Published:Updated:

“விஜய் தம்பி கூட வந்துட்டே இருக்கேண்ணே..!” - ‘அட்றா சக்க’ வடிவேலு #VikatanExclusive

“விஜய் தம்பி கூட வந்துட்டே இருக்கேண்ணே..!” - ‘அட்றா சக்க’ வடிவேலு #VikatanExclusive
“விஜய் தம்பி கூட வந்துட்டே இருக்கேண்ணே..!” - ‘அட்றா சக்க’ வடிவேலு #VikatanExclusive

‘‘ ‘தெறி’யைத் தொடர்ந்து விஜய்யை அட்லி மீண்டும் இயக்கும் படம், தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கும் 100-வது படம், எஸ்.ஜே.சூர்யா வில்லன்... இப்படி விஜய்யின் 61-வது படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். இவற்றுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் வடிவேலு நடிக்கும் படம் என்பது மற்றொரு கூடுதல் சிறப்பு. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த முந்தைய படங்களின் காமெடிகளைப் பார்த்தவர்களால் இந்த காம்பினேஷனின் எதிர்பார்ப்பை உணர்ந்துகொள்ள முடியும்.

விஜய்யும் வடிவேலும் சேர்ந்து நடித்த முதல் படம் ‘வசந்த வாசல்’. பிறகு, இவர்கள் நடித்த ‘ஃப்ரெண்ட்ஸ்’ படத்தில் ‘சித்தப்பு நேசமணி’யாக நின்று விளையாடியிருப்பார் வடிவேலு. ‘என்னை உசுரோட வெச்சு புதைக்கவாடா வந்திருக்கீங்க...’, ‘சல்லி சல்லியா நொறுக்கீட்டீங்களேடா...‘, ‘நீ புடுங்கிறது பூராவே தேவையில்லாத ஆணிதான்...’, ‘ஃபர்னிச்சர் மேல கையவெச்சா மொத டெட்பாடி நீதான்...’, ‘விட்டா கிறுக்கனாக்கிடுவானுங்க போலருக்கு...’ இப்படி `ஃப்ரெண்ட்ஸ்' திரைப்படத்தில் வடிவேலு பேசிய வசனங்கள் அனைத்துமே இன்றும் ட்ரெண்டிங்கில் இருக்கும் காமெடி பன்ச்கள். இதில் வடிவேலு ஒருபடி மேலே போய் ஒரு காட்சியில் விஜய்யைத் தன் கைப்பையால் அடித்துத் துவைப்பார். விஜய்யும் அவருக்கு இடம்கொடுத்து அடக்கிவாசித்திருப்பார். காரணம், இருவரின் புரிந்துணர்வு. 

இதேபோல அடுத்தடுத்து வந்த `பகவதி', `வசீகரா', `மதுர', `சச்சின்' உள்ளிட்ட படங்களிலும் இந்த காம்போவின் காமெடி மிகச்சரியாக வேலைசெய்திருக்கும். அடுத்து வந்த ‘போக்கிரி’தான் அல்டிமேட். காட்சிக்குக் காட்சி காமெடியில் பொங்கவைப்பார் வடிவேலு. ‘பாடிசோடா’. ‘பெட்ரோல் டேங்கா... இல்ல யூரின் டேங்கா’, ‘வடபோச்சே...’, ‘மண்டைல இருக்கற கொண்டய மறைக்க மறந்துட்டேனே’,  ‘டிரங்கன் மங்கி ஸ்டைல்’... இப்படிப் பேசியவை அனைத்தும் நூற்றாண்டைக் கடந்தும் நிற்கும் காமெடிகள். பிறகு வந்த ‘சுறா’ சுமாராகப் போனாலும் நீண்ட கிருதா, அடிக்கும் கலரில் காஸ்ட்யூம்... என அதிலும் எவர்கிரீன் காமெடியைத் தந்திருப்பார். அடுத்து ‘காவலன்’. ’ஓட்டை ரெண்டு இருக்கு.. அயர்ன் பாக்ஸ் ஒண்ணுதானே இருக்கு?’, ‘கண்ணதாசனா பாரதிதாசனா... பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு’ என்று காட்சிக்குக் காட்சி கன்ஃபியூஸ் ஆகும் கேரக்டரில் பிரித்தெடுப்பார்.

இப்படிக் கடந்த வந்த விஜய்-வடிவேலு காம்பினேஷன், இப்போது `விஜய் 61'-லும் இணைந்துள்ளது. வடிவேலு சற்று இடைவெளிவிட்டு நடிக்கும் படம், ‘காவலன்’க்குப் பிறகு விஜய்யுடன் இணையும் படம், இந்தப் படத்தை இயக்குவது அட்லி... இப்படிப் பல காரணங்களால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த காம்போவின் முந்தைய ஹிட் காமெடிகளுக்கு அந்தந்தப் பட இயக்குநர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. குறிப்பாக, ‘ஃப்ரெண்ட்ஸ்’, ‘காவலன்’ படங்களை இயக்கிய சித்திக்கும் ‘போக்கிரி’, ‘வில்லு’வை இயக்கிய பிரபுதேவாவும் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள். அதேபோல அட்லியும் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். அதனால் நிச்சயம் இதிலும் காமெடி கனெக்ட் ஆகும் வகையில் அமைந்திருக்கும். 

இப்படி எதிர்பார்ப்பில் உள்ள இந்தப் படத்தின் காமெடிக் காட்சிகள் எப்படி உருவாகின்றன என்பதை, படக்குழுவினரிடம் விசாரித்தேன். அந்த மேக்கிங்கையே தனி காமெடியாகப் பண்ணலாம் எனும் அளவுக்கு அவை ஒவ்வொன்றும் அதிரிபுதிரி நகைச்சுவை எபிசோடு. அவற்றில் சில மட்டும் பார்ப்போம்... 

ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவைப் பார்த்த உடனேயே அடக்க முடியாமல் விஜய்யும் அட்லியும் சிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்களாம். ‘என்ன தம்பி, இப்படிச் சிரிச்சுட்டே இருந்தா...’ என்ற வடிவேலுவிடம், ‘இல்லண்ணே, உங்களைப் பார்த்தாலே பழைய காமெடிக் காட்சிகள் ஞாபகத்துக்கு வருது' என்னும் அட்லியை, விஜய்யும் ஆமோதிப்பாராம். அவர்களிடம், ‘அப்ப... பைசா செலவில்லாம பழைய படங்களை என் மூஞ்சியிலேயே பார்த்துட்டிருக்கீங்க’ என்பாராம் வடிவேலு. 

மதிய உணவு இடைவேளைதான் படக்குழுவுக்கான ரிலாக்ஸ் டைம். விஜய்யும் அட்லியும் வடிவேலுவின் பழைய காமெடிக் காட்சி வசனங்களை ஆளுக்கொன்று என ஏரியா பிரித்துக்கொள்வார்களாம். இவர்கள் இருவரும் மாறி மாறி அவரின் வசனங்களைப் பேசப் பேச, படப்பிடிப்புத் தளமே சிரித்து உருளுமாம். ‘காவலன்’, ‘போக்கிரி’ படக் காட்சிகள்தான் இவர்களின் டார்கெட். ‘போலீஸுக்கும் புல்லட்டுக்கும் இடையில என் காதல் புசுவாணமாகிடுச்சு. `பாடி சோடாவா இருந்த என்னை, கோலிசோடாவாக்கி என் லவ்வுல குண்டு விளையாண்டுட்டானுங்க. பேட் இன்ஸ்பெக்டர் அண்டு த ரெளடி போத் பிளேயிங் பேஸ்கட் பால் இன் தி மை லைஃப். அதுக்காகத்தான் நான் அழுதுட்டிருக்கேன். வாடா... வாடா... நீ போடா போடா’ என்று வடிவேலுவை வைத்துக்கொண்டே அவரை இம்மி பிசகாமல் இமிடேட் பண்ணுவாராம் விஜய். 

அடுத்த பிரேக்கில், ‘பப்பு கம் கியர்...’ எனக் கூப்பிட்டு, ‘எந்த ஒரு விஷயத்தையும் ப்ளான் பண்ணாம பண்ணக் கூடாது. ப்ளான் பண்ணி பண்ணணும்’ என்று வடிவேலு ஸ்டைலில், ‘லொஜக், மொஜக், பஜக்...’ என்று காமெடி கராத்தே கற்றுக்கொடுப்பாராம் அட்லி. அடுத்த நாள் ஷூட்டிங்கில் ‘காவலன்’ காமெடி. ‘அதுல ஒரு குண்டச்சி கராத்தே பழகியிருப்பாபோலிருக்கு. அவ அடி மட்டும் தனியா தெரியுது. இவ்வளவு பெரிய மூட்ட வெச்சுக்கிட்டு ஒரு ஏத்து ஏத்தினா பாரு... சர்ர்னு இங்கே வந்திடுச்சு’ என்று வடிவேலு காமெடியை அட்லி அவர் ஸ்லாங்குலேயே பேச, ‘டேய்... வாயை மூடுறா!’ என்பாராம் விஜய். ‘மூடிட்டேனே... இல்லைன்னா வெளியே வந்து விழுந்திருக்குமே’ என்பாராம் அட்லி. இப்படி வடிவேலுவும் அவரின் காமெடிகளுமாகத்தான் படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறதாம். 

தவிர ‘தெறி’ படத்திலேயே வடிவேலுவை நடிக்கவைக்க அட்லி முயன்றார். ஆனால், சில காரணங்களால் அந்தப் படத்தில் வடிவேலு நடிக்கவில்லை.` விஜய் 61'  படம் தொடர்பாகப் பேச்சுவார்த்தைத் தொடங்கியதுமே அவர் செய்த முதல் காரியம் வடிவேலு கால்ஷீட் வாங்கியதுதான். விஜய்யும் வடிவேலுவுடன் நடிக்க ஆர்வமாக இருந்தார். அதனால்தான் இந்த காம்பினேஷன் அமைந்துள்ளது. ‘தெறி’யில்விட்ட வெறியை அட்லி இந்தப் படத்தில் தீர்த்துக்கொள்வார் என்கிறார்கள். 

தவிர, விஜய்யும் அட்லியும் ‘உங்களைப் பார்க்கும்போது ரொம்பப் பெருமையா இருக்குண்ணே. இவ்வளவு நாள் இடைவெளி இருந்துச்சு. இனி அப்படி இருக்கக் கூடாது’ என்பார்களாம். அதற்கு வடிவேலும், ‘விட மாட்டோம்ணே. இனி இறங்கி கிணறு வெட்டுவோம்ல. ஊத்து வர்ற வரைக்கும் தோண்டி தண்ணியை எடுக்காம விடமாட்டோம்ணே’ என்று சொல்வாராம். 

இதிலிருந்து அவர் எல்லா ஹீரோக்களுடனும் சேர்ந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என்பது புரிகிறது. இந்தப் படத்தில் அவர் கமிட் ஆனதைத் தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களும் இயக்குநர்களும் அவரிடம் கதைகள் சொல்லி வருகிறார்களாம். தன்னிடம் வந்த பத்து கதைகளில் தனக்குப் பிடித்த நான்கு படங்களுக்கு மட்டும் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் வடிவேலு. அந்த நான்கிலுமே படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை கதையோடு சம்பந்தப்பட்ட நகைச்சுவை கேரக்டர்கள்தானாம். 

இந்த `விஜய்-61’ பட அனுபவத்தையும் அவரின் அடுத்தடுத்த கமிட்மென்ட்கள் பற்றியும் வடிவேலுவிடமே கேட்போமே என அவருக்கு போன் செய்தேன்.

‘‘அய்யனாரைக் கும்பிட்டுட்டுப் போகலாம்னு மதுரைக்கு வந்திருக்கண்ணே. கோயிலுக்குள்ள வர்றேன். நீங்க கரெக்டா கூப்பிடுறீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணே. விஜய்யும் அட்லி தம்பியும் நம்மளை அப்படிக் கொண்டாடுறாங்க. அப்புறம் தயாரிப்பாளர் முரளி சார். இப்படி ஒரு டீம் அமைஞ்சதுதாண்ணே இதுல சிறப்பு’’ என்றவர் தொடர்ந்து பேசினார். 

‘‘விஜய், அட்லி ரெண்டு பேருமே நம்ம ரசிகருங்கண்ணே. நீங்க சொன்ன மாதிரி நம்ம காமடியைச் சொல்லிதான் சிரிச்சுட்டிருப்பாங்க. ‘நீங்க விட்டுட்டுபோன இடம் அப்படியேதாண்ணே இருக்கு. அதைத்தொட உங்களாலதாண்ணே முடியும். அதுல நீங்கதாண்ணே வரணும், போகணும்’னு இரண்டு பேரும் என் காமெடியைச் சொல்லி பாராட்டிக்கிட்டே இருப்பாங்க. அது பெரிய ஊக்கமா இருக்குண்ணே. கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் கால்ஷீட் கொடுத்திருந்தேண்ணே. ஒரு மாசம் முடிஞ்சுடுச்சு. 

இந்த அட்லி தம்பி பற்றி சொல்லியே ஆகணும். ‘எந்த விஷயமா இருந்தாலும் ப்ளான் பண்ணி பண்ணணும்’ங்கிற என் காமெடி மாதிரியே எல்லாமே அந்தத் தம்பிக்கு ப்ளான்தாண்ணே. என்ன நினைச்சுட்டு ஸ்பாட்டுக்கு வர்றாரோ, அதை முடிச்சுட்டுதாண்ணே போவார். சின்னப்பையன்தான். ஆனா, நம்ம ஊர்ல ‘மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு’னு சொல்வாங்கள்ல அப்படித் தொழில் பழகியிருக்கார். சினிமாவைத் தெரிஞ்சுவெச்சிருக்கார். 

கடைசிவரைக்கும் அவர் இப்படியே போகணும்ணே. ‘ ‘ `உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாதுண்ணே’னு உசுப்பேத்துவானுங்க. இறங்கிடக் கூடாது தம்பி. யார் பேச்சையும் கேக்காதீங்க. நீங்க போற ரூட் சரி. பிரமாதமா போயிட்டிருக்கு. நீங்களே முடிவெடுங்கனு சொல்லிட்டேன்’’ என்று சிரிப்பவரிடம், ‘‘தெறி... வெறி’னு ஏதோ பேசுறாங்களேண்ணே’' என்றால், ``‘உங்கள்ட்டயும் அதைச் சொல்லிட்டாங்களா? சொல்லிட்டாங்கண்ணா அப்படியே எழுதிக்கங்ண்ணே’’ என்கிறார். 

‘‘விஜய்கூட நடிக்கிற அனுபவம் எப்படி இருக்கு?’’

‘‘அது பெரிய எபிசோடு. அதைத் தனிப்பேட்டியா வெச்சுக்குவோம். என் காமெடி டயலாக்குகளைச் சொல்லி சிரிச்சுட்டே ஓடிவந்து கையைப் புடிச்சுப்பார். அது தனி அன்புண்ணே. நான் எவ்வளவு சொன்னாலும் அது கம்மியாத்தான் இருக்கும். அதை நிச்சயம் பேசியே ஆகணும். 

அப்புறம், எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க. வந்துட்டே இருக்கேன்னு சொல்லுங்கண்ணே. இதோ அய்யனார் கூப்பிடுறார். விழுந்து கும்பிட்டுட்டு வந்துடுறேன்.’’

வடிவேலுவின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பித்துவிட்டது.