Published:Updated:

“முட்டாளாவே இருந்தாலும் தமிழன்தான் முதல்வராகணும்!” - பாரதிராஜா லாஜிக்

“முட்டாளாவே இருந்தாலும் தமிழன்தான் முதல்வராகணும்!” - பாரதிராஜா லாஜிக்
“முட்டாளாவே இருந்தாலும் தமிழன்தான் முதல்வராகணும்!” - பாரதிராஜா லாஜிக்

“முட்டாளாவே இருந்தாலும் தமிழன்தான் முதல்வராகணும்!” - பாரதிராஜா லாஜிக்

‘‘ ‘நடிப்பை எப்படிய்யா இன்ஸ்டிடியூட்ல சொல்லித்தர முடியும்?’ இந்தக் கேள்வியை நானே பலபேர்ட்ட கேட்டிருக்கேன். ‘கேமராவை இன்ஸ்டிடியூட்ல படிக்கிற சரி. எதுக்குய்யா... நடிப்பெல்லாம் அங்க படிக்கிறீங்க. பார்த்த, பாதித்த விஷயங்களை உள்வாங்கி நடிக்கிறதுதானேய்யா நடிப்பு. அதை எப்படிய்யா பேப்பர்ல எழுதிவெச்சு கல்வியா சொல்லித்தரமுடியும்? என்ஜினியரிங், மெடிக்கல் டீச் பண்ணலாம். நடிப்பை எப்படிய்யா டீச் பண்ண முடியும்? ஹவ் கேன் யூ டீச் ஆக்டிங்?’னு கேட்பேன். ஆனால், ‘ஏற்ற இறக்கத்தோடு பேச ஸ்பீச் தெரபி, உடலை வெச்சிக்கிற முறைனு ஒவ்வொண்ணுக்கும் ஒரு முறை இருக்கு. அங்கங்க இருக்கிற பூக்களை ஒழுங்குபடுத்தி தூக்கி ஜாடியில் வைத்தால்தானே அது அழகு. அப்படி ஒருவரிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து வெளிக்கொண்டு வருகிறோம். அதுதான் தியரி’னு ன்னாங்க. ‘நான் கிராமர் இல்லாம ஸ்பாட்ல சொல்லித்தந்ததை நீங்க கிராமர் சேர்த்து தியரியில் சொல்லித்தரப்போறீங்க. ஆனால் பிராக்டிக்கலுக்கு நான்தான் வருவேன்’னு சொல்லியிருக்கேன். தவிர நம்மை நாமே செதுக்கிக்கிறது என்பது வேற. நாம இன்னொருத்தரை செதுக்குறது என்பது வேற. நம்கிட்ட இருக்கிற குறைபாடு நமக்கு தெரியாது. குறைபாட்டை தீர்த்து வைக்கிறவர்தானே ஆசிரியர். அதனால நடிப்பை சொல்லித்தர்றதும் சரின்னுதான் தோணுச்சு.’’ மாணவர் சேர்க்கை, ஆசிரியர்களுடனான கலந்தாய்வு என பரபரப்பாக இருக்கிறது ‘பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட பயிற்சி நிறுவனம்’. அந்த பரபரப்புக்களுக்கு இடையிலும் நம்மிடம் பேச நேரம் ஒதுக்கினார் இயக்குநர் பாரதிராஜா. 

‘‘காட்டுப்பூவா பூத்துக்கிடந்த என்னைக்கொண்டுவந்து நானே வெச்சுகிட்டேன். அதனால இன்னைக்கு அழகா இருக்கேன். அப்படி என்னைப்போல் எத்தனையோ காட்டுப்பூக்கள் எல்லா கிராமங்கள்லயும் பூத்துக்கிடக்குது. அவங்களை முறைப்படுத்தி வைக்கவேண்டிய இடத்தில் வெச்சா அழகு. இல்லைனா பூவைப்போல காஞ்சி மறைஞ்சிடுவாங்க. பொருளாதாரத்தில் பலவீனமான அந்த கிராமத்து கலைஞர்களை எப்படி காப்பாத்துறதுனு கடந்த 10 வருஷமாவே யோசனை. ‘மதுரை பக்கத்துல மலைகள் சூழ்ந்த கிராமப் பின்னணியில 10 ஏக்கர் நிலத்தை வாங்கிப்போட்டு அதில் பெரிய ஃபிலிம் இன்ஸ்டிடியூட் கட்டணும். கேமரா, டைரக்ஷன், நடிப்புனு அவனுக்கு எதில் ஆர்வம் இருக்குனு தெரிஞ்சு ஒவ்வொரு வருஷமும் 100 பேருக்கு இலவசமா சினிமா கத்துத்தரணும்’னு ஆசை. அந்த 10 ஏக்கர்களில் ஒரு ஏக்கர்ல மட்டும்தான் கட்டடம். மீதியுள்ள நிலங்களில் விவசாயம். அரைநாள் படிப்பு, மீதி அரைநாள் விவசாயம். ‘அதில் வர்றதை எடுத்து இன்ஸ்டிடியூட்ல போட்டுக்க. சாப்பிட்டுக்க. அப்படியே சினிமாவும் பழகிக்க. உங்களுக்கு பயிற்சிக்கு சென்னையில் இருந்து ஆட்களை அழைச்சிட்டு வரவேண்டியது என் பொறுப்பு. நாளைக்கு வெளியில வந்து உலகப்புகழ் பெறு...’ இப்படி ஒரு பெரிய கனவு இருந்துச்சு.’’

‘‘ஆனால் மதுரையை விட்டு சென்னைக்கு அந்தக் கனவு இடம்பெயர்ந்தது ஏன்?’’

‘‘ஆமாம். என்னால் அப்ப பண்ண முடியலை. ஆனால் சிட்டியில் ஆரம்பிக்கிறது எளிதுனு தோணுச்சு. முதல்ல சென்னையில் ஆரம்பிப்போம்னு அகடமிக்கலா அனுபவம் உள்ளவங்களை கூப்பிட்டேன். ‘நான் பிராக்டிகலா பெரிய ஆளா வந்துட்டேன். ஆனால் அகடமிக்கலா பெரிய ஆள் கிடையாது. அதனால பிராக்டிக்கலை நான் பாத்துக்குறேன். தியரியை முழுக்க நீங்க ஹேண்டில் பண்ணுங்க’னு சொன்னேன். இப்படி டீன், ஃபேகல்டி, பிரின்சிபல், சேர்மென்னு ‘பாரதிராஜா பன்னாட்டு திரைப்பட மையம்’ இயங்க ஆரம்பிச்சிடுச்சு. இதை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் அஃப்லியேட் பண்ணியிருக்கோம். சென்னையில் செட்டானப்பிறகு நான் நினைச்சபடி இதை மதுரைக்கும் கோயம்புத்தூருக்கும் கொண்டுட்டு போயிடுவேன்.”

“இதுக்கு கல்வியாளர்கள், உங்க நட்பு வட்டங்கள்ல இருந்து என்னமாதிரி பின்னூட்டம் வந்துச்சு?’’

‘‘ ‘இதுக்கு நீங்கதான் சரியான நபர். பலரை உருவாக்கின நீங்கதான் இப்படி ஒரு இன்ஸ்டிடியூட்டை உருவாக்க முடியும். எப்பயோ செஞ்சிருக்கவேண்டியது. ரொம்ப காலம்தாழ்த்தி ஆரம்பிச்சிருக்கீங்க’னு சொன்னாங்க.’’

“ ‘இங்க ரிலீஸ் ஆகும் படங்களோடு ஒப்பிடுகையில் இப்ப இருக்கும் திரைப்பட பயிற்சி மையங்களோட எண்ணிக்கை ரொம்பக்குறைவு’னு கமல் சொல்றாரே?’’ 

“சினிமாக்கள் அதிகம்னு அவரே சொல்றார். அப்படின்னா படம் எடுக்கவர்றவனும் அதிகம். அவன் எங்கக் கத்துட்டு வந்தான்? இன்னைக்கு ஐடி துறையில இருந்து எத்தனை பேர் சினிமாவுக்கு வர்றாங்க. உதாரணத்துக்கு கார்த்திக் சுப்புராஜ். அவன் எந்த ஃபிலிம் இன்ஸ்டிடியூட்ல படிச்சான்? படம் பார்த்தே சினிமா கத்துக்கிட்டவன். ‘நாம் பார்தத சினிமா இப்படி இருக்கு. இதையே அப்படி மாத்திப்பார்ப்போம்’னு தன்னறிவுல வந்திருக்கான். ஆனால் எல்லாரும் அப்படி வந்துடமுடியாது. அதனால இன்ஸ்டிடியூட் கண்டிப்பா தேவை. ஆனா அரசு திரைப்பட பயிற்சி கல்லூரி உள்பட இங்க நாலஞ்சு பயிற்சி நிறுவனங்கள்தான் இருக்குனு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் ஏகப்பட்டது இருக்குங்கிறதை இப்பதான் தெரிஞ்சுகிட்டேன். என் அசிஸ்டென்ட் இரண்டுபேர் இரண்டு இன்ஸ்டிடியூட் வெச்சிருக்கான். வடபழனிலயே 10 இன்ஸ்டிடியூட் இருக்குனு சொல்றாங்க. அதெல்லாம் எப்படி இயங்குதுனு எனக்குத் தெரியலை. ஆனால் நான் வேறொரு தீர்மானத்துல வித்தியாசமா பண்ணணும்னு ஆரம்பிச்சிருககேன். ‘நான் எதையும் மறைக்கமாட்டேன்’னு என்கிட்ட வேலை பார்த்தவங்களுக்கு தெரியும். ஆனால் பல டைரக்டர்கள் பூடமாகவே இருப்பாங்க. கலையை கத்துக்கொடுக்கமாட்டாங்க. கேட்டா, ‘அவனா கத்துக்கட்டும்’னு சொல்லுவாங்க. ஆனால் நான் அப்பப்ப உடைச்சிவிட்டுடுவேன். யாரைவெச்சுகிட்டும் எதுவும் பேசுவேன். அவனுக்கு டபுள் பாசிடிவ் காட்டுவேன். அந்த தைரியம்தான் என் அசிஸ்டென்ட்ஸ் அவனவன் வெளியிலப்போய் கமாண்டிங் பண்ணி டைரக்ட் பண்ணிட்டு போயிட்டே இருக்கானுங்க. என்கிட்ட ஆஃபீஸ் பையனா இருந்த மூணு பேர் டைரக்ட் பண்ணியிருக்கான்னா நம்புவீங்களா? ஆர்வத்தில், ஆசையில் அங்கஇங்க சம்பாதிச்ச பணத்தை கொண்டுவந்து கொடுத்துட்டு கத்துக்க வர்றான். ஏதோ சொல்லிக்கொடுத்தோம். சர்ட்டிஃபிகேட் கொடுத்தோம்னு இருக்கக்கூடாது. ‘இவ்வளவுதான் பட்ஜெட். இதுக்குள்ள படம் எடு’னு சொல்லி அவனைவெச்சே படம் எடுப்பேன். இந்த இன்ஸ்டிடியூட்டுக்கு வர்ற ஒவ்வொருத்தனையும் ஆளுமை உள்ள திரைக்கலைஞனா உருவாக்கணும் என்பதுதான் என் ஆசை.’’

‘‘நீங்க இதுக்கு என்னமாதிரியான திட்டங்கள் வெச்சுருக்கீங்க?’’

‘‘நான் அனுபஸ்தன், பிராக்டிக்கலா சொல்லித்தருவேன். இங்க உள்ள பல சினிமாக் கலைஞர்களை ஃபேகல்ட்டியா நியமிச்சிருக்கேன். ஹாலிவுட் ஆட்களின் அணுகுமுறை வேறாக இருக்கும் என்பதால் ஃபாரின்ல இருந்து திறமையான கலைஞர்களை கெஸ்ட் லெக்சர்களா வரவைக்கிறேன். அதை புரிஞ்சுக்கணும் என்பதற்காகத்தான் இதில் சேர அடிப்படை கல்வித்தகுதியை பிளஸ்டுனு நிர்ணயிச்சிருக்கோம். ஒரு புத்தகத்தை படிச்சிட்டு சமையல் பண்றது வேறு. இப்படித்தான் குழம்புவைக்க செஃப்புக்கு கத்துக்கொடுக்குறான். ஆனா நம் அம்மா கடுகு, வெங்கயாத்தை அள்ளிப்போட்டு அப்புடியும் இப்புடியுமா தாளிப்பா. அதோட டேஸ்ட் பியூட்டிஃபுல்லா இருக்கும். எங்க அம்மாவுக்கு அந்த கைப்பக்குவத்தை யார் கத்துக்கொடுத்தா? அதனால தியரியை நீ கத்துக்க. ஆனால் இயற்கையா களத்துல பயிற்சி எடுக்குறதுதான் வாழ்நாள்பூரா மறக்காது. அந்த பயிற்சியை நான் கத்துத்தர்றேன்னு சொல்லியிருக்கேன். எல்லா மாணவர்களையும் நான் கையில எடுப்பேன். ‘நீங்க சேர்மன். நீங்கல்லாம் வரக்கூடாது’ம்பாங்க. ஆனால் ஐயம் ஓப்பன். யெஸ், இது ஓப்பன் யுனிவர்சிட்டி.’’

‘‘அரசியலுக்கு வருவோம். ‘தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளணும்’னு சொல்றீங்க....

(கேள்வியை முடிக்கும்முன்பே தொடங்குகிறார்.) ‘‘ஆந்திராவிலோ, மராட்டியத்திலோ, கர்நாடகாவிலோ நான்போய் தலைவனாக முடியுமா? மந்திரியாக முடியுமா? பிச்சிடுவான். மற்ற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு நீதி, எங்களுக்கு மட்டும் ஒரு நீதியா? ஏன்னா பரந்துவிரிந்த இதயத்துக்கு சொந்தக்காரன் தமிழன். முன்னாடி இது ஒரு சமஸ்தானம். அப்ப எல்லா மக்களும் இங்க இருந்தீங்க. மொழிவாரி மாநிலங்கள் பிரிஞ்சு போயிடுச்சுல்ல... உங்கள் மொழிகளுக்கான அமைப்புகளை தனித்தனியா ஏற்படுத்திக்கிட்டீங்கள்ல. அப்ப எங்களை விட்டுடணும்ல. நீங்க எங்களோடு சகோதர சகோதரிகளா பழகினதால், சென்னையில் தலைநகரம் இருந்த காரணத்தால், உங்கள் சொத்துக்கள் எல்லாம் சென்னையில் இருந்ததால் இங்க இருந்துகிட்டு இன்னைக்கு அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க. எங்களோடு சேர்ந்து ‘நான்தான் தலைவர்’னு சொல்லிட்டு இருக்கீங்க. உனக்கு என்ன தெரியும்? என் அய்யனார் கோயில் திருவிழா தெரியுமா? தைப்பொங்கல்னா என்னனு தெரியுமா? இதோ மாடு வெட்டாதனு சொல்லிட்ட. இங்க பிறந்தவனுக்குத்தான் என் பூமி பற்றி தெரியும். ‘தமிழ், தமிழ்னு பேசுறீயே, நீ என்ன இலக்கியம் படிச்சிருக்க’னு நீங்க என்கிட்ட கேட்கலாம். என் ஆத்தா கத்துக்கொடுத்த மொழி, எங்க ஆத்தாட்ட குடிச்ச பால். அதை எப்படி நான் மாத்த முடியும்? அந்தக்கோவம்தான். ‘எல்லாரும் சேர்ந்து தொழில்நடத்துவோம். அரசியலே பேசுவோம். ஆனா சி.எம்.ங்கிற அந்தத் தலைமைப்பதவியில நாங்கதான் இருப்போம். எவன் தமிழ்த் தாய்ப்பால் குடிச்சு வளர்ந்தானோ அவனுக்கு மட்டும்தான் அந்த தலைமைப்பதவி, அவன் முட்டாளாவே இருந்தாலும் சரி. ஏன்னா இந்த மண்ணை தீர்மானிப்பதில், இந்த மக்களை தீர்மானிப்பதில் அவன் சோரம் போகமாட்டான்னு ஒரு நம்பிக்கை. அப்படி காமராஜருக்குப்பிறகு ஒரு பச்சைத்தமிழன்கூட வரலையே?’’

‘‘திருமுகன் காந்தி மீது குண்டர் சட்டம், மாட்டுக்கறிக்கு தடை... இப்படி பல விஷயங்கள்ல மத்திய அரசுக்கு இடம் கொடுத்து ஒதுங்கி நிற்கும் தமிழக அரசை எப்படி பார்க்கிறீங்க?’’

‘‘இந்த கண்ணாமூச்சி ஆட்டங்களை நான் பார்ப்பதே இல்லை. ஆனால் திருமுருகன் பண்ணினதில் என்ன தவறு என்பதுதான் எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஆதங்கம். பல லட்சம் மக்களை ஈழத்தில் கொன்னாங்க. அவங்களுக்கான அந்த நினைவேந்தலை நீங்க எப்படி தடுக்கலாம்? ‘மெரினாவில் மக்கள் கூட தடைஇருக்கு’னு சொல்றீங்க. ஆனால் அங்கு நம் முன்னோர்கள் மூன்று பேரின் பதிவிடங்களுக்கு திரளான கூட்டம் வருகிறதே, அவர்களை தடுத்து நிறுத்த முடியுமா? இதுவும் அதேபோன்ற நினைவேந்தல்தானே? அப்புறம் அதை மட்டும் எப்படி தடுத்து நிறுத்தலாம்? தடுத்தீர்கள், கைது செய்தீர்கள் ஓ.கே. குண்டர் தடுப்பு சட்டத்தில் போட உங்களுக்கு யார் அதிகாரம் தந்தது? அவன் என்ன கொலைகாரனா? கொள்ளையடித்தானா? என்ன தப்பு பண்ணினான்? அப்படி என்றால் மெரினாவில் உள்ள மூன்று தலைவர்களின் பதிவிடங்களில் நினைவஞ்சலி செலுத்த தடைபோடுவீங்களா?’’

‘‘ஈழத்தில் போர் முடிந்து இத்தனை வருஷங்களுக்குப்பிறகும் அந்த மக்களுக்கு ஒரு விடிவும் ஏற்படலையே?’’

‘‘ ‘எல்லாரும் இங்க இருந்துதான் போனார்கள். தொப்புள்கொடி பந்தம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு மொழிதான் நான்கே தவிர நாம் அனைவரும் திராவிடர்கள். ஒரு தாய் வயித்து பிள்ளைகள்’னு பேசுவோம். அப்படின்னா அண்ணன் அடிபட்டால் தம்பி அழுதிருக்க வேண்டாமா? என் அக்கா செத்திருந்தாள் என் தங்கச்சி அழுதிருக்க வேண்டாமா? ஒருதாய் வயிற்றில் இருந்து வந்த என் சகோதர மாநிலங்களில் ஈழத்துக்காக யாராவது கண்ணீர் விட்டார்களா? அது என்ன பிரச்னை என்றாவது பார்த்தார்களா? அப்புறம் எப்படி நீங்கள் பேசுவது சரியாகும்? இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள். பிறகு ஈழம் பற்றி பேசலாம்.’’

‘‘சீமான் உங்களின் மாணவர். உங்களிடம் அன்பு கொண்டவர். அவரை இராமேஸ்வரத்தில் நீங்கள்தான் மேடை ஏற்றினீர்கள். இன்று அவரின் அரசியல் செயல்பாட்டை எப்படி பார்க்கிறீர்கள்?’’

‘‘அன்னைக்கு நான் பார்த்த சீமான் வேறு. நான்தான் அவனை முதன்முதலாக இராமேஸ்வரத்தில் அரசியல் மேடை ஏற்றினேன். அவன் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பான்னு அப்ப எனக்குத் தெரியாது. ‘ஏன்டா ஆரம்பிச்சனு அவன்ட்ட நான் சண்டை போட்டிருக்கேன். ஆனால் அவன் ஆரம்பிச்சது நியாயம்னு இப்ப எனக்குத் தோணுது. அவன் பேசுறது லாஜிக்கா இருக்கு. எதையோ தொடப்போய் அவன் பல விஷயங்களை புரிஞ்சுகிட்டான். எனக்கு அவன் அன்னைக்கு சரினு தோணலை. ஆனால் இன்னைக்கு அவன் எனக்கு சரியாகத் தெரியுறான்.’’

அடுத்த கட்டுரைக்கு