Published:Updated:

எத்தனை ராக்கர்ஸ் வந்தாலும், தமிழ் சினிமாவை... ம்ஹ்ம்..! - ஓர் அலசல்

எத்தனை ராக்கர்ஸ் வந்தாலும், தமிழ் சினிமாவை... ம்ஹ்ம்..! - ஓர் அலசல்
எத்தனை ராக்கர்ஸ் வந்தாலும், தமிழ் சினிமாவை... ம்ஹ்ம்..! - ஓர் அலசல்

வெள்ளிதோறும் பிரசவமாகிற திரைப்படங்களை அரைமணி நேரத்தில் தரவிறக்கம் செய்து, விரும்புகிற இடத்தில் விரும்புகிற மாதிரி பார்த்துவிடக் கூடிய சாத்தியங்கள் பெருகிவிட்ட சூழலிலும் பொருளாதார வசதிக்குத் தகுந்தாற்போல் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ, தனியாகவோ திரையரங்கிற்கு சென்று பார்க்கும் கூட்டம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு படைப்புக்கு செய்கின்ற உண்மையான நியாயம் இதுதான் என்கிற கலையறத்துடன் அரங்கிற்கு வருவோர் ஒரு தரப்பினர், திரைப்படத்தில் நிகழ்கின்ற களத்தை இன்னும் நெருக்கமாக உணர்வதற்காக அரங்கிற்கு வருவோர் இன்னொரு தரப்பினர். இவ்விரண்டு தரப்புமற்று பொழுதுபோக்கிற்காக வந்து செல்வோரும் உண்டு. இந்த முத்தரப்பினர்களால்தான் இன்று திரைப்படத்துறை வாழ்ந்துக் கொண்டிருக்கிறது எனச் சொன்னால் திரை நட்சத்திரங்களே ‘ஆம்’ என்றபடி கண்ணீர் மல்க ஒப்புக்கொள்வார்கள்.

மேற்கூறியவர்கள் தவிர, குடித்துவிட்டு போதை தெளியும்வரை உறங்கிச் செல்வோர், படம் வெளியானவுடன் பார்க்கவில்லையெனில் பொதுச்சமூகத்தில் தனிமைப்பட்டு விடுவோமோ என்கிற அச்சத்தில் ஓடோடிவருவோர், ஜோடியாக வந்தமர்ந்து ஜாலியாகப் படம் பார்ப்போர், இணையத்தில் திரைவிமர்சனம் எழுதுவதற்காகவே அறச்சீற்றத்துடன் வந்தமர்வோர் என்று ரகங்கள் பற்பல.

எதுவாகினும், படைப்பாளிகளையும், பார்வையாளர்களையும் ஓர் இருண்ட மண்படத்தில் ஒன்றினைக்கிற திரையரங்குகளின் பங்கு இதில் முக்கியமானது. தமிழ் ராக்கர்ஸா அல்லது டிக்கெட் புக்கிங்கா? என்று நாணயம் சுண்டி எடுக்கப்படும் தீர்மானங்களில் திரையங்குகள் நல்கிய, நல்குகின்ற முன்னனுபவங்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டி இருக்கிறது. திரையரங்கிற்குச் சென்று காண வேண்டுமென டிக்கெட் முன்பதிவு செய்ய ஆரம்பித்ததிலிருந்து, படம் முடித்து வீட்டுக்கு வந்து காலைக் கழுவும் வரை எந்த மாதிரியான உணர்வு மேலோங்கியிருக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தமுறை பெரிய திரையில் பார்க்கலாமா கூடாதா என்கிற கொள்கை முடிவு எடுக்கப்படும்.

இணையத்தில் முன்பதிவு செய்யும்போது ஒரு டிக்கெட்டுக்கு அதற்குரிய தொகை போக எக்ஸ்ட்ராவாகவும் வசூலிக்கிறார்கள். எந்த இருக்கையாய் இருப்பினும் பரவாயில்லை என்று பெருந்தன்மையுடன் உட்கார விரும்புகிறவர்களிடம்கூட எவ்வித சலுகையுமின்றி அதே பணம் வசூலிக்கப்படுவது ஈகைக் குணத்திற்கு எதிரானது. டிக்கெட் பணம், தின்பண்ட காம்போ, சேவை வரி இதுபோக தியாகி பென்ஷன் என்கிற ரீதியில் நம்மிடமிருந்து ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வாங்குகின்ற இந்நிறுவனங்கள், இதுகாறும் வாங்கிய பணத்தை வருட இறுதியில் கணக்குக் காட்டியதோ, யாரிடம் கொண்டு சேர்க்கப்பட்டது என்கிற சாட்சியங்களை நிறுவியிருக்கிறார்களா என்று சிந்தித்துப் பார்க்கும்போது சில்லறைக்குப் பதில் மிட்டாய் கொடுத்து சிரிக்கும் கல்லாப் பெட்டி காரர்களின் முகமே வந்து போகிறது.

பார்வையாளர்களின் வண்டியை விட்டுச் செல்ல அனுமதிக்கும் திரைவளாகங்கள் எதன் அடிப்படையில் கட்டணத்தை நிர்ணயம் செய்கின்றன? கூரையிட்ட வளாகம் வெட்டவெளி மைதானம் என எதுவாகினும் கட்டண வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. இவர்களின் கட்டணத்திற்கு பயந்து வண்டியை சற்று தள்ளிப்போய் நிறுத்திவிட்டால் இதமான மனநிலையில் படத்தைப் பார்க்க முடிவதில்லை. இவர்களே வண்டிச் சக்கரத்தை பூட்டுகிற வேலையும் செய்கிறார்கள். வண்டிக்கான எரிபொருள், பார்க்கிங் போன்றவைக்காக ஆகும் செலவுகளை கூட்டிக் கழித்தால் கால்நடையாக பயணித்துவிட்டு குதிகால் வலிக்கு வைத்தியம் பார்க்கும் செலவு குறைவு என்றே தோன்றுகிறது.

அரங்கிற்குள் நுழையும்போது அவர்கள் செய்யும் சம்பிரதாய பரிசோதனைகளுக்கு உடம்பு, கைப்பை போன்றவற்றை சில நொடிகளுக்கு ஒப்புக்கொடுப்பதை குறிப்பாக, பெண்கள் அசூசையாக உணர்கிறார்கள் என்பது நேரில் கண்ட களச்சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. போர்காலச் சூழலிலும் தன்னுடைய ஹேண்ட்பேக் இன்னொரு நபரால் சோதனை செய்யப்படுவதை பெண்கள் விரும்புவதில்லை. திரையில் இரட்டை அர்த்த வசனம் பேசும்போது மற்றவர் மாதிரி சத்தம்போட்டு சிரிக்கமுடியாமல் அமுங்கலாகச் சிரித்து எப்படி தங்களின் நகைச்சுவை உணர்வுக்கு கடிவாளம் போடுகிறார்களோ அதே போல உள்ளே நுழையும்போது செய்யும் பரிசோதனைகளினால் உண்டாகும் எரிச்சலையும் அடக்கி வாசிக்கிறார்களென்றே தோன்றுகிறது.

ஒருவழியாக, அரங்கிற்கு வந்து இருக்கையைக் கண்டறிந்து அமர்ந்தால் சில திரையரங்குகளில் நாற்காலிகளின் வரிசை கீழிருந்து ஏற்றமாகச் செல்கிற அமைப்பில் இல்லாமல் வெட்டவெளி மைதானத்தில் பொதுக்கூட்டத்திற்கு போட்டிருப்பதுபோல வரிசையாக ஒரே சமதளத்தில் நாற்காலிகள் நிறுவப்பட்டிருக்கும். ஒரு வரிசைக்கும், இன்னொரு வரிசைக்கும் போதிய இடைவெளி இருக்காது. இதுமாதிரியான திரையரங்குகளில் காண்கின்ற திரைப்படங்களின் அனுபவத்தை முன் இருக்கையில் அமர்கின்ற நபரின் தாராள மனப்பான்மையே தீர்மானிக்கின்றன. முன்னால் உட்கார்ந்திருந்தவரின் தலை போகும் திசைக்கு எதிர் திசையில் பயணித்தே ஒட்டுமொத்தப் படத்தையும் காண வேண்டியிருக்கும். அவர் வந்து உட்கார்ந்த சொற்ப நேரத்திலேயே அவர் காதில் ரகசியம் சொல்வது போல “சார் கொஞ்சம் தலைய டவுன் பண்ணுங்க” என்றதும் சொன்ன மரியாதைக்காக ஓரிரு நிமிடங்கள் இசைந்து போவாரேயன்றி பிறகு தனக்குத் தோதான கோணத்திலேயே தலையை உறையச் செய்துவிடுவார். இதற்கிடையில் இருக்கையின் பக்கவாட்டுக் கம்பியில் யாருடைய கை ஆதிக்கம் செலுத்துவது என்று பக்கத்து இருக்கை நபருடன் நிலவும் பனிப்போரில் ஜெயிக்க வேண்டும்.

நம் ஊரில் பொதுவாகவே பக்கத்து இருக்கை மிகவும் கவனமாகத் தேர்வு செய்யபடும். ஓர் ஆண் பக்கத்தில் ஓர் ஆண் உட்காரலாம். முறையே பெண்ணுக்குப் பெண். ஆனால் எதிரெதிர் பாலினங்கள் பக்கத்துப் பக்கத்தில் உட்கார்வது கவனமாகத் தவிர்க்கப்படுகிறது. நாட்டில் நடக்கிற அரசியல் ஆதிக்கங்களை அவதானிக்கிறபோது திரையரங்குகளில் தேசிய கீதம் முடிந்ததும் இருபாலருக்கும் தனித்தனியே நியமிக்கப்பட்டிருக்கும் இருக்கைகளிலேயே உட்கார வேண்டுமென கட்டளைகள் பிறக்காதவரை மகிழ்ச்சி என்று எண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

படம் பார்க்கும்போது தாகம் எடுத்தால் நீரருந்துவதற்கு எத்தனை திரையரங்குகளில் இலவச குடிநீர் மையம் வைத்திருக்கிறார்கள்? நூற்றுக்கணக்கானோர் கூடுகிற இடத்தில் அது ஓர் அடிப்படை தேவைதானே. இடைவேளை வரை காத்திருந்து ஒரு போத்தல் தண்ணீரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலைக்கு வாங்கி குடிக்க வேண்டியிருக்கிறது. கையில் பணமில்லை என்றால் கம்மென்று அமர்ந்துவிட்டுப் படம் முடிந்ததும் வெளியே ஓடிவரவேண்டும்.

வெளியிலிருந்து குடிநீர், தின்பண்டங்கள் எடுத்துவர அனுமதிப்பதும் இல்லை. சரி, எடுத்து வரவில்லை. உள்ளேயும் அதை விலைக்கு விற்பனை செய்தாலாவது அவர்களின் பிடிவாதத்தில் ஓர் அர்த்தம் இருக்கும். வீட்டிலிருந்து சோற்றுப்பொட்டலம் கட்டிக்கொண்டு திரையரங்கம் வந்து உண்டு மகிழ்ந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறபோது சினிமா பார்க்கப் போவது கொண்டாட்டமான அனுபவமாக இருந்தது. திரையரங்கிற்கு வந்தால் நான் எதைச் சாப்பிட வேண்டுமென்கிற உரிமை என் வாயில் இருந்தது. இன்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அங்கு விற்கப்படுவதை மட்டும் வாங்கும் கட்டாயத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

அப்படியென்ன? அதையும் பார்த்துவிடலாமென ஏதும் வாங்கவே கூடாதென்று வைராக்கியத்தில் புலனடக்கம் செய்து உட்கார்ந்திருக்கையில் இடைவேளை நெருங்கும்போது அக்கம் பக்கத்துக்கு இருக்கையிலுள்ளவர்களிடம் பரிசாரகர் வந்து மசாலான வாசனையுடன் வந்து பலகாரங்களைத் தந்து விட்டுப் போகையில் மனம் மெல்லிதாக சலனடமைய ஆரம்பிக்கும். ம்ஹும் கூடவே கூடாது. இவர்களின் விலையுயர்ந்த தின்பண்டகளை வாங்கித் தின்னவே கூடாதென்று என்று எடுக்கும் சபதத்தை அலைபேசியைத் தடவியபடியே சமாளித்துக் கொண்டிருக்கையில், பக்கத்துக்கு இருக்கை நபர் வாயை மெல்லும் மொறுமொறு சத்தம் முடிவுக்கு கொண்டுவரும்.

இதுவே குடும்பத்துடன் சென்றால் இடைவேளைத் தீனிகளை நிராகரிக்கும் பேச்சுக்கே இடமிருக்காது. அகல வாய்க்கொண்ட காகிதக் குடங்களில் பாப்கார்ன், பெப்ஸி, பப்ஸ் என்று வாங்கிக் கொடுத்துவிட்டு அமரும்போது அடுத்தமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு வர வேண்டுமெனில் பர்சனல் லோன் வாங்க வேண்டும்போல என்றெண்ணி கண்கள் குங்குமச் சிவப்பாவதை இருட்டறையில் மற்றவர்கள் கண்டறியும் வாய்ப்பு குறைவே.

திரையரங்கங்களிடம் வைக்கிற இன்னொரு வேண்டுகோள், மாற்றுத் திறனாளிகளும் வந்து படம் பார்க்கும் அளவுக்கு எந்தவிதமான சௌகரியங்கள் அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன? அவர்களுக்கென்று பிரத்யேகமான கழிவறைகள் எல்லாத் திரையரங்குகளிலும் இருக்கிறதா? திரையரங்கிற்கு உள்ளேயும், வெளியேயும் அவர்கள் நடந்து வர ramp வகை நடைபாதைகள் எத்தனை திரையரங்குகளில் இருக்கிறது? ‘ஒன்னு குடுத்தா ஓவர் மரியாதை தர்றானுங்க இல்லாட்டி கண்டுக்கவே மாட்றானுங்க. ரெண்டுமே டிஸ்டர்ப்டா இருக்கு. தேட்ருக்கு வரவே புடிக்கல. வீட்லயே டவுன்ட்லோட் பண்ணிட்றது’ என்றார் என் மாற்றுத்திறன் கொண்ட என் நண்பர். மற்றவர்களைப் போல அவர்களை இயல்பாக அணுகுவதோடு அவர்களுக்கான வசதிகள் உறுதி செய்யப்பட்டாலன்றி திரையரங்கிற்கு வரும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்காது.

எல்லாவகையிலும் திரையரங்கங்களின் குறைகளை சுட்டிக் காட்டுவதன் நோக்கம் மக்கள் அங்கு வந்து படம் பார்ப்பதை புறக்கணிக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் இல்லை. வசதிகள் சீர் செய்யப்படுவதோடு விலைகள் பரிசீலிக்கப்பட்டு எல்லாத் தரப்பினரும் வந்து புழங்குகிற ஓர் கேளிக்கை இடமாக அதை மாற்றினால் பணத்தயக்கமின்றி குடும்பங்கள் படையெடுக்கும். தவிர, ஒரே படத்தை திரும்பத் திரும்ப தியேட்டரில் வந்து பார்த்துவந்து சில வருடங்களாக காணமல் போயிருந்த ‘ரிப்பீட் ஆடியன்ஸ்’ புத்துயிர் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. பாகுபலி வசூலே ஆயிரம் கோடினா பப்ஸ், பாப்கார்ன் வசூல் ஆயிரத்து ஐநூறு கோடிய தாண்டி இருக்குமே என்று ஆச்சர்யப்பட்ட சாமானியனின் சொந்த அனுபவங்கள்  மீண்டும் ஓர் அச்சுறுத்தலாக அமைந்துவிடக் கூடாது.

இன்னும் எத்தனை ராக்கர்ஸ் வந்தாலும் பெரிய திரையில் சினிமாவைக் கண்டு களிக்கும் கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும். அதுமாதிரியான ரசிகர்களுக்கு சினிமாவும் அது சார்ந்த தொழில்களும் எவ்வளவு நியாயமாய் இருக்கின்றன, இருக்கப்போகின்றன என்பது அத்துறைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வலுவாகியிருக்கிறது.