Published:Updated:

'கிடாயின் கருணை மனுவை பைசல் பண்ண, அரும்பாடுபட்டு போராடினோம்!' - ஹலோ கந்தசாமி கல கல

தார்மிக் லீ
'கிடாயின் கருணை மனுவை பைசல்  பண்ண, அரும்பாடுபட்டு போராடினோம்!' - ஹலோ கந்தசாமி கல கல
'கிடாயின் கருணை மனுவை பைசல் பண்ண, அரும்பாடுபட்டு போராடினோம்!' - ஹலோ கந்தசாமி கல கல

'அரும்பாடுபட்டுத்தான் இந்தப் படத்தையே முடிச்சோம் தம்பி' என அதே கிராமத்து ஸ்லாங்கோடு அவர் வாழ்க்கையில நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைச் சொல்ல ஆரம்பித்தார் ஹலோ கந்தசாமி. விமர்சகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கும் 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் நடித்திருக்கிறார். 

''நீங்க நாடகங்கள் சிறப்பா நடிப்பீங்கன்னு கேள்விப்பட்டோம். அந்த அனுபவங்களைக் கொஞ்சம் சொல்லுங்க..?''

''என் சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கத்துல ஒரு கிராமம். படிக்குற காலத்துலேயே நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கேன், படிச்சு முடிச்சுட்டும் நான் நாடகத்துறையிலதான் போய்ச் சேர்ந்தேன். இதுவரைக்கும் 350 நாடகங்களுக்கு மேல் நடிச்சிருக்கேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க நாடக மேடைகள்ல நடிச்சுருக்கேன். அப்புறம் மதுரை நகைச்சுவை மன்றத்தோடு இணைந்து பல ஆண்டு விழாக்களில் நடிச்சிருக்கேன். நான் நடிக்கிற நாடகங்களில் எல்லாவற்றிலும் நகைச்சுவையோட சேர்த்துச் சில கருத்துகளையும் சொல்லுவேன். அதுனால அந்த மன்றத்துல இருக்குற ஞானசம்பந்தர் அய்யா எனக்கு கருத்து கந்தசாமினு பெயர் வெச்சாங்க. அங்கே இருக்கும்போது முருக பூபதி என்பவரோடு பழக்கம் கிடைச்சது. அவரோடு இணைந்து கூத்துப் பட்டறையில வேலை செய்தேன். 2003-2004-ம் ஆண்டு 'காட்டுக்குள் ட்ராமா'னு ஒண்ணு ஆரம்பிச்சேன். அப்போ விகடன்ல கூட இது தொடர்பான கட்டுரை வெளிவந்தது. அங்க பார்க்க வரும் மக்களுக்கு இலவசமா கம்மங்கூழும், கருவாட்டுக் குழம்பும் கொடுத்து வரவேற்றோம். மாட்டு வண்டி கட்டி நாடகம் பார்க்க வேற ஊர்ல இருந்து மக்களை வர வெச்சோம். இப்படி அரும்பாடுபட்டு நாடகங்கள் நடத்திக்கிட்டு இருக்கும்போதுதான் சினிமாவுல நடிக்குற வாய்ப்பு கிடைச்சது.''

''அரும்பாடுபட்ட உங்க சினிமா பயனத்தைப் பற்றி சொல்லுங்க?''

''நான் முருக பூபதியோட கூத்து பட்டறையில நடிச்சிட்டு இருக்கும்போது செல்வம் என்பவரோட பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் 'பூ' படத்தின் உதவி இயக்குநர். அவர் சசி சார்கிட்ட என் பெயரைச் சொல்லி 'அவர் நல்லா நடிப்பார், ஊர் வட்டாரப் பேச்சு எல்லாம் அவருக்குக் கை வந்த கலை, இந்த கதாபத்திரத்துக்கு கரெக்டா இருப்பார்'னு சொல்லி என்னை அறிமுகம் செய்து வைத்தார். அப்படி எனக்குக் கிடைச்ச முதல் ரோல்தான் அந்த 'ஹலோ' டீக்கடை கேரக்டர். அதுக்குப் பிறகுதான் 'கருத்து' கந்தசாமியில இருந்து 'ஹலோ' கந்தசாமினு பெயர் வந்தது. ஆனால் இதுக்கு முன்னாடியே 'வல்லரசு' படத்துலயும் நடிச்சிருக்கேன். அந்தப் படத்தின் இயக்குநர் மகாராஜா என்னைப் பார்த்து, 'முடியை வெட்டி நல்லா ஸ்மார்ட்டா வா'னு சொல்லி அனுப்பி வைத்தார். நானும் முடியை சூப்பரா வெட்டி ஹீரோ மாதிரி வந்து எனக்கான ரோலில் நடிசேன். படம் ரொம்ப நீளமா வந்ததால் நான் நடிச்ச காட்சிகளை கட் பண்ணிட்டாங்க. நான் வேற சும்மா இல்லாம ஊருக்குள்ள நான் இந்தப் படத்துல நடிச்சுருக்கேன்னு பில்டப் பண்ணி வெச்சுருந்தேன். படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் என் நண்பர் எனக்கு போன் பண்ணி 'படம் நல்லா இருக்கு ஆனா உன்னை மூலையில கூட காட்டலையே'னு சொன்னார். அதுக்கு நான் 'நீ படம் எங்க பார்த்த'னு கேட்டேன். அதுக்கு என் நண்பன் 'மதுரையில'னு சொன்னான். 'அடப்பாவி நீ போய் மானாமதுரையில பார் நான் அங்க வருவேன்'னு சொல்லி சமாளிச்சேன். இப்படி அரும்பாடுபட்டு ஆரம்பிச்சதுதான் என் சினிமா பயணம்."

'' 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் 'அரும்பாடுபட்டு' கதாபாத்திரம் எப்படி கிடைச்சது?''

''நான் இருக்கும் கிராமங்களிலேயே நிறைய கேரக்டர்கள் இது மாதிரி இருப்பாங்க. அதுவும் கிராமத்து ரோல்னா எனக்கு ரொம்ப ஈசி. ரெண்டு வருடங்களுக்கு முன்னாடி விதார்த் தம்பி இந்தப் படத்தை எடுப்பதாக இருந்தது. அதன் பின், படத்தின் இயக்குநர் என்னைச் சந்தித்து 'இந்தப் படத்தில் உங்களுக்கு ஒரு ரோல் இருக்கு'னு சொல்லி 'கட்டெரும்பு' கதாபாத்திரத்துக்கு என்னை முடிவு பண்ணியிருந்தார். நான் பொதுவாக படத்தின் கதையையெல்லாம் பற்றிக் கவலைப் பட மாட்டேன். ஆனால் அந்தப் படத்தின் இயக்குநர் என்னிடம் ஸ்க்ரிப்டை கொடுத்து படித்துப்பார்க்கச் சொன்னார். அதைப் படித்து இயக்குநரிடம் சென்று 'நான் அந்த அரும்பாடு கேரக்டர் பண்றேன் தம்பி, எனக்கு அது சூட் ஆகும்னு தோணுது'னு சொன்னேன். 'சரி சந்தோஷமா பண்ணுங்க'னு சொல்லி என்னை நம்பிப் பண்ணச் சொன்னார். நானும் ஒரு முறை இயக்குநரிடம் பாடியும் காமிச்சேன். அது அவருக்குப் பிடித்துப் போய் டைட்டில் சாங்ல எனக்குப் பாடும் வாய்ப்பையும் கொடுத்தார்."

''நடிக்கும்போது வேற எதாவது சுவாரஸ்யமான நிகழ்வுகள்..?''

''அட ஏன் தம்பி கேட்குறீங்க, இந்தப் படத்தை முடிச்சதே பெரும்பாடுதான். 28 நாளும் ஒட்டுமொத்தப் படக்குழுவையும் சேத்தூர் மலைக் காட்டுக்குள் கொண்டுபோய் விட்டாங்க. அங்க ரோடு கூட இல்லை, படக்குழுவே முடிவு பண்ணி அவங்க செலவுல ரோடு போட்டாங்க. அங்க யானை நடமாட்டம் வேற அதிகமா இருந்ததால் அகழிக் குழிகளை வெட்டி வெச்சுருந்தாங்க. அந்தப் பாதையில விறகு வெட்டப்போகும் ஆட்கள் அந்த வழியா போயிட்டு சாயங்காலம் திரும்ப வருவாங்க. அப்படி வரும்போது ஒருத்தரைக் கரடி தொரத்திட்டு வந்ததை நானே என் கண்ணால பார்த்தேன் தம்பி. அப்புறம் எனக்கு அங்கே தூக்கமே வரல, சுத்திமுத்தியும் பார்த்துட்டேதான் இருந்தேன். நல்லவேளை நாங்க இருக்கும்போது மழை வரல, தேங்குன தண்ணியைக் குடிக்க யானைகள் வருமாம். எங்கிட்டு யானை வந்து தூக்கிட்டுப் போயிடும்னு பயந்துக்கிட்டேதான் இருந்தேன். இப்படியெல்லாம் அரும்பாடுபட்டுத்தான் அந்தப் படத்தையே முடிச்சோம். இவ்ளோ கஷ்டப்பட்டதுக்குப் படமும் நல்லா வந்துருச்சு.'' 

''அடுத்தகட்ட ப்ளான்?''

''நான் இதுவரைக்கும் 15 படங்கள்ல நடிச்சிருக்கேன். அவை எல்லாம் ரிலீஸ் ஆகுறதுக்கு வெயிட் பண்றேன். இன்னும் வர்ற படங்கள்லேயும் அரும்பாடுபட்டு நடிக்கணும்..." எனச் சொல்லிச் சிரித்துக்கொண்டே கிளம்பினார்.