Published:Updated:

நாக சைதன்யா முதல் மம்முட்டி வரை.. தமிழில் ரீமேக் ஆகும் பிறமொழி படங்கள்!

முத்து பகவத்
நாக சைதன்யா முதல் மம்முட்டி வரை.. தமிழில் ரீமேக் ஆகும் பிறமொழி படங்கள்!
நாக சைதன்யா முதல் மம்முட்டி வரை.. தமிழில் ரீமேக் ஆகும் பிறமொழி படங்கள்!

புதிதாக ஒரு படத்தை இயக்குவதை விட, மற்றமொழியில் தெறி ஹிட்டடித்த படங்களை தமிழில் ரீமேக் செய்துவிட்டால் நிச்சயம் ஹிட்டடித்து விடலாம் என்ற வகையில்  சில படங்கள் தமிழில் ரீமேக்காகி வருகிறது. அப்படி தமிழில் தயாராகிவரும் சில ரீமேக் படங்கள் இவைதான். 

குயின்:- 

திருமணத்திற்குப் பிறகு தேனிலவு கொண்டாட பாரிஸ் செல்ல ஆசைப்படும் நாயகி கங்கணா ரணாவத். ஆனால் திருமணம் பாதியிலேயே நின்றுவிட, தனியாக பாரிஸ் செல்கிறார் கங்கணா. அங்கு நடக்கும் சில சுவாரஸ்யங்களும், பெண்களின் சுதந்திரமும் பேசும் படம்தான் ‘குயின்’. இந்தியில் வெளியான இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமை தயாரிப்பாளர் தியாகராஜன் கைவசம். குயின் கேரக்டரில் காஜல் அகர்வால் நடிக்கிறார். தமிழிலும், கன்னடத்திலும் இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். 

மகேஷின்டே பிரதிகாரம்:-

விமர்சனம் மற்றும் வசூல் என இரண்டிலும் கடந்த வருடம் வரவேற்பு பெற்ற படம் இது. ஊரில் போட்டோ ஸ்டூடியோ வைத்துநடத்தும் ஃபகத் ஃபாசிலுக்கு ஏற்படும் ஒரு பிரச்னை, அதை எப்படி எதிர்கொண்டார், அதற்காக அவர் செய்யும் விஷயங்கள் என்னென்ன, இதற்கு நடுவே அவரின் இரண்டு காதல்கள் என  கேரள நேட்டிவிட்டியோடு வெளியானது இப்படத்தை தமிழில் ப்ரியதர்ஷன் இயக்குகிறார். ஃபகத் கேரக்டரில் உதயநிதி நடிக்கவிருக்கிறார். 

ஷனம்:- 

குழந்தை காணாமல் போய்விட்டதாக, முன்னாள் காதலன் ரிஷியை அழைக்கிறார் நாயகி அடா ஷர்மா. ஆனால் குழந்தை இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. இருந்தாலும் காதலிக்காக குழந்தையைத் தேடுகிறார் ரிஷி.  உண்மையில் குழந்தை இருந்ததா, ஆமென்றால் என்னவானது என்பதுதான் கதை. தமிழில் ‘சத்யா’ என்ற பெயரில் தயாராகிவிட்டது. சிபிராஜ், ரம்யாநம்பீசன், வரலட்சுமி நடித்திருக்கிறார்கள்‘சைத்தான்’ பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிவருகிறார். படம் அடுத்த மாதம் ரிலீஸ். தெலுங்குப் படமென்பதால் தமிழுக்கு ஏற்றமாதிரி யோகிபாபு காமெடி, சில காட்சிகளும் புதிதாக சேர்த்திருக்கிறார்கள். 

பெல்லி சுப்புலு:- 

தெலுங்கின் ட்ரெண்ட் செட்டிங் படம் ‘பெல்லி சுப்புலு’. மாஸ் படங்களுக்கு மட்டுமே மார்க்கெட் இருந்த தெலுங்கு திரையுலகையே கலக்கிய படம் இது. தெலுங்கில் விஜய் தேவரகெண்டா, ரீத்து வர்மா நடித்த இப்படம், 2 கோடியில் தயாராகி, 30 கோடி அள்ளியது. இப்படத்தை தமிழில் தயாரிப்பவர் கெளதம் மேனன். படத்தின் தமிழ் டைட்டில் ‘பெண் ஒன்று கண்டேன்’. விஷ்ணுவிஷால், தமன்னா நாயகியாக நடிக்கிறார்கள். கெளதமின் இணை இயக்குநரான செந்தில் வீராசாமி இயக்கிவருகிறார். 

சார்லி:-

கடந்த வருடம் கிருஸ்துமஸ் ரிலீஸ் சார்லி. பயணம் சம்பந்தமான இப்படம் விமர்சகர்கள் ரீதிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. டிராவலர் துல்கரைத் தேடிச் செல்கிறார் நாயகி பார்வதி. ஏன் தேடிச்செல்கிறார் என்பது திரைக்கதை. விஜய் இயக்கத்தில் துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் மாதவன். நாயகியாக சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். தற்பொழுது ‘கரு’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் இயக்குநர் விஜய், விரைவில் இப்படத்தை தொடங்கவிருக்கிறார். 

பாஸ்கர் த ராஸ்கல்:-

மலையாளத்தில் சித்திக் இயக்கிய படம். பொதுவாக இயக்குநர் சித்திக் மலையாளத்தில் அவர் இயக்கிய படங்களை அப்படியே தமிழிலும் ரீமேக் செய்துவிடுவார். காவலன், எங்கள் அண்ணா , ஃப்ரெண்ட்ஸ் வரிசையில் இப்படத்தையும் தமிழில் ரீமேக் செய்கிறார். மம்மூட்டி, நயன்தாரா கேரக்டரில் தமிழில் அரவிந்த்சாமி மற்றும் அமலாபால் நடிக்கிறார்கள். கூடவே தெறி பேபி நைனிகாவும் நடிக்கிறார். தெறி படத்தைத் தொடர்ந்து நைனிகாவிற்கு இது இரண்டாவது படம்.  

100% லவ்:-

தெலுங்கில் வெளியான காதலும் காதல் சார்ந்த மாஸ் படம் “100% லவ்’. 2011-ல் ரிலீஸான இப்படத்தை சுகுமார் இயக்கினார். அவரே தமிழில் தயாரிக்கவுள்ளார். புதுமுக இயக்குநர் எம்.எம். சந்திரமெளலி இயக்குகிறார். இப்படத்தில் நாயகனும், இசையமைப்பாளரும் ஜி.வி.பிரகாஷ்குமார்தான். லண்டனில் இப்படத்தின் பெரும்பகுதி படமாகவிருக்கிறது. 

ரிச்சி:- 

கன்னடத்தில் வெளியான ‘உலிதவாறு கண்டந்தே’ படத்தின் தமிழ் ரீமேக் தான் ரிச்சி.  நிவின்பாலி நடிக்கும் நேரடித் தமிழ்படம் இது. பிரகாஷ்ராஜ், அசோக்செல்வன், நட்டி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள். தூத்துக்குடி தாதாவாக நிவின் நடித்துவருகிறார். இதன் டீஸர் சமீபடத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை கெளதம் ராமச்சந்திரன் இயக்கிவருகிறார்.