Published:Updated:

‘சன்யாசி புலித்தோல் மீது தூங்குவான்... சம்சாரி புலியுடனே தூங்குவான்!’ - பார்த்திபனின் ‘செம’ ஸ்பீச்

‘சன்யாசி புலித்தோல் மீது தூங்குவான்... சம்சாரி புலியுடனே தூங்குவான்!’ - பார்த்திபனின் ‘செம’ ஸ்பீச்
‘சன்யாசி புலித்தோல் மீது தூங்குவான்... சம்சாரி புலியுடனே தூங்குவான்!’ - பார்த்திபனின் ‘செம’ ஸ்பீச்

லிங்க பைரவி க்ரியேஷன்ஸுடன் பசங்க புரொடக்‌ஷன்ஸ் பாண்டிராஜ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'செம'. அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னையில்  நடந்தது. படத்தில் பணியாற்றியவர்களுடன் நடிகர் ஆர்யா, பார்த்திபன், சூரி, சதீஷ், மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எனப் பலரும் கலந்துகொண்ட விழாவில், ட்ரெய்லர் மற்றும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன.

காமெடி நடிகர்கள் சதீஷும் சூரியும் விழாவின் ஒரு பகுதியை கலகலப்பாகத் தொகுத்து வழங்கினர். சூரி பேசும்போது, ``வருமானவரித் துறை அதிகாரி என் வீட்டுக்கு போன்போட்டு, `நான் உங்கள் வீட்டுக்கு வர இருக்கிறேன்' என்றார். நான் `ஏன்?' என்றேன். `நீங்கள் நிறைய படம்  நடிக்கிறீங்க. வருமானம் அதிகமாக இருக்கும்' என்றார். நான் உடனே `என்னைவிட அதிகமான படங்களில் ஜி.வி நடிக்கிறார். அவர் வீட்டுக்குப் போங்கள். உங்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும்' என்றேன்'' - கூறி முடித்ததும் அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

சதீஷ் இளமைக் குறும்புடன் பேசும்போது, ``நானும் ஜி.வி.பிரகாஷும் `4ஜி' படத்தில் நடிக்கிறோம். ஒருநாள் இருவரும் விமானத்தில் சென்றுகொண்டிருந்தோம். அப்போது ஜி.வி-யிடம் `மச்சி, நீ இப்போ எத்தனை படத்துல நடிக்கிறே?' என்றேன். `ஏழு படங்கள்' என்றார். விமானத்தைவிட்டு இறங்கிய பிறகு `மச்சி எத்தனை படம் சொன்னே?' என்றேன்.  `11'  என்றார். `அதுக்குள்ள எப்படிடா?' என்றேன். `புதுசா  நாலு படம் இப்போ புக் ஆகியிருக்கு' என்றார். அந்த அளவுக்கு பிஸியாக இருக்கும் நடிகர் ஜி.வி.பி-யின் படம் வெற்றிபெற ஒரு நண்பனாக வாழ்த்துகள்'' என்றார்.

படத்தில் கதாநாயகி அர்த்தனாவின் அப்பாவாக நடித்திருக்கும் மன்சூர் அலிகான் பேசும்போது, ``இயக்குநர் வள்ளிகாந்த், குறைந்தது 40 டேக் ஆவது எடுப்பார். கொஞ்சம்கூட திருப்தியே அடைய மாட்டார். டப்பிங்கில்கூட 'ஏய்' என்ற டையலாக்குக்கு 29 டேக் வரை எடுத்தார். இவரை யாராலும் ஏமாற்றவே முடியாது'' என்றார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பார்த்திபன் பேசும்போது, ``ஜி.வி என்றால் `கேர்ள்ஸ் வியூ' என்றுதான் அர்த்தம். பெண்களின் பார்வை ஜி.வி.பிரகாஷ்மீது பிரகாசமாக வீசுகிறது. சம்சாரிக்கும் சன்யாசிக்கும் வித்தியாசம் என்னவென்றால், சன்யாசி புலித்தோல்மீது தூங்குவான்; சம்சாரி புலியுடனே தூங்குவான். அப்படி புலியுடன் தூங்குபவன்தான் ஜி.வி.பிரகாஷ். இரண்டு வரி திருக்குறளில் எப்படி அதிக பொருள் உள்ளதோ, அதேபோல் ஜி.வி என்ற மெல்லிய உருவத்துக்குள் அபார திறமையுள்ளது. 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தின் ஆடியோவுக்காக அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்த வருத்தம் எனக்கும் உள்ளது. ஜி.வி-க்கு வருங்காலத்தில் கிராமி விருதே கிடைக்கும். அதற்கு என் வாழ்த்துகள்'' என்றார்.

2டி என்டர்டெயின்மென்ட்டைச் சேர்ந்த ராஜசேகர் பாண்டியன் பேசும்போது, `` 2டி நிறுவனத்தின் அடுத்த படத்தை கார்த்தி நடிக்க, பாண்டிராஜ்தான் இயக்கப்போகிறார். இந்தச் செய்தியை இங்கே சொல்வதற்காக மிகவும் சந்தோஷப்படுகிறேன்'' என்றார்.

'செம' படத்தின் இயக்குநர் வள்ளிகாந்த் பேசும்போது, ``இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த என் இயக்குநர் பாண்டிராஜ் சாருக்கு நன்றி.  ஜி.வி.பிரகாஷ் ஒரு குழந்தை மாதிரி. அதனால்தான் இந்தப் படத்தில் அவருக்குப் பெயரே `குழந்தை' என வைத்துள்ளேன். இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்-யோகி பாபு காம்போ நன்றாக வந்துள்ளது. எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி'' என்று கூறினார்.

கடைசியாகப் பேசிய பாண்டிராஜ், ``என்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றியபோது அதிக திட்டுவாங்கியவன் வள்ளிகாந்த். அவன் எப்போதும் உண்மையாக இருப்பான். முகத்துக்கு நேராகப் பேசக்கூடியவன். அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்துதான் இந்தப் படத்தை எடுத்தேன். கூடியவிரைவில் ஜி.வி.பிரகாஷுடன் ஒரு படத்தில் இணைவேன்'' என்றார்.