Published:Updated:

கௌதம் கார்த்திக்கின் ஐந்தாவது படம்... தம்ஸ்-அப் சொல்கிறதா?- ‘ரங்கூன்’ விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
கௌதம் கார்த்திக்கின் ஐந்தாவது படம்... தம்ஸ்-அப் சொல்கிறதா?- ‘ரங்கூன்’ விமர்சனம்
கௌதம் கார்த்திக்கின் ஐந்தாவது படம்... தம்ஸ்-அப் சொல்கிறதா?- ‘ரங்கூன்’ விமர்சனம்

கௌதம் கார்த்திக்கின் ஐந்தாவது படம்... தம்ஸ்-அப் சொல்கிறதா?- ‘ரங்கூன்’ விமர்சனம்

‘பிறப்பதும், இறப்பதும் சுலபம். இதற்கு நடுவில் வாழ்வதுதான் கஷ்டம்’ என்னும் கெளதம் கார்த்திக்கின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்னைகளும், துரோகமும்தான் ரங்கூன். 

80-களில் பர்மாவிலிருந்து அகதிகளாக பலர் இந்தியாவிற்கு வந்து செட்டிலானார்கள். அப்படி கெளதம் கார்த்திக் குடும்பம் சிறுவயதில் சென்னை வருகிறார்கள். கெளதம் வளர்ந்ததும், செளக்கார்பேட்டையில் உள்ள 'சீயான்’ என்றழைக்கப்படும் கடத்தல் வியாபாரி  சித்திக்கிடம் வேலைக்குச் சேர்கிறார். தன்னுடைய இரண்டு நண்பர்களோடு சேர்ந்து, சித்திக்கின் கடத்தல் தொழில் தொடர்கிறார் கெளதம். இதற்கு நடுவே சனா மக்பூல் மீது காதல். காதலுக்காக கடத்தல் தொழிலைவிட நினைக்கும் கெளதமிற்கு சித்திக் கடைசியாக ஒரு அசைன்மென்ட் தருகிறார். அதில் நிகழும் பிரச்னை, அதைச் சமாளிக்க செய்யும் தவறுகள், இதற்கெல்லாம் யார் மாஸ்டர் ப்ளான் என்ற ட்விஸ்டுகள்தான் ரங்கூன்.

டல் மேக்கப்பில் பர்மா ரிட்டர்னாகவே பளிச்சிடுகிறார் கெளதம் கார்த்திக். சண்டை போடும்போதும், துரோகத்தில் கதறி அழும்போதும் என நடிப்பில் நல்ல முன்னேற்றம். ஆனாலும் ஒரு முழுமையான நடிகனுக்குத்  தேவைப்படும் ஏதோ ஒன்று குறைகிறது கெளதமிடம். இவரின் நண்பர்களாக கதை முழுவதும் டேனியல் போப், லல்லு இருவரும் பயணிக்கிறார்கள். சீரியஸான இடங்களில் காமெடியில் வெடிக்கும் டேனியல், மெட்ராஸ் கலையரசனை நினைவு படுத்தும் லல்லு என இருவருமே நல்ல காஸ்டிங்.


ஆங்கிலோ இந்தியன்  சனா மக்பூல் அழகிலும் நடிப்பிலும் ஒகே. பேசப்படும் அளவிற்கு ரோல் இல்லாவிட்டாலும் தமிழ் சினிமாவிற்கு க்யூட் என்ட்ரி. மலையாளத்தில் கேரக்டர் ரோலில் வெரைட்டி காட்டிய சித்திக், தமிழிலும் தேர்ந்த நடிப்பு. மலையாளச் சாரலோடு தமிழ்பேசினாலும், நடிப்பில் அதை சமன் செய்கிறார்.  

கள்ளக் கடத்தல் செய்யும் ஒருவனின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற ஒன்லைனுக்குள் மட்டுமே முதல் பாதி பயணிக்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் கதை வழிமாறி மாற்றுப்பாதையில் சென்று திரும்பிவருகிறது. கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பில்டப் பெரிதாக இருந்தாலும் புத்திசாலித்தனமான நகர்வுகள் எதுவும் இல்லை. 'கேசவன்' கேரக்டர் சித்தரிப்பில் முழுமையில்லை. 

பர்மாவை காட்சிப்படுத்திய விதம், கள்ளக் கடத்தல் சீன்கள் என விறுவிறுப்பில் திரையை ஆளுகிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. காதல், காமெடிக்கென தனி ட்ராக்கு வைத்து ரசிகர்களை வதைக்காமல் எடுத்த கதையில் படத்தைச் சொன்ன விதத்தில் இயக்குநருக்கு க்ளாப்ஸ். ஆனாலும் பல தமிழ் படங்களின் காட்சிகள் ரெஃபரன்ஸாக மனதுக்குள் வந்துசெல்கிறது. காட்சிகளில் மட்டும் இன்னும் வெரைட்டி காட்டியிருக்கலாம். ஸ்கிரிப்ட்டை விட மேக்கிங்கில் கவனம் ஈர்க்கிறார்.

"பணம் நிஜமல்ல வெங்கட்... நிஜம் மாதிரி", "அப்பாவோட உண்மையான பாசத்தையும், பொய்யான கோபத்தையும் அப்புறமா நான் பாக்கல", "பெரிய முடிவெடுக்க ஒரு சின்ன நேரம் போதும்" வசனங்கள் ரொம்பவே ஷார்ப்

பறவை பார்வையில் பர்மாவை காட்சிப்படுத்தியது, எதார்த்தமான சண்டைக்காட்சிகள் என ஒளிப்பதிவில் அன்ஷ் தருண் குமார் கச்சிதம். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது. சண்டைக்காட்சிகளிலும், கடத்தல் காட்சிகளிலும் எடிட்டிங்கில் சுவாரஸ்யப்படுத்துகிறார் பிரசன்னா ஜிகே. 

க்ளைமாக்ஸ் ட்விஸ்ட் அந்த அளவிற்கு அழுத்தமாக இல்லை. காட்சியோடு இணையாமல் தொங்குகிறது. 

கெளதம் கார்த்திக்கின் ஐந்தாவது படம் இது. இதுவரை அவர் நடித்த படங்களை விட  ரங்கூன் ஒருபடி மேலே என்பது மட்டும் உறுதி.  

அடுத்த கட்டுரைக்கு