Published:Updated:

'ஹ்யூமன் வெப்பன்லாம் இருக்கு. ஆனா, திரைக்கதை ட்விஸ்ட்!?' - முன்னோடி விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
'ஹ்யூமன் வெப்பன்லாம் இருக்கு. ஆனா, திரைக்கதை ட்விஸ்ட்!?' - முன்னோடி விமர்சனம்
'ஹ்யூமன் வெப்பன்லாம் இருக்கு. ஆனா, திரைக்கதை ட்விஸ்ட்!?' - முன்னோடி விமர்சனம்

யார் உனக்கு முன்னோடியோ அவரைப் பொறுத்தே உன் வாழ்க்கை அமையும். அப்படி கெட்டவனை முன்னோடியாக எடுத்துக்கொள்ளும் ஒருவனின் வாழ்க்கை என்னவாகிறது என்பதே இந்த ‘முன்னோடி’யின் கதை. 

‘தம்பிக்கே முக்கியத்துவம் தருகிறார்கள்’ என நினைத்து குடும்பத்தோடு ஒட்டாமல் இருக்கும் ஹீரோ ஹரிஷ், ஆபத்து ஒன்றில் சிக்கிய வில்லன் அர்ஜுனாவை காப்பாற்றுகிறார். அதில் இருந்து ஹரிஷை தன் மகன்போல பாசம் காட்டி வளர்க்கிறார் அர்ஜுனா. இவர்களின் இந்த திடீர் உறவு அர்ஜுனாவின் மைத்துனருக்கு பிடிக்கவில்லை. தவிர அர்ஜுனாவுக்கு ஸ்கெட்ச் போட்டபடி அவரைத் தூக்க காத்திருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. இந்த நிலையில் வில்லனிடம் இருந்து விலகி காதலியை கரம்பிடித்து முரண்பட்ட தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ நினைக்கிறார். ஆனால் ஒரு புள்ளியில் வில்லன், அவரின் மைத்துனர், போலீஸ் இந்த மூவரின் பார்வையும் ஹரிஸுக்கு எதிராக திரும்புகிறது. இவர்களிடம் இருந்து ஹரிஷ் தப்பினாரா? தான் நினைத்தது நிறைவேறியதா?

இந்த அடிதடி ஆக்‌ஷன் களத்துக்கு ஹீரோ ஹரிஷ் கச்சிதம். நடனம் ஆடுகிறார். ஆக்ஷனில் அனல் பறக்க வைக்கிறார். இயல்பான நடிப்பை தர இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டால், ஹரிஷுக்கு நல்ல இடம் காத்திருக்கிறது. யாமினி ஹீரோயின். அரசியல்வாதி அர்ஜுனா, மற்றொரு வில்லன் பாவெல் நவகீதன், போலீஸ் அதிகாரியாக வருபவர், ஹீரோவின் நண்பர்கள் என அனைவருமே அலட்டிக்கொள்ளாத அளவான இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொருவிதமான வழக்குமொழியில் பேசி கிறுகிறுக்கவைக்கிறார்கள். 

பக்கா கமர்ஷியல் பேக்கேஜுடன் களமிறங்கியிருக்கிறார் இயக்குநர் குமார். யாரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரியவில்லை. ஆனால் மோசமில்லாமல் ஒரு படம் தந்திருக்கிறார். படத்தின் முதல் நாற்பது நிமிடங்களில் நம்மை வாட்டிவதைப்பவர் பிறகு வெகு லாகவமாக கதையை நகர்த்துகிறார். 'வில்லன் - ஹீரோ - போலீஸ்' எனப் பயணிக்கும் கதைக்கு, திடீரென 'குடும்பம் - காதல் - நண்பர்கள்' என்ற ஆர்டர் கொடுக்கிறார். பிறகு, மறுபடியும் 'வில்லன் - ஹீரோ - குடும்பம்' என இவர் அமைத்திருக்கும் திரைக்கதை திருப்புமுனைகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஆனால் அதற்கு திரைவடிவம் கொடுப்பதில் கொஞ்சம் திணறியிருக்கிறார்.

கொலை நடக்கும் காட்சிகள், போலீஸின் ஸ்கெட்ச், கதையோடு பயணிக்கும் காமெடிக் காட்சிகள், 'ஹ்யூமன் வெப்பன்'... உள்ளிட்ட டீடெயிலிங் செம! அதேசமயம், கமர்ஷியல் படங்களுக்குத் தேவையான ‘விறுவிறு’ திரைக்கதை அமைப்பு மிஸ்ஸிங். கதாபாத்திரங்களின் குணாதிசியங்களைச் சொல்வதிலும் சற்று குழப்பம். செல்போன்களை அசால்டாக டிராக் செய்வது, ஓர் ஏரியாவுக்கே செல்போன் சிக்னலை கட் செய்வது என வாழையடிவாழையாகத் தொடரும் லாஜிக் மீறல்கள் இதிலும் உண்டு.

ஒளிப்பதிவாளர் வினோத் ரத்னசாமி மொத்தப் படத்தையும் தன் ஒளிப்பதிவு ஜாலத்தால் தூக்கிச் சுமந்திருக்கிறார். வெளிச்சம், இருள், மழை, பனி என ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கிறார். குறிப்பாக, சிங்கிள் ஷாட்டில் காட்டப்படும் சில காட்சிகள் அற்புதம். இசையமைப்பாளர் பிரபு சங்கர் பின்னணி இசையைவிட, பாடல்களில் ஈர்க்கிறார். ‘அக்கம் பக்கம்…’ பாடலில் ஏற்கெனவே சில படங்களில் பார்த்த ‘சிஜி’ டெக்னிக்கைக்கொண்டு அசத்தியிருக்கிறார்கள். சண்டைக்காட்சிகள் ஒவ்வொன்றையும் மனதில் பதியும்படி விறுவிறுப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கும் விதத்தில் கவனிக்கவைக்கிறார் ‘டேஞ்சர்’ மணி.

நல்ல டெக்னிக்கல் டீம், நல்ல கமர்ஷியல் படத்துக்கான திரைக்கதை… என அனைத்தும் கச்சிதமாக இருந்தும், காட்சிப்படுத்துதலிலும், கதையின் மையப்புள்ளியை ரசிகர்களுக்குக் கடத்துவதிலும் தடுமாற்றம் தெரிகிறது. இந்த தடுமாற்றங்களைக் களைந்திருந்தால் இது நிச்சயம் ‘முன்னோடி’யாக இருந்திருக்கும். ஆனால் இது சினிமாவை பின்னோக்கி இழுத்துசெல்லும் படம் இல்லை என்ற வகையில் முன்னோடியை நிச்சயம் பார்க்கலாம்.