Published:Updated:

F8-க்கு சவால் விடுகிறதா போங்கு டீம்? - போங்கு விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
F8-க்கு சவால் விடுகிறதா போங்கு டீம்? - போங்கு விமர்சனம்
F8-க்கு சவால் விடுகிறதா போங்கு டீம்? - போங்கு விமர்சனம்

F8-க்கு சவால் விடுகிறதா போங்கு டீம்? - போங்கு விமர்சனம்

யாரோ செய்த கார் திருட்டுக் குற்றச்சாட்டில் சிக்கி வேலையைத் தொலைத்த மூன்று நண்பர்கள், பிறகு கார் திருட்டையே வாழ்க்கையாக்கிக்கொள்கிறார்கள். திருட்டிலிருந்து திருந்தினார்களா, அவர்களைத் திருந்தவிட்டார்களா என்பதே இந்த ‘போங்கு’ ஆட்டம். 

நட்டி, ருஹி சிங், அர்ஜுனன் மூவரும் நண்பர்கள். கார் கம்பெனி வேலை, நிறைவான சம்பளம், சொகுசான வாழ்க்கை என வாழ்கிறார்கள். டெலிவரிக்குப் போன காஸ்ட்லி கார் ஒன்று திருடப்படுகிறது. அந்தத் திருட்டுக் குற்றச்சாட்டு, இவர்கள் மீது விழுகிறது. ஜெயிலுக்குச் செல்கிறார்கள். வெளியே வந்த பிறகும் மற்ற கம்பெனிகளில் வேலை தர மறுக்கிறார்கள். ஜெயில் நட்பை பயன்படுத்தி கார் திருட்டுக் கும்பல் ஒன்றோடு இணைகிறார்கள். சின்னச் சின்னத் திருட்டுகளுக்குப் பிறகு கடினமான பெரிய அசைன்மென்ட் ஒன்று இவர்களுக்குத் தரப்படுகிறது. அந்த `மிஷன் இம்பாசிபி'ளை, ‘பாசிபிள்’ ஆக்கினார்களா இல்லையா என்பதே மீதிக்கதை. 

'ரேர் பீஸ் நட்டி’ என்ற டைட்டிலோடு அறிமுகமாகிறார் ஹீரோ நட்டி. அசால்ட் லுக், விறுவிறு ப்ளானிங் என கெத்துகாட்டுகிறார். ஏற்கெனவே விளையாடிய ‘சதுரங்க வேட்டை’ சாயல் ஆங்காங்கே தெரிவதுதான் இடிக்கிறது. ‘ஹீரோயின் ருஹி சிங்குக்கு பெரிதாக வேலை இல்லை. ஓகே ரகம். கிடைத்த இடங்களில் எல்லாம் ஸ்கோர் செய்யும் அதுல் குல்கர்னி, நடிப்பிலும் லுக்கிலும் கவர்கிறார். ஆனால், அவரை க்ளைமேக்ஸில் ‘ஹேண்ட்ஸப்’ என்று துப்பாக்கியுடன் வரும் வழக்கமான போலீஸாக்கிவிட்டார்களே என்பதுதான் வருத்தம். அர்ஜுனன், ‘முண்டாசுபட்டி’ ராமதாஸ், ஷரத் என அனைவரும் கொடுக்கப்பட்ட வேலையைப் பக்காவாகச் செய்திருக்கிறார்கள். 

ஹீரோ ஹீரோயின் இருந்தால் நிச்சயம் காதல், டூயட் எனக் கிறுகிறுக்கவைப்பார்கள். ‘போங்கு’வில் அப்படி எதுவும் இல்லை. அதுவே ஆறுதல். கதையில் மட்டுமே கவனம் செலுத்திய விதத்தில் வித்தியாசப்படுகிறார் இயக்குநர் தாஜ். முதல் பாதியில் 'ஏதோ செய்யப்போறாங்க...' என பில்டப் ஏற்றிவிட்டு பின்பாதியில் நிமிடத்துக்கு ஒரு ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்குகிறது திரைக்கதை. சாம்ஸின் கார் காமெடி கொஞ்சம் ஆறுதல். `இந்த காருக்குத்தான் இந்த பில்டப்பா” என ரசிகனை நோகவிடாமல், பட்ஜெட் படத்திலும் நிஜ ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்கியதற்கு பாராட்டுகள் ப்ரோ!

‘கார்களை திருடி ரேஸ் விடு. பில்டிங்விட்டு பில்டிங் தாவவிடு, படம் ஹிட்' - இது ஹாலிவுட்டின் மினிமம் கியாரன்டி ஃபார்முலா. அப்படி வந்த ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’, ‘கான் இன் 60 செகண்ட்ஸ்’ போன்ற படங்களால் இன்ஸ்பயர் ஆனது ஓ.கே. ஆனால், வொர்க்‌ஷாப் முதற்கொண்டு அந்தப் பட செட்டை அப்படியே ஜெராக்ஸ் எடுத்திருப்பது ஏனோ? 'எம்.பி-யிடம் எடுபிடியாக இருக்கும் வில்லன் ஷரத் ஒரே ஆண்டில் மதுரையைக் கலக்கும் டான் ஆவது, அத்தனை அடியாள்களையும் தாண்டி வில்லன் வீட்டுச் சுவர் ஏறிக் குதித்து கார் திருடுவது'... இப்படி பல காட்சிகளில் லாஜிக் மிஸ்! மொக்கை மெக்கானிக்குகளை வைத்துக்கொண்டு பல கோடிகளை அடிக்க ப்ளான் போடும் அந்த நந்தகோபால் யார்? கார் ப்ரியர்களுக்கான படம் என்றால், சேஸிங் காட்சிகள் மிரட்டவேணாமா? ஆள் இல்லா சாலையில் X போடும் அதே எம்.ஜி.ஆர் காலத்து சேஸீங்தானா? 

ஶ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும் பாடல்களும் ஓகே ரகம். கதைக்கு இடையூறாக இருக்கும் அந்தக் குத்துப்பாடல்கள் தேவைதானா? பாடல் காட்சிகள், விறுவிறுப்பில்லாத சேஸிங் சீன்கள் எனச் சிலவற்றை தயவுதாட்சண்யம் இன்றி கத்தரித்திருக்கலாம் எடிட்டர் கோபி. மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு படத்தின் வேகத்துக்குப் பக்கபலம்.

ஹீரோவும் வில்லனும் ப்ளான் போடுவது, ஹீரோ ப்ளான் போடும்போதே வில்லன் அதை செய்து முடிப்பது, காமெடிக்காக ராமதாஸைத் திருட்டுக்கு உடந்தையாக்குவது போன்ற பல படங்களில் பார்த்த காட்சிகளை இந்தப் படத்திலும் பார்க்கலாம். வழக்கமான கதைதான். ஆனால் சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் கூட்ட முயன்றுள்ள இயக்குநர் தன் முயற்சியில் ஓரளவு வென்றுள்ளார். இன்னும் சுவாரஸ்யமான காட்சிகள், விறுவிறு திரைக்கதை அமைத்திருந்தால் ‘போங்கு’ பொளந்துகட்டியிருக்கும். இருந்தாலும் ‘போங்கு’க்கு ஒருமுறை போய் வரலாம். 

அடுத்த கட்டுரைக்கு