Published:Updated:

``திறமைசாலி நடிகர்களுக்கு மரியாதையே இல்லை!'' - வருந்தும் சென்னை தொலைக்காட்சியின் முதல் நடிகர்

BASUMANI K
``திறமைசாலி நடிகர்களுக்கு மரியாதையே இல்லை!'' - வருந்தும் சென்னை தொலைக்காட்சியின் முதல் நடிகர்
``திறமைசாலி நடிகர்களுக்கு மரியாதையே இல்லை!'' - வருந்தும் சென்னை தொலைக்காட்சியின் முதல் நடிகர்

ஞாயிறு சினிமா, வெள்ளி ஒளியும் ஒலியும் தொடங்கி இரவு கடைசி நிகழ்ச்சியாக வரும் ‘எதிரொலி’ வரை பார்த்துவிட்டுதான் தூங்கச் செல்வோம். அது, 24 மணி நேர தனியார் தொலைக்காட்சிகள் வராத தூர்தர்ஷன் காலம். ஒரு மணி நேர நாடகம் அப்பட்டமாக நாடகமாகவே இருந்தாலும் ஆர்வமுடன் பார்ப்போம். ஒரே வீட்டில் வெவ்வேறு அறைகளில் எடுக்கப்படும் அந்த ஒரு மணி நேர நாடகத்தை எப்படி அவ்வளவு ஆர்வமுடன் காத்துக்கிடந்து பார்த்தோம் என்று இப்போது நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கிறது. அந்த ஒரு மணி நேர நாடகங்களில் நடித்த பல முகங்களை இன்றும் டிவி மெகா சீரியல்களிலும் சினிமாக்களிலும் பார்க்கலாம். இவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர் ‘அச்சமில்லை அச்சமில்லை’ கோபி. கணீர் குரலும் திருத்தமான முகமுமாக வசீகரிப்பவர்.

இன்று அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டபோது... 

“நான் இப்போ ஏர்போர்ட்ல இருக்கேன். என் மகள் ஃபாரின்ல இருந்து வர்றா. அவளை வீட்ல விட்டுட்டு, என் ஃபேக்டரியில பணப்பட்டுவாடா பண்ணிட்டு, விகடன் சீரியலுக்காக டப்பிங் பேச நம்ம ஆஃபீஸுக்கு வருவேன். அங்கே பேசலாமா?'' - என கர்ஜிக்கும் குரலில் வேண்டுகோள்வைத்த `அச்சமில்லை அச்சமில்லை' கோபியை, அன்று மாலை சந்தித்தேன்...

``படங்கள்லதான் உங்களைப் பார்க்க முடியலையேன்னு  போன் போட்டா... படு பிஸியா இருக்கீங்கபோல. எப்படி இருக்கீங்க, என்ன பண்றீங்க?''

`` `மாங்கல்யம்', `தீர்க்கசுமங்கலி', `எங்கே பிராமணன்?'னு பல சீரியல்கள்ல நடிக்கிறதோடு, இசைக் கச்சேரி, மேடை நாடகம், திரைப்படங்களுக்காக டப்பிங், காற்றாலைத் தொழிற்சாலைனு கொஞ்சம் பிஸிதான்'' என்று சொன்னபோது, என்ன ஒரு தன்னடக்கம்!

``உங்களைப்  பற்றிச் சொல்லுங்க...''

``பெத்தவங்க எனக்கு வெச்ச பெயர் கோபாலகிருஷ்ணன். எல்லாரும் கூப்பிடுறது `கோபி'. தஞ்சை மாவட்டம்தான் என் பூர்வீகம். சிக்கில் நீலா குஞ்சுமணியின் பரம்பரையில வந்தவன் நான். கும்பகோணம் நடராஜ ஐயர்கிட்ட முறையா கர்னாடக சங்கீதம் படிச்சேன். ஜேசுதாஸ், பாலசுப்பிரமணியம், சங்கர் கணேஷ்னு திரைப் பிரபலங்களோட இசைக்குழுவுல பல பாடல்கள் பாடியிருக்கேன். சுமார் 35 வருஷங்களா `கோபி மெலடீஸ்'ங்கிற பெயர்ல இசைக் கச்சேரி நடத்திக்கிட்டிருக்கேன். பல திரைப்படங்கள் நடிச்சேன். இப்போ, சீரியல் டப்பிங், காற்றாலைத் தொழிற்சாலைன்னு வாழ்க்கை ஓடிகிட்டிருக்கு.''

``திரைத் துறைக்கு எப்படி வந்தீங்க?''

``ஏ.ஜி.எஸ் ஆபீஸ்ல வேலைபார்த்துக்கிட்டிருந்தேன். சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஆபீஸர்ஸ் எல்லாருமே கலை நிகழ்ச்சிகள்ல கலந்துக்கணும். நானும் நாடகம், பாட்டுன்னு பல நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டேன். புரட்சித் தலைவர்கிட்ட எல்லாம் அவார்டு வாங்கியிருக்கேன். ஒருமுறை பாலசந்தர் சார் கெஸ்டா வந்திருந்தார். நாங்க நடிச்ச நாடகத்தைப் பார்த்துட்டு, `நீ ஏ.ஜி.எஸ். ஆபீஸில என்ன பண்றே? பேசாம சினிமாவுக்கு வரவேண்டியதுதானே'னு சொன்னார். `நீங்க கூப்பிடுங்க சார் வர்றேன்'ன்னு விளையாட்டா சொன்னேன்.  அவர் என்ன நினைச்சாரோ தெரியலை, `பொய்கால் குதிரை' படத்துல ரவீந்தருக்கு டப்பிங் பேச என்னைக் கூப்பிட்டார். அதுக்கு அப்புறம் `தில்லுமுல்லு', `கல்யாண அகதிகள்', `அச்சமில்லை அச்சமில்லை', `வேலைக்காரன்'னு அவரோடு நிறைய படங்கள் பண்ணினேன். இது இல்லாம, `பணக்காரன்', `ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்', `இவர்கள் இந்தியர்கள்'னு 75 படங்களுக்கு மேல் நடிச்சுட்டேன்.

``எந்தெந்த ஹீரோவுக்கெல்லாம் டப்பிங் பேசியிருக்கீங்க?''

`` `புதுப்புது அர்த்தங்கள்' ரகுமான், சரத்குமார், நாகார்ஜுனா, சுமன், பானுசந்தர், சுரேஷ் கோபி, வெங்கடேஷ்னு ஏகப்பட்டப்பேருக்கு பேசியிருக்கேன்/பேசிக்கிட்டிருக்கேன்.''

``டிவி  சீரியல்களால்தான் குடும்ப உறவுகள் சிதையுதுன்னு சொல்றாங்களே...''

``அப்படி பொத்தாம்பொதுவா சொல்ல முடியாது. அதுவும் ஒரு காரணியா இருக்கலாம். அவ்வளவுதான்.''

``இன்றைய திரைத் துறை எப்படி இருக்கு?''

``இன்னிக்கு தொழில்நுட்பம் பெருசா வளர்ந்திருக்கு.  அப்பெல்லாம் டப்பிங் பேசும்போது லூப் சிஸ்டம்தான். இப்போ, `சும்மா நீங்க பேசுங்க. நாங்க சிங்க் பண்ணிக்கிறோம்'கிறாங்க. பிரமிப்பா இருக்கு. புதுப்புது ஆக்டர்ஸ், டைரக்டர்ஸ்ன்னு புதிய, வித்தியாசமான சிந்தனைகளோடு வர்றாங்க. அதே சமயம், சீனியர் சிட்டிசன்ஸுக்கான மதிப்பும் மரியாதையும் குறைஞ்சிருக்குன்னும் சொல்லணும். அனுபவமிக்க நடிகர்கள் இன்னிக்கு மதிக்கப்படுறதே இல்லை. நேற்று நடிக்க வந்தவங்க எல்லாம் அனுபவப்பட்ட நடிகர்கள் முன்னாடி கால் மேல் கால் போட்டுக்கிட்டுப் பேசுறது,  கிண்டல் கேலியோடு குறைந்த சம்பளம் கொடுக்கிறது... இதைல்லாம் தவிர்க்கப்படணும்.  அட்லீஸ்ட், வயசுக்காவது மரியாதை கொடுக்கணும்."  

``திரைத் துறையில் சுவாரஸ்யமான அனுபவங்கள் ஏதேனும்...''

`` `படிக்காத பண்ணையார்'னு ஒரு படம். சிவாஜி சார்கூட நடிக்கிற வாய்ப்பு. நிறைய கத்துக்கொடுத்தார். முக பாவத்தை எங்கே எப்படியெல்லாம் மாத்தணும்னு அவரைப் பார்த்துத்தான் கத்துக்கிட்டேன்.  'சோகக் காட்சியில் நாம அழும்போது, அதைப் பார்க்கிறவன் முகம் சுளிக்கக் கூடாது...'னு சொல்வார்.

ஒருநாள், `நீ ரொம்ப நல்லா தமிழ் பேசுறியேடா. உன் தமிழ் உச்சரிப்பு சுத்தமா இருக்கே. இப்படியெல்லாம் தமிழ் பேசினா, நீ முன்னுக்கு வரமாட்டியேடா!'னு சொல்லி கிண்டலடிச்சார். அதையெல்லாம் என் வாழ்நாள்ல கிடைச்ச பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். என் டைரியில் அவர் பெயரை `சிவாஜி கணேசன்'னு எழுதாம, `படிக்காத பண்ணையார்'னுதான் எழுதிவெச்சிருக்கேன். 

`பொய்க்கால் குதிரை' படத்துல நடிகர் ரவீந்தருக்காக டப்பிங் பேசினப்போ  பாலசந்தர் சார், `டேய் எப்படிடா  இப்படிப் பேசுறே... உன் வார்த்தை உச்சரிப்பு, குரல் ஏற்ற இறக்கம் எல்லாம் ரொம்பப் பிரமாதம்டா. இதெல்லா எப்படிடா கேட்ச் பண்றே?னு கேட்டார். 'அவர் எந்த ரிதம்ல பேசியிருக்காரு முதல் ரெண்டு லூப்ல பார்த்தேன். அதுக்குப் பிறகு அவர் இந்தத் தாளகட்டுலதான் பேசியிருக்காருங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டுப் பேசிட்டேன். அவ்வளவுதான் சார்'னு சாதாரணமா சொன்னேன். `என்னது தாளகட்டா... என்னடா சொல்ற?'ன்னார். அப்பதான் நான் கர்னாடக இசை கத்துக்கிட்டதைச் சொன்னேன். `பிரமாதம்டா... பிரமாதம்டா... இதை அப்படியே மெயின்டெயின் பண்ணுடா'னு என்னைப் பாராட்டியது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. இப்படி நிறைய சொல்லலாம். 

``குடும்பம் பற்றி...''

``மனைவி ஷோபனா, எம்.பி.ஏ படிச்சிருக்காங்க. என் வளர்ச்சியில் அவங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கு. டென்மார்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்துனு பல  வெளிநாடுகளின் காற்றாலை மின்சாரத் தயாரிப்புக்குத் தேவையான 62 விதமான உதிரி பாகங்களைத் தயாரிக்கிற என்னுடைய `ஶ்ரீ கிருஷ்ணா ஒர்க்ஸ்'கிற கம்பெனியின் ஹெச்.ஆர் அவங்கதான். பணம் தொடர்பான வேலைகளை நான் பார்த்துப்பேன். எனக்கு ரெண்டு மகள். ரெண்டு பேருமே கம்ப்யூட்டர் இன்ஜினீயர். கல்யாணம் முடிஞ்சு ஒருத்தர் ஸ்பெயின்லயும் இன்னொருத்தர் துபாயிலயும் இருக்காங்க. இப்போ இளமையான வாழ்க்கையை இனிக்க இனிக்க வாழ்ந்துகிட்டிருக்கேன்'' என்றார் கோபி.

1975-ம் ஆண்டு சென்னை தொலைக்காட்சி தொடங்கி நிலைய நடிகராக தேர்வான முதல் நடிகர் இவர்தான் என்பது சிறப்புத் தகவல்.