Published:Updated:

''சேலை கட்டவெல்லாம் டிப்ஸ் கேட்பாங்க!'' - 'நாதஸ்வரம்' ஸ்ரித்திகா

''சேலை கட்டவெல்லாம் டிப்ஸ் கேட்பாங்க!'' - 'நாதஸ்வரம்' ஸ்ரித்திகா
''சேலை கட்டவெல்லாம் டிப்ஸ் கேட்பாங்க!'' - 'நாதஸ்வரம்' ஸ்ரித்திகா

''சேலை கட்டவெல்லாம் டிப்ஸ் கேட்பாங்க!'' - 'நாதஸ்வரம்' ஸ்ரித்திகா

'பிரேமம்' படத்தில் மலர் டீச்சர் எவ்வளவு ஃபேமஸோ, அவ்வளவு ஃபேமஸ், சின்னத்திரையில் 'நாதஸ்வரம்' சீரியல் மலர் கேரக்டர். அந்த கேரக்டரில் நடித்து, தமிழ்க் குடும்பங்களின் மனதைக் கொள்ளையடித்தவர் ஸ்ரித்திகா. தொகுப்பாளராகப் பயணத்தை ஆரம்பித்து, வெள்ளித்திரைக்குள் நுழைந்து, பிறகு சின்னத்திரையில் தனி இடம் பிடித்தவர். இப்போது, சன் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் 'குலதெய்வம்' சீரியலில் கலக்கி வருகிறார். 

''நீங்க மலாய் மொழியில் நல்லாப் பேசுவீங்களாமே...'' 

''ஆமாங்க! தமிழ், மலாய், ஆங்கிலம் என மூன்று மொழிகளில் நல்லாப் பேசுவேன். நான் பிறந்து வளர்ந்தது மலேசியா. அங்கே பள்ளிப் படிப்பு பதினொரு வருஷம்தான். கல்லூரி படிக்கலாம்னு சென்னைக்கு வந்தால், பிளஸ் டூ முடிக்கணும்னு சொல்லிட்டாங்க. அதைப் படிச்சுட்டு பிறகு பி.பி.ஏ முடிச்சேன். இங்கே வந்துதான் தமிழ் பேசக் கத்துக்கிட்டேன்.'' 

'' 'நாதஸ்வரம்' சீரியல் அனுபவம் எப்படி இருந்துச்சு?'' 

''நான் படிச்சுட்டு இருக்கும்போது என் அக்கா சுதா, ஸ்டேஜ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிட்டு இருந்தாங்க. நானும் அவங்களோடு போவேன். அப்படி கிடைச்சதுதான் தொகுப்பாளர் வாய்ப்பு. பிறகு, நிறைய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். விளம்பரம், சீரியல், சினிமா என அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைச்சது. இதில், மிகப்பெரும் வாய்ப்பாக வந்தது 'நாதஸ்வரம்' சீரியல். எனக்கென தனி அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் கொடுத்துச்சு. என்னுடைய முதல் சீரியல் 'கலசம்'. இப்போ நடிக்கும் 'குலதெய்வம்' சீரியலையும் சேர்த்து, இதுவரை ஒன்பது சீரியலில் நடிச்சிருக்கேன். பெரும்பாலும் மெயின் ரோல்களே எனக்குக் கிடைக்கும். அதுக்காக, இயக்குநர்களுக்கு நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.'' 

'' 'நாதஸ்வரம்' மலர் என அடையாளப்படுத்திய விஷயம் எது?'' 

''அது என்னுடைய டிரெஸ்ஸிங் சென்ஸ்தான். அந்த சீரியலில் நான் கட்டிய சேலைகள் பலருக்கும் பிடிச்சிருந்துச்சு. காஸ்டியூம் கொடுக்கிறது யூனிட்னாலும், அதை வித்தியாசமாகவும் சரியாகவும் பயன்படுத்துவதில் இருக்கு. என் ரோலுக்கு மிடுக்கா இருக்கணும்னு காட்டன் சேலைகளையே கொடுப்பாங்க. என் ஸ்கின்னுக்கு பொருத்தமான மெட்டீரியலைப் பார்த்து செலக்ட் பண்ணுவேன். பொதுவாக, சேலைகளில் முந்தானைக்கு ஐந்து மடிப்புகள் வரைதான் எடுத்துக் கட்டுவாங்க. நான் ஏழுக்கும் மேல் குட்டிக் குட்டியாக எடுத்துப்பேன். சரியானபடி அயர்ன் பண்ணி கட்டும்போது அவ்வளவு அழகாக இருக்கும். மலேசியாவுல இருந்தப்போ என் அம்மா எப்போவோதான் சேலை கட்டிப் பார்த்திருக்கேன். நானே அவங்களுக்கு கட்டிவிடுவேன். அந்த ஆர்வம்தான் சீரியலிலும் எதிரொலிச்சது. 'நாதஸ்வரம்' முடிச்ச பிறகும் சேலை கட்டுவதில் டிப்ஸ் கொடுங்கனு நிறைய பேர் என்கிட்டே கேட்டிருக்காங்க. அந்த அளவுக்கு மலராக எல்லார் மனசுலயும் நின்னுட்டேன்.'' 

''சில சீரியல் வாய்ப்புகளை வேண்டாம்னு சொல்லிட்டீங்களாமே...'' 

''ஆமாம். தெலுங்கு சீரியலில் வாய்ப்பு வந்துச்சு. அதிக தூரம் டிராவல் பண்ற மாதிரி இருக்குமேனு மறுத்துட்டேன். அப்படித்தான் சில சினிமா வாய்ப்புகளையும் மறுத்துட்டேன்.'' 

''ஷூட்டிங் ஸ்பாட்ல யார்கிட்டேயாவது கோபப்பட்டதுண்டா?'' 

''பொதுவாகவே நடிகர்கள் சட்டென உணர்ச்சிவசப்படக் கூடியவங்க. அப்படி எனக்கும் கோபம் வரும். ஆனா, அதை வெளிக்காட்டிக்க மாட்டேன். சில சமயம் என்னையும் மீறி கோபப்பட்டுட்டா, அந்த நாள் முழுக்க அது என்னையே கஷ்டப்படுத்தும். எந்த வேலைகளிலும் கவனம் செலுத்த முடியாது. அதனால், பெரும்பாலும் பொது இடங்களில் கோபப்படுவதை தவிர்த்திடுவேன். அதுதான் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது.'' 

''உங்கள் டிரேட் மார்க் புன்னகையின் சீக்ரெட் என்ன?'' 

''என்னுடைய ஒரே சீக்ரெட், புத்தகங்கள். எப்பவும் ஏதாவது ஒரு புத்தகத்தை என்னோடு வெச்சிருப்பேன். மனசு கொஞ்சம் டல்லாகும்போதெல்லாம் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பிச்சுடுவேன். சிட்னி ஷெல்டனின் நாவல்கள், என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட்.'' 

''இந்தத் துறையில் சாதிச்சதா நீங்க நினைக்கிற விஷயம் எது?'' 

''என் ரசிகர்களைத்தான். என் சொந்தப் பெயரான ஸ்ரித்திகாவை மறந்துப்போகிற அளவுக்கு மலர் மலர்னே கூப்பிட்டு அன்பு செலுத்தி திக்குமுக்காட செய்துட்டாங்க. எங்காவது 'மலர்'னு வேற யாரையாவது கூப்பிட்டாலும் நான் திரும்பிப் பார்க்கிறேன். இப்படி அன்பு காட்டும் ரசிகர்களை சம்பாதிச்சதுதான் என்னுடைய பெரிய சாதனையா நினைக்கிறேன்.'' 

அடுத்த கட்டுரைக்கு