Published:Updated:

’காப்பியடிக்க முடியாது!’, ’காப்பியே இல்லை!’ - கோடம்பாக்கத்தில் 'Falling Down' சர்ச்சை

ப.சூரியராஜ்
’காப்பியடிக்க முடியாது!’, ’காப்பியே இல்லை!’ - கோடம்பாக்கத்தில் 'Falling Down' சர்ச்சை
’காப்பியடிக்க முடியாது!’, ’காப்பியே இல்லை!’ - கோடம்பாக்கத்தில் 'Falling Down' சர்ச்சை

`தனி ஒருவன்' வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் `வேலைக்காரன்'. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் சமீபத்தில் வெளியானது. அதில் கழுத்தில் ஐடி கார்டு, ஒரு கையில் லெதர் பேக், மறு கையில் ரத்தக்கறை படிந்த அரிவாளோடு சிவகார்த்திகேயன் நிற்பார். அவருக்குப் பின்னால், ஒருபுறம் குப்பைகள் சூழந்த குடியிருப்புப் பகுதியும், மறுபுறம் தொழிற்சாலைக் கட்டிடங்களும் பளிச்சென உயர்ந்து நிற்கும். `வேலைக்காரன்' என்ற பெயரோ சிவப்பு வண்ணத்தில், கம்யூனிசம் சார்ந்த குறியீடுகளால் அமைந்துள்ளது. போஸ்டர் வெளியான அடுத்தநொடியே `இது `ஃபாலிங் டௌன்' எனும் ஹாலிவுட் பட போஸ்டரின் காப்பி' என நெட்டிசன்கள் கொலாஜ் போட்டுக் கலாய்க்க துவங்கினர். சிலரோ `வேலைக்காரன்' படமே `ஃபாலிங் டௌன்' படத்தின் காப்பிதான் என கிளம்பிவிட்டார்கள்.

இதுதான் `ஃபாலிங் டௌன்' படத்தின் கதை. ஹீரோ வில்லியம் ஃபோஸ்டர் விவாகரத்தானவன். முன்னாள் மனைவி பெத் குழந்தை அடீலோடு தனித்து வாழ்ந்து வருகிறாள். ‘ரெசிஷன்’ காரணமாக வேலையிழந்த ஃபோஸ்டர் தன் குழந்தை அடீலின் பிறந்தநாளுக்கு முன்னாள் மனைவி அழைக்காமலேயே காரில் கிளம்பிச் செல்கிறான். பட்ட காலிலே படும் என்பதைப்போல போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும்போது ஏ.சி வேறு ஆஃப். எரிச்சலின் உச்சத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் குடிப்பதற்கு கோக் வாங்கச் செல்கிறான். பில் போடும் இடத்தில் இவனைக் கண்டுகொள்ளாமலேயே யாருடனோ போனில் பேசிக்கொண்டிருக்கிறார் கடை உரிமையாளர். இதனால் அவரைத் திட்டிவிடுகிறான். பதிலுக்கு அந்தக் கடை உரிமையாளர் ஒரு பேஸ்பால் மட்டையால் அடித்துவிடுவதாக மிரட்டுகிறார். கடுப்பான ஃபோஸ்டர் அவரை அடித்து மட்டையைப் பிடுங்கி, பதிலுக்கு கடையில் இருக்கும் பொருட்களைத் தாக்குகிறான். ஏமாற்றி அதிக விலைக்கு விற்பதைச் சுட்டிக்காட்டி அவரைத் திட்டுகிறான். அந்த வழியாக வரும் திருட்டுக்கும்பல் அவனைத் தாக்கி அவன் கையில் இருக்கும் பையைப் பறிக்க முயல்கிறது. மட்டையால் அவர்களைத் தாக்கி வீழ்த்தி அவர்கள் கையில் இருக்கும் கத்தியோடு அங்கிருந்து செல்கிறான்.

சிறிதுநேரத்தில் அடிபட்டவர்களின் கேங் அவனைத் தேடி கொலைவெறியோடு வருகிறது. அவனை, காரை வைத்து மோதிக் கொல்வதற்கு முயற்சி செய்கிறது. ஆனால், அப்பாவி மக்கள் பலர் காயமடைகிறார்கள். அவர்கள் ஓட்டிவந்த கார் விபத்துக்குள்ளாகிறது. தன்னைத் தாக்க வந்தவர்களின் கார் கவிழ்ந்து கிடப்பதைப் பார்த்து அந்த கேங் மெம்பரிடமிருக்கும் துப்பாக்கியை எடுத்து அதில் ஒருவனின் காலில் ஃபோஸ்டர் சுடுகிறான். பிறகு, ஆயுதங்களோடு அங்கிருந்து தப்பிக்கிறான். ஒரு ரெஸ்டாரென்டுக்கு சாப்பிட நுழைகிறான். அங்கே கடை சாத்தப்பட்டதாகச் சொல்லும் கடை ஊழியனைப் பார்த்து எரிச்சல் அடைகிறான். அவர்களை மிரட்ட முயற்சிக்கும்போது துப்பாக்கி எதேச்சையாக மேல்நோக்கி சுட்டுவிடுகிறது. இதனால் கடைக்காரர்கள் பயந்து நடுங்கி அவனுக்கு ஆர்டர் எடுக்கிறார்கள். அவன் கேட்ட ஐட்டத்துக்குப் பதில் வேறொன்றைக் கொண்டு வந்து கொடுக்கும்போது கடுப்பாகிறான் ஃபோஸ்டர். மீண்டும் எரிச்சலோடு வெளியே தன் மனைவிக்கு போன் பண்ண போன் பூத்துக்கு வருகிறான். அங்கே ஒருவன் நீண்ட நேரமாக போன் பேசுவதைப் பார்த்துக் கடுப்பாகி அவனைச் சுட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறான்.

நகரத்தில் நிகழ்ந்த இந்த திடீர் அசாதாரணமான சூழலைக் கட்டுப்படுத்த போலீஸ் சார்ஜென்ட் பிரென்டர்காஸ்ட் நியமிக்கப்படுகிறார். சூப்பர் மார்க்கெட், ரெஸ்டாரன்ட், போன் பூத் என வெவ்வேறு ஏரியாக்களில் அவர் சம்பவத்தைப் பார்த்த சாட்சிகளை விசாரிக்கும்போது ஒரே ஒரு மனிதன் சம்பந்தப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அங்கு கண்டெடுக்கப்பட்ட ஃபோஸ்டரின் லைசென்ஸ் அட்டையை வைத்து அவனை இனம் கண்டுகொள்கிறார். அவன் முகவரியை வைத்து அவனது அம்மாவைச் சந்திக்கிறார். அவனுக்கு டைவர்ஸ் ஆன விஷயமும் இன்று அவன் மகளின் பிறந்தநாளுக்கு லாஜ் ஏஞ்சல்ஸ் போயிருப்பதையும் அறிந்துகொள்கிறார்.

இங்கே ராணுவ விற்பனை அங்காடிக்குள் ஷூ வாங்க நுழைகிறான். அங்கு இனவெறியோடு பேசிக்கொண்டிருக்கும் அதிகாரியைப் பார்த்து டென்ஷன் ஆகிறான். அவனைத் தாக்கி கை விலங்கிட்டு ஆர்மி உடுப்புகளை மாட்டிக்கொண்டு அங்கிருக்கும் ராக்கெட் லான்ச்சரோடு தப்பிக்கிறான். தன் மனைவி, மகளைக் காண முடிவெடுத்துப் போகும் வழியில் ஃபோஸ்டர் செய்யும் இன்னும் பல வினோதமான சம்பவங்களும் இறுதியில் சார்ஜென்ட்  அவனை சுட்டு வீழ்த்தினாரா என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.

இதே கதையை தமிழ்சினிமாவில் எங்கேயோ பார்த்தது போல் சிறுமூளை சிக்னல் கொடுக்கிறதா? சிக்னல் சரிதான். இதே கதைதான் தமிழில் மாதவன், சங்கீதா, சீமான் நடிக்க `எவனோ ஒருவன்' என்ற பெயரில் வெளியானது. படமும் பப்படம் ஆனது. ஆக, `வேலைக்காரன்' படம் `ஃபாலிங் டௌன்' படத்தின் ரீமேக்காக இருக்காது எனச் சூடம் அடித்துச் சத்தியம் செய்யலாம் மக்களே... இருந்தாலும் நம்பத்தகுந்த வட்டாரம் மூலம் கன்ஃபார்ம் பண்ணிக்கலாம் எனப் படக்குழுவினரிடம் தொடர்புகொண்டு பேசினோம். 'அந்த ஹாலிவுட் படத்தோட கதைக்கும் 'வேலைக்காரன்' கதைக்கும் சம்பந்தமே இல்லை பாஸ்' என 200% உத்தரவாதம் கொடுத்தனர்.