Published:Updated:

‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ வேலை செய்கிறதா? - 'பீச்சாங்கை' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ வேலை செய்கிறதா? - 'பீச்சாங்கை'  விமர்சனம்
‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ வேலை செய்கிறதா? - 'பீச்சாங்கை' விமர்சனம்

‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ வேலை செய்கிறதா? - 'பீச்சாங்கை' விமர்சனம்

பீச்சாங்கையில் பர்ஸ்களை பிக்பாக்கெட் அடித்துப் பிழைக்கும் ஹீரோ ஸ்மூத்து என்கிற எஸ்.முத்துவுக்கு, காதல் வருகிறது. திருந்த நினைக்கும்போது ஒரு விபத்து. அதற்குப் பிறகு அவரின் ‘பீச்சாங்கை’ சொல்பேச்சு கேட்காமல் போகிறது. அதனால் ஏற்படும் வினைகளும் விளைவுகளுமே படம் சொல்லும் கதை.   

அசால்ட்டாக இடதுகையால் பிளேடு போட்டு பிக்பாக்கெட் அடிக்கும் அசகாய சூரன் ஆர்.எஸ்.கார்த்திக். பிக்பாக்கெட் அடித்தாலும், பணத்தைத் தவிர மற்றவற்றை உரியவருக்கு அனுப்பும் கொஞ்சூண்டு நல்லவன். மூவர் கூட்டணியில் பிக்பாக்கெட் அடிக்கும் இவர், ஒரு விஷயத்தில் பிரிகிறார். அப்போது வருகிறது அஞ்சலி ராவுடன் காதல். பிறகொரு விபத்தில் மாட்டிக்கொள்ளும் நாயகனுக்கு, ‘வலது மூளை சொல்வதை இவர் கை கேட்காத’ வியாதி வருகிறது. அந்த வியாதியுடன் ஒரு குழந்தை கடத்தல், நாட்டின் முக்கியக் கட்சி விவகாரம், தன் காதல் ஆகிய முக்கோணத்தை எப்படிச் சமாளிக்கிறார் என்பதே படம்.

பர்ஸில் இருக்கும் பணத்தை மட்டும் எடுத்துவிட்டு அதில் இருக்கும் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களைத் திருப்பி அனுப்புவது, கீழே கிடந்த பர்ஸை உரியவரிடம் கொடுத்து, அவர் பாக்கெட்டிலிருந்து பிளேடு போட்டு எடுக்கும் ‘தொழில் தர்மம்’ என ஹீரோவின் கதாபாத்திர டீடெய்லிங் சிறப்பு. அவரும் அதற்கு ஏற்றாற்போல் அளவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

ஆரம்ப காட்சிகள் அழுத்தமாகவே இல்லை. பிக்பாக்கெட்டுக்குக் கூட்டணி இருப்பதும், அது பிரிவதும் எல்லாமே செயற்கைத்தனம். அந்தக் காதலும் படத்தில் சேராமல் துருத்திக்கொண்டு நிற்கிறது. வசனங்களிலும் புதிய பாணி இல்லாத, செல்ஃபியை `செல்வி' என்பது, ஆண்ட்ராய்டை `அண்ட்ராயர்' என்பதும் அதே பழைய வாசனை.

இந்த அலுப்பான முன்பகுதியை ஓரளவுக்கு சரிசெய்து தாங்குகிறது படத்தின் இரண்டாம் பாதி. வில்லன் ‘கோவை கஜா’வின் (பொன்முடி) காட்சிகள் பெரும்பாலும் கலகல. அவரது மச்சான் கிருஷ் ஆரம்பத்தில் சலிப்படையவைத்தாலும் போகப் போகத் தன் அசட்டுத்தனத்தால் சிரிக்கவைக்கிறார். கஜா கேங்கின் மற்ற இருவருமே தேர்ந்த நடிப்பு. எம்.எஸ்.பாஸ்கர் தன் நிறைவான நடிப்பால் சீனியாரிட்டியை நிரூபிக்கிறார். செய்தி சேனல் ஒன்றின் பெயர் டி.ஆர்.பி என்றிருப்பது, நியூஸ் வாசிக்கும் எல்லோரையும் வித்தியாசமாக வாசிக்கவைத்து சிரிக்கவைத்திருப்பது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் ‘சில’ என்றில்லாமல் இன்னும் சேர்த்திருக்கலாமே என எண்ணவைக்கிறது.

படத்தில் பெரும்பாலும் எல்லாரும் புதுமுகங்கள்தான். நாயகிக்கு இவர்மீது காதல் வருவதும் போவதும் மீண்டும் வருவதும் எதுவுமே அழுத்தமாக இல்லை. எங்கோ ஒருசில இடங்களில் எஸ்.டி.டி பூத் இருக்கின்றனதான். ஆனால், ஒரு படத்தில் அதைக் காட்டிக்கொண்டே இருப்பது படம் எந்தக் காலத்தில் நகர்கிறது என்ற குழப்பத்தைக் கொண்டுவந்து ஒன்றவிடாமல் செய்கிறது.

`ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்' என்ற புது விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை முடிந்தவரை காமெடியான படத்தில் பொருத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அஷோக். பட்ஜெட் பற்றாக்குறை வெளியே தெரியாதபடி தரமான காட்சியமைப்புகளைப் பதிவுசெய்திருக்கும் கேமராமேன் கௌதம் ராஜேந்திரன் பாராட்டவைக்கிறார். வில்லன் கஜாவின் கூடாரத்தை டார்க் லைட்டில் காட்டி, அந்த இடத்தை நம்மால் உணரும்படி செய்திருக்கிறார். சண்டைக்காட்சிகள் சிறப்பு. ஸ்டன்ட் மாஸ்டர் விமல் ராம்போவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். காரணம், உடலில் மற்ற பாகங்கள் கெஞ்சிக்கொண்டிருக்க இடதுகை மட்டும் அடிக்க வேண்டும். அதைக் கொஞ்சமும் நம்மை சந்தேகப்படவைக்காமல் ஏற்றுக்கொள்ளும்படி இயக்கியிருக்கிறார். அரசியல்வாதி விவேக் பிரசன்னாவின் அடியாள்கள் இருவரைப் புரட்டி எடுக்கும் சண்டைக்காட்சி குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. பாடல்கள், படத்தோடு ஒன்றவில்லை. பின்னணி இசையில் ஆங்காங்கே கவனிக்கவைக்கிறார் இசையமைப்பாளர் பாலமுரளி பாலு.

மருத்துவர் இந்தக் கோளாறு குறித்து பெரிய விளக்கம் கொடுத்த பிறகும், இன்னமும் புரியவைக்க மான்டேஜ் பாடல் காட்சி வருவது; தியேட்டர் கழிவறையில் வைத்து நாயகன் செல்ஃபோன் அடிக்கப்போகும் இடத்தில் திணிக்கப்பட்டிருக்கும் இரண்டாம் தர காமெடி... எனப் பல இடங்களில் கத்தரி விளையாடியிருக்கலாம்.

எடுத்துக்கொண்ட களம் முற்றிலும் புதிது. இடைவேளைக்குப் பிறகு, கொஞ்ச நேரம் கலகலப்பாகப் போகிறது படம். முழு படத்திலும் அந்த ஃபீல் இருந்திருந்தால், இந்தப் பீச்சாங்கையைப் பற்றி அழுத்தமாகக் குலுக்கியிருக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு