Published:Updated:

ஒரு வாரத்தில் கல்யாணம்... ஏழாவது நாள் என்ன நடக்கிறது? -‘7 நாட்கள்’ விமர்சனம்!

விகடன் விமர்சனக்குழு
ஒரு வாரத்தில் கல்யாணம்... ஏழாவது நாள் என்ன நடக்கிறது? -‘7 நாட்கள்’ விமர்சனம்!
ஒரு வாரத்தில் கல்யாணம்... ஏழாவது நாள் என்ன நடக்கிறது? -‘7 நாட்கள்’ விமர்சனம்!

ஒரு வாரத்தில்  கல்யாணம் ஆகவிருக்கும் பிரபுவின் மகனுக்கு ஏழாவது நாள் என்ன ஆகிறது? என்பதுதான் '7 நாட்கள்' படத்தின் கதை.

மாநிலத்தின் முதலமைச்சரையே 'வாடா... போடா!' என்றழைக்கும் பணக்காரத் தொழிலதிபர் பிரபுவுக்கு ஒரு மகன், ஒரு வளர்ப்பு மகன். மகன் ராஜீவ், ப்ளேபாய். வளர்ப்பு மகன், போலீஸ் கதாபத்திரத்துக்கென்றே குத்தகைக்கு எடுத்த கணேஷ் வெங்கட்ராம், ஒரு மாறுதலுக்கு சைபர் க்ரைம் ஆபீஸர். பிரபுவின் புகழுக்குக் களங்கம் வரவிருக்க, அதைத் தடுக்கும் முக்கியமான பொறுப்பை வளர்ப்பு மகனிடம் ஒப்படைக்கிறார். இடியாப்பச் சிக்கலான இந்தப் பிரச்னைக்குள், அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசிக்கும் சக்தி வாசுவும் நிக்கிஷாவும் எப்படி மாட்டிக்கொள்கிறார்கள்? பிரபுவின் கெளரவம் என்ன ஆனது? பிரச்னைகளிலிருந்து சக்தியும் நிக்கிஷாவும் மீண்டார்களா? வளர்ப்பு மகன், தன்னிடம் கொடுத்த பொறுப்பைச் சரியாகச் செய்தாரா? பிரபு மகனின் திருமணம் நடந்ததா இல்லையா... (ஸ்ஸ்ஸப்பா முடியல!) இதுதான் பாஸ், படத்தின் திரைக்கதை.

எஃப்.எம்-மில் ஆர்.ஜே-வாக இருக்கும் வாசுவுக்கு 'இதெல்லாம் ஒரு ரோலா?' டைப்பில் ஒரு கேரக்டர். அதை, ஏனோதானோவெனக் கடக்கிறார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வி.ஜே-வாக இருக்கும் நிக்கிஷா பட்டேல், ஆபீஸைத் தவிர சக்தி வாசுவோடு சேர்ந்து எல்லா இடங்களுக்கும் ஓடுகிறார். (சிறப்பு ஓட்டம் பாடல்களில்) ஆர்.ஜே - வி.ஜே ஜோடிக்கு சென்சிட்டிவான ஒரு பிரச்னை கிடைக்கும்போது, விறுவிறுப்பான... சுவாரஸ்யமான திரைக்கதை அமைக்கலாம்தானே? லாஜிக் மீறல்கள், திரைக்கதையின் போக்கு, வலிந்து திணிக்கப்பட்ட பாடல் காட்சிகள்... என ஒவ்வொரு ஏரியாவிலும் அல்வா கிண்ட முயற்சித்திருக்கிறார்கள்.

எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, வளர்ப்பு நாய் 'பிளாக்கி' (பேசும் நாய்), சின்னிஜெயந்த், நாசர், அங்கணா ராய்... என, படத்தில் பல்வேறு முகங்கள் இருந்தாலும் யாருக்குமே வேலையில்லை. '8 தோட்டாக்கள்' படத்தில் நடித்த நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஒரு படி கீழே இறங்கி '7 நாட்கள்' படத்தில் சுமாரான கதாபாத்திரத்தில் இயக்குநர் சொல்லியதற்கிணங்க நடித்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கரின் 'கிலுகிலுப்பை' டைமிங் காமெடியும், சம்பந்தமே இல்லாமல் அவர் சாகும் சென்டிமென்ட் காட்சியும் கொஞ்சம் ஆறுதல். நாசர் யாரைப் பார்க்க வந்தாலும் சுட்டுத்தள்ள முயற்சிப்பார். அது ஏன் என்று அவருக்குத்தான் தெரியும். படத்தின் இன்ட்ரோவில் ஹீரோ சக்தி வாசு 'ஸ்கேட்டிங் போர்டில்' நாயுடன் வாக்கிங் போகும் ஸ்டைல் இருக்கே... விஜய், அஜித்துக்கே சவால்விடுகிறார் (முடியல!)

பிரபுவின் மகன் சம்பந்தப்பட்ட டிவிடி ஒன்று, அப்பார்ட்மென்டில் வசிக்கும் சக்தி வாசுவின் நண்பரிடம் இருக்கிறது. அதைச் சுற்றிதான் ஒட்டுமொத்த கதையும் சுழல்கிறது. சி.டி-யில் இருக்கும் அந்தக் காட்சியை ரைட் பண்ண டைம் எடுக்க, எதிரிக்கு இவர் இருக்கும் இடம் தெரிந்து கொலைசெய்ய வந்தவர்களிடமிருந்து தப்பித்து, ஏழாவது மாடிக்கு ஓடிப்போப் அங்கிருந்து கீழே விழுந்து கான்கிரிட் மெஷினுக்குள் தலையைக் கொடுத்து பரிதாபமாக உயிரிழக்கிறார் சக்தியின் நண்பர். அந்தக் காட்சியை வாட்ஸ்அப்பிலேயே அனுப்பிருக்கலாம், மொத்தப் படமும் அரை மணி நேரத்தில் முடிந்திருக்கும். ஆனால், சி.டி-யை பொட்டலம் கட்டிய பார்சலாக, ஆளாளுக்குக் தூக்கிக்கொண்டு திரிகிறார்கள். முக்கியமான விஷயத்தைக் கடிதத்தில் எழுதிவைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதை அக்கா தேவதர்ஷினியிடம் போன் போட்டுப் படிக்கச் சொன்னாலே வேலை முடிந்திருக்கும். சக்தியோ, 'ஆட்டோவைப் பிடித்து அந்த லெட்டரை வேகமா கொண்டுவாக்கா' என அர்த்த ராத்திரியில் அலையவிடுகிறார். 'அட... பிரித்துப் படிப்பா' என்று ஆடியன்ஸ் கதற, பிம்பிளிக்கா பிளாக்கி என்றபடி ஓடிவிடுகிறார்.  

நல்லவரா, கெட்டவரா எனக் கணிக்க முடியாத கணேஷ் வெங்கட்ராமின் கேரக்டர் சூப்பர். புறாவில் கேமராவை வைத்து மந்திரியை மிரட்டுகிறார். ஆனால், எதற்காக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்தார் என்பது தெரியவில்லை. அப்பட்டமாகத் தெரிந்த நாசரின் ஒட்டுதாடி, பெரும்பாலான இடங்களில் போரடிக்கச் செய்த எம்.எஸ்.பாஸ்கரின் காமெடிகள், ஸ்லோமோஷனில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளில் குலுங்கும் சக்தியின் கண்ணம், அவர் சீரியஸாக நடித்திருந்தாலும் பார்பதற்கே செம காமெடியாக இருந்தது, ஓடிக்கொண்டே இருக்கும் ஹீரோயின், முடியல பாஸ்!

முடிவில் பிரேக்கிங் நியூஸில் வரும் சக்தி தப்பித்தாரா, பிரபுவுக்காக கணேஷ் வெங்கட்ராம் செய்யும் தியாகம், இது எல்லாவற்றையும்விட எந்தக் காரணத்துக்காக பிரபு தன் மகனைச் சுட்டுக்கொல்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

எண்ட் கார்டில் சொன்னதுபோல், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் உலகம் தாங்காது பாஸ்! 7 நாள்களுக்கு பதில், ஏழாயிரம் நாள்கள் எடுத்திருக்கலாம், படமாவது நல்லாயிருந்திருக்கும்.