Published:Updated:

"ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓய மாட்டேன்!" - இமான் அண்ணாச்சிக்கு என்னாச்சி?

"ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓய மாட்டேன்!"  - இமான் அண்ணாச்சிக்கு என்னாச்சி?
"ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓய மாட்டேன்!" - இமான் அண்ணாச்சிக்கு என்னாச்சி?

"ஸ்டாலினை முதல்வராக்காமல் ஓய மாட்டேன்!" - இமான் அண்ணாச்சிக்கு என்னாச்சி?

பார்த்தவுடனேயே மனதுக்கு நெருக்கமாகும் முகம், அடர்ந்த  மீசை, உதட்டில் புன்முறுவல், உற்சாகத் துள்ளலுடன் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் அதகளம் செய்துவரும் இமான் அண்ணாச்சி, தற்போது அரசியலிலும் பிஸியோ பிஸி! பேட்டிக்காக அவருடைய இல்லத்துக்குச் சென்றபோது, `என்னோட ராசி நல்ல ராசி...` என்ற பாடலின் பின்னணியில் அவருக்கே உரிய உற்சாகத்துடன் நம்மை வரவேற்றார். 


``சினிமாவுக்கு வந்தது பற்றிச் சொல்லுங்க அண்ணாச்சி?''

``அது சின்ன வயசு ஆர்வம். அஞ்சாம் வகுப்பு படிக்கும்போது `சிரிக்காமல் விட மாட்டோம்'னு ஒரு நாடகத்தை எழுதி, மேடை வரை கொண்டுபோனேன். நிறைய நாடகங்கள் பார்ப்பேன். ஆனா, வீட்டுல கடும் எதிர்ப்பு. நான் நாடகம் பார்க்கப் போனா, என்ன வீட்டுல சேர்க்க மாட்டாங்க. வெளியேதான் தூங்கணும். காலையில வாசல் தெளிக்கும்போதுதான் தண்ணி ஊத்தி எழுப்புவாங்க.

சினிமாவைத் தேடி 1982-ல மெட்ராஸ் வந்தேன். ஒரு பாத்திரக் கடையில வேலைசெஞ்சேன். சினிமா  ரொம்ப ரொம்ப கஷ்டம்னு புரிஞ்சதும் ஊருக்கு வந்துட்டேன். மறுபடியும் 1993-ல மெட்ராஸ் வந்தேன். அப்போ ஒயின் ஷாப், மளிகைக்கடை, காய்கறிக் கடை, வீதி வீதியாகப் போய் ஐஸ்க்ரீம் விற்பது, காய்கறி விற்பதுனு பல  வேலை பார்த்தேன். இதுக்கிடையில `கலக்கப்போவது யாரு?', `அசத்தப்போவது யாரு?', `எல்லாமே சிரிப்புதான்' நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டேன். ஆனா, எனக்குனு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது, `கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை` நிகழ்ச்சிதான். `யார்ர்ர்ரா இந்த ஆளு... வெள்ளை வேட்டி-சட்டை போட்டு வித்தியாசமா இருக்கானே!`னு மக்கள் கவனிக்க ஆரம்பிச்சு, அப்படியே `அண்ணாச்சி... அண்ணாச்சி'னு முகமும் பேரும் மக்களுக்குத் தெரிய ஆரம்பிச்சுது.

பல டிவி சேனல்கள்ல கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்திக்கிடேன். அப்புறம், `சொல்லுங்கண்ணே... சொல்லுங்க` நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்புறம், `குட்டிச் சுட்டீஸ்' நிகழ்ச்சி. இப்போ 230 எபிசோடுகளைத் தாண்டி போயிக்கிட்டிருக்கு. எங்கே பார்த்தாலும் `நம்ம அண்ணாச்சி`னு சொல்றாங்க. ரொம்பச் சந்தோஷமா இருக்கு. சில படங்கள்ல கூட்டத்துல ஒருத்தனா வந்தேன். வசனம் கிடையாது. `தலைநகரம்` படத்துலதான் சுந்தர்.சி சார் வாய்ப்பு கொடுத்தார். அதுதான் நான் வசனம் பேசிய முதல் படம்.  இதுவரை 40 படங்களுக்கு மேல நடிச்சுட்டேன்.''

``கொஞ்சம் கலர் ஆகிட்டீங்களே அண்ணாச்சி?''

``ஒரு குழந்தை பிறந்து 90-வது நாள் என்ன நிறத்துல இருக்கோ, அதுதான் கடைசிவரைக்கும். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி உப்பு காத்துல, வெயில அலைஞ்சு உடம்பெல்லாம் உப்பும் அழுக்குமா இருக்கும். இப்போ நம்ம லைஃப் ஸ்டைல் மாறிருச்சுல. அதுவுமில்லாம, விலை கூடின க்ரீம் எல்லாம் போட்டுக்குறோம். அதனால அப்படித்தான் தெரியும்.`` 

``எங்கேயிருந்து வருது இந்த ஸ்லாங்?''

``இந்த ஸ்லாங்தான் என்ன இவ்வளோ தூரம் கூட்டிவந்திருக்கு. சாதாரண தமிழுக்கும் எங்க தமிழுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். இருந்தும் நான் எங்க தமிழ்லயே `ஏ... என்ன பண்ணுதா..? ஏல, இங்க வாம்லா...`னு கொஞ்சம் இழுத்துப் பேசுவேன். நெல்லை சிவா அண்ணே பேசுறது, திருநெல்வேலி தமிழ். நான் பேசுறது தூத்துக்குடித் தமிழ். இந்தத் தமிழோட சிறப்பம்சம் என்னான்னா கோபமா பேசினாக்கூட சும்மா காமெடி பண்ணாதீங்கனு சொல்லும் அளவுக்கு மத்தவங்களைப் புண்படவைக்காத ஸ்லாங். பேச்சுலேயே நகைச்சுவை உணர்வு இருக்கும். இப்போ இதுதான் எனக்கு சோறு போடுது. இப்போ முழுக்க முழுக்க சென்னைத் தமிழ் பேசி ஒரு படம் நடிச்சுட்டிருக்கேன். கொஞ்சம்கூட தூத்துக்குடித் தமிழ் வெளியே தெரியாது. இதை ஒரு சவாலா எடுத்துப் பண்ணியிருக்கேன்.''

``இப்போ  என்னென்ன படங்கள் போயிக்கிட்டிருக்கு?''
``  `பக்கா`, `ராஜாவும் 5 கூஜாவும்`, `நேத்ரா`, `குரு உச்சத்துல இருக்காரு`, `தெரு நாய்கள்`, `குமரனுக்குக் குன்றத்திலே கொண்டாட்டம்`, `நல்ல காலம் பொறக்குது`ன்னு ஏழு படங்கள்  இருக்கு. மூணு படத்துல கதை நாயகனா நடிக்கிறேன்.''

``உங்களுடைய ரோல்மாடல் யார்?''
 ``டி.எஸ்.பாலையா, தங்கவேலு சார் இவங்க ரெண்டு பேரும்தான்னு நினைக்கிறேன். இவங்க ரெண்டு பேருமே எதார்த்த நடிப்பின் உச்சம். அந்த மாதிரியான நடிப்பை இப்போ கொடுக்கும் ஆள்கள் மிகவும் குறைவு. இவங்க இடத்தைப் பிடிக்கணும்.''

`` `குட்டீச் சுட்டீஸ்' நிகழ்ச்சி அனுபவம் எப்படி?''

``முதல் எபிசோடில் ஒரு பொண்ணுகிட்ட `உங்க அப்பா பேரு என்ன?`னு கேட்டேன். அதுக்கு, `ஏ வெங்கடேஷூ... உன்னைத்தான் இந்த அங்கிள் கேக்குறாரு. சொல்லு`னு சொன்னது, மறக்க முடியாத ஒண்ணு. அப்பறம் ஒரு பையன்கிட்ட `தீபாவளிக்கு என்ன செய்வீங்க வீட்டுல?`னு கேட்டேன். `தீபாவளிக்கு எங்க வீட்டுல பொங்கல் செய்வோம்'னு சொன்னான். `அப்ப பொங்கலுக்கு என்ன செய்வீங்க?'னு கேட்டேன். கொஞ்சம்கூட யோசிக்காம `பொங்கலுக்குத் தொட்டுக்க சட்னி செய்வோம்`னு சொன்னதையும் மறக்க முடியாது.

ஒரு பையன் பயங்கர அறிவா சுட்டித்தனமா பதில் சொல்லிட்டிருந்தான். அவங்க அப்பாகிட்ட `உங்க பையன் ரொம்ப பிரில்லியன்ட் சார். திறமைசாலியா இருக்கான்`னு சொன்னேன். அதுக்கு அவர் `அவனுக்கு பிரைன் டியூமர்... டாக்டர் நாள் குறிச்சுட்டார் அண்ணாச்சி`னு சொன்னவுடனே கண்கலங்கிட்டேன். அவனுக்காக அங்கேயே பிரேயர் செஞ்சேன். இப்போ தினமும் அந்தப் பையனிடம் பேசி அவனைச் சந்தோஷப்படுத்துவேன். அவன் குணமடையணும்னு தினமும் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். நீங்களும் வேண்டிக்கிடுங்க.''

``நீங்கள் யாருடைய ரசிகன்?''
``எனக்கு ஜெய்சங்கர் சார் ரொம்பப் பிடிக்கும். அவருடைய பயங்கர ரசிகன். கேப்டன் விஜயகாந்த் சார். எல்லா கிராமத்து ஆள்களுக்கும் இவரை ரொம்பப் பிடிக்கும். இன்னும் அவர் மாதிரி மிமிக்ரி யாராவது பண்ணினா ஒரு நிமிஷம் நின்னு பார்த்துட்டுதான் போவேன். அவருக்கு சமீபகாலமாக உடல்நிலை சரியில்லைனு கேள்விப்பட்டேன். அவர் குணமடைந்து மீண்டும் தன் அரசியல் வாழ்வைத் தொடர ஆசைப்படுறேன். நடிகைகள்ல கௌதமியோட தீவிர ரசிகன். அவங்களை அவ்வளோ பிடிக்கும். காமெடியில வடிவேலு சார். அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.''

`சினிமாவில் நீங்கள் அதிகம் தொடர்பில் இருக்கும் நபர்கள்?''


``விமல், சூரி, சதீஷ், சிவகார்த்திகேயன், கேமராமேன் நடராஜன், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிகுமார் சார், எஸ்.பி.ராஜ் குமார் சார், துரை செந்தில்குமார் சார், தனுஷ் சார் இவங்க எல்லாரும் என்னோடு அதிகம் தொடர்பில் உள்ளவர்கள். விஜய் சார் ஒரு நல்ல மனிதர். மரியாதை கொடுப்பதில் அவர்போல் யாரும் இல்லை. நேர்ல விஜய் சார் என்னைப் பார்த்தாலோ, இல்ல நான் அவரைப் பார்த்தாலோ நின்னு பேசிட்டுத்தான் போவோம். அஜித் சாரை நான் ஒரு தடவைதான் பார்த்தேன். ஒரு நடிகர் சங்கக் கூட்டத்துல என்னைப் பார்த்தவுடன் எழுந்து வந்து கைகொடுத்து `வாங்க அண்ணாச்சி` என்றார். எனக்கு அப்படி ஆச்சர்யம். அப்பதான் தோணுச்சு, தல தல தான்யா.''

``வீட்டில் இமான் அண்ணாச்சி எப்படி, கோவம் வருமா... வராதா?''
``வீட்டிலும் நான் நான்தான். மனைவி பேரு ஆட்னஸ். ஒரு பொண்ணு எட்டாம் வகுப்பு போறாங்க. பேரு ஜெஃபி சைனி. கோபம் என்பது வரும், வரணும். எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருந்தா கோமாளினு சொல்லிருவாங்க. சமையல் சரியில்லைனா மனைவியைத் திட்டுவேன். லேட்டா எழுந்தா பொண்ணைத் திட்டுவேன். ஆக, கோபம் வரும். ஆனால், கோபத்தில் குடிகொள்ளக் கூடாது என்பது என் கொள்கை.''

`` 'இணைந்த கைகள்'னு ஒரு அறக்கட்டளை ஆரம்பிச்சிருக்கீங்க. அதைப் பற்றி?''
 

``சினிமாவுக்கு வராத காலத்துல `ஒரு ட்ரை சைக்கிளும், 1,000 ரூபாய் பணமும் இருந்தால், குடும்பத்தை ஓட்டிருவேன்'கிற நம்பிக்கை இருந்துச்சு. உழைக்கக்கூடிய ஆற்றல் இருந்துச்சு. ஆனா, அதுக்கான ட்ரை சைக்கிள் இல்லை. வண்டி வாங்கி தரச்சொல்லி எத்தனையோ பேர்கிட்ட கெஞ்சியிருக்கேன். எல்லாரும் என்னைத் தட்டிக் கழிச்சாங்க. யாரும் உதவி பண்ணலை. அப்புறம் எப்படியோ பணத்தைச் சேர்த்து பழைய ட்ரை சைக்கிள் ஒண்ணை வாங்கிட்டேன். அன்னிக்கு நான்பட்ட வேதனையை யாரும் படக் கூடாதுனு நினைச்சேன். கொஞ்சம் தூக்கிவிட்டா குதிரை மாதிரி ஓடக்கூடிய நிறைய பேர், தூக்கிவிட ஆளில்லாம இருக்காங்க. அவங்களுக்கு உதவி பண்ண ஆரம்பிச்சது இந்த `இணைந்த கைகள்' அறக்கட்டளை. இதுவரை யாரிடமும் `அறக்கட்டளைக்குப் பணம் கொடுங்க'னு கேட்டதில்லை. ஆனா, இப்போ உதவி கேக்குறவங்களோட எண்ணிக்கை அதிகம் ஆகிட்டே வருது. அதனால, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பாளர்களைப் போட்டு ஒரு ரவுண்டு வரலாம்னு இருக்கேன். மக்களிடம் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும்னு நம்பிக்கை இருக்கு.''

``மறக்க முடியாத நண்பர்கள் பற்றி?''
``வாழ்க்கையில மறக்க முடியாத நண்பர்கள்னு பார்த்தால், ராஜா மற்றும் என் மச்சான் வெசிலி. சினிமாவுல முயற்சி பண்ண சென்னைக்கு வந்தப்போ எனக்கு வருடக்கணக்குல தங்க இடம், சாப்பிட சாப்பாடு கொடுத்து, என்னை அரவணைச்சவர் ராஜாதான். இப்போ மேற்கு சைதாப்பேட்டையில இருக்கார். ஊர்ல எனக்கு `மாப்ள நீ ஜெயிச்சுருவடா`னு தைரியம் சொல்லி வியாபாரத்துக்கும் உதவி பண்ணது என் மச்சான் வெசிலிதான். இவங்க எல்லாம் மனசை மட்டுமே பார்த்து, பணத்தைப் பார்க்காம எங்கிட்ட பழகியவர்கள்.''

``மளிகைக்கடையில் வேலைபார்த்த அண்ணாச்சிக்கும், இப்போ இருக்கும் இமான் அண்ணாச்சிக்கும் என்ன வித்தியாசம்?''

``அப்ப எப்படி இருந்தேனோ அப்படியேதான் இப்பவும் இருக்கேன்.  உடை, செயின், மோதிரம் இதெல்லாம் புதுசா சேந்திருக்கு அவ்வளவுதான். வெளித் தோற்றம் மாறலாம். ஆனா, மனசு மாறக் கூடாது. பர்ஸ் எவ்வளோ கனம் ஆனாலும், தலையில் கொஞ்சம்கூட கனம் சேரவிடக் கூடாது. காசு நம்மள மாத்த முயற்சிக்கும். ஆனா, நம்ம மாறக் கூடாது. இப்படி இருந்தாலே கடவுள் நம்மள எங்கேயோ கூட்டுட்டுப்போயிருவார்.''

``மாணவர்களுடன் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்டீர்கள். அது பற்றி..?''

``மாணவர்கள் இதுமாதிரி போராட்டம் ஆரம்பிச்சுட்டாங்கனு தெரிஞ்சவுடனே அவங்களுக்கு ஆதரவு தரணும்னு தோணுச்சு. ஆனா, நடிகர்களை யாரும் உள்ளே விட மாட்டாங்கனு தகவல் வந்துச்சு. இருந்தும் பார்த்துக்கலாம்னு நண்பர்கள் பாதுகாப்புடன் அலங்காநல்லூர் போனேன். அங்கே போனா அந்த ஊரே எனக்குப் பாதுகாப்பா இருந்துச்சு. என்னுடைய ஆதரவை மாணவர்களுக்கு தெரிவிச்சுட்டு வந்துட்டேன்.

அப்புறம் டெய்லி சாயங்காலம் மெரினாவுக்குப் போயிட்டு என் ஆதரவைக் கொடுத்துட்டு வந்துடுவேன். அப்புறம், பசங்க எல்லாரும் கடலுக்குப் போறதா டிவி-யில பார்த்துட்டு உடனே மெரினாவுக்குப் போனேன். அங்கே அவங்களை சரமாரியா அடிச்சிட்டிருந்தாங்க. குறுக்க போன என நண்பருக்கு மண்டை உடைஞ்சு, 15 தையல் போட்டுச்சு. எனக்கும் அடி விழுந்தது. இருந்தாலும் தமிழன்கிற உணர்வுல அந்த அடி பெருசா தெரியலை. விவசாயிகள் போராட்டத்துல கலந்துக்கணும்னு இருந்தேன். ஆனா, போக முடியாமப்போச்சு. விவசாயத்தை நாம பத்திரமா பார்த்துக்கணும். வீட்டுக்கு ஒரு பிள்ளையை விவசாயத்துக்குத் தயார்படுத்துங்க என்பது என் வேண்டுகோள்.''

``தி.மு.க-வில் இணைந்தது பற்றி?''

``எங்க அப்பா என்னைத் தோள்மேல தூக்கி உக்காரவெச்சுக்கிட்டு `அடேய் மகனே... அதா தூரத்துல தெரியறார்ல அவருதான் கலைஞர் கருணாநிதி`னு காமிச்சார். அப்புறம், தினமும் தூங்கும்போது காந்தி, நேரு, பகத்சிங், காமராஜர், எம்.ஜி.ஆர்., கலைஞர் இவங்க எல்லாரைப் பத்தி கதை மாதிரி சொல்வார். நான் அப்படியே கேட்டுட்டே அவர் மேலேயே தூங்கிருவேன். அப்ப என் மனசுல கலைஞர் நல்ல பதிஞ்சுட்டார். அவருடைய நடவடிக்கைகள் எல்லம் பார்க்க ஆரம்பிச்சேன். அவருடைய சாதுரியமான பேச்சுத்திறமை, கவுன்ட்டர் கொடுப்பது, அவர்போல் பேச இன்னும் எவரும் பிறக்கவில்லைனு சொல்லலாம். அப்படியே வளர வளர, அவர் மேல் உள்ள மதிப்பும் மரியாதையும் அதிகமாகிடுச்சு. அவர்கூட ஒரு போட்டோ எடுக்கணும்னு ஆசை. அதுக்கு ஒரு வாய்ப்பு இருந்துச்சு போட்டோ எடுக்கப் போனேன். அப்படியே கட்சியில் சேர்ந்துட்டேன். மற்றபடி எந்த நோக்கமாகவும் கட்சியில் சேரவில்லை. அவரைப் பிடிக்கும் அதனால சேர்ந்தேன்.''

 ``தமிழகத்துல நடக்கிற அதிகார அரசியலை எப்படிப் பார்க்கிறீங்க?''  

``ஒரே காமெடியா இருக்கு. ஆளுக்கு ஒரு கட்சி ஆரம்பிச்சு, துண்டு துண்டாக நிக்குறாங்க. இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. தமிழகத்தில் நடக்கவேண்டிய வேலைகள் நிறைய இருக்கு. அதை விட்டுட்டு `எங்கிட்ட இத்தனை எம்.எல்.ஏ இருக்கான். எங்கிட்ட இத்தனை எம்.எல்.ஏ இருக்கான்' போட்டிபோட்டுட்டிருங்காங்க. காலையில ஒரு பக்கம் சாயங்காலம் ஒரு பக்கம் இருக்கான். இதனால மக்கள் கடும் குழப்பத்தில் இருக்கிறார்கள். `அட படுபாவிகளா... உனக்கா ஓட்டு போட்டேன்`னு மக்கள் கஷ்டப்படுறாங்க. நம்மள காப்பாத்த யாரும் வர மாட்டங்களானு ஏங்குறாங்க. நான்தான் முதலமைச்சர்னு எல்லாரும் நினைக்கிறாங்க. முதலில் யார் இருக்கிறார்களோ அவர்தான் முதலமைச்சர். அதை விட்டுவிட்டு `நான்... நான்... நான்...'னு நினைப்பது அழிவுக்கான வழி. ''

``அரசியல் பிரவேசம் பற்றி?''

``திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்தாமல், தளபதி ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் நான் ஓய மாட்டேன். இப்ப இருக்கும் அரசியல் சூழலில், பத்து நாள்ல அவரே முதலமைச்சர் ஆகிடுவார் பாருங்களேன்.''

``வாழ்வில் மறக்க முடியாத சம்பவம்?''


``மனிதர்களை மனிதர்களாக மதிக்காமல், பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த யாரையும் மறக்க மாட்டேன். இதற்கு ஒரு டைரியே போடலாம். அவ்வளவு இருக்கு. நான் `கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சியில் கலந்துகிட்டபோது, `தலைநகரம்` படத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்தார்கள். அந்தத் தருணம் என்னால மறக்க முடியாது.''`

``உங்களின் குறிக்கோள்?''

``ஒருசில படங்களில் காமெடி இல்லைன்னா அந்தப் படத்தை நினைச்சே பார்க்க முடியாது. காமெடிதான் படம் ஹிட்டாக காரணம்னு சில படங்கள் இருக்கும். அந்த மாதிரி நான் நடிச்சு அந்தப் படம் ஹிட்டாகி, இமான் அண்ணாச்சி இல்லைன்னா இந்தப் படம் ஒண்ணும் இல்லைனு மக்கள் பேசுவாங்கள்ல. அந்த நிலைமையை நோக்கி ஓடிட்டிருக்கேன். இதுதான் என் லட்சியம்ட. இந்த மாதிரி ஒரு படம் பண்ணணும் அது போதும்.''

ஆல் தி பெஸ்ட் அண்ணாச்சி !


தொகுப்பு – உ.சுதர்சன் காந்தி
படங்கள் – மு.சாருமதி
(மாணவப் பத்திரிகையாளர்கள்)

அடுத்த கட்டுரைக்கு