Published:Updated:

“எஸ்.பி.பி சாரும் நானும் பாடிய அந்தப் பாட்டு... சான்ஸே இல்லை!” - சிலாகிக்கும் ‘ஆதித்யா’ அர்ச்சனா

“எஸ்.பி.பி சாரும் நானும் பாடிய அந்தப் பாட்டு... சான்ஸே இல்லை!” - சிலாகிக்கும் ‘ஆதித்யா’ அர்ச்சனா
“எஸ்.பி.பி சாரும் நானும் பாடிய அந்தப் பாட்டு... சான்ஸே இல்லை!” - சிலாகிக்கும் ‘ஆதித்யா’ அர்ச்சனா

கே.பாலசந்தர் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு ஜெயா டி.வி யில் வெளியான 'அண்ணி' சீரியல் மூலம் சின்னதிரைக்குள் அடியெடுத்துவைத்தவர் அர்ச்சனா. பிறகு தொகுப்பாளர் அவதாரம் எடுத்தார். தற்போது, சன் டி.வியின் 'கல்யாணப் பரிசு' சீரியலில் மீண்டும் நடிப்பு இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். படப்பிடிப்பு இடைவேளையில் அர்ச்சனாவிடம் பேசினோம். 

“அர்ச்சனா என்றால், கலகலப்பான ஆள் என்று சொல்றாங்களே, வீட்டிலும் அப்படித்தானா?” 

''வெளியில் எவ்வளவு கலகலப்பாக இருந்தாலும், வீட்டுக்குள்ளே வந்துட்டா கொஞ்சம் டெரரா மாறிப்பேன். அப்படி இருந்தால்தான் குடும்பம் நம்ம கட்டுக்குள்ளே வருங்கறது என் கருத்து.'' 

''கே.பாலசந்தரின் இயக்கத்தில் உருவான 'அண்ணி' சீரியலில் நடித்த அனுபவம் இப்பவும் கை கொடுக்குதா?'' 

''நிச்சயமாக. பாலசந்தர் சாரை ஒருமுறை பார்த்துட மாட்டோமானு ஏங்கினவங்களில் நானும் ஒருத்தி. ஆனால், அவர் ஆக்‌ஷன் சொல்ல, நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. 'வெரிகுட்'னு பாராட்டும் வாங்கியிருக்கிறேன். 'அர்ச்சனா மாதிரி நடிங்க'னு அவர் சொல்லும்போது, இன்னும் பெருமையா இருக்கும். அந்த அனுபவம்தான் கிட்டத்தட்ட பதினைந்து வருஷத்துக்கும் மேலாகியும் என்னை இந்த ஃபீல்டில் இருக்கவெச்சிருக்கு.'' 

“ஆரம்பத்தில் சீரியலில் நடிச்சுட்டிருந்த உங்களுக்கு எப்படி ஆங்கர் வாய்ப்புக் கிடைச்சது?'' 

''எனக்கும் ஆங்கரிங்குக்கும் ஏணி வெச்சாலும் எட்டாது. ஒரு நிகழ்ச்சியில் நானும் என் அம்மாவும், ஈரோடு மகேஷ் சாரை சந்திச்சோம். அப்போ, எனக்கு வாய்ப்பு தேடிட்டு இருக்கிறதை அம்மா சொன்னாங்க. அப்போ மகேஷ் சார் ஆதித்யா சேனலில் ஆங்கரிங் பண்றதுக்கான வாய்ப்பு இருக்கிறதா சொன்னார். எனக்கு ஆங்கரிங் வராதுனு சொல்லிட்டேன். அவர்தான் 'சீரியல்ல நடிச்சிருக்கீங்க, நிறைய மேடைகளைப் பார்த்திருக்கீங்க. எதுக்குப் பயம்? எல்லாம் கத்துக்கலாம்'னு நம்பிக்கை கொடுத்து, ஆதித்யாவில் சேர்த்துவிட்டார். அங்கே ஆதவன், வடிவேல் பாலாஜி எல்லாரும் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லிக்கொடுத்து மெருகேத்தினாங்க. இப்படித்தான் நான் வாயாட ஆரம்பிச்சது.”

''புதிதாக ஒரு பிசினஸ் தொடங்கியிருப்பதாக கேள்விப்பட்டோமே...'' 

''பிரைடல் பிளவுஸ் மற்றும் கிராஃப்ட், பேப்பர் க்வில்லிங் வேலைகளை செய்துட்டிருக்கேன். இந்த வேலையை ஆரம்பிச்சு சில வருஷம் ஆகிடுச்சு. இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா செய்து கொடுத்துட்டிருக்கேன். ஆரி வேலைப்பாடு, எம்ப்ராய்டரி வேலைப்பாடு என பிளவுஸ்களில் வெரைட்டியா செஞ்சுட்டிருக்கேன்.'' 

''உங்க வாய்ஸ் இனிமையா இருக்கு, பாடுவீங்களோ?'' 

''இப்படி ஒரு கேள்விக் கேட்டுட்டீங்களே நியாயமா? பதினைஞ்சு வருஷமா பல மேடைகளில் எஸ்பி.பி, மனோ, உன்னிமேனன் என பிரபலப் பாடகர்களுடன் இணைஞ்சுப் பாடியிருக்கேன். பல மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கேன். ஆதித்யா சேனலில் நிறைய விஐபிக்களை பேட்டி எடுத்திருக்கேன்.'' 

''நீங்க இணைந்து பாடிய பாடகர்களில் ஃபேவரைட் யாரு?'' 

''என் ஆல் டைம் ஃபேவரைட், எஸ்பிபி சார்தான். லைட் மியூசிக்கில் அவரும் நானும் இணைஞ்சு நிறையப் பாடல்கள் பாடியிருக்கோம். 'நல்லாப் பாடுறே... தொடர்ந்து இம்ப்ரூவ் பண்ணிக்கோ'னு என்கரேஜ் செய்திருக்கிறார். 'பூங்காற்று உன் பெயர் சொல்ல..', 'பனி விழும் இரவு..' என நாங்க சேர்ந்து பாடியதில், மறக்க முடியாத பாடல்கள் நிறைய இருக்கு.'' 

''அப்போ நிறைய வாய்ப்புகள் கதவைத் தட்டியிருக்குமே...'' 

''அப்படி எல்லாம் இல்லைங்க. எனக்கு நினைச்சதுமே எந்த விஷயமும் கிடைச்சதில்லே. வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் நிறைய கஷ்டப்பட்டிருக்கேன். வெற்றிகளைவிட தோல்விகளை அதிகம் சந்திச்சிருக்கேன். அத்திப்பூத்தாற்போல எப்பவாவதுதான் வெற்றி கிடைக்கும். ஆனாலும் எல்லாமே நல்லதாகத்தான் நடந்திருக்கு. 'கல்யாணப் பரிசு' வாய்ப்புக் கிடைச்சதை நினைச்சுக்கூடப் பார்க்கலை. அதனால், தாமதமாக நடந்தாலும் நமக்குச் சிறப்பா நடக்கும்னு எப்பவும் பாசிட்டிவ்வா எடுத்துக்கறேன்'' என கண்களில் மின்னலடிக்க சிரிக்கிறார் அர்ச்சனா.