Published:Updated:

மூன்றாம் பிறை, ரமணா-லாம் ரிலீஸானப்போ ஸ்மார்ட்போன் இருந்திருந்தா...? #FunnyRewind

நித்திஷ்
மூன்றாம் பிறை, ரமணா-லாம் ரிலீஸானப்போ ஸ்மார்ட்போன் இருந்திருந்தா...? #FunnyRewind
மூன்றாம் பிறை, ரமணா-லாம் ரிலீஸானப்போ ஸ்மார்ட்போன் இருந்திருந்தா...? #FunnyRewind

ஒரு காலத்தில் நாம் சிலிர்த்துப் போய் சில்லறைகளை விட்டெறிந்து, கத்தி கத்தி தொண்டை புண்ணாகிப் போய் பார்த்த படங்களை எல்லாம் இப்போது பார்க்கும்போது கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. கூடவே 'இப்போ இருக்குற டெக்னாலஜி எல்லாம் இந்த படம் ரிலீஸானப்போ இருந்திருந்தா எப்படி இருக்கும்?' என்ற நினைப்பும் வரும். அப்படி 90களில் வெளியான சில படங்களில் ஸ்மார்ட்போன் இருந்திருந்தால் என்ன ஆயிருக்கும் என்ற ஜாலி கற்பனைதான் இது.

உள்ளத்தை அள்ளித் தா:

கார்த்திக் - கவுண்டமணி காம்போவின் எவர்க்ரீன் ஹிட். ஸ்ட்ரிக்ட் அப்பாவின் டார்ச்சர் தாங்காமல் வீட்டைவிட்டு ஓடி ஊட்டியில் பதுங்குவார் கார்த்திக். அவரைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு மணிவண்ணனிடம் வரும். போட்டோ அனுப்பியிருந்தால் கூட படம் முடிவதற்குள் வந்து சேர்ந்திருக்கும். மோதிரத்தை எல்லாம் குறியீடாக வைத்து ஆள் மாறாட்டம் செய்து கடைசியில் மணிவண்ணனுக்கே க்ரூப்ல டூப்பு நடத்துவார்கள். அந்தக் காலத்தில் ஸ்மார்ட்போன் இருந்திருந்தால் ஒரே ஒரு போட்டோ. மெயிலில் அனுப்பி மெசஞ்சரில் ஷேர் செய்து சட்டென ரம்பாவோடு கட்டி வைத்திருப்பார்கள். இதுக்கு ஏன் டெம்போ எல்லாம் வச்சு கடத்தி...?

காதல் கோட்டை:

ஒரே ஒரு கஸ்டமைஸ்ட் டிஷர்ட்... அதை சுற்றி எவ்வளவு பஞ்சாயத்துகள்? சென்னையில் தொலைத்த சான்றிதழ்கள் ஜெய்ப்பூரில் அஜித் கையில் மாட்ட, அதன் பின் காதல் கடிதங்கள் தீட்டி கண்ணோடு கண் பார்த்து இணைவார்கள். ஒருவேளை அஜித் மட்டும் அந்த சட்டையை கழற்றாமல் இருந்திருந்தால்... ஓ மை காட்! இதுவே டெக்னாலஜி இருந்திருந்தால் ஒரே ஒரு லெட்டர் மூலம் நம்பர் ஷேர் செய்து ஸ்கைப்பில் பேசி காதல் வளர்த்திருப்பார்கள். எதுக்கு இப்படி ஸ்டேஷன்ல படி ஏறி இறங்கணும்?

துள்ளாத மனமும் துள்ளும்:

ஹீரோ பெயர்தான் குட்டி. படம் ரொம்ப நீளம். விஜய்யின் குரல்வளத்தைக் கேட்டே காதல் கொள்ளும் சிம்ரனால் அவர் முகத்தைப் பார்க்க முடியாமல் போக, ஐ.ஏ.எஸ் எக்ஸாம், சிறைவாசம் எல்லாம் கடந்து கடைசியில் இன்னிசை பாடி இருவரும் இணைவார்கள். அதுவே ஸ்மார்ட்போன் யுகமாக இருந்திருந்தால் ஸ்மூலில் பாடி அதை ஃபேஸ்புக்கில் அப்லோடியிருப்பார் விஜய். அவரை ஃபாலோ செய்து கடலை போட்டு கமிட் ஆகியிருப்பார் சிம்ரன். மேட்டர் ஓவர்!

பூமகள் ஊர்வலம்:

கதைக்கு நடுவே லாஜிக் ஓட்டைகள் இருக்கலாம். லாஜிக் ஓட்டைகளுக்கு நடுவே கதை (அ) கதை எனச் சொல்லப்படுவது இருந்தால், அதுதான் பூமகள் ஊர்வலம் படம். தரகர் செய்யும் தகராறால் போட்டோ மாறிப்போக ஒரே பெண்ணை பார்க்க வெத்தலை பாக்கோடு இரண்டு குடும்பங்கள் வரும். அதன்பின் நடக்கும் காமெடி பஞ்சாயத்துகள்தான் கதை. அந்த சமயத்தில் ஸ்மார்ட்போனும் வாட்ஸ் அப்பும் இருந்திருந்தால் குழப்பமே இல்லாமல் கல்யாணம் முடிந்திருக்கும். லிவிங்ஸ்டனை அமெரிக்க மாப்பிள்ளையாக பார்க்கவேண்டிய கொடுமைக்கு நாமும் ஆளாகியிருக்க மாட்டோம்.

மூன்றாம் பிறை:

கார் விபத்தில் அடிபட்டு நினைவுகளை இழக்கும் ஶ்ரீதேவியை 'கண்ணே கலைமானே' என வெகு சிரத்தையாய் பார்த்துக்கொள்வார் கமல். ஆனால், நினைவு வந்தவுடன் கமலுக்கு குட்பை சொல்லிவிட்டு ரயிலேறிவிடுவார் ஶ்ரீதேவி. க்ளைமாக்ஸில் ஶ்ரீதேவியை தவிர அனைவரையும் அழ வைக்கும் க்ளாஸ் நடிப்பு கமலால் மட்டுமே சாத்தியம். ஆனால் ஸ்மார்ட்போன் இருந்திருந்தால் இருவரும் சேர்ந்து விளையாடிய வீடியோக்களை போட்டுக் காண்பித்து ஶ்ரீதேவியை மனம் மாற்றியிருக்கலாம். நாமும் கண்ணீர் சிந்த வேண்டியது இருந்திருக்காது. கொஞ்சம் பழைய படம்தான். ஆனா, இப்போ எல்லாம் கண்ணீர் is precious!

ரமணா:

கேப்டனின் க்ளாஸிக் சினிமா. லஞ்சம் வாங்குபவர்களின் பெயர்களை எல்லாம் விண்டோஸ் ப்ளேயரில் சேவ் செய்து அதில் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கும் ஆசாமிகளை போட்டுத் தள்ளும் கேங் லீடராக கேப்டன். அவ்வளவு பெரிய நெட்வொர்க்கை மெயின்டைன் செய்வதற்கே தாவு தீர்ந்து போயிருக்கும். ஸ்மார்ட்போன் மட்டும் இருந்திருந்தால் சிம்பிளாக ஒரு வாட்ஸ் அப் க்ரூப் ஆரம்பித்து ஆட்களை போட்டுத் தள்ளியிருக்கலாம். கோபத்தில் யாராவது வெளியேறி போய் போலீஸிடம் போட்டுக்கொடுத்தால்தான் உண்டு!