Published:Updated:

இரும்பொறை மன்னன் இலக்கு தப்பாமல் பாய்கிறாரா? - `மரகத நாணயம்' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
இரும்பொறை மன்னன் இலக்கு தப்பாமல் பாய்கிறாரா? - `மரகத நாணயம்' விமர்சனம்
இரும்பொறை மன்னன் இலக்கு தப்பாமல் பாய்கிறாரா? - `மரகத நாணயம்' விமர்சனம்

யார் எடுக்கச் சென்றாலும் அவர்களைக் கொன்று, இரும்பொறை என்ற மன்னரின் ஆவியால் பாதுகாக்கப்படும் அரிய பொருளே `மரகத நாணயம்'.

கடன் தொல்லையால் திருப்பூரிலிருந்து சென்னைக்கு வரும் ஆதி, குட்டிக் கடத்தல்காரரான ‘முனீஸ்காந்த்’ ராமதாஸிடம் வேலைக்குச் சேர்கிறார். சின்னச் சின்னக் கடத்தல்களால் அலுத்துப்போகும் ஆதி, `ஏதாவது பெருசா செய்யணும் பாஸ்!' என்ற முடிவுக்கு வருகிறார். அதனால் மைம் கோபி மூலம், `மரகத நாணயத்தை எடுத்து வந்தால் கோடிக்கணக்கில் பணம்' என்ற சீனாக்காரர் ஒருவரின் டீலுக்குச் சம்மதம் சொல்கிறார். ஆனால், அதற்கு முன்பு மரகத நாணயத்தை எடுக்க முயன்ற 132 பேர் மர்மமான முறையில் மரணமடைகிறார்கள். மரகத நாணயத்தை ஆதி எடுத்தாரா, 133-வது ஆளாக மரணப் பட்டியலில் இணைந்தாரா என்பதை காமெடி கலந்து சொல்ல முயன்றிருக்கிறார்கள். 

இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன்-க்கு முதல் படம். ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், எம்.எஸ்.பாஸ்கர், முனீஸ்காந்த், டேனியல் என முதல் படத்திலேயே நிறைவான காஸ்டிங். ‘அட’ போடவைக்கும் ஒன்லைன். இத்தனையையும் வைத்துக்கொண்டு `மரகத நாணயம்' ஒளிர்கிறதா என்றால், பெருமூச்சுவிடத்தான் தோன்றுகிறது. 

ஆதிக்கு, ஹீரோக்களுக்கு உண்டான  வழக்கமான வேலையைவிட குறைவான வேலைதான். அதில் என்ன செய்ய முடியுமோ, அதைச் செய்திருக்கிறார். காமெடி சீன்களில் ஜொலிக்க, இன்னும் நிறைய உழைக்க வேண்டும் ஆதி.  நிக்கி கல்ராணிக்கு எந்த ஹீரோயினுக்கும் கிடைக்காத வித்தியாசமான ரோல். ஆனால், அதில் பெரும்பகுதி அவர் `குரலுக்கு'ப் போய்விடுவதால், நிக்கி சாதித்துவிட்டார் எனச் சொல்ல முடியவில்லை. டேனியல், எம்.எஸ்.பாஸ்கர், ராமதாஸ், ஆனந்தராஜ், அருண்ராஜா காமராஜ் ஆங்காங்கே சிரிக்கவைக்கிறார்கள். 

படத்தில், பெரும் ஆறுதலான காட்சிகள் ஆனந்தராஜ் வரும் காட்சிகள்தான். பாடிலாங்வேஜ், வாய்ஸ் மாடுலேஷன் இரண்டிலும் அசால்ட் காட்டியிருக்கிறார் மனுஷன். எல்லா இடங்களுக்கும் நேரடியாகப் போகாமல் ரேடியோவிலேயே டீல் பேசும் ஐடியாவும் ஆசம்!   ‘அவன் மேட் இன் சைனா எப்பவாச்சும் வெடிப்பான்; நான் மேட் இன் இண்டியா. எப்ப வேணா வெடிப்பேன்’, ‘நான் சீரியஸாவே சீரியஸ்டா’, ‘காமெடி ட்ரெண்டுன்னுதான் உங்களைக் கூட வெச்சிருக்கேன். உங்ககூட இருக்கிறதால என்னையும் காமெடியா பார்க்கிறானுங்கடா’ என்று அவரது வசனங்களில் மட்டும் எக்ஸ்ட்ரா உழைப்பு தெரிகிறது. அதேபோல் இக்கட்டான நேரங்களில் எதேச்சையாக காமெடி செய்யும் அவரது அடியாளும் கோட்டுக்கேற்ற பட்டன்போல கச்சிதம்.

திபி நினன் தாமஸின் பாடல்களுக்குப் பெரிய வேலையில்லை. ஆனந்தராஜுக்கு வரும் பிஜிஎம் வாவ்! அதிலும், தீம் மியூசிக்கிலும் பிஜிஎம்-மில் வரும் புல்லாங்குழல் அசத்தல். ஆனால், கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதும் பின்னால் கிடாரை வாசித்து சோதித்ததைக் குறைத்திருக்கலாம். பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவில் இரும்பொறை மன்னனின் கல்லறை, சேஸிங் காட்சிகளில் டாப் வியூ கவனிக்கவைக்கிறது. 

காமெடி, சென்டிமென்ட், காதல், சீரியஸ், சீரியஸாக இருக்கும்போதே காமெடி, காமெடிக்குச் சிரிப்பதற்கு முன்பே சென்டிமென்ட் என திரைக்கதையின் போக்கு பிரேக் பிடிக்காத வண்டியைப்போல் பல திசைகளிலும் தறிகெட்டு ஓடி, தடுமாறவைக்கிறது. அதுவும் முதல் பாதியில் காட்சிக்குக் காட்சி கதை சொல்லி, அதை உள்வாங்குவதற்குள் அடுத்தடுத்து சம்பவங்களைத் திணிப்பதால் திணறிப்போகிறோம். `132 பேர் இறந்துவிட்டார்கள்' என்று படத்தில் கணக்கு சொன்னதுபோக, இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை யாராவது செத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.  மரணத்தை வைத்து காமெடி பண்ணுவதா, சீரியஸாக அழுவதா என்பதிலும் இயக்குநருக்கு ஏராளமான குழப்பம்.

ஆனால் இரும்பொறை மன்னனின் பழிவாங்கும் பழைய வண்டியைப்போல், திரைப்படமும் திணறித் திணறி ஓடுவதால், பளிச் வெளிச்சம் பாய்ச்சவில்லை இந்த `மரகத நாணயம்’!