Published:Updated:

சிறுபட்ஜெட் படங்களும் ரசிகனின் நடுக்கமும்!

கே.ஜி.மணிகண்டன்
சிறுபட்ஜெட் படங்களும் ரசிகனின் நடுக்கமும்!
சிறுபட்ஜெட் படங்களும் ரசிகனின் நடுக்கமும்!

'சிறுபட்ஜெட் படங்கள் ரிலீஸாகாமல் இருக்கிறது', 'சிறுபட்ஜெட் படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்னை இருக்கிறது', 'சிறுபட்ஜெட் படங்களின் தயாரிப்பை ஒழுங்குபடுத்தவேண்டும்' - கடந்த நான்கைந்து ஆண்டுகளாக தமிழ்சினிமாவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் முக்கிய விவாதம் இது.

ஹீரோயிஸத்தை மட்டுமே தூக்கிச் சுமந்து, பாரம் தாங்காமல் தத்தளித்துக்கொண்டிருந்த தமிழ்சினிமாவுக்கு 'சிறுபட்ஜெட் படங்கள்' என்ற வார்த்தையும், சிறுபட்ஜெட்டில் உருவான தரமான தமிழ்படங்கள் கொடுத்த நம்பிக்கையும், தமிழ் சினிமாவின் சுவாசத்திற்குக் கிடைத்த ப்யூர் ஆக்ஸிஜன். ஒரு சிறுபட்ஜெட் படம் ரஜினிகாந்தின் படத்தை ஓரம் கட்டுகிறது. மணிரத்னம் படத்தைத் தூக்கிச் சாப்பிடுகிறது. நொடிந்தே போனாலும் படம் தயாரித்துகொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்குப் புன்னகையைப் பரிசாகக் கொடுக்கிறது. ஆனால், குறிப்பிட்ட சில உதாரணங்களை மட்டுமே காரணம் காட்டி, 'சிறுபட்ஜெட்' படங்களைத் தூக்கிவைத்து ஆடமுடியாது. 'சிறுபட்ஜெட்' என்ற ஒற்றைக் காரணத்திற்காகவே, ரசிகர்களுக்குக் கொடுக்கும் குப்பைகளைச் சகித்துக்கொண்டு கை தட்டிக்கொண்டிருக்க முடியாது. 'நன்றாக இருக்கும்' என்ற நம்பிக்கையோடு திரும்ப திரும்ப சிறுபட்ஜெட் படங்களைப் பார்த்து ஏமாந்துகொண்டே இருக்கமுடியாது. சிறுபட்ஜெட் படங்கள் வளரவேண்டிய அதேசமயம், சிறுபட்ஜெட்டில் படங்களின் உருவாக்கமும், உள்ளடக்கமும் கிழித்துப் பிரித்து விவாதிக்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

நேரடியாகவே சொன்னால், இந்தவாரம் வெளியான பெரும்பாலான படங்கள், ரசிகர்களின் நேரத்தையும், பணத்தையும் வீணாக்கியதோடு, அதீத மன உளைச்சலைச் சேர்த்துக் கொடுத்தது. பல நட்சத்திரங்ளைப் பயன்படுத்தி உருவான ஒரு படத்தின் திரைக்கதை அமைப்பும், அமெச்சூரான மேக்கிங்கையும் பொறுத்துக்கொண்டு கடக்கமுடியவில்லை. படத்தின் ஒரு காட்சியில் முக்கியமான கடிதம் ஒன்றை உடனே படித்தாகவேண்டிய கட்டாயம். ஹீரோ வீட்டில் இல்லை. ஆனால், கையில் மொபைல் இருக்கிறது. அக்காவுக்குப் போன் செய்து, வீட்டில் இருக்கும் கடிதத்தை, தான் இருக்கும் இடத்திற்கு அர்த்த ராத்திரியில் கொண்டுவரச் சொல்கிறார். அவ்வளவு அவரசமாகத் தேவைப்படும் கடிதத்தை, அக்கா வாசித்தால் ஹீரோவுக்குக் காது கேட்காதா? இல்லை, வாட்ஸ்-அப்பில் அனுப்பினால் படிக்கத் தெரியாதா? - 'பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' மாதிரி, இதுபோன்ற காட்சிகள் அந்தத் திரைப்படத்தில் மட்டுமல்ல, இந்த வாரம் வெளியான பெரும்பாலான சிறுபட்ஜெட் படங்களிலும் இருந்தது.

சினிமாவைத் திரைப்பட வடிவில் கொடுப்பதற்குத்தான் பணம் தேவையே தவிர, நல்ல சினிமாவுக்கான ஸ்கிரிப்ட் எழுதுவதற்கு மூளை போதும். அந்த அடிப்படையே ஆட்டம் காணும்போது, சினிமா ரசிகர்களுக்கு 'சிறு பட்ஜெட்' படம் என்ற வார்த்தையே நடுக்கத்தைத்தான் கொடுக்கும். தமிழ்சினிமா நிறையவே மாறியிருக்கிறது. மொபைலில்கூட படம் எடுக்கும் நிலைக்கு டெக்னாலஜி வளர்ந்திருக்கிறது. ஆனால், சினிமாவை எப்படி அணுகவேண்டும் என்ற கேள்விக்கு மட்டும் மந்தை மனநிலையிலேயே இருக்கிறார்கள். லோ-பட்ஜெட் படங்கள் வெற்றிபெறுவது தமிழ்சினிமாவுக்கு ஆரோக்கியமான ஒன்றுதான். ஆனால், வெற்றிபெறும் தகுதியை நிர்ணயித்துக்கொள்வது, ஒவ்வொரு திரைப்படத்துக்கும், அத்திரைப்படத்தின் இயக்குநருக்குமான கடமைதானே?

தணிக்கை செய்யப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இருக்கும் படங்களின் எண்ணிக்கை ஐநூறைத் தொடும் என்கிறார், நடிகர் சங்கத் தலைவர் நாசர். வாரத்திற்குப் பத்து படங்கள் ரிலீஸ் ஆகிக்கொண்டுதான் இருக்கிறது. புதிதாகப் பத்து படங்களுக்குப் பூஜை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். நல்ல படங்களுக்கான விமர்சனமும், மொக்கைப் படங்களுக்கான விமர்சனமும் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான சிறுபட்ஜெட் படங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால், 10-க்கும் குறைவான படங்கள்தான் ரசிகர்களுக்கு நிறைவையும், தயாரிப்பாளர்களுக்கு வசூலையும் கொடுத்திருக்கிறது. 'இங்கே எல்லாப் படங்களும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையிலேயே எடுக்கப்படுகிறது' எனப் பேசுகிறார்கள். ஒரு சினிமா, சினிமாவாக எடுக்கப்பட, வெற்றிபெற நம்பிக்கை மட்டுமே போதுமா என்ன?

சிறுபட்ஜெட் படங்கள் சில நல்ல மாற்றத்திற்கான நம்பிக்கையை விதைப்பது மறுக்கமுடியாதது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' நகைச்சுவையையும் சுவாரஸ்யத்தையும் கொடுத்தது, வெற்றி பெற்றது. 'பீட்சா' பயத்தையும், சுவாரஸ்யத்தையும் கொடுத்து வெற்றி பெற்றது. வசூல் ரீதியான வெற்றியைப் பெறவில்லை என்றாலும், 'உறியடி' பேசிய அரசியலும், அந்தப் படம் கொடுத்த நல்ல சினிமாவிற்கான அனுபவமும் இன்றும் பசுமையாகப் படர்ந்து தொடர்கிறது. இந்தவாரம் வெளியான 'ஒரு கிடாயின் கருணை மனு' திரைப்படம்கூட அத்தனை பெரிய நம்பிக்கையை விதைக்கிறது. 

இந்திய அளவில் தமிழ்சினிமாவில்தான் அதிகமான திரைப்படங்கள் உருவாகிக்கொண்டிருக்கிறது. பயன் என்ன? ஊர்ப்பக்கம் நடக்கும் திருமணங்களில் இந்தக் காட்சியை நிச்சயம் பார்க்கலாம். ஒரு கூல்ட்ரிங்ஸில் இரண்டு ஸ்ட்ராவைச் செருகி, மணமக்களைக் குடிக்கச் சொல்வார்கள். தாலி கட்டுவதைக் கஷ்டப்பட்டு ஷேக் ஆகாமல் எடுப்பார்கள். மணப்பெண் சேலையை வட்டமாகப் பரப்பி அமர்ந்து டாப் ஆங்கிளில் இருக்கும் கேமராவைப் பார்க்கவேண்டும்... சில வீடியோகிராஃபர்கள் சூழலுக்கு ஏற்ப அப்டேட் ஆகிக்கொண்டிருக்கலாம். பெரும்பாலான கல்யாண வீடியோக்களின் ஃபார்மேட் இன்றுவரை இதுதான். தமிழ்சினிமாவின் பெரும்பாலான சிறுபட்ஜெட் படங்களிலும், பார்த்துப் பழகிய சண்டைக் காட்சிகள், சலிப்பூட்டும் பன்ச் வசனங்கள், பலமுறை துவைத்துப் பிழியப்பட்ட காட்சி அமைப்புகள் என, கல்யாண வீடியோவில் பின்பற்றப்படும் ஃபார்மேட் போல, இங்கேயும் ஒரு ஃபார்மேட் பின்பற்றப்படுகிறது. 

ரசிகர்களிடம் தெளிவு இருக்கிறது. மிக நல்ல படமாகக் கொண்டாடப்படும் படங்களிலும் இருக்கும் சிறு தவறுகளுக்கும் திரையரங்குகளில் நெளிகிறார்கள். ஏற்கெனவே பார்த்துப் பழகிய காட்சிகளுக்கு தலையைத் தொங்கப்போடுகிறார்கள். 'யாருமே யூகிக்கமாட்டார்கள்' என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு, முன்கூட்டியே திரைவடிவம் கொடுத்துப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய ரசிகர்களுக்குக் கொடுக்கவேண்டிய பொறுப்பான படமாக உங்கள் சிறுபட்ஜெட் படங்கள் இருந்தால் நல்லது. தவிர, நான்கு மொக்கைப் படங்களைப் பார்த்துச் சலிக்கும் ரசிகன் ஐந்தாவதாகப் பார்க்கும் சுமாரான ஒரு படத்தை, 'நல்ல படம்' என்ற முத்திரையோடு எல்லோருக்கும் பரிந்துரைக்கவேண்டிய நிர்பந்தமும் இங்கே உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த அத்தனை பிரச்னைகளுக்கும் முக்கியக் காரணம் பெரும்பாலான சிறுபட்ஜெட் படங்கள் மட்டுமே!

தமிழ்சினிமா ரசிகர்கள் தெளிவானவர்கள், புதுமையை விரும்புகிறவர்கள், நல்ல படத்தைக் கொண்டாடுகிறவர்கள். சிறுபட்ஜெட்டில் நீங்கள் தரும் சினிமா நெகிழ வைத்து விருதுகள் வாங்கிய சினிமாவாக இருக்கவேண்டாம்; பிரமிப்பைக் கொடுக்கவேண்டாம்; கருத்துக் குவியல்களைக் கொட்டிக்குவிக்கும் காவியமாக இருக்கவேண்டாம்... குறைந்தபட்சம் நல்ல கதையாகவும், நேர்த்தியாக சொல்லப்பட்ட திரைக்கதையாகவும் இருந்தாலே போதும். இல்லையெனில், தமிழ்சினிமா ரசிகர்களை, தமிழ் சினிமாவை மட்டுமே பார்க்கக்கூடிய ரசிகர்களை 'ரசிகர்கள்' என்று அழைப்பதில் அர்த்தம் இருக்காது. உங்களது படைப்புகளைத் 'திரைப்படம்' எனக் குறிப்பிடுவதிலும் நியாயம் இருக்காது!