Published:Updated:

ஜூலை சந்திப்பில் கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா ரஜினி?

எம்.குணா
ஜூலை சந்திப்பில் கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா ரஜினி?
ஜூலை சந்திப்பில் கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா ரஜினி?

ரஜினி படத்தின் ஒட்டுமொத்த நடிகர்களும் மும்பையில் முகாமிட்டுள்ளனர். பெரும்பாலான நாள்கள் மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்தாலும், ரஜினி ஜூன் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் சென்னைக்குத் திரும்புகிறார். ‘காலா’வில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிக்கும் காட்சிகளை அங்கேயே தங்கியிருந்து தன் யூனிட்டோடு தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துகிறார் பா. ரஞ்சித்.

சென்னையில் பிவிபி சினிமா ஸ்டூடியோவில், தாராவியை கண்முன்னே நிறுத்தும் தத்ரூபமான செட் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு பிரமாண்டமாக அமைத்திருக்கின்றனர். மும்பையில் ரஜினி நடிக்கும் காட்சிகளை எவ்வளவு பாதுகாப்போடு நடத்தினாலும், ஷூட்டிங் ஸ்பாட்டின் போட்டோக்களை செல்போன் கேமரா மூலம் லபக்செய்து இன்டர்நெட், வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வெளியிட்டுவருகின்றனர். ‘காலா’வில் ரஜினி நடிக்கும் அதிமுக்கியமான காட்சிகளின் படங்கள், பேசும் அரசியல் பன்ச் வசனங்கள் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதில் மிகக்கவனமாக இருக்கிறார்கள் படக்குழுவினர். ரஜினி நடிக்கும் ஹைலைட் காட்சிகள் மற்றும் பன்ச் வசனங்கள் நிறைந்த காட்சிகளை, நம்பகத்தன்மையுள்ள யூனிட் ஆள்களோடு சென்னையில் அமைக்கப்பட்டுள்ள தாராவி செட்டிலேயே ரகசியமாக ஷூட்டிங் நடத்த டைரக்டர் பா.இரஞ்சித்தும் தயாரிப்பாளர் தனுஷும் முடிவுசெய்துள்ளனர்.  

 ஏற்கெனவே ரஜினி நடித்து வெளிவந்த ‘கபாலி’ படத்தில், நரைத்த தாடியுடன் கோட் சூட் அணிந்து டான் வேடத்தில் தோன்றினார் ரஜினி. இப்போது ‘காலா’ படத்திலும் தாடி வைத்து மீசைக்கு மட்டும் டை அடித்து, கோட்டுக்குப் பதிலாகக் கறுப்பு வேட்டி, கறுப்புச் சட்டை அணிந்த டான் வேடத்தில் நடிப்பதாக ஆளாளுக்கு ஆரூடம், சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். ஒருவேளை ‘கபாலி’ படத்தின் இரண்டாம் பாகம்தான் ‘காலா’ படத்தின் கதையோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், ‘காலா' படத்தில் எக்காரணத்தைக்கொண்டும் ‘கபாலி’யின் சாயல் விழுந்துவிடக் கூடாது என்பதில் மிக மிகக் கவனத்துடன் ‘காலா’ படத்துக்கான கதை, திரைக்கதையை மெருகேற்றிவருகிறார் இரஞ்சித். ‘கபாலி’யில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் பலர் நேரிலும் போனிலும்  உரிமையோடு வாய்ப்பு கேட்க,  அத்தனை பேருக்கும் பா.இரஞ்சித் கறாராகச் சொன்ன ஒரே வார்த்தை `ஸாரி'. 

ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள 17 மாவட்டங்களில் இருக்கும் ரசிகர்களை, மாவட்டத்துக்கு தலா 250 ரசிகர்கள்வீதம் சென்னைக்கு வரவழைத்து, மே 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சந்தித்தார் ரஜினி. அதுபோலவே இரண்டாம் பகுதியாக சென்னை, காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, விருதுநகர், மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களின் ரசிகர்களை ஜூன் 15-ம் தேதி முதல் 19 -ம் தேதி வரை சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்தார். மும்பையில் ‘காலா’ படப்பிடிப்பில் பரபரப்பாக நடித்துவருவதால், ஜூன் மாதச் சந்திப்பை ஜூலை 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டிருக்கிறார். ஏற்கெனவே நடந்த சந்திப்பின்போது ‘சைதை’ ரவி மாதிரியான ரசிகர்கள் ஏற்படுத்திய பரபரப்பு போன்று எதுவும் நிகழக் கூடாது என்பதைக் கவனத்தில்கொள்ளுமாறு ரஜினி அறிவுறுத்தியிருக்கிறார். ரஜினி ரசிகர் மன்றங்களிடையே பாரபட்சம் ஏதுமின்றி மாவட்டவாரியாக முறையாக அடையாள அட்டை தருவதற்கான பணிகளில் பரபரப்பாக இயங்கிவருகிறார் சுதாகர்.

வழக்கமாக ரஜினியை நேரில் சந்திக்கும்போது ‘தலைவா...’ என்று உணர்ச்சிவசப்படுவதும், ‘அரசியலுக்கு வாங்க தலைவா..’ என்று ஆக்ரோஷமாகக் குரல்கொடுப்பதும் தொன்றுதொட்டு நடந்துவரும் நிகழ்வு. சென்ற மே மாதச் சந்திப்பின்போது ரசிகர்கள் எல்லோரும் அரசியல்குறித்து எதுவுமே பேசாமல் மௌனமாக இருக்க, ரஜினி தானே முன்வந்து ‘போருக்குத் தயாராக இருங்கள். அரசியலுக்கு வருவேன்’ என்கிற அஸ்திரத்தை எடுத்து வீசினார். ரஜினி தன் அரசியல் பிரவேசம் குறித்துப் பேசியப் பேச்சுக்கு ‘எப்போதும் தன் பட ரிலீஸுக்கு முன்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்த எப்போதும் பேசுவதுபோல் இப்போதும் பேசியிருக்கிறார்’ என்று கருத்து கந்தசாமிகள் தொலைக்காட்சிகளில் தோன்றி பேசினார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘2.0’ திரைப்படம் 2018-ம் ஆண்டு ஜனவரியில் ரிலீஸாகிறது. அந்தப் படத்துக்கு பிறகே பா.ரஞ்சித் இயக்கிவரும் ‘காலா திரைப்படம்’ வெளியாகும். `ஆறு மாதங்களுக்குப் பிறகு ரிலீஸாக இருக்கும் தன் படங்களின்  வியாபாரத்துக்காக இப்போதே பேசவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை' என்பது, திரையுலகப் புள்ளிகளுக்குத் தெரிந்த தெளிவான உண்மை. மே மாதத்தில் தனது அரசியல் பிரவேசத்துக்குப் பிள்ளையார்சுழி போட்ட ரஜினி, ஜூலை மாத ரசிகர்கள் சந்திப்பில் தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவதற்குத் தயாராகிவருகிறார். 

`என் தம்பி எப்போ கட்சி ஆரம்பிக்கப்போறார்னு நான் சொல்ல மாட்டேன். அவரே தன் வாயால் ஜூலை மாசம் சொல்வார்’ என்று அர்த்தபுஷ்டியோடு சொல்கிறார் ரஜினியின் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்க்வாட். அதுசரி `ரஜினியின் அரசியல் பிரவேசம்குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரமுகர்கள் கடுமையாகத் தாக்கி விமர்சனம் செய்துவருவதை அவர் எப்படி எடுத்துக்கொள்கிறார்?' என்கிற கேள்வியை, ரஜினியின் நிழல் நண்பரிடம் கேட்டோம்.

‘`ரஜினி சினிமாவில் என்ட்ரி ஆனப்போ ஏகப்பட்ட டிஸ்கரேஜ். அதையெல்லாம் தாண்டித்தான் சூப்பர் ஸ்டார் ஆனார். இப்போது அரசியல் என்ட்ரியிலும் அதே நிலை. ரஜினியைக் கடுமையாகத் திட்டுபவர்களின் வார்த்தைகள், அவரின் செவிகளில் விழாது. ஏனென்றால், ‘சந்திரமுகி’ விழாவில் அவரே சொன்னதுபோல ரஜினி, காது கேளாத ஒரு தவளை'’ என்றார்.