Published:Updated:

நடிகர் பாண்டியனை வெறுக்கும் டீக்கடைக்காரர்.. ஏன்? - கோடம்பாக்கம் தேடி! #Cinema மினி தொடர் Part 3

விக்னேஷ் செ
நடிகர் பாண்டியனை வெறுக்கும் டீக்கடைக்காரர்.. ஏன்? - கோடம்பாக்கம் தேடி! #Cinema மினி தொடர் Part 3
நடிகர் பாண்டியனை வெறுக்கும் டீக்கடைக்காரர்.. ஏன்? - கோடம்பாக்கம் தேடி! #Cinema மினி தொடர் Part 3

ம் ஊர்களில் இப்படியான வகையினர் சிலர் இருப்பார்கள். நாட்டில் நடக்கிற எல்லா அக்கப்போர்களுக்கும் ஒரே காரணம் இந்த சினிமாக்காரர்கள்தாம் என்பார்கள். 'அரசியல் ஒரு சாக்கடை' எனப் பொத்தாம்பொதுவாக பப்ளிக் கமென்ட் போட்டுவிட்டு நகர்ந்துவிடுகிற கோஷ்டியைச் சேர்ந்தவர்கள்தான் இவர்களும். 'நீயாவது வந்து சுத்தப் படுத்தேன்யா...' எனக் கையைப் பிடித்து இழுத்தாலும் வரமாட்டார்கள். 'அடப் போப்பா அது ஒரு சாக்கடை...' என 'அன்னிக்குக் காலையில ஆறு மணி இருக்கும்...' எனப் புலம்பல் கதைகளையே ரிப்பீட் மோடில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். சரி, அதை விட்டுவிடலாம். சினிமாக்காரர்கள்தான் அநியாயங்களுக் காரணம் என ஏன் சொல்கிறார்கள் என்பதையும் கூட விட்டுவிடலாம்.  சென்னையின் அடர்த்திக்குச் சினிமா ஒருவிதத்தில் பெரும் காரணமாயிருக்கிறது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும். இந்த மக்கள் நெருக்கத்திற்கும் கோடம்பாக்கத்திற்கும் அப்படி என்னதான் தொடர்பு..?

அவர் கிட்டத்தட்ட இருபது வருடங்களாகச்  சென்னையின் இதயப் பகுதியான மவுன்ட் ரோட்டில் டீக்கடை வைத்திருக்கிறார். திருச்சிக்குப் பக்கத்தில் ஒரு கிராமம்தான் சொந்த ஊர். 'சம்பாத்தியம் கைக்கும் பத்தல... வாய்க்கும் பத்தல... குடும்பத்தை ஓட்டுறதே பெரிய சாதனையா இருக்குப்பா...' என எப்போதாவது புலம்பிக் கொண்டிருப்பார். இத்தனைக்கும் நன்றாக வியாபாரம் ஆகும் கடைதான் அது. ஐ.டி. கம்பெனிக்காரர்கள், அருகிலிருக்கும் ஐந்தாறு வங்கி ஊழியர்கள் எனப் பலரின் இன்டர்வெல் நேரம் விடிவதே இந்தக் கடையில்தான். சில நாட்களில் சாப்பாட்டை எல்லாம் மறந்து டீ ஆற்றிக் கொண்டிருப்பார். காலையில் வாங்கி வைத்த பொங்கல் ஒரு ஓரத்தில் காத்து வாங்கிக் கொண்டிருக்கும். டீக்கடை வைத்து அம்பானியாகும் கனவோடுதான் வந்திருப்பார் போல என அதுவரை நினைத்திருந்தேன்.

ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை கடையைத் திறந்து வைத்து ஈ ஓட்டிக் கொண்டிருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அப்போதுதான் இவர் அம்பானி ஆகும் கனவோடு வந்தவரல்ல... சூப்பர்ஸ்டார் ஆகும் கனவோடு சென்னைக்கு வண்டி ஏறியவர் எனத் தெரிந்தது. பெரிய டைரக்டர்களிடம் ஏதாவது ஒரு படத்தில் வாய்ப்பு வாங்கிவிட்டால் காலத்துக்கும் கவலையில்லை. கால் மேல் கால் போட்டுக் கொண்டு நான்கைந்து துணை நடிகைகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு ஜாலியாக இருக்கலாம் எனக் கணக்குப் போட்டுக் கனவு கண்டபடியே தாம்பரத்தில்  இறங்கியவருக்குக் கோடம்பாக்கம் எப்படிப் போவது என விசாரிக்கவே ஒரு மணி நேரம் ஆகியிருக்கிறது. கோடம்பாக்கம் ஒரு சொர்க்கலோகம்... சொர்க்கத்தில் ரம்பையும், ஊர்வசியும் போல இங்கே ரஜினியும், கமலும் குறுக்கும் மறுக்குமாக வாக்கிங் போவார்கள். நிமிர்ந்து பார்த்தால் ஏதோவொரு டைரக்டராகத்தான் கண்ணில் படுவார் என நம்பியவருக்குப் பாவம் கொடூர ஏமாற்றம்! 

அடுத்த வருடத் திருவிழாவுக்கு வரும்போது பெரிய ஹீரோவாக அம்பாஸிடர் காரில்தான்  ஊருக்கு வருவேன் என எல்லோரிடமும் சபதம் வேறு எடுத்திருந்திருக்கிறார். இங்கே வந்து விசாரித்துத் திரிகையில், பெயர் தெரியாத படங்களுக்கு டைரக்டர் எனச் சிலர் அறிமுகமாகி டிபன், சாப்பாடு எல்லாம் சேர்ந்து சாப்பிட்டுவிட்டுக் கல்லாக் கணக்கை இவர் தலையில் எழுதி இருக்கின்றனர். சேர்த்துவைத்துக் கொண்டுவந்திருந்த பணத்தை வைத்துச் சென்னையில் ஒரு வாரம் கூடத் தாக்குப் பிடிக்கவில்லை. மெரினா பீச், வள்ளுவர் கோட்டம், ஏ.வி.எம் ஸ்டுடியோ என இன்னும் ஒரு வாரம் சுற்றியவருக்குக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஹீரோவாகும் வாய்ப்பு தெரியவில்லை. நம்ம ஆள் 'நடிச்சா ஹீரோதான் சார்... இந்த ஹீரோவுக்கு ஸ்நேகிதன், ஹீரோயினுக்கு சித்தப்பா கதாபாத்திரம்லாம் வேணாம் சார்... நான் வெய்ட் பண்றேன்' எனச் சொல்லும் விருச்சிககாந்த் கேரக்டர் கூட இல்லை. துண்டு துக்கடா ரோல்களில் தலைகாட்டியதைச் சந்தோசமாகச் சொல்லிக்கொண்டாவது அடுத்த திருவிழாவுக்குப் போய்விடலாம் எனத் தனக்குத் தானே சபதத்தைத் தளர்த்தியும் கொண்டிருக்கிறார். இருந்தும் என்ன பிரயோஜனம்... இரண்டு அமாவாசைகள் கடந்தும் இவர் கனவுக்கு ஒரு விடிவுகாலம் வந்தபாடில்லை.

அதற்கு மேல் அவருக்கும் பொறுமை இல்லை... அல்லிநகரம் பாரதிராஜாவுக்கும் பொறுமையில்லை. பாரதிராஜா புதுமுக நடிகர் பாண்டியனை வைத்து 'மண்வாசனை' எடுக்கத் தொடங்கிவிட்டார். நம்ம டீக்கடை அண்ணன், திருச்சிக்காரர் ஒருவர் வண்டலூரில் வைத்திருந்த டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார். 'பாண்டியன்னு ஒரு நடிகர் புதுசா வந்துருக்காராம்ல... அந்தமாதிரி நாமளும் ஆகிடலாம். பாரதிராஜா கண்ணுல பட்டுட்டா போதும். பிறவிப்பயனை அடைஞ்சிடலாம்' என நினைத்து, வேலை செய்யும் கடையில் சொல்லாமல் கொள்ளாமல் பாரதிராஜாவைப் பார்க்கப் போயிருக்கிறார். புதுப்படப் பரபரப்பில் திரிந்தவரிடம் ஹீரோ சான்ஸ் கேட்க, 'எ ஃபிலிம் பை' பாரதிராஜாவும் 'அடுத்த படம் ஆரம்பிக்கும்போது கூப்பிடுறேன். போய்யா' எனக் கொஞ்சம் கடுப்பாகி இருக்கிறார். அவர் சொன்னதும் திரும்பி வந்து டீக்கடை ஓனரின் கையைக் காலைப் பிடித்து அதே டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். 

பாரதிராஜா அடுத்த படம் எடுக்கும்போது மெட்ராஸில் சொந்தமாக அட்ரஸ் கூட இல்லாத இவரை எப்படிக் கூப்பிடுவார்? என்கிற அவலமிக்க நிதர்சனமே பிறகுதான் இவருக்குப் புரிந்திருக்கிறது. அதே வருடத்தில் பாரதிராஜாவுக்கு நல்லநேரம் வந்து இந்திப் படமும் எடுத்தார். இந்திப் பட ஹீரோ லுக் இவருக்கு இல்லை என இவர் தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டு பாரதிராஜாவைத் தேடிப் போய்ப் பார்த்துத் தர்மசங்கடத்தை உண்டாக்கவில்லை போலும். நடிகர் பாண்டியனை வைத்து அடுத்த வருடமே பாரதிராஜா 'புதுமைப் பெண்' படத்தையும் இயக்கினார். இன்று வரை நம் டீக்கடைக்காரருக்கு பாண்டியன் எனும் பெயரைப் கேட்டாலே கடுப்பாகி விடுகிறதாம். இப்படிச் சென்னையின் தெருக்களில் டீக்கடை வைத்திருப்பவர் முதல் காய்கறிக்கடை வைத்திருப்பவர் வரை பலர் அம்பானி, பிர்லா ஆகும் கனவுகளோடு சென்னைக்கு வந்தவர்கள் அல்லர். பாரதிராஜாவாகவும், பாண்டியன்களாகவும் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு மெட்ராஸ் வண்டியைப் பிடித்தவர்கள்தாம். 

இப்படியாக டிஜிட்டல் கலர் கனவுகளோடு வந்தவர்களில் சிலர் வேறு வாய்ப்புகளின்றி மீண்டும் ஊர் திரும்பி விடுகிறார்கள். ஆனால், பலர் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளவும் முடியாமல் ஊர் திரும்பவும் முடியாமல் வேறு ஏதேனும் வேலைகளைச் செய்தபடி இங்கேயே தங்கி விடுகிறார்கள். அவர்கள் சோற்றுக்காகவும், குடும்பத்துக்காகவும் எந்த வேலைகளை வேண்டுமானாலும்  செய்துகொண்டிருக்கலாம். ஆனால், சினிமாவை கானல் நீராகத் தொலைவிலிருந்து வேடிக்கை பார்த்தவண்ணமே இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அண்ணா சாலைக்கும், கோடம்பாக்கத்திற்கும் இடையேயான தூரம் அன்று நான்கு கிலோமீட்டர். இன்று நானூறு கிலோமீட்டர். லட்சியத்துக்கும், வாழ்க்கைக்குமான தூரத்தில் இந்தப் பயணமும் ஒரு கானல் நீர்.

சென்னையின் அடர்த்திக்குச் சினிமாவும் ஒருவகையில் காரணம் என்பது இப்போது கொஞ்சம் நம்பும்படியாக இருக்கிறதா..?

- இன்னும் ஓடலாம்...