட்டில் வைத்து கண்ணீரில் வீரா சொல்லும் வசனம் `உசுரு வந்திருச்சு, உசுரு வந்திருச்சு, மனசு வந்திருச்சு' முதல் நாள் `உசுரே போகுது' எனச் சொன்ன அதே வீரா, இறுதிநாளில் `உசுரு வந்திருச்சு' என முடித்திருப்பான். இது வைரமுத்து அங்கு சொன்ன விடுகதையின் விடையை மணிரத்னம் இங்கு சொல்லியிருப்பார்.

ஒரு சுழற்சியை, ஒரு பூரணம் என்றுகூட சொல்ல முடியும். `உசுரே போகுதே'-வில் தொடங்கிய ஒரு கதை, `உசுரு வந்திருச்சு'வில் முடியும். இந்த இரண்டுக்குமான இடைவெளியை, காரணத்தை வாழ்வின் அர்த்தமாகச் சொல்வது வைரமுத்துவின் அழகு.

"அர்த்தம்  புரியும்போது வாழ்வு மாறுதே 

வாழ்வு  கழியும்போது  அர்த்தம்  கொஞ்சம்  மாறுதே"

`உசுரு வந்திருச்சு' என்ற சொன்ன நாளில்தான் அவன் உயிரும் பிரியும். அந்த மலை உச்சியிலிருந்து பள்ளத்தில் குண்டடிப்பட்டு உயிர் பிரியப் பிரிய காற்றில் கரையும் வீரா, முகம் முழுக்க வீராவின் ரத்தத்தோடு கை நீட்டும் ராகினி என அந்தக் காட்சியில் புரியும் மொத்த அர்த்தங்களும்.

"ஒரு கனவு காற்றில் மிதக்குதோ

அது மிதந்துகொண்டு சிரிக்குதோ"

அவர்களது கனவு காற்றில் மிதப்பதுபோல, வீரா புன்னகையோடு மிதந்துகொண்டே 'மீண்டும் வருவேன்' எனக் கையசைத்துச் செல்வான்.

- இளம்பரிதி கல்யாணகுமார்

அடுத்த கட்டுரைக்கு