Published:Updated:

அஜித், விஜய் சேதுபதி, மாதவன்... சினிமாவுக்கு முன்னாடி என்ன பண்ணாங்க?

தார்மிக் லீ
அஜித், விஜய் சேதுபதி, மாதவன்... சினிமாவுக்கு முன்னாடி என்ன பண்ணாங்க?
அஜித், விஜய் சேதுபதி, மாதவன்... சினிமாவுக்கு முன்னாடி என்ன பண்ணாங்க?

தமிழ் சினிமாவில் தற்போது முக்கியமான இடத்தில் இருக்கும் சில நடிகர்கள், ஹீரோவாக அவர்களது சினிமா பயணத்துக்கு முன், இப்படித்தான் தங்களது நடிப்பு அத்தியாயத்தைத் தொடங்கினார்கள்!

சீரியல், குறும்படம் எனத் தொடங்கிய திரைப்பிரவேசத்தைப் பார்க்கலாமா...

சந்தானம் :

சந்தானம் என்றதுமே நினைவுக்கு வருவது அவரது கலாய் கவுன்டர்கள்தாம். தற்போது தமிழ் சினிமாவில் அவரும் முக்கியமான இடத்தில் இருக்கிறார். தன் ஆரம்ப காலத்து சினிமா பயணத்தை காமெடிக் கதாபாத்திரம் மூலம்தான் தொடங்கினார். அதன் பின்னர் வெளியான படங்களில் ஹீரோக்களே காமெடி செய்வதுவிடுகிறார்கள் என்று உஷாரான இவர், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் மூலம் ஹீரோவாகக் களமிறங்கினார். அதன் பிறகும் சில படங்களில் காமெடியனாக நடித்து வந்தவர், பின்னர் முழு நேர ஹீரோவாக மாறிவிட்டார். பல படங்கள் ஆன் தி வேயில் இருக்கின்றன. 'சர்வர் சுந்தரம்' படம் கூடிய விரைவில் வெளிவர இருக்கிறது. இவர் வெள்ளித்திரைக்கு வரும் முன் சின்னத்திரை சீரியலான 'லொள்ளு சபா' மூலம்தான் மக்களுக்கு அறிமுகமானார்.

விஜய் சேதுபதி :

இப்போதைய ட்ரெண்ட்செட்டர் ஹீரோக்கள் லிஸ்டில் இவரும் ஒருவர். இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் எல்லாமே வித்தியாசமாகவும், ரசிகர்களுக்குப் பிடிக்கும்வண்ணம் இருக்கும். முந்தைய படத்தின் ரோலுக்கும், அடுத்த பட ரோலுக்கும் சம்பந்தமே இருக்காது. வெரைட்டியாகப் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் ஆரம்ப காலத்தில் சினிமாவுக்குள் வரும் முன் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறார். பல படங்களில் ஓர் ஓரத்தில் வந்த இவரை 'டிஷ்யூம்', 'புதுப்பேட்டை', 'அஞ்சாதே', 'வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' எனப் பல படங்களில் காணலாம். ஆனால் 2006-ல் சன் டி.வி-யில் ஒளிபரப்பான 'பெண்' என்ற டி.வி சீரியலில் இவர் நடித்திருக்கிறார். என்ன பாஸ் ஆச்சர்யமா இருக்கா? எனக்கும் அப்படித்தான் இருந்தது... நீங்களே இந்த வீடியோவைப் பாருங்க!

அஜித் :

தமிழ் சினிமாவின் 'தி மோஸ்ட் வான்டட் ஆக்டர்' லிஸ்டில் இருக்கிறார் அஜித். ஸ்டைலாக பைக் ஓட்டும் இவருக்கு, அந்தக் காரணத்தினாலேயே ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். ஆனால் இவர் நடித்த முதல் குறும்படத்தில் தன் காதலி பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருக்க, அவர் முன் சீன் போட நினைத்து பைக்கை எடுத்து வீலிங் செய்து, அந்த ரோட்டிலேயே கீழே விழுந்துவிடுவார். 'ஹே ராமு, பெரிய ஹீரோ மாதிரி பைக்ல திரும்ப நெனச்ச... ஆனா உன் பைக்கே உன்னைக் கவுத்து விட்டுருச்சு பாத்தியா?' என்று அந்தப் பெண்ணை காதலிக்கும் மற்றொருவர்  சொல்லிவிட்டுப் போவார். அதுமட்டுமல்லாமல் அந்தக் குறும்படத்தில் அவருக்கு வாய்ஸ் கொடுத்ததே நம்ம எம்.எஸ்.பாஸ்கர் தான்.

மாதவன் :

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் நம்ம 'மேடி'. 'அலைபாயுதே', 'மின்னலே', 'டும் டும் டும்', 'ஜே ஜே' எனப் பல படங்களில் நடித்து தனக்கென பெண் ரசிக பட்டாளத்தை உண்டாக்கிக்கொண்டார். அதன் பின்னர் கொஞ்ச காலம் கேப் விட்டு 'இறுதிச் சுற்று' படம் மூலம் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மறுபடியும் தமிழ் சினிமாவில் கம் பேக் கொடுத்தார். ஹீரோவாகக் களமிறங்கும் முன் 'பனேகி அப்னி பாத்' என்ற இந்தி சீரியல் மூலமாகத்தான் திரைக்கு அறிமுகமானார். இவரும் சினிமாவில் நடிப்பதற்கு முன் பல கஷ்டங்களைச் சந்தித்திருக்கிறார். 

ஶ்ரீ ராம் :

இவரை 'ஶ்ரீ' என்று சொன்னால்தான் பலருக்கும் அடையாளம் தெரியும். 'வழக்கு எண் 18/9', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'சோன் பப்டி', 'வில் அம்பு', 'மாநகரம்' என இவர் நடித்த எல்லாப் படங்களின் கதையுமே வேற வேற ஜானரில் இருக்கும். வித்தியாசமான கதாபாத்திரத்தை மட்டுமே ஏற்று நடித்து வருகிறார். சைலன்டாக தமிழ் சினிமாத் துறையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். இவரும் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் முன் 'கனா காணும் காலங்கள்' எனும் டி.வி சீரியல் மூலமாகத்தான் கேமராவுக்கு அறிமுகமானார். 'கல்லூரி' பட ஆடிஷனின்போது தேர்வாகாத இவர் 'வழக்கு எண் 18/9' படத்தில் தன் யதார்த்தமான நடிப்பால் தமிழ்த் திரையுலக ரசிர்களைக் கவர்ந்தார்.