Published:Updated:

அறிமுக இயக்குனராக அசத்திய கொங்கனா சென் ஷர்மா! #ADeathInTheGunj படம் எப்படி?

கார்த்தி
அறிமுக இயக்குனராக  அசத்திய கொங்கனா சென் ஷர்மா! #ADeathInTheGunj  படம் எப்படி?
அறிமுக இயக்குனராக அசத்திய கொங்கனா சென் ஷர்மா! #ADeathInTheGunj படம் எப்படி?

அந்த உணர்வில் நாம்கூட சில நேரம் இருந்திருக்கலாம். நம்மை சுற்றி நிறைய பேர் இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு நாம் இருப்பது, இல்லாமல் போவது இரண்டுமே ஒன்றுதான் என்ற உணர்வு. அப்படி ஒரு மனநிலை வந்தால் அது எப்படி இருக்கும்? அவன் என்னவெல்லாம் செய்வான்?. சென்ற வருடம் வெளியான 'டியர் ஜிந்தகி' படம் மென்டல் ஹெல்த் ரொம்பவும் முக்கியமானது என்பதைப் பேசியிருந்த காரணத்துக்காகவே முக்கிய சினிமா எனக் கொண்டாடப்பட்டது. அதே 'மென்டல் ஹெல்த்' சார்ந்த விஷயம்தான் 'எ டெத் இன் த கன்ஜ்' படமும். ஆனால், தன் இருப்பு யாருக்கும் முக்கியமில்லை எனத் தெரிந்துகொள்ளும் ஒருவன் என்ன செய்கிறான்? என்ற விதத்தில் படமாக்கியிருக்கிறார்  அறிமுக இயக்குனர் கொன்கனா சென் ஷர்மா. 

பீகாரில் இருக்கும் மக்கல்ஸ்கீகஞ் என்ற காட்டுக்குள் இருக்கும் வீட்டிற்கு, ஒரு குழு செல்கிறது. புது வருடத்தை அங்கு கொண்டாடுவது அவர்கள் திட்டம். ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடம், ஒரு கணவன் மனைவி, ஒரு சிறுமி, கணவனின் நண்பர்கள், ஒரு பெண், தந்தையை சமீபத்தில் இழந்த ஒரு இளைஞன், புத்தாண்டு கொண்டாட்டம், ஒரு கொலை இவைதான் படம். ஆனால், படம் நமக்கு கடத்தும் உணர்வு வார்த்தை வழியாக உணர்த்த முடியாது. 1980களில் கதை நடக்கிறது. ஒரு பெர்ஃபெக்ட் த்ரில்லருக்கான மேடையை அமைத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். நடிகை கொன்கனா சென் ஷர்மாவுக்கு இயக்குநராக இது சிறப்பான துவக்கம்.

நந்து, போனி, அவர்களின் குழந்தை டானி, நந்துவின் உறவினர் ஷூட்டூ, போனியின் தோழி மிமி என ஒரு குடும்பம் புத்தாண்டை இனிமையாக கழிக்க மக்கல்ஸ்கீகஞ் வருகின்றது. அங்கு நந்துவின் தோழர்கள் விக்ரமையும் ப்ரையனையும் சந்திக்கிறார்கள். படத்தின் டைட்டில், டிரெய்லருக்கு ஏற்ப ஒரு கொலை நடக்க இருக்கிறது. அதற்குரிய தருணங்களை அட்டகாசமாய் பில்ட் செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் கொங்கனா சென். மிமி (கல்கி கொச்லின்), நந்து (குல்ஷன் தேவைய்யா), போனி (திலோத்தமா ஷோமி) என எல்லோருமே டாப் கிளாஸ். 

அதிலும் குறிப்பாக சூட்டுவாக வரும் விக்ராந்த் மாசேவின் நடிப்பில் அத்தனை அழுத்தம், அத்தனை உண்மை. பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்காப்பட்டுள்ள ஒரு உறவினரை அவர்களது உறவினர்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என டீட்டெய்லிங் செய்து இருக்கிறார் இயக்குனர். தன் தந்தையை இழந்துவிட்டு ஒருவித பயத்துடனே தன் நாட்களை கழிப்பதாகட்டும்;  பெரியவர்கள் எல்லோரும் மிகவும் மெச்சூர்டாக இருக்க தன் வயதுக்கு சற்றும் பொருந்தாத சிறுமி டானியுடன் விளையாடுவதாகட்டும்; மிமியின் சந்தர்ப்பாவத காமத்தை காதலென நினைத்து இரையாவதாகட்டும்; விக்ரம் செய்யும் சில அதிரடி மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சுவதாகட்டும்; தான் இல்லாதபோது தன்னை யாரும் பெரிதாக தேடவில்லை எனத் தெரிந்துகொள்ளும்போது பார்க்கும் பார்வை என, எல்லாமே செம்ம பெர்ஃபாமன்ஸ். மொத்தமாக ஷூட்டுவின் கதபாத்திர வடிவமைப்பில் அவ்வளவு அழகு சேர்த்திருக்கிறார் இயக்குநர் கொன்கனா.

படத்தின் முதல் காட்சியிலே, நந்துவும் , ப்ரைனும் இந்தப் பிணத்தை எப்படி கொல்கத்தாவரை கொண்டு செல்வது என பேசுவார்கள் (டிரெய்லரிலேயே இந்தக் காட்சி வருவதால், ஸ்பாய்லர் எனத் திட்ட வேண்டாம்). அதை நோக்கியே முழு படத்தையும் ஒரு வித அச்சத்துடன் கொண்டு சென்றிருப்பது அழகு. ஒவ்வொரு காட்சியிலும், சந்தர்ப்பத்தின் வசம் யாரோ ஒரு கெட்டவராக காட்சி தரும்படி திரைக்கதை அமைத்திருப்பது ப்ளஸ். ஆனால், 1979-ல் நடக்கும் ஒரு கதை, இவ்வளவு மாடர்னான ஆங்கில உரையாடல்கள் எல்லாம் சற்றே செயற்கைத்தன்மையாக இருந்தது.  அந்த வீட்டினருகே இருக்கும் ஒரு மரத்தில் அந்த குடும்பத்தில் இருக்கும் அனைவரின் பெயரையும் செதுக்கி இருப்பார்கள். டானி ஆச்சர்யமாக, இதில் ஷூட்டுவின் பெயர் இல்லையே எனக்கேட்பாள். அதற்கு பதிலாக அமையும் க்ளைமாக்ஸ் என முகுல் ஷர்மாவின் சிறுகதையைப் கச்சிதமாக படமாக்கி, ஒரு நல்ல த்ரில்லர் சிறுகதை படித்த ஃபீல் தந்தது படம். ஒட்டு மொத்தமாக தவறவிடக் கூடாத சினிமா இந்த 'எ டெத் இன் த கன்ஜ்'