Published:Updated:

தோன்றியது சில நொடிகள்தான்... ஆனால், சினிமா ஹிஸ்ட்ரியில் நின்றவர்கள்!

நமது நிருபர்
தோன்றியது  சில நொடிகள்தான்... ஆனால், சினிமா ஹிஸ்ட்ரியில் நின்றவர்கள்!
தோன்றியது சில நொடிகள்தான்... ஆனால், சினிமா ஹிஸ்ட்ரியில் நின்றவர்கள்!

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் அனைவரையும் எளிதில் கடந்துபோக முடிவதில்லை. சிலர் சட்டென ஆச்சர்யப்படுத்துவர்; சிலர் நெகிழவைப்பர்; சிலர் கை பிடித்து அழைத்துச் செல்வர். இன்னும் சிலர், மறக்க முடியாத நினைவுகளைத் தந்து காணாமல் போய்விடுவர். 

அப்படி நம்மை ஆச்சர்யப்படுத்திய தமிழ் சினிமாவின் கதை மாந்தர்களின் மெமரீஸ்...

`வீடு' - மங்கம்மா

பாலுமகேந்திரா இயக்கத்தில் வந்த க்ளாசிக் தமிழ் சினிமா `வீடு' . ஒரு பெண், சொந்தமாக ஒரு வீட்டைக் கட்ட எதிர்கொள்ளும் இடர்கள்தான் கதைக்களம்.

அர்ச்சனாவின் கதாபாத்திரம் சுதா. நிறைய படங்களில் குணச்சித்திர நடிகையாகத் தலைகாட்டியிருக்கும் `பசி' சத்யாதான் இந்த `மங்கம்மா' கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வீடு கட்டும்போது திருட்டுத்தனம் செய்யும் கான்ட்ராக்டரை சுதா கேள்வி கேட்கவும், அந்த கான்ட்ராக்டர் கதாபாத்திரம் சுதாவை வரம்பு மீறி பேசும். அதைக் கேட்ட மாத்திரத்தில் சித்தாள் வேலை செய்யும் மங்கா ரெளத்திரத்துடன் பேசும் வசனம், ஒரு பெண்ணிடம் நியாயமான வாதங்களை வைக்க முடியாதபோது, சட்டென அவளின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும்; ஆதிக்கக் கூட்டத்துக்கு எதிராக ஒலிக்கும். கான்ட்ராக்டர் இல்லாமல் வீடு கட்ட சுதாவுக்கு உறுதி அளிக்கும் மங்கா, நம்மால் மறக்க முடியாத பாத்திரப்படைப்பு.

`அன்பே சிவம்' - சிஸ்டர்

தமிழ் சினிமாவின் ஆச்சர்யங்களுள் ஒன்று `அன்பே சிவம்'.

விபத்தில் அடிபட்டுக் கிடக்கும் நல்லசிவத்துக்குக் கூடவே இருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார் நர்ஸ். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நல்லசிவத்தைச் சந்திக்கவரும் படையாட்சி `செத்துப் போ' எனக் கருணையின்றி சொல்லிவிட்டுச் செல்ல... இந்த சிஸ்டர், அன்பைக் கொட்டி அரவணைத்துக்கொள்வார்; கீறல்கள் உள்ள முகத்தை அழகாக அள்ளிக்கொள்வார்.

நீண்ட நாள்களுக்குப் பிறகு நல்லசிவம், அவரைச் சந்திக்கும் இடமும் ஒரு ரயில் விபத்தாக இருக்கும். அடிபட்டிருப்பவர்களுக்கு உதவிக்கொண்டிருக்கும் அந்த சிஸ்டர் ,  `நல்லா..!'  என்று அழைத்தவுடன் நல்லசிவம் தாயைக் கண்ட பிள்ளைபோல் அணைத்துக்கொள்ள ஓடும் காட்சியை  எப்படி மறக்க முடியும் சொல்லுங்கள்!

`நந்தலாலா' - டிராக்டர் ஓட்டும் பள்ளி மாணவி

சிறுவனும் மனநலமில்லாத மாற்றுத்திறனாளியும் தத்தம் அம்மாவைத் தேடி மேற்கொள்ளும் பயணத்தின் அடிப்படையில் அமைந்த கதை என்பதால், ஏராளமான கேரக்டர்கள் சில நிமிடம் வந்து செல்லும். அப்படி வரும் கேரக்டர்களில் சைக்கிள் ஓட்டிவரும் பள்ளி மாணவி முக்கியமானவள். 

சைக்கிளில் வந்து கீழே விழுந்த அவளுக்கு மிஷ்கினும் சிறுவனும் உதவிசெய்ய, அவள் அவர்களுடன் சிறிது நேரம் இருந்துவிட்டுத் திரும்ப மனமில்லாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டு சைக்கிளை வேகமாக ஓட்டிக்கொண்டு செல்வாள்.

சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் அவள் ஒரு டிராக்டரை எடுத்து அவர்களைக் கொண்டு சென்றுவிடுவதற்காக வருவாள். எவ்வளவு நேசமிருந்தால், தைரியமாக ஒரு டிராக்டரையே ஓட்டிக்கொண்டு அவர்களுக்கு உதவ முற்படுவாள்!

`நந்தலாலா'வில் மட்டுமல்ல, நம் மனதிலும் அந்தப் பெண்ணுக்கு மிகப்பெரிய இடம் உண்டு.

`புதுப்பேட்டை'  - அம்மா

க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் இந்த கேரக்டருக்கு, பெயரே இல்லை. `அம்மா' எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும். சாகப்போகிறோம் எனத் தெரியவே, கொக்கி குமாரு தன் குழந்தையைக் குப்பைத்தொட்டியில் பணத்துடன் வைத்துவிட்டுச் செல்லும்போது, முன்வரும் ஒரு பெண்மணியை அழைத்து குழந்தையைக் காட்டுவார். அது அவனுடைய குழந்தை என்பதை அறியாத அவள், குழந்தையைத் தானே வளர்ப்பதாகத்  தூக்கிக்கொண்டு போவாள். `பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே' என்றதும் `என் புள்ளையோடு சேத்து இதையும் வளர்ப்பேன். அதுக்கு என்னதுக்குக் காசு?' என்று ஆரம்பிக்கும் அந்த வசனம், பெரும் மனிதநேயத்தைப் பறைசாற்றும். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தவரும் `பசி' சத்யாதான்.

`அரிமா நம்பி' - எஸ்.ஐ ஆறுமுகம்

விக்ரம்பிரபு நடித்து 2014-ம் ஆண்டில் வெளியான திரைப்படம் `அரிமாநம்பி'. தமிழின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான எம்.எஸ்.பாஸ்கர் நடித்த ஆக்‌ஷன் கதாபாத்திரம். தன் காதலி அனாமிகாவைக் கடத்திவிட்டதாக போலீஸிடம் புகார் கொடுக்க வரும் ஹீரோவைச் சுற்றி எல்லாமே அநியாயங்களாக நிகழ்ந்துகொண்டிருக்க, யாருமே எதிர்பார்க்காத தருணத்தில் ஆபத்பாந்தவனாக அட்டகாச என்ட்ரி கொடுத்திருப்பார் எம்.எஸ்.பாஸ்கர் . வலுவான போலீஸ் கதாபாத்திரமான ஆறுமுகம், சில நேரங்களே திரையில் தோன்றினாலும் ஆச்சர்யமான கேரக்டர் ஸ்கெட்ச்.

ஆரண்ய காண்டம், மூடர்கூடம் இப்படியான படங்களில் ஏராளமான கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும். அனைத்துமே மனதில் நிற்கும். தேவர் மகன் வடிவேலு ,ஜிகர்தண்டா தாத்தா, இறைவி மலர் இப்படி ஏராளமான கேரக்டர்களை நம்மால் மறக்கவே முடியாது. அப்படி உங்கள் மனதிற்கு நெருக்கமானவற்றை பகிர்ந்து கொள்ளுங்களேன்!

- ஜீ.கார்த்திகேயன் 

(மாணவப் பத்திரிகையாளர்)