Published:Updated:

நேரடி அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்? - எஸ்.டி.டி என்ன சொல்லுது

நேரடி அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்? - எஸ்.டி.டி என்ன சொல்லுது
நேரடி அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்? - எஸ்.டி.டி என்ன சொல்லுது

நேரடி அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்? - எஸ்.டி.டி என்ன சொல்லுது

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ விஜய் விரைவில் அரசியல் பிரவேசம் புகுவார் போல... ரஜினி மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும்போது கிளம்பும் வழக்கமான எதிர்ப்புகளும் விஜய் மக்களுக்காகக் குரல் கொடுக்கும்போது இல்லை. மாறாக, சமூக வலைதளங்களிலும் அவரது பேச்சுக்கு ஆதரவு குவிகிறது. ஆக, அடுத்த பிக் பிரேக்கிங் நியூஸ் விஜய் அரசியலில் குதிப்பதாக இருக்கலாமோ..?

ரஜினி அரசியலுக்கு இறங்குவாரா மாட்டாரா எனும் குழப்பத்திற்கு மக்களைப் போலவே அவருக்கும் விடை கிடைக்காமல்தான் 'விஜய் மக்கள் இயக்கம்' எனும் அமைப்பைத் தொடங்கினார் விஜய். 2011 சட்டமன்றத் தேர்தலின்போதே 'விஜய் மக்கள் இயக்கம்' அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகச் செயல்படும் என எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்தார். ஜெயலலிதா தரவிரும்பிய இரண்டு எம்.எல்.ஏ சீட்களையும் ஏற்காமல் வெளியிலிருந்து ஆதரவு தரப்பட்டது. நாளைய தமிழகத்தின் எதிர்காலத்துக்கு இரண்டு சீட்கள் எப்படிப் போதுமானதாகும்? தட் மாப்பிள்ளை தங்கச் சொம்பு கொடுத்தாதான் தாலி கட்டுவாராம் மொமென்ட். 

அ.தி.மு.க-வின் வெற்றிக்குப் பிறகு, ‘ராமருக்கு அணில் உதவியதுபோல ஜெயலலிதாவின் வெற்றிக்கு விஜய் மக்கள் இயக்கம் உதவியது’ என எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு அறிக்கையைப் போட அ.தி.மு.க தலைமையே கொஞ்சம் ஆடித்தான் போனது. அதற்கு அப்புறம் விஜய் நடித்த 'தலைவா' வெளியாவதற்கு ஏகப்பட்ட இடையூறுகள் செய்யப்பட்டன. அப்போதே விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்பினர். ஆனாலும், அப்போது தள்ளிப்போட்டவர் தொடர்ந்து தனக்கு ஆளுங்கட்சியால் பிரச்னை வருவதை அமைதியாக ஜென் நிலையில் அமர்ந்து வேடிக்கை பார்த்தார். விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி அரசியல் படங்களுக்கு மட்டுமல்ல, அவரது அரசியல் வாழ்க்கைக்கும் நல்ல இயக்குநராக இருப்பார். விஜய்யின் அரசியல் பிரவேசப் பஞ்சாயத்தைத் தொடங்கிவைத்த அவரே அதைத் தீர்த்தும் வைப்பார். 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, 'புலி வருது... புலி வருது..' என ஆட்டம் காட்டிக்கொண்டிருந்துவிட்டு இப்போது களம் சூடுபிடிக்கும் நேரத்திலும், 'போர் வரும்வரை பொறுத்திருப்போம்' என வாய்ஸ் கொடுத்திருக்கிறார். ஆனால், விஜய் அப்படியெல்லாம் இன்னொரு போர் வரும்வரை காத்திருக்காமல், கிடைக்கிற கேப்பில் விடா வெட்டுவார். இதைவிட வெட்டவெளியான வேறு இடம் கிடைப்பது கடினம். சினிமாக்களிலேயே மக்களுக்குத் தொந்தரவு இல்லாத இடங்களில் வில்லன்களைப் பட்டையை உரிப்பவர் ஆயிற்றே..! 

'தமிழகத்தைத் தமிழர்தான் ஆளவேண்டும்' எனத் தமிழ்ப் பற்றாளர்கள் ரஜினிகாந்துக்குக் கட்டையைப் போடுவதைப் போல விஜய்க்குப் போடமுடியாது. 'யார் அடிச்சா பொறி கலங்கி பூமி அதிருதோ... அவன் தான் தமிழ்... நான்தான் தமிழ்'னு அப்பவே உக்கிரமா பேசினவர். அதை இப்போ கேட்டாலே எதிர்த் தரப்பு சைலண்டாகிடும். 

விஜய் அவர் படத்துக்குப் பிரச்னை வரும்போதோ, அல்லது படம் வெளிவரும் சமயங்களில் மட்டுமோ வாய்ஸ் கொடுப்பவர் அல்ல. அரசுக்கு எதிராகவும், மக்களுக்கு ஆதரவாகவும் பல நேரங்களிலும் குரல் கொடுத்திருக்கிறார். விவசாயிகள் பிரச்னைக்காக, மத்திய அரசை நேரடியாகச் சாடியவர், 'வல்லரசு ஆவதெல்லாம் இருக்கட்டும். முதலில் நல்லரசு கொடுங்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாருங்கள்' என்றிருக்கிறார். ஒரே நேரத்தில் மத்திய மாநில அரசுகளையும் விமர்சித்த அதேவேளையில், 'வல்லரசு' விஜயகாந்த்தையும் சைடுவாக்கில் வம்புக்கிழுத்திருக்கிறார் எனத் தெரிகிறது. 

இந்த நேரத்தில் நிலவும் அசாதாரணமான சூழலைப் பயன்படுத்தி, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா..? புது அரசியல்வாதிகளை எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார்கள் தமிழக மக்கள். ரஜினி வரவில்லையென்றதும், தரை லெவலாக இறங்கி, ஆர்.ஜே.பாலாஜி, ஹிப்ஹாப் ஆதி வரைக்கும் முதல்வர் ஹேஸ்டேக் போட்டுப் பார்த்தார்கள். புது ரத்தத்தோடு தலைமை தேடும் தமிழகத்திற்குப் புத்துயிர் அளிக்க இளையதளபதி வருவாரா..? 

விஜய்யும் அரசியல் களத்தில் குதித்தால் தேர்தல் களம் பரபரப்பாகும். தளபதியா இளையதளபதியா என நேருக்குநேர் விவாதங்கள் நடக்கும். மறுபக்கம் தல - தளபதி சண்டையும் அனல் பறக்கும். நமக்கென்ன... ஒரே என்டர்டெயின்மென்ட்டுதான்!

ஏற்கெனவே விஜய் நடிக்கும் படங்கள் மலையாளத்திலும், தெலுங்கிலும் வசூல் குவிக்கிறதாம். தமிழகத்தில் கட்சியைத் தொடங்கினால், விரிவாக்கி மற்ற மாநிலங்களிலும் கெத்து காட்டலாம். அப்படியே பக்கத்து மாநிலத் தேர்தல்களிலும் நின்று தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெறலாம். அப்புறமென்ன, அங்கிருந்தே பிரதமர் நாற்காலிக்கு ஸ்ட்ரைட்டாகத் துண்டு போடலாம். 

'நீ அடிச்சா பீஸு... நான் அடிச்சா மாஸு..!' என சினிமாவில் வில்லன்களைத் தெறிக்கவிட்டு மாஸ் காட்டின இளையதளபதி, பிரச்சாரத்திலும் முழங்கி ஆதரவு ஓட்டுகளை அள்ளலாம். ஒருவேளை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி ஆனாலும், பஞ்ச் டயலாக் சொல்லி ஆளுங்கட்சியைப் பஞ்சர் ஆக்கலாம்.

இனி வரும் காலம் சமூக ஊடகங்களின் காலம். அதை இப்போதே சரியாகப் பயன்படுத்தி வருகிறார் விஜய். ட்விட்டரில்  ரசிகர்களைக் கேள்விகள் கேட்கச் சொல்லி பதில்களும் சொல்லி வருகிறார். மூன்று மாதத்துக்கு ஒருமுறை ரசிகர்களைத் தவறாமல் சந்திப்பது விஜய் வழக்கம். சமீபத்தில் ஆன்லைன் ரசிகர்களுக்கு மட்டும் எனப் பிரத்யேகமான ஒரு ஃபோட்டோ செஷனும் நடத்தியிருக்கிறார். எல்லாம் எதுக்கு..? புறாவுக்கே பெல் அடிச்சவராச்சே..!

'தமிழ்நாட்டை இளைஞர்கள் கையில் கொடுக்கவேண்டும்' என அன்புமணி உள்பட பலரும் அறிக்கை விடுறாங்க. எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்த முகமான விஜய், தமிழ்நாட்டின் மோஸ்ட் எலிஜிபிள் இளைஞரும் கூட என்பதைக் கூறவும் இந்த நேரத்தில் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்..!

அடுத்த கட்டுரைக்கு