Published:Updated:

‘அனகோண்டா படத்தோட கதை நம்மாளோடதுதான்..’ - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 4

‘அனகோண்டா படத்தோட கதை நம்மாளோடதுதான்..’ - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 4
‘அனகோண்டா படத்தோட கதை நம்மாளோடதுதான்..’ - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 4

கோடம்பாக்கத்துக்கு ஸ்ட்ரைட்டாக வரமுடியாமல் தமிழகத்தின் தெற்குப் பக்கம் இருப்பவர்களின் வசதி (?!) கருதி, சினிமாவின் தலைநகர் கோடம்பாக்கத்தின் நேரடிக் கிளை அலுவலகங்கள் ஆங்காங்கே 'வேறு எங்கும் கிளைகள் இல்லை' எனும் சப் டைட்டிலோடு செயல்பட்டு வருகின்றன. 'புது இயக்குநர் இயக்கவிருக்கும் புதுப்படத்தில் நடிக்க புதுமுகங்கள் தேவை... சினிமாவில் சாதிக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்க...' என இப்போதும் விளம்பரங்கள் வந்துகொண்டுதாம் இருக்கின்றன. புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் பக்கம், மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டுக்குப் பின்புறம், திருநெல்வேலி ஜங்ஷன் மீனாட்சிபுரம் பக்கம் எனச் சில இடங்களில் இன்றும் இதேபோல புதுமுகங்களைத் தேடுகிற நோட்டீஸ்கள் கண்களில் படும். பள்ளிப்படிப்பு முடிகிற கையோடு மேக்ஸி சைஸ் புகைப்படம் ஒன்றை எடுத்துவைத்துக்கொண்டு சினிமா வாய்ப்புக்காகக் காத்திருக்கிறவர்கள்தான் இவர்களுக்குத் தீனி. நூறு முதல் ஆயிரம் வரை அட்வான்ஸ் வாங்கி வைத்துக்கொண்டு அடுத்த பட டைட்டிலோடு வேறு நோட்டீஸ் அடிக்கக் கிளம்பி விடுவார்கள்.  

இப்படித்தான் புதுக்கோட்டையில் வசிக்கும், ஒரு படம் கூட இயக்காமல் 'இயக்குநர்' எனச் சொல்லிக்கொள்ளும் ஒருவர்,  'உதவி இயக்குநர், நடிகர்கள் தேவை' என நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டிருந்தார். சினிமாவில் உதவி இயக்குநராவதற்கு முயன்றுகொண்டிருக்கும் நமது நண்பர், சென்னைக்குப் போய்த் திரும்பி வருவதற்குப் பதிலாக பக்கத்திலேயே இருக்கிற புதுக்கோட்டைக்குப் போயிட்டு வந்துடலாமே என யோசித்து இந்தமுறை புதுக்கோட்டைக்குப் போயிருக்கிறார்.

அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த முகவரியைத் தேடினால் அது பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் இருக்கும் ஒரு ஸ்வீட் ஸ்டால் அட்ரஸ். அந்தக் கடையை ஒட்டி, ஒரு ஆள் மட்டுமே நுழைகிற மாதிரிக் குறுகலான மாடிப்படி இருந்திருக்கிறது. அதற்குப் பக்கத்தில் 'இயக்குநர் சோமதேவாவைப் பார்க்கச் செல்லும் வழி' என ப்ரின்ட் செய்த நோட்டீஸ்களை ஒட்டி அம்புக்குறி போடப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்த தளத்திலும் இப்படியே மேல்நோக்கி ஒரு அம்புக்குறி. இப்படியாக மூன்றாவது ஃப்ளோரில் இருந்தது மொட்டைமாடி. மொட்டைமாடிக்கு வருவதற்குள் ஒவ்வொரு வளைவுக்கும் ஒரு நோட்டீஸ் ஒட்டி, சினிமா உலகில் தன் இருப்பைக் குறியீடாகப் பதிவு செய்திருக்கிறார் அந்த இயக்குநர்.

கட்டுப்பாடற்ற சிந்தனை விரும்பியோ என்னவோ மேற்கூரை இல்லாத மொட்டைமாடியின் ஒரு ஓரத்தில் இருந்த சின்ன அறையை அலுவலகமாக்கி இருக்கிறார். அவரைத் தேடிப் போனால், அறைக்கு வெளியே லுங்கியோடு சட்டையில்லாத மனிதர் ஒருவர் இருந்திருக்கிறார். அவர்தான் இயக்குநரின் உதவியாளராம். போனதும், 'தம்பி... டைரக்டர் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு. உக்காருங்க...'எனச் சொல்லி ரெண்டு சேர்களை எடுத்துப் போட்டவர் கொஞ்சநேரத்தில், தலையைச் சொறிந்துகொண்டே, 'சில்லறை இல்ல. ரெண்டு ரூவா கொடுங்க... பான்பராக் வாங்கணும்' எனக் கேட்டிருக்கிறார். அப்போதே உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடிய நம் நண்பருக்கு லேசாக ஜெர்க் ஆகியிருக்கிறது. ‘சரி போய் தொலையுது...’ எனக் காசு கொடுத்த சிறிது நேரத்தில் ஒரு படம் கூட எடுக்காத அந்தப் புதுமுக டைரக்டர் வந்துவிட்டார்.

தினத்தந்தியில் வரும் 'ஜுன் 1 ல் வருகிறான் சிலந்தி...' போஸ்டரில் ஆரம்பித்து, 'ஆரவாரமிக்க ஆறாவது வாரம்...' போஸ்டர் வரைக்கும் பல படங்களின் போஸ்டர்களை அறையின் சுவர் முழுக்க ஒட்டியிருந்தார். 'ஆழ்வார்', 'அகரம்' எனச் சுவர் முழுவதும் நீண்ட அந்தப் போஸ்டர்கள் எல்லாம் அவர் இன்ஸ்பயர் ஆன படங்களின் தொகுப்பு என அவரே சொல்லியிருக்கிறார். பெயின்ட் செலவுக்குக் காசில்லாமல் சுவரை மறைக்கத்தான் ஒட்டியிருக்கிறார்கள் என்பது எழுதிப்போட்டதைப் போல அப்பட்டமாகப் புரிந்தாலும் அவர் சொல்வதற்கெல்லாம் 'ஆமா... ஆமா...' எனத் தலையாட்டும் துர்பாக்கிய நிலை வேறு. 

'யாருக்கும் புரியாம படம் எடுக்கிற கிறிஸ்டோபர் நோலன் கூட ஸ்கிரிப்ட் புக்கை யாருக்கும் காட்டமாட்டார். நான் தரேன்னா என்ன அர்த்தம்... உங்க முகம் அப்படி இருக்குது தம்பி. நம்மக்கிட்ட ரெண்டு படத்துக்கு உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டுப் போனீங்கனா அடுத்து பெரிய டைரக்டரா வருவீங்க..' என மஞ்சத்தண்ணியை அள்ளி மூஞ்சிமேலேயே தெளித்திருக்கிறார். 'ஓ... இதுவரைக்கும் எத்தனை பேரு அப்படி ஆகியிருக்காங்க...' எனக் கேட்க நினைத்து, 'பொறுமையா இருடா சூனாபானா...' எனத் தனக்குத்தானே சமாதானம் செய்துள்ளார் நமது நண்பர்.

ஸ்கிரிப்ட் புத்தகம், டெஸ்ட் சூட் ஆல்பம் என அத்தனையையும் அள்ளிக் கையில் கொடுத்திருக்கிறார் டைரக்டர். படத்தின் டைட்டில் 'விருது 2008'. அட்டாக் ஸ்டைல் தலையோடு பையனும், பேபி கட் தலையோடு ஒரு பெண்ணும் காட்டுவாசி கோலத்தில் மரங்களுக்கிடையே இருக்கும் போட்டோ அது. 'காட்டுல இருக்கிற ஒரு செடி மனுசப்பயலுக ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கிற தன்மைகொண்டது. அந்தக் காட்டுக்கு வரும் ஆறு இளம் ஜோடிகள், அந்தச் செடிகளுக்கு மத்தியில் மாட்டிக்கிட்டு முழிக்கிறதுதான் கதை. இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ் உலக சினிமாவுக்கே புதுசு' என வார்த்தைக்கு வார்த்தை கொளுத்திப் போட்டிருக்கிறார். புதிதாகச் சிக்குகிற யாரையும் எளிதில் தன் வலையில் வீழ்த்துகிற மாதிரியான பேச்சுவன்மை கொண்டவர் அவர். 'டைரக்டர் ஆகுறதுக்குப் பதிலா சேல்ஸ் ரெப்ரசென்டேட்டிவ் வேலையில் சேர்ந்திருந்தா எங்கேயோ போயிருப்பீங்க சார்...' என மைண்ட்வாய்ஸிலும், 'அடேங்கப்பா...' என வெளியிலுமாக ஒரே நேரத்தில் ரெண்டு டயலாக் பேசியிருக்கிறார் நம் உதவி இயக்குநர்.

'நான் ஏற்கெனவே எழுதி வெச்சிருந்த கதையை 'அனகோண்டா'னு பேரு வெச்சு ஹாலிவுட்ல எடுத்துட்டாய்ங்க... இந்தக் கதையை யார்கிட்டயும் சொல்லிறவேணாம் தம்பி... நமக்கு புரொடியூசர் கிடைக்குறதுக்குள்ள அவிங்க படத்தையே ரிலீஸ் பண்ணிடுறாய்ங்க...' எனப் பாவமாகக் கேட்டுக்கொண்டாராம். 'இதை எப்படி சார் என் வாயால...' என அழாத குறையாகப் புலம்பிவிட்டுக் கிளம்பும்போதுதான் முக்கியக் கட்டத்துக்கு வந்திருக்கிறார் சோமதேவா. போகும்போது ஐநூறு ரூபாய் டொனேஷன் கொடுத்துட்டு போங்க தம்பி... பட வேலை ஆரம்பிக்கும்போது சொல்லி அனுப்புறோம் எனச் சொல்ல, 'இதென்னய்யா கிரிக்கெட் டோர்னமென்ட் நடத்தப்போற மாதிரி ஆரம்பிச்சிட்டீங்க... இப்போ காசு எடுத்துட்டு வரலை. அடுத்தவாரம் வர்றோம்' எனச் சொல்லி ஒருவழியாக அவர்களிடம் எஸ்கேப் ஆகிவிட்டார்களாம். 

அதற்குப் பிறகு 2011-ல் ஒருமுறை 'புதுக்கோட்டையில் சினிமா வாய்ப்பு... புதுமுகங்கள் தேவை' விளம்பரம் அவரது பார்வையில் சிக்கியிருக்கிறது. உற்றுப் பார்த்தால் அதே இயக்குநர், அதே முகவரி. படத்தின் பெயர் 'விருது 2011'. அவர் இந்த உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடிய கதையை என்னிடம் சொன்ன பிறகு, சில மாதங்களுக்கு முன்பு ஒருநாள் தினசரியைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது, யதேச்சையாக இதேபோன்ற ஒரு விளம்பரம் கண்ணில்பட்டது. அதே மாதிரி அல்ல... அதே ஆள்தான். இந்தமுறை படத்தின் டைட்டில் 'விருது 2016'

அடங்கப்பா..! வருசத்துக்கு வருசம் டைட்டிலை மட்டும் மாத்தி எத்தனையோ பேருக்குப் படத்தை ஓட்டியிருக்காப்ள... 

- இன்னும் ஓடலாம்... 

அடுத்த கட்டுரைக்கு