ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

நிஜத்தில் 'ரேஸ் கார்' பண்ணையார்!

வெள்ளித்திரைகட்டுரை : பொன்.விமலா

##~##

'பண்ணையாரும் பத்மினியும்’ - ஒரு காரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் பற்றிய பேச்சுக்கள் பட்டிதொட்டிகளிலும் கேட்கின்றன! சமீபகாலத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பால், தமிழக மக்களை திரும்பிப் பார்க்கவைத்துக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, இந்தப் படத்தில் நடித்திருந்தாலும்... ஹீரோ என்னவோ பல படங்களில் அப்பாவாக வலம் வந்துகொண்டிருக்கும் ஜெயப்பிரகாஷ்தான்! ஆம்... முதுமையின் காதலை தன் மனைவி துளசியிடம் மெல்லிய இழைகளாய் பின்னும் ஜெயப்பிரகாஷ்தான் படத்தின் நாயகன்.

திருமணத்துக்குப் பின் காதல் என்பதன் ஆயுள், மிகக்குறைந்ததே. ஆனால், வயோதிக வயதிலும் காதலை மென்மையாய் வெளிப்படுத்த முடியும் என்பதை அழகாகப் பதிவு செய்திருக்கிறது 'பண்ணையாரும் பத்மினியும்’ படம். யூத் ரொமான்ஸ்களை எல்லாம் பின் தள்ளிவிட்டு, அனைத்து தரப்பையும் ரசிக்க வைத்து அப்ளாஸ் அள்ளிய 'பண்ணையார் - செல்லம்மா’ ஜோடியாக வாழ்ந்த ஜெயப்பிரகாஷ்- துளசியிடம் 'அவள் விகடன்' 400-வது இதழுக்காக பேசினோம்!

''இந்தப் பண்ணையார் குழந்தை மாதிரி!''

''முதல்ல அருணுக்கு நன்றி சொல்லிக்கிறேன்...'' என்று பேச்சை ஆரம்பித்தார் ஜெயப்பிரகாஷ்.

''நண்பர்களோட சேர்ந்து, 'கோபாலா கோபாலா', 'பொற்காலம்', 'பூந்தோட்டம்', 'செல்லமே', 'தவசி' இந்தப் படங்களைஎல்லாம் தயாரிச்ச நான், கொஞ்சம் ஓய்வு தேவைப்படவே, சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தேன். அப்போ என் நண்பரான சேரன், 'பர்சனாலிட்டியா இருக்கீங்க. நீங்க ஏன் நடிக்கக் கூடாது?’னு சொல்லி, 'மாயக்கண்ணாடி’ படத்துல நடிக்க வெச்சார். தொடர்ந்து,

நிஜத்தில் 'ரேஸ் கார்' பண்ணையார்!

'நாடோடிகள்’, 'பசங்க’, 'நான் மகான் அல்ல’, 'யுத்தம் செய்’, 'மங்காத்தா’, 'மூடர்கூடம்’னு நிறைய ஹிட் படங்கள்ல நானும் இடம் பிடிச்சுருக்கேன். இந்த வாய்ப்பை எனக்கு தந்த இளம் இயக்குநர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.

அந்த வரிசையில 'பண்ணையாரும் பத்மினியும்’ படத்துக்காக இயக்குநர் அருண் என்னைக் கூப்பிட்டப்போ, கதை ரொம்பப் பிடிச்சுருந்தது. ஏற்கெனவே ஷார்ட் ஃபிலிமா வெளியாகி, ஹிட் அடிச்ச படம். நம்பிக்கையோட ஷூட்டிங் போனோம். பொதுவா, வளர்ந்து வரும் ஹீரோக்கள், தங்களை சுத்தி கதை நகருதா, அதில் தனக்கு ஹீரோயிஸம் இருக்கானுதான் பார்ப்பாங்க. ஆனா, இதில் என் ரோல் பிர தானமா இருந்தாலும், ஒவ்வொரு நாளும் ஈகோ பார்க்காம சந்தோஷமா நடிச்சார் விஜய்சேதுபதி. ஹேட்ஸ் ஆஃப் விஜய்!

கதையில், பண்ணையாருக்கு 'பத்மினி’ கார் மேல காதல். ஆனா, கார் ஓட்டத் தெரியாது. 'கல்யாண நாளுக்கு கார்ல வரணும்னா பண்ணையார்தான் கார் ஓட்டணும்’னு பொண்டாட்டி சொல்லிடறா. அதை நிறைவேத்தறதுக்காக விஜய்சேதுபதிஉதவியோட கார் கத்துக்குவார் பண்ணை யார். இதுதான் படம்.

வழக்கமான படங்கள்ல வர்ற பண்ணையார் மாதிரி மைனர் செயின், வெள்ளை வேட்டி, முறுக்கு மீசைனு எல்லாம் இதில் சலிப்பு கொடுக்க மாட்டேன். இந்தப் பண்ணையார் ஒரு குழந்தை மாதிரி. பொதுவா இளமையில் இருக்கும் காதல், முதுமை வந்த பிறகு நட்பா மாறும்ங்கிறதுதான் உண்மை. இந்தப் படத்திலயும் அந்த மாதிரி நுணுக்கமான காட்சிகள்தான் இருக்கும். எனக்கு ஜோடியா நடிச்ச துளசிகிட்ட, காலம் கடந்த காதலை அன்பா, நட்பா வெளிப்படுத்தும் ஸீன்களை ரொம்பவே ரசிச்சுப் பண்ணினேன்.  

விஜய்சேதுபதி கார் ஓட்டச் சொல்லித் தருவார். 'மொதல் கம்பி... ரெண்டாவது கம்பி... மூணாவது கம்பி'னு கிளச்ட், பிரேக், ஆக்ஸிலேட்டரை மனப்பாடம் செஞ்சு பார்ப்பேன். நிஜத்துல... நான் கார் ஓட்டும் ஸ்பீடுக்கு, என் மனைவியும், என்னோட ரெண்டு பிள்ளைங்களும் ஃபேன்ஸ். சும்மா டிராவல்னு இல்லாம, ஸீட் பெல்ட் போட்டுக்கிட்டு என் டிரைவிங்கை என்ஜாய் பண்ணுவாங்க!''

- நிஜத்திலும் பாசக்கார கணவராக ஜொலிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

''இங்கிலீஷ்ல திட்டிட்டேன்!''

''முதல் படத்துல நடிச்சப்போ நான், மூணு மாச குழந்தை!'' என்று சிரிக்கிறார் துளசி.

''குழந்தை நட்சத்திரமா அறிமுகமாகி, தெலுங்கில் கதாநாயகியா நடித்து, கன்னடத்துல 'சிறந்த துணை நடிகை’ விருது வாங்கி, இப்போ தமிழில் நடிச்சுட்டு இருக்கேன். வசிக்கிறது பெங்களூரு. ஷூட்டிங்குக்காக அடிக்கடி சென்னை வந்து போறேன்.

டைரக்டர் அருண்குமார், எனக்குப் பையன் மாதிரி. ஜாலியா சிரிச்சுட்டே வேலை வாங்குவான். நான் நல்ல சிவப்பு. 'முடியவே முடியாது... எங்க பண்ணையாரம்மா கறுப்பாதான் இருப்பாங்க’னு டார்க் மேக்கப் போடச் சொல்ல, நானும் செல்லமா திட்டிக்கிட்டே போட்டுக்கிட்டேன். பல முறை நான் சொதப்பும்போதும், அருண், சேது (விஜய் சேதுபதிக்குத்தான் இந்த செல்லப் பெயர்), ஜே.பி. சார்னு (இது ஜெயப்பிரகாஷ்) எல்லாருமே பொறுமையா எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுப்பாங்க.

நிஜத்தில் 'ரேஸ் கார்' பண்ணையார்!

காலையில நாலு மணிக்கெல்லாம் எழுந்து குளிச்சுட்டு விளக்கேத்திட்டு, சீக்கிரமே பிரேக்ஃபாஸ்டை முடிக்கறது என் வழக்கம். அதனால சீக்கிரமே எனக்கு பசியெடுத்துடும். அதிகபட்சம் ஒரு மணி வரைக்கும்தான் பசி தாங்குவேன், அதுக்கு மேல ஒரு நிமிஷம்கூட முடியாது. ஷூட்டிங்ல ஒருமுறை பிரேக் விடாம வேலை பார்த்துட்டே இருந்தாங்க. எனக்கு பசி வயிற்றைக் கிள்ளிடிச்சு. பொங்கி எழுந்து, 'துளசிக்கு பிரேக்’னு காட்டுக்கத்து கத்தினேன். அப்புறம் டைரக்டர், கேமராமேன்னு எல்லாரையும் இங்கிலீஷ்ல திட்டினேன். 'நல்லவேளை யாருக்கும் இங்கிலீஷ் தெரியாது’னு சொல்லி டீமே சிரிச்சாங்க'' என்று தானும் சிரித்த துளசி,

''படத்துல இருக்கிற ஓல்ட் ஏஜ் ரொமான்ஸ் பத்தி நிறைய பாராட்டுகள் வந்துட்டே இருக்கு. பெண் பிள்ளைகள்... 'அது வேணும், இது வேணும்'னு பிறந்த வீட்டுக்கு கண்ணைக் கசக்கிட்டு வரும்போதெல்லாம்... அம்மாக்கள் அரவணைப்பாங்க. பொண்ணுங்க அதை கொஞ்சம் அதிகப்படியாவே பயன்படுத்திப்பாங்க. இந்தப் படத்துல இது ரொம்ப இயல்பா சொல்லப்பட்டிருக்கும். இப்படி வர்ற மக, வீட்டுல இருக்கற காரையே கேட்க... 'ஒரு தாயா நின்னு அவளுக்காக பேசறதா... இல்லை, ப்ரியமா அந்த காரை பாதுகாத்துட்டு வர்ற கணவனுக்காக மறுகுறதா?'னு பெரிய பாசப்போராட்டமும் இந்தப் படத்துல இருக்கு''

- கண்களில் மின்னல் துளசிக்கு!