Published:Updated:

வாங்க சிலுசிலுனு ஒரு கிராமத்துக்குப் போவோம்! - ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
வாங்க சிலுசிலுனு ஒரு கிராமத்துக்குப் போவோம்! - ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம்
வாங்க சிலுசிலுனு ஒரு கிராமத்துக்குப் போவோம்! - ஒரு கிடாயின் கருணை மனு விமர்சனம்

கிடாய் வெட்டப்போன இடத்தில் நடக்கும் ஒரு 'சம்பவமும்' அதைத் தொடர்ந்து அரங்கேறும் கலாட்டாக்களும்தான் 'ஒரு கிடாயின் கருணை மனு'.

புதுமணத்தம்பதி விதார்த் - ரவீணா ரவி. இவர்கள் திருமணத்திற்கான நேர்த்திக்கடனை செலுத்த ஊர்காரர்கள் சிலருடன் இருவீட்டார் குடும்பமும் லாரியில் கிளம்புகிறது. கூடவே, பலி கொடுக்க இருக்கும் கிடாயும். செல்லும் வழியில் தென்படும் சிறு சிறு கோயில்களில் பிரார்த்தனையை முடித்து, தேங்காய் உடைத்தபடி தொடர்கிறது பயணம். அப்போது நடக்கும் விபத்தால் இந்தப் பயணம் வழிமாறுகிறது. விபத்தால் யாருக்கு என்ன ஆகிறது, குடும்பம் நேர்த்திக்கடன் செலுத்தியதா, அந்த கிடாய் என்ன ஆகிறது போன்ற விஷயங்களை சுவாரஸ்யமாகச் சொல்கிறது படம்.

மான் வேட்டையாடி மாட்டிக்கொண்ட கிராமத்து மனிதர்கள் பற்றிய தொடக்கப்பாடல், கிடாயின் கண்கள் வழியே கிராமத்தை விவரிக்கும் தொடக்கக்காட்சி என ஆரம்பமே நம்மை இழுக்கிறது. கிராமத்து மனிதர்களின் இயல்பு, அவர்களின் நக்கல், நையாண்டி, பதட்டம், அப்பாவித்தனம் ஆகிய உணர்வுகளைப் பதிவுசெய்து அதை எதார்த்தத்துடன் இழைத்திருக்கும் அறிமுக இயக்குநர் சுரேஷ் சங்கையாவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை கதையையே கொஞ்சம் உல்டாவாக திருப்பி சொல்லியிருந்த விதம் படத்தின் முக்கிய அம்சம்.

விதார்த் தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். திருமணம் ஆகித் தன் மனைவியை நெருங்க முடியாமல் தவிப்பதும், விபத்துக்குப் பிறகு என்ன முடிவு எடுப்பது என திணறுவதுமாக நன்றாக நடித்திருக்கிறார். அவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் 'எனக்கு 35 வயசுன்னு யாரு சொன்னது?' என்று அவர் எகிறுவது செம கலாட்டா.

ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார் டப்பிங் ஆர்டிஸ்ட் ரவீணா ரவி. அலட்டிக் கொள்ளாமல் நடித்தாலும், எல்லா அதிர்ச்சிகரமான காட்சிகளின் போதும் ஒரே அளவிலான எக்ஸ்பிரஷன்கள் மட்டும் காட்டுவது மைனஸ். விக்ரமாதித்யன், ஜெயராஜ், வக்கீலாக வரும் ஜார்ஜ், சமையல் கான்ட்ராக்டுக்கு கிளம்பி வரும் ராஜா (சேவல் மாஸ்டர்), கொண்டியாக, வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரையும் வறுத்தெடுக்கும் ஆறுபாலா, கறிக்கஞ்சிக்கு மொய்க்கவருடன் கிளம்பும் பைரவன், வைரவன், பல்லாண்டி, குஞ்சுக்கறி, ஸ்டூலை நகர்த்தினால் கூட "அரும்பாடுபட்டு ஸ்டூல நகர்த்தியிருக்கேன்" எனப் பேசும் ஹலோ கந்தசாமி, ஊர் முழுங்கி, கோணவாய், ஏழரை என அத்தனை கதாபாத்திரங்களையும் மனதில் பதிய வைக்கிறார் இயக்குநர். 

"இவன் என்ன உப்புமாக்கு கத்திரிக்கா கேக்குறான்", "கொன்னவனுக்கு நாலு மிதின்னா, நின்னவனுக்கு ரெண்டு மிதி விழத்தான் செய்யும்" "35 வயசுக்குப் பிறகு இப்போதான் கல்யாணம் ஆகுது. கைக்கு எட்டுனது கவுட்டைக்கு எட்டலையேப்பா" என முகம் சுழிக்க வைக்காமல் கிராமத்து பாணியிலேயே இரட்டை அர்த்த வசனங்கள் என காட்சிக்கு காட்சி ஏதேனும் ஒரு வசனத்தையாவது நினைவுகூராமல் இருக்கமுடியவில்லை. வழக்கறிஞர்களுக்கே உரிய தொழில் சாமர்த்தியத்தை ஜார்ஜ் பாத்திரத்தின் மூலம் கொண்டுவந்திருப்பது சிறப்பு.

ரகுராம் இசையில் பாடல்கள் மூன்றுமே சிறப்பு. மான் வேட்டைக்கு சென்று போலீஸில் மாட்டியவனின் கதை சொல்வதாக, டைட்டில் கார்டில் ஒலிக்கும் 'கொலசிந்து' பாடல் தமிழ் சினிமாவுக்குப் புதுசு, படத்தின் பின்னணி இசை சில இடங்களில் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமே என்ற எண்ணத்தைத் தருகிறது. படத்தின் முதல் காட்சியில் கிடாயின் பார்வை வழியாக காட்டுவதில் ஆரம்பித்து பல இடங்களில் சுவாரஸ்யம் கூட்டுகிறது ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு. முக்கால்வாசி படத்தின் லொக்கேஷன் ஒரு பொட்டல் காட்டு மண்டபம்தான். அதில் சலிப்பு தராதபடி படம் பிடித்திருப்பது, இரண்டு ஊர்களுக்குள் நடக்கும் சண்டை என பல இடங்களில் ஒளிப்பதிவு கவர்கிறது.

முதல்பாதியில் நடக்கும் விபத்து, அதன் விளைவுகளால் எடுக்கும் முடிவுகள் என விறுவிறுப்பாகக் கடக்க, இரண்டாம் பாதியில் கதை கொஞ்சம் அலைபாயத் தொடங்குவது சின்ன சலிப்பைத் தருகிறது. அந்த பைரவன், வைரவன் கேரக்டர்கள் படத்துக்குக் கொஞ்சம் உறுத்தல். சீரியஸான பிரச்னைகளை முழுவதும் காமெடியாகச் சொல்வது பலம் மட்டுமல்ல, சின்ன பலவீனமும்கூட. இருந்தாலும் ஒரு கிராமத்துக்குள் இறங்கி, அவர்களுடன் கிடாய் வெட்டுக்கு லாரியில் ஏறி, அவர்களுடன் அமர்ந்து புளியோதரை சாப்பிட்டு வந்த நேரடி அனுபவ உணர்வைத் தந்த விதத்திலும் கிராமத்து மனிதர்களின் மொழியிலேயே சுவாரஸ்யமான வசனங்களைத் தந்த விதத்திலும் ஒரு நல்ல சிறுகதை வாசித்த அனுபவம் தருகிறது இந்த கிடாயின் கருணை மனு!