Published:Updated:

'பேரை மாத்திக்கிட்டு வா... சேர்த்துக்கிறேன்..!' - கபாலி நடிகரின் கடந்த காலம் : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் part 5

விக்னேஷ் செ
'பேரை மாத்திக்கிட்டு வா... சேர்த்துக்கிறேன்..!' - கபாலி நடிகரின் கடந்த காலம் : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் part 5
'பேரை மாத்திக்கிட்டு வா... சேர்த்துக்கிறேன்..!' - கபாலி நடிகரின் கடந்த காலம் : கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் part 5

தெற்குப் பக்கமிருந்து வாய்ப்புத் தேடி வருபவர்களுக்குத்தான் சினிமா செவ்வாய்க் கிரகத் தொலைவில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. விழுப்புரம், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் உள்ளோரும் கோடம்பாக்கத்தின் கருணைப் பார்வைக்கு ஆண்டாண்டு காலமாகக் காத்திருந்த கதைகளும் நிகழ்ந்திருக்கின்றன. சம காலத்திலும் இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம். ஒரு வட மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர், சினிமா டைரக்டரியின் பக்கங்களுக்குள் நுழைந்த கதையைப் பார்ப்போம். 

மரக்காணத்தில், தலைமுறை தலைமுறையாகவே கூத்துக்கட்டும் குடும்பத்தைச் சேர்ந்தவர். சினிமா உலகில் டைரக்டராக ஜெயிப்பதற்காகவே சென்னைக்குப் படிக்கவந்தவர் அவர். சென்னைக்குப் போயிட்டா, வீட்டு எஜமானர்கள் எந்திரிக்கிறதுக்குள்ள பால் பாக்கெட், டெய்லி பேப்பர் வீட்டு வாசல்ல கிடக்கிறமாதிரி  ஈஸியா சினிமாவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்திருக்கிறார். நல்ல இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநர் ஆகவேண்டும் என்பதுதான் அவரது அப்போதைய ஆசை. ஆனால், அசிஸ்டென்ட் டைரக்டராகச் சேர்த்துக்கொண்டு அவரோடு டிஸ்கஸ் செய்வதற்கு தமிழ் சினிமாவில் அப்போது யாரும் தயாராக இல்லை. 1997-ல் சினிமா வாய்ப்புத் தேட ஆரம்பித்தவருக்குப் பத்து வருடங்களுக்குப் பிறகும் யாரும் வாய்ப்புத்தரத்  தயாராக இல்லை. காரணம் என்ன தெரியுமா..?

சிவாஜி ராவ் ரஜினிகாந்த் ஆனார்... விஜயராஜ் விஜயகாந்த் ஆனார்... சரவணன் சூர்யா ஆனார்... சரிதான். இவர்கள் எல்லோருக்கும் சினிமாவுக்காகத் தங்கள் இயற்பெயர்களை இழப்பதில் எந்தப் பிரச்னையுமில்லை. ஆனால், தலித் சாதிய அடையாளம் இருக்கிற ஒரே காரணத்திற்காக, 'பேரை மாத்திக்கிட்டு வா... சேர்த்துக்கிறேன்...' எனும் வார்த்தைகளை இந்த நடிகர் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கும் மேலாக காதில் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். சமீபத்தில் எழுத்தாளர் பெருமாள் முருகன், தீவிரமான எழுத்துப் பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்பு, தனது துயர்நிறைந்த நாள்களைப் பற்றி 'கோழையின் பாடல்கள்' எனும் தொகுப்பில் எழுதிய கவிதையொன்று நினைவுக்கு வருகிறது. 

“உங்கள் வாழ்க்கையில்
  ஒரே ஒரு நாளை
  ஒரே ஒரு நாளை உங்களால்
  ஒருபோதும் மறக்க முடியாது
  உங்கள் கண்ணெதிரே
  நீங்கள் கொல்லப்பட்ட நாள்.”

                                      - பெருமாள் முருகன் ('கோழையின் பாடல்கள்' தொகுப்பிலிருந்து...)

இந்தக் கவிதைக்கும் இந்த நடிகரின் அனுபவத்திற்கும் நிறையத் தொடர்பு இருக்கிறது. கட்டுரையைத் தொடர்ந்து வாசித்தால் உங்களுக்கே புரியும். 'கிரீடம்' படத்தில் கும்பலில் ஒருவராக நின்றவர், இயக்குநர் சற்குணத்தின் நட்பால், 'களவாணி' படத்தின் மூலம் சொல்லிக்கொள்ளும்படியாகத் திரையில் தோன்ற ஆரம்பித்தார். அந்தப் படத்தின் கன்னட ரீமேக்கில் இவரது கேரக்டர் கொஞ்சம் மெருகூட்டப்பட்டது. 'வத்திக்குச்சி' படத்தில் நல்ல ரோலில் வந்தாலும் படம் சுமாராகப் போனதால் பேசப்படவில்லை. 2009-ல் அசோசியேட் டைரக்டராகப் பணிபுரிந்த 'கறுப்பர் நகரம்' படம் எதிர்பாராவிதமாகத் திரைக்கு வரவில்லை. 

நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தவருக்கு இயக்குநர்கள் ராஜுமுருகன், பா.ரஞ்சித் போன்றோர் உதவ, தற்போது அடுத்த கட்டத்திற்குத் தயாராகி வருகிறார். இப்போது அவர் 'குக்கூ', 'மெட்ராஸ்', 'கபாலி', லென்ஸ்' எனப் பேர் சொல்லக்கூடிய வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். இப்போது சினிமாவில் ஓரளவு தெரிந்த முகமாகிவிட்டார்தான். ஆனால், இதற்குப் பின்னால் அவர் சந்தித்த சங்கடங்களும், உணர்ந்த வலிகளும் கொஞ்சம் வித்தியாசமானவை. 

'தான் போதைக்கு அடிமையான நாள்களைப் பத்தி 'வாரணம் ஆயிரம்' படத்துல சூர்யா சொல்வார்ல... 'என் வாழ்க்கையில் நான் மறக்கணும்னு நினைக்கிற கேவலமான நாட்கள்...'னு. அப்படியான நாள்கள்தான் நான் சினிமாவுக்கு வாய்ப்புத்தேடி அலைஞ்சப்போ வேற வழியில்லாம என் பேரை அசோக்னு மாத்திச் சொல்லிக்கிட்டுத் திரிஞ்ச மூணு வருச காலம். சினிமாவுல வாய்ப்புத் தேடுற எல்லோருக்குமே சுலபமா வாய்ப்புகள் கிடைச்சிடாதுங்கிறது உண்மைதான். ஆனால், நான் வித்தியாசமான காரணத்தால எல்லா இடங்களிலேயும் நிராகரிக்கப்பட்டேன் என்பதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை' எனப்  பொருமலாகப் பேசத் தொடங்கினார் அம்பேத். 

'எல்லா வகையான மனிதர்களும் சகஜமாகப் புழங்குகிற சினிமாவிலேயே சாதி சார்ந்த பிரிவினைகள் இருக்கிறதை ஏத்துக்க முடியலை. அம்பேத்கர்னு என் பெயரைச் சொன்னாலே பேர் மாத்திக்கிட்டு வந்து சான்ஸ் கேளுன்னு சொன்னவங்க இருக்காங்க. ஒருத்தனோட அடையாளத்தைப் பறிச்சுட்டு அவனுக்கு உதவி செய்யணும்னு இவங்களுக்கு எப்படி சார் தோணுது..? தலித் என்றாலே குனிஞ்சுதான் நிக்கணும்னு சொல்ற இவங்கதான் நாளைக்கு உலகத்தைப் புரட்டிப் போடுறமாதிரி படங்கள் எடுக்கப் போறாங்களா..? என் தாத்தா எப்படிப் பேசுவார்னு எனக்குத் தெரியும்... அவரை மாதிரி நடிக்கணும்னா குனிஞ்சுதான் நிக்கணும்னு உங்களால எப்படிச் சொல்ல முடியும்...?' பேசிய வார்த்தைகள் முழுவதும் ஆத்திரம் தடவியே வந்து விழுந்தன. 

'சீக்கிரமா ஒரு படம் இயக்கப் போறேன்... என்கூடவே அசிஸ்டென்ட்டா சேர்ந்துக்கனு ஒரு கோயம்புத்தூர்காரர் சொன்னார். நானும் இன்னும் சிலரும் ரெண்டு வருசம் அவர்கூட இருந்தோம். படத்துக்குக் கதை டிஸ்கஸ் பண்ணுவோம். ஸ்க்ரிப்ட் எழுதுவோம். பட வேலை எல்லாம் எழுத்து அளவுலயே இருந்துச்சு. ரெண்டு வருசமா பேசிக்கிட்டே இருந்தாரே தவிர ஒரு படமும் எடுக்கலை. அப்போ மட்டும் இல்லை. அதுக்கு அப்புறமும் அவர் இன்னும் படம் எடுக்கலை. அவர் கூட இருந்தவங்கள்ல ரெண்டு பேர் படங்கள் இயக்கிட்டாங்க. அப்போதான் நல்லவேளையா அவர்கிட்டே இருந்து எப்படியோ தப்பிச்சு வந்துட்டோம்னு தோணுச்சு.

இப்போ ஷார்ட்ஃபிலிம் தான் சினிமாவுக்கான ஆதார் அட்டை. சினிமாவுக்கு வரணும்னா ரெண்டு மூணு ஷார்ட் ஃபிலிம் எடுத்திருந்தா போதும். வெகு சுலபமா பெரிய தயாரிப்பாளர்களிடமே பேசி படம் எடுத்துடலாம். ஃபேஸ்புக், ட்விட்டர் காலத்தில் பெரிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடம் எளிதாக அப்ரோச் பண்ண முடியுது. அந்தக் காலத்தில் சந்திக்க்கிறதே குதிரைக்கொம்பா இருக்கும். 'அழகி' படம் பார்த்துட்டு தங்கர் பச்சானைப் பார்க்கப் போனேன். 'உங்களைப் பார்க்க வந்தேன்'னு சொன்னதும் அப்படியா ரைட்டுனு கிளம்பிட்டார். வாய்ப்புத் தேடி வர்றவங்க அடக்கமா, பணிஞ்சு பேசணும்னு எதிர்பார்ப்பாங்க போல. சினிமா வாய்ப்புத் தேடுறவங்களுக்குத் தன்மானம் இருக்கக்கூடாதுனு இன்னும் போர்டு மட்டும்தான் மாட்டலை. இப்படி உதாரணத்துக்குப் பல சந்திப்புகளைச் சொல்லலாம்.

'கேஸ்ட்... வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்..?'னு கேட்குற இயற்கையான முற்போக்குவாதிகளும் இருக்காங்க. அவங்களைப் பத்திப் பிரச்னையே இல்லை. பேச்சளவில் சாதிய மறுப்பாளராகவும், வாழ்க்கையில் அதற்கு எதிர்மறையாகவும் வாழுகிற சிலரால்தான் வில்லங்கம். தலித்களை ஒடுக்குகிற அத்தனை வேலையையும் சினிமாக்காரங்களும் பண்றாங்க. சமத்துவம் எல்லாத் துறைகளிலும் பரவணும். எனக்குப் பிறகும், இன்னொருவன் தன் பெயரால் வாய்ப்பை இழக்கிற நிலை வரக்கூடாது.'

கடந்த வார 'நீயா நானா' விவாத நிகழ்ச்சியில் பெயருக்குப் பின்னால் சாதிப்பெயர் போட்டுக்கொள்பவர்களுக்கும், அதற்கு எதிர்வினை ஆற்றுபவர்களுக்கும் இடையேயான விவாதம் நடைபெற்றது. பெயரே சாதிய அரசியலாகப் பார்க்கப்பட்டு ஒதுக்கப்படும் அவலமும் சினிமாத்துறை உள்பட எல்லா இடங்களிலும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

ஊர்த் தெருக்களின் திசைகாட்டிப் பலகையைப் போல, சினிமாவில் சாதிக்கத் துடிக்கிறவர்களின் ஆரம்பகால அனுபவங்கள் அடுத்து வருபவர்களுக்கு  வழிகாட்டியாக மாறலாம். புதிதாக வருபவர்கள் எதிர்கொள்ளவேண்டிய பிரச்னைகளையும் தொடர்ந்து விவாதிக்கலாம். 

- இன்னும் ஓடலாம்...