Published:Updated:

சினிமாவில் விஜய் கடந்த விமர்சனக் கணைகள்!

தார்மிக் லீ
சினிமாவில் விஜய் கடந்த விமர்சனக் கணைகள்!
சினிமாவில் விஜய் கடந்த விமர்சனக் கணைகள்!

விஜய் நடித்த முதல் படமான 'நாளைய தீர்ப்பு' வெளியானதையடுத்து 'இந்த மூஞ்சியை எல்லாம் காசு கொடுத்துப் பார்க்க வேண்டியிருக்கு' என்பது போன்ற விமர்சனங்களும் உலவின. ஆனால், அவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது இலக்கை நோக்கி அடுத்தடுத்து படங்களை நடித்துப் போய்க்கொண்டே இருந்தார். அவரது அப்பா மூலம் சினிமாவுக்குள் நுழைந்திருந்தாலும் இன்றைய நாளில் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறும் அளவுக்கு அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறார் விஜய். இவரது வெற்றிக்குக் காரணமானவை இரண்டு. ஒன்று இவரது ரசிகர்கள், மற்றொருவர் அவரே.

இருபதாம் நூற்றாண்டில், சினிமா பார்ப்பதே குற்றம் என நினைத்தது மட்டுமில்லாமல், அவர்கள் வீட்டில் இருக்கும் யாரையுமே சினிமாவில் நடிக்க அனுமதிக்கவில்லை. இந்தியாவில் முதல் படமான 'ராஜா ஹரிசந்திரா' படத்தில் ஆண்களே பெண் வேடமிட்டு நடித்தனர். அதன் பின் வெளியான படங்களிலும் அது மாதிரியே நடந்து வந்தது. 1918-ல் உருவான தென்னிந்தியப் படமான 'திரௌபதி வஸ்திராபரணம்' என்னும் படத்தில் திரௌபதியாக நடித்தவரின் பெயர் வயலெட்பெரி, இவர் ஒரு அயல்நாட்டுப் பெண்மணி. 1926-ல் உருவான 'அனார்கலி' திரைப்படத்தில் 'ரூபிமேயர்ஸ்' என்ற யூதப்பெண் சுலோசனா என்று பெயர் மாற்றி நடித்தார். அதன் பின்னர் நடிக்க வரும் பெண்கள் அனைவருமே தங்களுடைய பெயரை மாற்றியமைத்துத்தான் சினிமாவுக்குள் காலடியே எடுத்து வைத்தனர். இந்தப் பழக்கம் அப்பொழுதே வழக்கமாகிவிட்டது. சரி நம்ம ஊர் சினிமாவிற்குள் வருவோம்!

இப்போதுள்ள தமிழ் சினிமாவுக்கு முன்மாதிரியாக இருந்தது அந்தக் காலத்தில் நடந்த எண்ணற்ற நாடகங்கள்தான். பெரிய பெரிய நடிகர்கள் எல்லோரும் நாடகங்களின் வாயிலாகத்தான் சினிமாவை அடைந்திருப்பார்கள். நாடகம் என்பது இந்தியாவில் பல்வேறு இடங்களில் காலங்காலமாக நிகழ்த்தப்பட்டுவந்த ஒரு கலை. நம் தமிழ் உரைநடைகளிலும், இலக்கியங்களிலும் இருந்து நாடகமானது செயல்பட்டு வந்தது. எளிமையான முறையில், மக்களுக்குப் புரியும்படியாக ஒரு உண்மைச் சம்பவத்தை எடுத்துக் கூறும் ஒரு ஊடகமாகத்தான் நாடகங்கள் அமைந்தன. காலப்போக்கில் நாடகமானது சினிமாவாக மாறி வந்தது. இருந்தாலும், இந்நாள் வரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நாடகங்கள் நடத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. தமிழகத்தில் திரைப்படங்களின் தயாரிப்பு 1916-களிலேயே தொடங்கிவிட்டது. அப்போது இயக்கப்பட்ட படங்கள் எல்லாமே ஊமைப் படங்களாக வெளி வந்தன. 1931-ம் வருடம் முதன் முதலில் ஒரு பேசும் திரைப்படத்தில் தமிழ் மொழி பயன்படுத்தப்பட்டது. அந்தப் படம்தான் தமிழின் முதல் பேசும் படம். படத்தின் பெயர் 'காளிதாஸ்'. பல்வேறு தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி இந்தப் படம் திரையிடப்பட்டது. 8000 ரூபாயில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 75,000 ரூபாய் வரை வசூலை அள்ளிக் குவித்தது. அந்தப் படத்தில் நடித்த டி.பி.ராஜலட்சுமி 'சினிமா ராணி' என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். அந்த வருடத்தில் வெளியான ஒரே தமிழ்ப்படம் 'காளிதாஸ்' மட்டுமே.  

1932-ல் தமிழில் 5 படங்கள் வெளியாகின. அந்த ஆண்டில் எடுக்கப்பட்ட 'பாரிஜாத புஷ்பஹாரம்' எனும் திரைப்படத்தை 'இம்பீரியல் ஃபிலிம்' நிறுவனம் தயாரித்தது. 1894-ல் பிறந்தவர் ராஜா சாண்டோ. 1922-ல் தனது தனது சினிமா பயணத்தை 'காமா' என்ற ஊமைப் படத்தின் மூலம் தொடங்கினார். இந்தி, தமிழ், தெலுங்கு எனப் பல மொழி படங்களில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு துறையில் பணியாற்றி சிறந்து விளங்கினார். இவர் தமிழில் இயக்கிய முதல் படம்தான் 'பாரிஜாத புஷ்பஹாரம்'. இவரது நினைவாக தமிழ் சினிமாவில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களுக்கு 'ராஜா சாண்டோ நினைவு விருது' என்ற பெயரில் தமிழக அரசு விருது வழங்கி வந்தது. இவர் 1943-ல் காலமானார். அதன் பின்னர் பல்வேறு படங்கள் வெளியாகி தமிழ் சினிமாத் துறையின் நிலை உயரத் தொடங்கியது. அந்தக் நேரத்தில்தான் ஏ.வி.எம் ஸ்டுடியோ காரைக்குடியில் தனது நிறுனத்தை ஆரம்பித்தது. அந்த நிறுவனத்தின் சொந்தக்காரர் ஏ.வி.மெய்யப்பன் செட்டியார். ஆரம்பத்தில் இசைத்தட்டு தயாரிக்கும் நிறுவனமாகத் தொடங்கி 1935-ல் சினிமாவையும் தயாரிக்கத் தொடங்கியது. 1938 வரை தயாரித்த 'அல்லி அர்ஜூனா', 'ரத்னாவளி', 'நந்தகுமார்' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவியது. 'நந்தகுமார்' எனும் திரைப்படம் மூலம்தான் பின்னணியில் பாடும் முறையே அறிமுகம் செய்யப்பட்டது. 1960-ல் சென்னையில் ஏ.வி.எம் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில்தான் அறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் போன்ற நடிகர்களை தமிழ்சினிமாவுக்குள் அறிமுகம் செய்துவைத்தது ஏ.வி.எம்.

அப்படியே மெள்ள மெள்ள  சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர், பத்மினி, ஜெயலலிதா எனப் பல கலைஞர்களால் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாத்துறை வலுப்பெறத் தொடங்கியது. ஆகச்சிறந்த நடிப்பு, சண்டைக் காட்சி, காதல் காட்சி, அண்ணன் தங்கை பாசம், அம்மா சென்டிமென்ட் இவை மட்டுமல்லாமல் பல்வேறு உணர்ச்சிகளைத் தூண்டும் வண்ணம் சினிமாவின் நிலை உயரத் தொடங்கியது. சினிமா பொழுதுபோக்கைக் கடத்து சென்டிமென்ட்டாக மாறத் தொடங்கிய நேரம் அது. 'இப்படியெல்லாம் கூடவா நடிக்கலாம்?' என்ற கேள்விக்கு பதிலாகவும், எடுத்துக்காட்டாகவும் பல கலைஞர்கள் சினிமாவுக்குப் பெருமை தேடித்தந்தனர். சிவாஜி கணேசன் 'பராசக்தி' படத்தில் ஆரம்பித்து, 'பூப்பரிக்க வருகிறோம்' படம்வரை ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது. இவரின் விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசுதான் 'நடிகர் திலகம்' என்ற பட்டம். ஒருபக்கம் இவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த மறுபக்கம் எம்.ஜி.ஆர் சமூகக் கருத்துகள் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து விழிப்புஉணர்வை உண்டாக்கினார். அது நேரடியாக மக்களுக்கும் பயனுள்ள வகையில் மாற வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியலுக்குள் குதித்தார் எம்.ஜி.ஆர். சரி, சினிமாவை மட்டும் பேசுவோம். இப்படி நடிகர்கள் ஒருபக்கம் 'என்னால் சினிமாவுக்குப் பெருமை... சினிமாவால் எனக்குப் பெருமை' என்று வளர்ந்து வந்தனர். பல நடிகைகளும் ஆண் நடிகர்களுக்கு நிகராய் நடித்து கலக்கிவந்தனர். இவர்களது பெருமைகளை ஒரு பாராவில் சொல்வது கஷ்டம்தான், இருப்பினும் ஸ்வீட்டாக இல்லாவிட்டாலும் ஷார்ட்டாக சொல்லிவிட்டேன். 

அதன் பின்னர் சினிமாவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து தமிழ் சினிமாவுக்கான இடம் வளார்ந்துகொண்டே போனது. நடிப்பைத் தாண்டி நகைச்சுவை, இசை எனப் பல்வேறு விஷயங்கள் சினிமாவோடு ஒன்றி, பார்ப்பவரின் உணர்ச்சிகளைப் பிண்ணிப்பிணைய வைத்தது. சினிமாவைப் பார்த்த வந்த மக்கள் ரசிகர்களாக மாறத் தொடங்கி சினிமா மீதான ஈர்ப்பு அதிகமானது. அந்தக் காலத்து சினிமா எந்தவித பெரிய எதிர்பார்ப்புகள், புரோமோஷன்கள், டீசர்கள், ஃபர்ஸ்ட் லுக் போன்ற விஷயங்கள் ஏதுமின்றி மக்கள் மனதில் நின்று வென்றது. காலப்போக்கில் சினிமா வணிகரீதியாகவும், தொழில்நுட்பரீதியாகவும் எப்படி மாறியது, இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களுடன் அடுத்த பதிவில்...