Published:Updated:

பத்மப்ரியா, ப்ரியாமணி, அஞ்சலி... இன்னும் சிலர்... எங்கே போனார்கள் இவர்கள்?

பா.ஜான்ஸன்
பத்மப்ரியா, ப்ரியாமணி, அஞ்சலி... இன்னும் சிலர்... எங்கே போனார்கள் இவர்கள்?
பத்மப்ரியா, ப்ரியாமணி, அஞ்சலி... இன்னும் சிலர்... எங்கே போனார்கள் இவர்கள்?

சில நடிகைகள் பற்றி யோசிக்கும்போதோ, எதேச்சையாக அவர்கள் நடித்த படத்தையோ, பாடல் காட்சியையோ பார்க்க நேரிட்டாலோ, `இவங்க அதுக்குப் பிறகு என்ன ஆனாங்க?' என்ற யோசனை வரும். ஒருவேளை அந்த ரோலில் மட்டும்தான் அவர்களால் ஜொலிக்க முடிந்ததா அல்லது அதைத் தாண்டியும் அவர்களால் நடிக்க முடியுமா? முடியும் என்றால், ஏன் அவர்களுக்கு அப்படியான வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை என்பது மாதிரியான பல கேள்விகள் நமக்குள் எழும்.

அறிமுகப்படத்தில் நிறைய நடிகைகளுக்கு நல்ல கதாபாத்திரம் அமைவதும், நடிப்புக்காகப் பாராட்டுகளைப் பெறுவதும் உண்டு. அதன் பிறகு அவர்கள் தேர்வுசெய்யும் படங்களால் நடிப்பை வெளிப்படுத்த முடியாமல்போவதும் உண்டு. உதாரணமாக, `சேது' அபிதா, `காதல்' சந்தியா, `காதல் கொண்டேன்' சோனியா அகர்வால், `மயக்கம் என்ன' ரிச்சா எனப் பலரைக் கூறலாம். அப்படி முதல் படத்தில் பளிச் அறிமுகம் கிடைத்து, அதன் பிறகு சரியான வாய்ப்புகள் கிடைக்காதவர்களின் பட்டியல்...

ப்ரியாமணி:

பாரதிராஜா, பாலுமகேந்திரா படங்களில் நடித்தவருக்கு `பருத்திவீரன்' படம் மூலம் கிடைத்தது பெரிய வெளிச்சம். `முத்தழகு' ப்ரியாமணிக்கு  வாழ்நாள் கதாபாத்திரம் எனக் கூறலாம். ஆனால், அவரது திறமைக்கு அது முதல் படி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என வெவ்வேறு மொழிகளில் நடித்தாலும், ப்ரியாமணிக்கு சவால்விடும் கதாபாத்திரங்களாக எதுவும் அமையவில்லை. ஏராளமான திறமை இருந்தும், ஷாரூக் கானுடன் `ஒன் டூ த்ரீ ஃபோர்... லெட்ஸ் கோ த டான்ஸ் ஃப்ளோர்' என ஆடவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது சினிமா. விளைவு, ஆடுவதைப் பார்த்து மார்க் போட்டு, நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக அமர்ந்துவிட்டார் ப்ரியாமணி. 

பூஜா:

அறிமுகப் படமான `ஜே ஜே'வில் பெரிய கதாபாத்திரம்தான் என்றாலும் கதாநாயகி வேறு ஒருவர். தொடர்ந்து சில படங்களில் பூஜாவின் நடிப்புப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அது `ஓரம் போ' படத்தில் மெல்லிதாக எட்டிப்பார்த்தது. நிறைந்து நின்றது `நான் கடவுள்' மற்றும் `விடியும் முன்' படங்களில்தான். `விடியும் முன்' படமே பூஜாவுக்குச் சிறப்பான கம்பேக்காக இருந்திருக்க வேண்டும். ஆனால், படம் பற்றி ஒன்றிரண்டு பேர் தவிர, யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. அந்தப் படத்துக்காகப் பல விருதுகள் கிடைத்தாலும், இப்போது வரை சினிமாவிலிருந்து கொஞ்சம் விலகியே இருக்கிறார் பூஜா. 

அஞ்சலி

ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் படத்தில் ஆனந்தியாக உள்ளம் கவர்ந்தார். அங்காடித் தெருவில் கருப்பழகியாய் சோகம் பேசிய விழிகளிலும் நடிப்பில் சொக்க வைத்தார்.  எங்கேயும் எப்போதும் படத்தில் துறுதுறு பெண்ணாக ஜெய்யை மட்டுமல்லாமல், நம்மையும் காதலிக்க வைத்தார். வித்தியாசமான வேடங்கள் எதுவானாலும் செய்வார், நடிக்கத் தெரிந்த - பக்கத்து வீட்டுப் பெண் சாயல் கொண்ட அசல் நடிகை என்று ரசிகர்கள் சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்க கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சி என்று இறங்கி அதிலும் கவரவே செய்தார். தெலுங்கிலும் குறிப்பிடப்படும்படியான படம். ராமின் பேரன்பு, தரமணி இரண்டிலும் நடித்திருக்கிறார். ராம் படமே அவருக்கு ஒரு கம்பேக் தரும் என்று காத்திருக்கிறார்! 

பத்மப்ரியா:

பத்மப்ரியா நடிப்பு பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் `யதார்த்தம்'. அலட்டிக்கொள்ளாத, அழகான, அளவான இன்னும் நிறைய வார்த்தைகளைக் குறிப்பிட்டுகூட பாராட்டலாம். `தவமாய் தவமிருந்து', `பட்டியல்', `சத்தம் போடாதே', `மிருகம்', `பொக்கிஷம்', `தங்கமீன்களி'ல் சிறிய கதாபாத்திரம் என, நடித்த அத்தனை படங்களிலும் கச்சிதமான நடிப்பைப் பார்க்க முடியும். எல்லாம் இருந்தும் கடைசியாக `பிரம்மன்' படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடியதைப் பார்த்தபோது திடுக்கென்றுதான் இருந்தது. 

ஓவியா - இனியா:

இருவரும் சற்குணம் படம் மூலம் அறிமுகமானவர்கள். வந்த முதல் படத்திலேயே அழுத்தமான என்ட்ரி கொடுத்தார்கள். ஆனால், அதன் பிறகு டிராக் மாறி கிளாமர் பக்கம் போனதால் `இவங்கதான் ஹீரோயினா?' என்ற மாதிரியே அணுகும்படி ஆகிவிட்டது. ஒருவேளை நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் ரோல்கள் கிடைத்திருந்தால் ஓவியாவின் அசத்தலான நடிப்பைப் பார்த்திருக்கலாமோ என்னவோ! ஆனால், இனியாவுக்கு அந்தப் பிரச்னை இல்லை. சில மலையாளப் படங்களில் அவரின் வேற லெவல் பெர்ஃபாமன்ஸைப் பார்க்க முடியும். அது `வாகை சூடவா' படத்துக்குப் பிறகு தமிழில் நிகழவில்லையே என்பதுதான் பிரச்னை. 

கமாலினி முகர்ஜி:

`வேட்டையாடு விளையாடு' படத்தில் கமாலினி நடித்த போர்ஷன் அரை மணி நேரத்துக்கும் குறைவுதான். பிரமாதமான நடிப்பு எனச் சொல்லும்படி எதுவும் செய்ய வாய்ப்பில்லை என்றாலும், பளிச் என அடையாளம் கிடைத்திருந்தது. சில படங்களால் கமர்ஷியலில் சிக்கிக்கொள்ள, பிரமாதமான நடிப்பைக் காட்ட `இறைவி' வரை கமாலினி காத்திருக்கவேண்டியதாக இருந்தது. அப்போதுகூட அதற்கான பாராட்டோ, கவனமோ பெரிய அளவில் கிடைக்கவில்லை. சமீபத்தில் மலையாளத்தில் வெளியான `புலிமுருகன்' படம் பார்த்தால் கமாலினியின் நடிப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும். மாஸ் கமர்ஷியல், மல்லுவுட்டின் முதல் 100 கோடி ரூபாய் கலெக்‌ஷன் படம் என்ற விஷயங்கள் எழுந்ததால், கமாலினியின் நடிப்பு பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. இப்போதும் கமாலினிக்குச் சரியான ரோல் கிடைத்தால் மிரட்டுவார் என்பது நிச்சயம்.

வாணி கபூர்:

இதுவரை நடித்ததே மூன்று படங்கள்தான் என்பதால் வாணி கபூரின் நடிப்புப் பற்றி சொல்லாமலிருக்க முடியாது. தமிழில் `ஆஹா கல்யாணம்' மூலம் அறிமுகமானார். படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்பதால், வாணி கபூரின் நடிப்பு வெளியே தெரியவில்லை. இருப்பினும், உணர்வுகளை வெளிப்படுத்தும்படி நடிப்பதில் வாணி கபூர் அசத்தலானவர்.

வாமிகா கபி:

'மாலை நேரத்து மயக்கம்' படம் வந்ததே சிலருக்குத் தெரியாது என்பதால், வாமிகா கபி பற்றி பரவலாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அந்தப் படத்திலேயே மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் வாமிகா. மலையாளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான 'கோதா' படம் இவரின் நடிப்பைப் பற்றி அதிகம் பேசவைத்தது. ஆனால், அதைவிட அழுத்தமான ஒரு ரோலில் நன்றாக நடித்தபோதும் தமிழில் எந்தப் பெரிய கவனமும் பெறவில்லை என்பதுதான் சோகம். `மாயா' படம் இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் `இறவாக்காலம்' படத்தில் அந்த வரவேற்பு கிடைக்கும் என நம்பலாம்.

நடிகை என்றால் எல்லா வகை படங்களிலும் நடிக்க வேண்டும்தான். ஆனால், தன் நடிப்பால் பார்ப்பவரைச் சிலிர்த்துப்போகச் செய்யும் நடிப்புத்திறன் இருந்தும், அதை வெளிக்காட்ட முடியாத வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ளும் நிலைதான் பிரச்னை. இந்த மாதிரி நடிகைகள் வருவது, நடிப்பது ஒரே ஒருமுறை மட்டும் நிகழும் மாயாஜாலம் அல்ல என நிரூபித்த இருவர் இருக்கிறார்கள். நயன்தாரா, பார்வதி. சந்தேகமே இல்லாமல் இருவரும் சிறந்த நடிகைகள்தான். ஆனால் இருவரின் ஸ்டைல் வேறு வேறு. நயன்தாரா கமர்ஷியல், கவர்ச்சி, சம்பிரதாய ஹீரோயின் என எல்லாவிதமான நாயகி ரோல்களிலும் நடித்தவர். பார்வதி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள சிறிய ரோலாக இருந்தாலும் நடிப்பவர். ஆனால், இருவரும் தொடர்ந்து தங்களின் இருப்பை அடுத்தடுத்த படங்கள் மூலம் பதிவுசெய்துகொண்டே இருந்தார்கள் என்பதுதான் விஷயம்.  

நயன்தாராபோல பெரிய கேப் விட்டு கம்பேக் கொடுத்தால்கூட வரவேற்பு கிடைப்பது எல்லோருக்கும் நிகழ்வதில்லை. அதே வேளையில் பார்வதிபோல செலெக்டிவாக நடிப்பதும், தன் நடிப்பு எந்தப் படத்தில் இருக்க வேண்டும் என முடிவுசெய்யும் தெளிவும் எல்லோருக்கும் இருப்பதில்லை. கூடவே, இவரைத்தான் நடிக்கவைக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கும் உரிமை பல நேரங்களில் இயக்குநருக்கும் இருப்பதில்லை. ஆனால், இதற்கு நடுவில்தான் நயன்தாரா போன்றோ, பார்வதி போன்றோ, பத்மபிரியா போன்றோ திறமைசாலிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

இப்படியான நடிகைகள் ஒதுக்கப்படுவதற்குக் காரணம், இதுதான்... இவர்தான் எனச் சொல்ல முடியாது. அப்படித் தனக்கென எந்த ஒழுங்கையும் வைத்துக்கொள்ளாததுதான் சினிமாவின் அமைப்பு. ஆனால், இதைத் தாண்டிதான் எல்லோரும் ஜெயிக்கவேண்டும் என்பதுதான் சினிமாவில் இருக்கும் சவால்; சாபமும்கூட. `இந்த நல்ல கலைஞர்களுக்கு நிச்சயம் நான் ஆதரவு தருவேன்' என சககலைஞர்களும் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் உறுதியெடுப்பது ஒன்று மட்டுமே இந்த நிலையை மாற்ற வல்லது. அந்த ஆதரவு தொடர்ச்சியாக இருந்தால், இயக்குநர்கள் கதை யோசிப்பதில்கூட நல்ல மாற்றங்கள் நிகழும். அந்த நல்ல கதைகளில், நல்ல கலைஞர்கள் பயன்படுத்தப்படுவது மாதிரி ஆரோக்கியமான சுழற்சிகளும் உண்டாகும்.

கொஞ்சம் மனசுவைங்க பாஸ்!