ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
அவள் 16
Published:Updated:

சிரிப்புக்கு நாங்க ரெடி... நீங்க ரெடியா?!

சினிமாகட்டுரை : பொன்.விமலா; படம் : ப.சரவணகுமார்

##~##

சினிமாவில் நகைச்சுவை நடிகர்கள் ஏராளம்... தாராளம். ஆனால், நகைச் சுவை நடிகைகள்..? அதிலும் மக்கள் மனதில் நிற் கும் நகைச்சுவை நடிகைகள் குறிஞ்சிப்பூ!

ஏன் இப்படி? 'பெண்களுக்கு நகைச்சுவையே வராது' என்று கோடம்பாக்கத்தில் ஏதும் தீர்மானம் போட்டிருக்கிறார்களா? இல்லை, பெண்கள் என்றாலே, கவர்ச்சிக்கு மட்டும்தான் என்று குத்தப்பட்டிருக்கும் முத்திரையா?

தமிழ் சினிமாவில் தங்கள் உழைப் பால் காமெடி ஏரியாவில் தமக்கென ஓர் இடம் பிடித்த, மூன்று தலைமுறை நகைச்சுவை நடிகைகள், தங்களின் அனுபவத்திலிருந்து அதைப் பற்றி பேசுகிறார்கள்...

''நிழலில் இருப்பவையெல்லாம் நிஜங்களே!''  - சச்சு

''நகைச்சுவையில் என் குரு, மக்களைச் சிரிக்கவும்... சிந்திக்கவும் வைத்த கலைவாணர். ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கும் இருந்த முக்கியத்துவம், காமெடி பண்ற நகைச்சுவை நடிகர்களுக்கு இல்லாமத்தான் இருந்துச்சு. கலைவாணர் வந்த பிறகு, நகைச்சுவையாளர்களுக்கும் மரியாதை கிடைச்சுது. அதேபோல, நகைச்சுவை விஷயத்தில் முன்னயெல்லாம் பெண்களுக்கும் நிறையவே முக்கியத்துவம் இருந்துச்சு. 'சொர்க்கம்’ படத்தில் நான்கு ரோல் பண்ணியிருப்பேன். அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்க. டைரக்டர் சொல்லிக் கொடுத்த மாதிரி மட்டும் நடிக்காம, நான் பார்த்த நகைச்சுவையான மனிதர்களைப் பிரதிபலிச்சுதான் நடிப்பேன்.

சிரிப்புக்கு நாங்க ரெடி... நீங்க ரெடியா?!

எங்க காலத்துல காமெடினா... வெறும் வாய்ப்பேச்சா இல்லாம, ஆக்ஷன் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். பெரும்பாலும் திரைக்கதையோட ஒன்றிதான் காமெடியே இருக்கும். கட்டாயம் ஒரு பாட்டும் இருக்கும். 'பலே பாண்டியா' படத்துல வர்ற 'மாமா... மாப்ளே’ பாட்டை இன்னிக்கும் சிரிக்காம என்னால பார்க்க முடியாது. 'காதலிக்க நேரமில்லை’ படத்துல எனக்கும் நாகேஷ§க்கும்கூட பாட்டு இருந்துச்சே.

காமெடியோட கரு... பெரும்பாலும் கூட்டுக் குடும்பம், உறவுச் சடுகுடுனு குடும்பப் பின்னணியில்தான் இருக்கும். நகைச்சுவை கதாபாத்திரம் கற்பனையா இல்லாம, பெரும்பாலும் நிஜ மனிதர்களை உள்வாங்கித்தான் வடிவமைச்சுருப்பாங்க. எங்க பகுதியில ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவர், கொஞ்சம் போல பாட்டும் பாடுவார். ஆனா... அவர் கூடவே வர்ற ஒருத்தர், 'ஆஹா முதலாளி ஜோர்... ரொம்ப நல்லா இருக்கு முதலாளி’னு பெருமையா சொல்ற மாதிரி... காமெடி பண்ணிட்டு இருப்பார். அந்த கேரக்டரோட பிரதிபலிப்புதான், 'தில்லானா மோகனாம்பாள்’ படத்துல நாகேஷ் நடிச்ச 'வைத்தி’ கேரக்டர்.''

''சிரிப்புக்கு நாங்க ரெடி... நீங்க ரெடியா!'' - ஆர்த்தி

''கோவை சரளாக்கா, கமல் சாருக்கு ஜோடியா நடிக்கற அளவுக்கு காமெடியில் தன்னோட இடத்தை அழுத்தமா பதிவு செய்தாங்க. ஆனா, நான் நடிக்க வந்தப்போ, சினிமா காமெடியில் 'எங்க ஏரியா உள்ள வராதே’னு ஆண் நகைச்சுவை நடிகர்களோட ஆதிக்கம் அதிகரிச்சுடுச்சு. பெண்களுக்கு காமெடி நல்லாவே வரும். ஆனா, நடிகைகள் பலரும் காமெடியை கையில் எடுக்க முன்வர்றதில்லை. டைரக்டர்களும் ஆண்களை யோசிச்சே காமெடி ஸீன்களை எழுதப் பழகிட்டாங்க. அதேசமயம், பெண்களும் நகைச்சுவையில் தலையெடுக்கறதுக்கு இதே திரைத்துறையில் இருக்கற படைப்பாளிகளோட சப்போர்ட்டும் காரணம். உதாரணமா, 'படிக்காதவன்’ படத்துல, தனுஷ் சார் என்னை பொண்ணு பார்க்க வரும் ஸீன். 'கோபுரங்கள் சாய்வதில்லை’ சுஹாசினி மேடம் மாதிரி நாய் வால் முடியோட, வாயெல்லாம் வெத்தலை - பாக்கு போட்டு நடிச்ச நான், அதை தனுஷ் சார் மேல துப்புற மாதிரி ஒரு ஸீன் இருக்கும். ஈகோ பார்க்காம, அந்த இடத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, என்னை உற்சாகப்படுத்தின தனுஷ் சாரை குறிப்பிட்டாகணும்.

ஒரு அவுட்டோர் ஷூட்டிங் அது. படக்குழுவுல இருந்த எல்லாருக்கும் லெமன் டீ கொடுத்தாங்க. லெமன் டீ பார்க்க சரக்கு கலர்லயே இருக்கும். நாங்க எல்லோரும் அந்த டீயை குடிச்சப்ப, வேடிக்கை பார்த்தவங்க பலர், நாங்க மது குடிக்கறதா நினைச்சுட்டாங்க. 'சினிமாக்காரங்களுக்கு சரக்கடிச்சாதான் வேலை செய்ய முடியும்’னு காதுபடவே பேசினாங்க. 'எத்தனை காலம் போனாலும் சினிமா நடிகர்கள் பத்தின மக்களோட கண்ணோட்டம் மாறாது'னு வருத்தமா இருந்துச்சு. அதனாலேயே இதையும் ஏதாவது ஒரு படத்துல நகைச்சுவையா மாத்தி, மக்களுக்கு புரிய வைக்கணும்னு குறிச்சு வெச்சுக்கிட்டேன்.

இன்னிக்கு சின்னத்திரையை எடுத்துக்கிட்டா... நிறைய பெண்கள் காமெடி ஏரியாவுல கலக்கிட்டிருக்காங்க. அதனால பெரிய திரையிலயும் பெண்களை ஊக்குவிச்சா... நிச்சயமா, ஆண்களுக்கு மேல பெண்களாலயும் சாதிக்க முடியும். இதுக்கு வாழும் உதாரணம்தான்... ஆயிரம் படங்களை தாண்டிய ஆச்சி மனோரமா.''

சிரிப்புக்கு நாங்க ரெடி... நீங்க ரெடியா?!

''பாடி லாங்குவேஜ் எங்களுக்கும் வரும்ல!''  - 'தேன்ன்ன்னடை' மதுமிதா

''நகைச்சுவையில் ஆச்சிதான் என் ரோல் மாடல். என்ன நடிப்பு, குரல் வளம், உடல்மொழி?! மதுரை தமிழ், சென்னை தமிழ், கோயம்புத்தூர் தமிழ்னு எல்லா ஸ்லாங்கையும் சும்மா விட்டு விளாசுவாங்க. பெண்கள் அன்லிமிடெட்டடா காமெடி பண்ணலாம் என்பதற்கு அவங்கதான் என்னோட டானிக். ஆனா, இப்போ வர்ற திரைப்படங்கள்ல பெண் நகைச்சுவை நடிகைகள் பெரும்பாலும் இருக்கறதில்லைங்கறது வருத்தமான விஷயம்தான்.

பொண்ணுங்களுக்கு காமெடி வராதுனு சொல்றாங்க. வீட்டுல, காலேஜுல, ஆபீஸுல திருவிழா மாதிரி கலகலனு சிரிச்சுப் பேசிட்டிருக்கற... கலாட்டா பண்ணிட்டிருக்கற பெண்களை எல்லாம் பார்த்திருக்கோம்தானே? இதையே திரையில் பண்ண வாய்ப்புக் கொடுத்தா என்ன? ஒரு கல்யாணம், காதுகுத்து, திருவிழானு எந்த விசேஷமும் பெண்கள் இல்லாம கலர்ஃபுல்லா இருக்குமா? அப்படித்தான் சினிமாவில் நகைச் சுவை ஏரியாவில் பெண்கள் கலந்துகட்டி நடிச்சா தான், படம் ஜோரா இருக்கும்.

'பெண்களால பாடி லாங்குவேஜ் காமெடி பண்ண முடியாது'னு, ஒரு காரணம் சொல்றாங்க. அடிக்கறது, அடி வாங்கறது, ஓடுறது, முகத்தை முப்பத்தி எட்டு கோணல்ல வெச்சுருக்கறதுனு ஒரு ஆண் காமெடியன் செய்றதை, பெண் காமெடியனால செய்ய முடியாதுனு யார் சொன்னா? நிச்சயமா முடியும். வாய்ப்புக் கொடுத் துட்டு அப்புறம் பாருங்க சார்.

ஒரு வழியா அங்க தேடி இங்க தேடி சான்ஸ் பிடிச்சு, வாங்கின காசு முழுசுக்கும் உழைச்சு, படத்தில் காமெடி டிராக்கில் கலக்கு கலக்குனு கலக்கி, ரிலீஸுக்கு காத்திருப்போம். எடிட்டிங்ல இடிச்சா, மொதல்ல கையை வைக்கிறது காமெடியாதான் இருக்கும். அதனால காமெடி டிராக் தனியா இல்லாம, கதையோடயே வந்தா நல்லா இருக்கும். என்னோட பிள்ளையார் சுழி படம் 'ஓ.கே. ஓ.கே’, அப்புறம் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ரெண்டும் நிறைய பாராட்டுகள் வாங்கிக் கொடுத்துச்சு. இன்னும் உங்களை எல்லாம் நான் நிறைய சிரிக்க வைக்க, இயக்குநர்கள்தான் வாய்ப்புக் கொடுக்கணும்!''

சிரிப்புக்கு நாங்க ரெடி... நீங்க ரெடியா?!

மூணு தலைமுறைக்கு மகராசி!

தமிழ்த் திரை வரலாற்றில் மனோரமா, மூன்று தலைமுறைக்கு மகராசி! சிரிப்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமல்ல... வியப்பதற்கும் உரிய அற்புதமான நடிகையான இவர், 1958-ம் ஆண்டு 'மாலையிட்ட மங்கை’ திரைப்படத்தின் மூலம் தன் பயணத்தைத் தொடங்கியவர். 1,000 படங்களைத் தாண்டி, 'கின்னஸ்’ புத்தகத்திலும் இடம்பெற்றிருக்கும் இவர், வெகு நாட்களாக உடல் நலக்குறைவால், நடிப்பிலிருந்து விலகியிருக்கிறார். அவரைச் சந்தித்தபோது...

''திரையுலகில் நகைச்சுவைக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அதில் நான் ஒரு துளி!'' என்பதை மட்டும் அழுத்தமாகப் பதிவு செய்தவருக்கு, உடல்நிலைக் குறைவால் மேற்கொண்டு பேச இயலவில்லை. அவர் பூரண குணமடைய வேண்டும் என்று பிரார்த்தித்தபடியே, அவரைத் தொந்தரவு செய்யாமல் விடைபெற்றோம்.