முதல்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடிக்கிறார்!? #Vijay61

எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல்  என எல்லோரும் இரட்டை வேடங்களில் நடித்த நிறைய படங்கள் சூப்பர், டூப்பர் ஹிட். விஜய்க்கும் இரட்டை வேடங்களில் நடிப்பதற்கு ஆசைதான். முதன்முதலாக ஹீரோ ப்ளஸ் வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்து வெளிவந்த `அழகிய தமிழ்மகன்' திரைப்படம் சரியாகப் போகவில்லை. 'என் மகன் வில்லனாக நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என விஜய்யின் அம்மா ஷோபா கூறியிருந்தார். அதன் பிறகு `இனிமேல் இரட்டை வேடங்களில் நடிப்பதில்லை. குறிப்பாக, வில்லன் போன்ற நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதில்லை' என முடிவெடுத்தார்.

விஜய்தாணு தயாரிப்பில் 'துப்பாக்கி' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்து, விஜய்யின் உலகளாவிய சினிமா வியாபாரத்தை  100 கோடி ரூபாய்க்குமேல் உயர்த்தினார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். அடுத்து 'கத்தி' படக்கதையை எடுத்துக்கொண்டு போய் விஜய் முன் நின்றார் முருகதாஸ். ஆரம்பத்தில் உற்சாகமாகக் கதையைக் கேட்டுக்கொண்டிருந்தவர், டபுள் ஹீரோ சப்ஜெக்ட் எனத் தெரிந்தவுடன் திகைத்து நின்றார்.  `இனி இரட்டை வேடங்களில் நடிக்கும் திட்டமே இல்லை' என தான் ஏற்கெனவே முடிவெடுத்திருந்த விஷயத்தை முருகதாஸிடம் தெரிவித்தார். 

` 'கத்தி' படத்தில் நடித்துப் பாருங்கள். அது ரிலீஸான பிறகு உங்கள் எண்ணத்தையும் முடிவையும் நீங்கள் மாற்றிக்கொள்வீர்கள். அந்த அளவுக்கு 'கத்தி' படக்கதையில் உங்கள் நடிப்பு இன்னொரு பரிமாணத்தில்  நிச்சயம் மிளிரும்' என முருகதாஸ் சொல்லச் சொல்ல, விஜய் கடைசியில் ஓகே சொன்னார். ஏற்கெனவே 'துப்பாக்கி' படத்தைக் கொடுத்து வெற்றியை நிரூபித்த இயக்குநர் என்பதால், முருகதாஸ் சொன்ன காரணத்தை அவரால் மறுக்க முடியவில்லை. பிறகு தீர்க்கமான முடிவோடு 'கத்தி' படத்தின் கேரக்டரில் முழு ஈடுபாட்டுடன்  நடித்தார். முருகதாஸ் சொன்னதுபோலவே  விஜய் நடித்த  விவசாயி கேரக்டர், சிறப்பான வரவேற்பைப் பெற்றது. 

விஜய் - அட்லி

சிவாஜி நடித்த 'தெய்வமகன்', ரஜினி நடித்த 'மூன்று முகம்' போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. விஜய்க்கும் மூன்று வேட மோகம் இருந்தாலும், அதற்கான கதைகளோ, சூழ்நிலைகளோ அமையவில்லை. 'தெறி' படப்பிடிப்பு முடிவடைந்த நேர இடைவெளியில் அட்லி சொன்ன  மூன்று வேடங்களில் நடிக்கும் கதை, விஜய்க்கு மிகவும் பிடித்துபோனது.  அதன் பிறகு தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு அந்தக் கதை சொல்லச் சொல்லி அட்லியை அனுப்பினார். இப்போது 'விஜய்-61' என்ற நாமகரணத்துடன் மூன்று வேடங்களில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.

'தெறி' படத்தில் நடித்த போலீஸ் அதிகாரி கேரக்டருக்காக சம்மர் கட்டிங் செய்திருந்தவர்,  'பைரவா' படத்தில் விக் வைத்து நடித்தார். 'பைரவா' படத்துக்குப் பிறகு அட்லி படத்தில் மூன்று வேடங்களில் ஒரு வேடத்துக்காக   தாடி வளர்த்து பலவித கோணங்களில் போட்டோக்கள் எடுத்துப் பார்த்தார். விஜய்யின் தாடி கேரக்டருக்கு ஜோடியாக நடிப்பதற்குத்தான் ஜோதிகாவின் கால்ஷீட் கேட்டனர். ஏதோ காரணத்தால் `நடிக்க இயலவில்லை' என ஜோதிகா தவிர்க்க, இப்போது அந்த கேரக்டரில் நித்யா மேனன் நடித்துவருகிறார். தாடி விஜய் தவிர, இன்னும் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்களுக்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் நடிக்கிறார்கள்.

இது இப்போதைய நிலவரம். சட்டென மூன்றாவது கேரக்டர் வேண்டாமென முடிவெடுத்தும் திரைக்கதையை திருத்திக் கொள்வார்கள் என்பதால்...காத்திருப்போம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!