Published:Updated:

ட்ரெய்லர்ல இருக்கு... படத்துல இல்ல! ஏன் தனுஷ்?

ம.காசி விஸ்வநாதன்
ட்ரெய்லர்ல இருக்கு... படத்துல இல்ல! ஏன் தனுஷ்?
ட்ரெய்லர்ல இருக்கு... படத்துல இல்ல! ஏன் தனுஷ்?

வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் நேற்று வெளியானது. எப்போவும் போல மீம்ஸ் அது இதுனு பேஸ்புக், ட்விட்டர் ட்ரெண்டிங்லயும் இருந்தது. இது தனுஷுக்கு முதல்முறை கிடையாது. என்னதான் இப்போ தல-தளபதி ரசிகர்கள் யூடியூப் வியூஸுக்கு அடிச்சிக்கிட்டாலும் இவங்க எல்லாருக்கும் முன்னாடி யூடியூப்ல ஒரு கலக்கு கலக்கியவர் தனுஷ். ஒய் திஸ் கொலவெறி பாடலை மறக்கமுடியுமா? அதுக்கு அப்புறம்தான் ட்ரெய்லர்கள் யூடியூப்ல ரிலீஸ் ஆகுறதே வெளிய தெரிஞ்சது. ஆனால் சோகம் என்னன்னா பாதி நேரம் தனுஷ் படங்களின் ட்ரெய்லருக்கு கிடைக்கிற வரவேற்பு படத்துக்கு கிடைக்கிறது இல்லை. அப்படி வந்த படங்களின் எஸ்.டி.டி இது!

 3:

கொலவெறி பாட்டுக்கே படம் ஓடும்னு நம்பப்பட்டுச்சு. பாட்டு ரீச்னால ஹிந்தில டப் பண்ணியெல்லாம் வெளியானது படம். அதுக்கு அப்புறம் என்ன மாதிரி வரவேற்பு கிடைச்சதுனு எல்லாருக்குமே தெரியும். இதுல பரிதாபம் என்னன்னா மக்களுக்கு படத்தின் பைபோலர் அத்தியாயங்கள் பிடிக்கலைனா பரவாயில்ல வைரல் கொலவெறி பாட்டு வீடியோவே பிடிக்கலையே. 

மரியான்:

மரியான் ட்ரெய்லர் வெளிவரும்போது இப்போ இருக்குற அளவுக்கு யூடியூப்ல அவ்வளவு க்ரேஸ் கிடையாது. ஆனாலும் மில்லியன் தடவை பார்த்த ட்ரெய்லர் ஆனது. உலகத்தர ஒளிப்பதிவு, ரஹ்மான் இசை, கதைக்களம்னு ட்ரெய்லர்ல இருந்த எல்லாமே சாதாரண ரசிகனை ஈர்த்தது. ஆனால் தியேட்டர்க்குபோன ரசிகனுக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான். எந்தப் பகுதி ட்ரெய்லர்ல கவர்ந்ததோ அதுவே தியேட்டர்ல அலுப்பு தட்டியது. என்னதான் தொழில்நூட்ப ரீதியில் தரமான படமாக இருந்தாலும் சாதாரண பாமரனை திருப்திபடுத்தத் தவறியது மரியான். 

மாரி:

தனுஷுக்கு இதுவரை வந்ததிலே மிகப்பெரிய ட்ரெண்ட்செட்டர் ட்ரெய்லர்னா அது மாரிதான். வேலையில்லா பட்டதாரியின் வெற்றி ஒரு முக்கிய காரணம். அது மட்டும் இல்லாம புது லுக், மாஸ் பறக்கும் வசனங்கள், அனிருத்தின் தெறிக்கும் இசைனு பட்டிதொட்டிவரை பட்டையைக் கிளப்பியது இந்த ட்ரெய்லர். இதுக்கும் மேலே தல வெர்ஷன், தளபதி வெர்ஷன், விஜயகாந்த் வெர்ஷன்னு ஏகப்பட்ட வெர்ஷன் ரிலீஸ் ஆனதும் மாரி ட்ரெய்லருக்குத்தான். 'செஞ்சிருவேன்' டயலாக்லாம் இன்னைக்கும் எங்கேயாவது கண்ணுல பட்டுட்டுதான் இருக்கு. ஆனால் படத்தில் என்னதான் மாஸ் சீன்கள் அதிகமாகவே இருந்தாலும் சொதப்பல் கதையால் மண்ணை கவ்வியது மாரி.

தங்கமகன்:

வி.ஐ.பி கூட்டணி இணையுறதுனு தெரிஞ்சதுமே எதிர்பார்ப்பு அதிகமானது. இந்தப் படம்தான் விஐபி 2னு நம்புனவங்க பல பேர். எப்போதும் போல அனிருத் பாடல்கள் ஓரளவு ரீச் ஆக ட்ரெய்லருக்கும் டீசன்ட்டான வரவேற்பு கிடைச்சது. ஆனா படம், எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகனை 10 சதவிகிதம் கூட திருப்திப்படுத்தல. இந்த படம் மத்த தனுஷ் படங்களை மாதிரி நல்ல விஷயங்களுக்கு ட்ரெண்ட் ஆகாம மீம் கிரியேட்டர்ஸ்கிட்ட சிக்குச்சு. தங்கமகன் படத்தையும் சன் டிவி சீரியலையும் ஒப்பிட்டு வந்த மீம்ஸை மறக்கமுடியுமா என்ன?

தொடரி:

உண்மைய சொல்லணும்னு ட்ரெய்லருக்குக் கூட பெருசா வரவேற்பு இல்லாம போன படம் இதுதான். ட்ரெய்லர் மிக சுமாராக இருந்ததால் படத்தின் மீது எதிர்பார்ப்பு இல்லாமல்தான் இருந்தது. பொதுவா தனுஷ் படங்களுக்கு இருக்கும் ஆர்ப்பாட்டமே இல்லாம வெளியானது படம். பிரபு சாலமன், கீர்த்தி சுரேஷ், இமான், மற்றும் காமெடிக்கு ஒரு பெரிய பட்டாளம் எல்லாத்துக்கும் மேல ஹாலிவுட் ஸ்டைலில் ரயிலில் மட்டும் நடக்கும் கதைக்களம் என இவ்வளவு இருந்தும் அந்த சுமாரான எதிர்பார்ப்பையும் ஈடுசெய்ய முடியாமல் போனதுதான் சோகம்.

கொடி:

தொடர் தோல்விகள் என்ற நிலையில் முதல்முறையாக இரட்டைவேடத்தில் தனுஷ் என்றதும் உற்சாகம் ஆனார்கள் தனுஷ் ரசிகர்கள். இருந்தும் முந்தைய தோல்விப்படங்களால் வி.ஐ.பி, மாரி ட்ரெய்லர்களுக்கு கிடைத்த வரவேற்பு இல்லைனாலும் கொடி ட்ரெய்லருக்கு தொடரி அளவு மோசமான வரவேற்பு இல்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் சென்ற ரசிகனுக்கு நல்ல படமாகவே இருந்தது கொடி. நல்ல வசூலும் வந்தது. 

தனுஷ் என்று இல்லை, இந்த ராசி தமிழ் சினிமாவில் நிறைய பேருக்கு உண்டு. உதாரணம்: சூர்யாவுக்கு மாற்றான், அஞ்சான். ரசிகர்களை வெறும் ட்ரெய்லரை வச்சு மட்டுமே திருப்திப்படுத்த முடியாதுனு தமிழ் ஹீரோக்களுக்கு திரும்பத் திரும்ப நிரூபிக்கிறது இந்த சம்பவங்கள்தான். ஆக, இனிமே கதைலயும் கொஞ்சம் கவனம் செலுத்துங்க நாயகர்களே!