Published:Updated:

ஆஸ்கர் பரிந்துரை வரை சென்ற கன்னட இசையமைப்பாளர் தெரியுமா?

ஆஸ்கர் பரிந்துரை வரை சென்ற கன்னட இசையமைப்பாளர் தெரியுமா?
ஆஸ்கர் பரிந்துரை வரை சென்ற கன்னட இசையமைப்பாளர் தெரியுமா?

ஆஸ்கர் பரிந்துரை வரை சென்ற கன்னட இசையமைப்பாளர் தெரியுமா?

சந்தோஷ் நாராயணன், கே, ஷான் ரால்டன், ஜஸ்டின் பிரபாகரன், நிவாஸ் கே பிரசன்னா, சி.எஸ்.சாம், ஜாவித் ரியாஸ் (மாநகரம்), ரகுராம் (ஒரு கிடாயின் கருணை மனு), என தமிழில் வேற லெவல் இசையமைப்பாளர்களின் அறிமுகம் கடந்த சில வருடங்களில் நிகழ்ந்திருக்கிறது. இங்கு போலவே மற்ற மொழிகளிலும் புதிய இசையமைப்பாளர்கள் அறிமுகமாகி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த இசைஞர்கள் பற்றிய தொகுப்புதான் இது.

ஜெஸ்லின் ராயல்:

25 வயது இசையமைப்பாளர் ஜெஸ்லின் ராயல் பாலிவுடில் ட்ரெண்டிங் பாடகியும் கூட. தன்னுடைய 18-வது வயதில் 'இன்டியாஸ் காட் டேலன்ட்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனி ஒருத்தியாக கிட்டார், மவுத் ஆர்கன், டேம்போரின் ஆகிய இசைக்கருவிகளை ஒரே சமயத்தில் இசைக்க, அசந்து போயிருக்கிறார்கள் நடுவர்கள். தானாக இசையமைத்து ஆல்பங்கள் செய்து கொண்டிருந்தவருக்கு, அதன்பின் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. படத்தின் ஒன்று இரண்டு பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்தாலும் சார்ட் பஸ்டர் ஹிட்டடித்தது. சென்ற வருடம் வெளியான 'பார் பார் தேகோ' படத்தில் இவர் இசையமைத்த இரண்டு பாடல்களும் தெறி ஹிட். 'டியர் ஜிந்தகி' படத்தில் பாடிய 'லவ் யூ ஜிந்தகி' பாடலும் ஹிட். பாடகி, இசையமைப்பாளர் என இசையோடு சிறகடித்துக் கொண்டிருக்கிறார் ஜெஸ்லின்.

சன்னி எம்.ஆர்:

ஆடியோ ஸ்டுடியோ ஒன்றில், பாடல்களின் ஃபைனல் மிக்ஸிங் முடிந்த பின் ஸ்டோர் செய்து வைக்கும் மாஸ்டரிங் வேலை செய்து கொண்டிருந்தவர் சன்னி. இசை மீது ஆர்வம் வந்ததும் மும்பையைச் சேர்ந்த இசையமைப்பாளர் சந்தீப் சௌடாவிடம் சவுண்ட் இன்ஜினீயராக சேர்கிறார். மெல்ல மெல்ல இசையின் நுணுக்கங்களைக் கற்ற பிறகு சினிமா இசையமைப்பாளராகும் ஆசை வருகிறது. சரியான வாய்ப்பு அமையாததால், ப்ளாக்ஸ்வரா என்கிற குழுவில் இணைந்தார். அது ஒரு மியூசிகல் ப்ளார்ட்ஃபாம். இசைத் திறமை உள்ளவர்கள் தங்கள் படைப்பை அந்தத் தளத்தில் அப்லோட் செய்து தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்வார்கள். அப்படி சன்னி பதிந்திருந்த பாடல்களைக் கேட்ட சுதீர் வர்மா, தான் இயக்கிய 'ஸ்வாமி ரா ரா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டவர், தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். 

விவேக் சாகர்:

எலக்ட்ரானிகல் இன்ஜினீயரிங் படித்த விவேக் சாகருக்கு ஆசை, கனவு, தெரிந்த வேலை மூன்றும் இசைதான். கையில் கிட்டாருடன் கிளம்பி வெவ்வேறு பேண்ட்களில் இணைந்து இசையோடு பயணிக்க ஆரம்பித்தார். நண்பருடன் இணைந்து டேப்லூப் என்கிற பேண்ட் ஆரம்பித்து பாடல்களை கம்போஸ் செய்து வெளியிட துவங்க மெல்ல மெல்ல ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். அதன் மூலம் ரேஸ் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு வர சஞ்சயுடன் இணைந்து இசையமைத்தார். பின்னர், தனது குறும்படத்திற்கு இசையமைக்குமாறு சாகரை அணுகியிருக்கிறார் இயக்குநர் தருண் பாஸ்கர். குறும்படத்தில் அவரது திறமையைப் பார்த்து, 'பெல்லி சூப்புலு' படம் இயக்கும் போது அவரையே இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தார் தருண். பாடல்கள் வெளிவந்ததுமே பயங்கர ஹிட், படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற பின் யார் அந்த விவேக் சாகர் என மொத்த டோலிவுட்டும் தேட ஆரம்பித்தது. 

பிரசாந்த் பிள்ளை:

சென்னையில் சவுண்ட் இன்ஜினீயரிங் படித்து முடித்ததும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் சிறிது காலம் வேலை செய்தார். அதன் பிறகு புனே சென்று விளம்பரப் படங்களுக்கு இசையமைப்பது, குறும்படங்களுக்கு இசையமைப்பது போன்ற வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். 2007-ல் பிஜோய் நம்பியார் இயக்கிய 'ராஹு' குறும்படத்திற்கு இசையமைத்தபோது அந்த இசை எல்லோரையும் கவர்ந்தது. நிறைய புதிய ஒலிகள், புதுவிதமான இசை என பாரட்டுகளைப் பெற்றார் பிரசாந்த். மலையாளத்தில் லிஜோ ஜோஸ் இயக்கிய 'நாயகன்' மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இப்போது வரை சிக்ஸர் அடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான 'அங்கமாலே டைரீஸ்' பாடல்கள் எல்லாம் வேற லெவல் ரீச். 

ராஜேஷ் முருகேசன்: 

'பிரேமம்' என ஒரே வார்த்தையில் இவரை அறிமுகப்படுத்திவிடலாம். இருந்தாலும் கொஞ்சம் பின்நோக்கிப் போகலாம். அது ஷார்ட்ஃபிலிம் மோகம் பரவிக் கொண்டிருந்த காலம். அதற்கு ஏற்றது போல நாளைய இயக்குநர் நிகழ்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்ட அல்போன்ஸ் புத்ரன் ராஜேஷின் நண்பர். அவர் இயக்கிய குறும்படத்திற்கு இசையமைக்க ஆரம்பித்தவர், அவரின் படங்களுக்கும் இசையமைப்பளர் ஆனார். சுருக்குரிக்கா, மலரே நின்னே, கண்ணுசுவக்கனு என நாம் அடிக்கடி முணுமுணுத்த பாடல்கள் எல்லாம் ராஜேஷின் உருவாக்கம்தான். 

அஜனீஷ் லோகநாத்:

கன்னட சினிமாவில் வழக்கமான ஃப்ளேவர் இசையை மாற்றியதில் அஜனீஷ் லோகநாத் முக்கியமானவர். 'ஷிஷிரா' படம் மூலம் அறிமுகம் ஆனாலும், அதிகம் கவனிக்கப்பட்டது ரக்‌ஷித் ஷெட்டி இயக்கிய 'உலிடவாரு கன்டன்டே' படம் வெளியான பிறகுதான். 'ரஞ்சிதரங்கா' படத்திற்கு இவர் இசையமைத்த பின்னணி இசை ஆஸ்கர் விருதுக்கு நாமினேஷன் வரை சென்றது. அந்த அளவு புத்துணர்சியான இசையை வழங்குபவர் அஜனீஷ். நிதிலன் இயக்கியிருக்கும் 'குரங்கு பொம்மை', நிவின் பாலி தமிழில் அறிமுகமாகும் 'ரிச்சி' படங்கள் மூலமாக தமிழில் அறிமுகமாகிறார் அஜனீஷ்.

மனோஜ் ஜார்ஜ்:

லண்டன் ட்ரினிடி இசைக் கல்லூரியில் வயலின் பயின்றவர் மனோஜ் ஜார்ஜ். ஆவணப்படங்கள், விளம்பரப்படங்களுக்கு இசையமைத்தவருக்கு 'கராக்‌ஷர்கள்' என்ற மலையாளப்படம் மூலம் சினிமா என்ட்ரி கிடைத்தது. பிறகு  'அத்மியா' கன்னடப் படத்திற்கும், 'வாத்யார்' என்ற மலையாளப் படத்தில் இரண்டு பாடல்கள் இசையமைத்தார். ஆனால், அவரின் மெர்சல் இசை 'உர்வி' படம் மூலம்தான் வெளிவந்தது. 

அடுத்த கட்டுரைக்கு